×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

ஜாதி பாலின பாகுபாடு: அடிமைப்படுத்தப்படும் பெண் துப்புறவு தொழிலாளர்கள்

by ரினா சந்திரன் | @rinachandran | Thomson Reuters Foundation
Thursday, 3 March 2016 00:01 GMT

Hindu women holding plates decorated with religious items celebrate Raksha Bandhan festival in New Delhi, India, August 28, 2015. Dozens of the women, who used to clear human waste for a living, a practice which is now banned in India, participated in the celebrations for the first time this year, according to the organisers. REUTERS/Anindito Mukherjee

Image Caption and Rights Information

மும்பை, மார்ச்.3 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - சமூகத்தில் ஆழமாக ஊடுருவியுள்ள பாலினம் மற்றும் சாதியப் பாகுபாடுகள் மாற்றப்படாவிட்டால், மற்றவர்களின் மலத்தை அள்ளும் முறைக்கு துப்பறவுத் தொழிலாளர்களை நிர்ப்பந்திப்பதற்கு, பிரதானமாக ஏழைப் பெண்களை நிர்ப்பந்திப்பதற்குத் தடை செய்யும் புதிய சட்டம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சமூக ஆர்வலர்கள் கூறினார்கள்.

துப்பறவுத் தொழிலாளர்கள் அல்லது நகரசுத்தித் தொழிலாளர்கள் என்று மிகவும் நாசுக்கான வார்த்தைகளில் கூறப்பட்டாலும் நடைமுறையில் திறந்தவெளிக் கழிப்பறைகளிலிருந்து கைகளால் மலம் அள்ளும் தொழிலைச் செய்தவர்கள், இந்திய சாதிய அமைப்பில் ஆண்டாண்டு காலமாக மிகவும் அடித்தட்டில் வைக்கப்பட்டிருந்த தலித் குழுவினரில் ஒரு பிரிவினராகவே இருந்து வந்திருக்கிறார்கள்.

ஜன் சஹாஸ் என்னும் பிரச்சாரக் குழுவின் கூற்றின்படி, இந்தியாவில் மதிப்பிடப்பட்ட 13 லட்சம் மலம் அள்ளும் துப்பறவுத் தொழிலாளர்களில் குறைந்தபட்சம் 90சதவீதத்தினர் பெண்களாவர்.

“சமூகத்தில் மிக இழிந்த இத்தொழிலைச் செய்வதற்குப் பெண்கள் தள்ளப்பட்டிருப்பதால், இது சாதியப் பாகுபாடு மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான பாகுபாடுமாகும்,’’ என்று ஜன் சஹாஸ் நிறுவனர் அஷிப் ஷேக் கூறினார். இந்த தொழிலிலிருந்து 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித் பெண்களை ஜன் சஹாஸ்  விடுவித்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனிடம் அவர் மேலும் கூறுகையில், “இதனை ஒரு வேலை என்று கூட எடுத்துக் கொள்ள முடியாது, இது அடிமைத்தனம்,’’என்றார். “இதில் ஈடுபடுத்தப்படும் பெண்களுக்கு வேறு போக்கிடமே கிடையாது, இதனைச் செய்வதற்கு அவர்களுக்கு மிகவும் அற்பமாகவே ஊதியம் வழங்கப்படுகிறது. இதிலிருந்து வெளியேற நினைத்தால் நொறுக்கிவிடுவோம் என்றும் அச்சுறுத்தப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கிராமத்திலிருந்து, அவர்கள் இனத்திலிருந்து மற்றும் அவர்கள் சொந்த குடும்பங்களிலிருந்தும் ஏராளமான நிர்ப்பந்தம் அவர்களுக்குத் தரப்பட்டு வருகிறது,’’ என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியா, 1955இல் சாதிய அடிப்படையிலான பாகுபாடுகளுக்குத் தடை விதித்தும், மனிதமலத்தை மனிதனே அள்ளும் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்திட, அரசாங்கம் துப்புரவுத் தொழிலை நவீனமயப்படுத்திடவும், மலம் அள்ளுவதற்கு ஆட்களை வேலை வைப்பது கிரிமினல் குற்றம் என்றும்  எண்ணற்ற சட்டங்களை இயற்றியது. டிசம்பரில் இயற்றப்பட்ட சட்டம் தண்டனைப் பிரிவுகளை மேலும் அபராதத்துடன் கடுமையாக்கியது.

ஆயினும், இந்த நடைமுறைப் பழக்கத்தைக் கைவிட முயற்சித்தால், வன்முறைக்கு ஆளாவீர்கள், வீடுகளிலிருந்து விரட்டப்படுவீர்கள், ஊதியம் எதுவும் தரப்படமாட்டாது என்றெல்லாம் அச்சுறுத்தல்களை தலித் இனத்தினர் எதிர்கொள்வது தொடர்கிறது என்று மனித உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன.

2014இல், பிரதமர் நரேந்திர மோடி, வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் துப்புரவை மேம்படுத்திடவும், திறந்தவெளியில் மலம் இருப்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக பொதுக் கழிப்பிடங்களைக் கட்டுவதற்காக நிதியை அதிகரித்தும், “தூய்மை இந்தியா திட்டத்தை’’த் துவக்கி வைத்தார்.

மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவலநிலை குறித்து கவனம் செலுத்துவதற்கும், மாநில அரசாங்கங்கள் செயல்படுவதற்கும் இந்தப் பிரச்சாரம் உதவியிருக்கிறது என்று அஷிப் ஷேக் கூறினார். அரசாங்கம், மலம் அள்ளும் தொழிலிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 40 ஆயிரம் ரூபாய் (590 டாலர்கள்) வழங்குகிறது, அவர்களின் மாற்று வேலைக்கும் பயிற்சி அளிக்கிறது.

ஆயினும், அதிகாரபூர்வ தகவல்களின்படி, அடித்தட்டு சாதியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன. 2014இல் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்துள்ளன. இது, சென்ற ஆண்டை விட ஐந்தில் ஒரு பாகம் அதிகமாகும்.

கோபன்ஹேகனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சர்வதேச தலித் ஒருமைப்பாடு வலைப்பின்னல்  (International Dalit Solidarity Network) என்னும் அமைப்பு மலம் அள்ளும் தொழிலை, ஒரு “சாதி அடிப்படையிலான மற்றும் பாரம்பர்யமாகவே அடிமைகளாக வைத்திருக்கும் தொழில்வடிவம்,’’என்று அழைக்கிறது.

குறைந்தபட்ச ஊதியத்தைவிட மிகவும் குறைவாக ஊதியம் பெறும் மலம் அள்ளும் தொழிலாளர்கள் அடிக்கடி தங்கள் உயர்சாதி வேலையளிப்பவர்களிடமிருந்து பணம் கடனாகப் பெறத் தள்ளப்படுகின்றனர். இது அவர்களை கொத்தடிமைகளாகவே நீடிக்க இட்டுச் செல்கிறது.

2011ஆம் ஆண்டு அரசாங்கம் 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமப்புறக் குடும்த்தினர் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்டிருந்ததாக மதிப்பிட் டிருக்கிறது. இந்தப் பட்டியலில் உயர்ந்த இடத்தில் இருக்கும் மேற்கத்திய மகாராஷ்ட்ரா, மார்ச் இறுதிக்குள் இம்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்திட காலக்கெடு நிர்ணயித்திருக்கிறது.

“நாங்கள், கிராமப்புறங்களில் கழிப்பிடங்கள் கட்டுவதற்கு ஊக்கத்தொகை அளித்திருக்கிறோம். சில மாவட்டங்களில் இவர்களுக்கு மாற்று வேலையையும் அளித்திருக்கிறோம்,’’ என்று மாநில சமூக நீதித்துறையின் மூத்த அதிகாரி யு.எஸ். லோனாரே கூறினார்.

காலக்கெடுவிற்குள் முற்றுப்புள்ளி வைத்துவிடுவீர்களா என்று கேட்டபோது அவர் எதுவும் கூறவில்லை.

ஜன் சஹாசின் அஷிப் ஷேக், இப்புதிய சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றார்.

“ ஒரே ஒரு பெண்ணை இதனைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டால் கூட அது வெட்கக் கேடானது, அது ஒரு குற்றம்,’’ என்று அவர் கூறினார்.

நன்றி - தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்; 

(கட்டுரையை எழுதியவர்: ரினா சந்திரன்; எடிட் செய்தவர்: கேட்டி நகுயென். தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரிடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. மேலும் இது போன்ற கட்டுரைகளைக் காண news.trust.org என்கிற இணைய தளத்தை பாருங்கள்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->