×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்தியாவில் செங்கற்சூளைகளில் உழைத்துவரும் கொத்தடிமைத்தொழிலாளர்கள் படிப்படியாக தங்கள் உரிமைகள் குறித்து அறிந்துகொள்கிறார்கள்

by ரினா சந்திரன் | @rinachandran | Thomson Reuters Foundation
Tuesday, 22 March 2016 01:00 GMT

Labourers shape mud bricks as they work at a kiln in Karjat, India, March 10, 2016. Thousands of brick kiln workers in India's western Maharashtra state are learning from activists that they have the right to a minimum wage, basic amenities and fair treatment - but remain in debt bondage to owners who deny them these rights with impunity. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

கர்ஜத், மகாராஷ்ட்ரா, மார்ச் 22 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - இந்தியாவின் மேற்கத்திய மாநிலமான மகாராஷ்ட்ராவில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான செங்கற்சூளைத் தொழிலாளர்கள் தங்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம், அடிப்படை வசதிகள் மற்றும் நாகரிகமானமுறையில் நடத்தப்படுதல் ஆகிய உரிமைகள் உண்டு, என சமூக ஆர்வலர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இருந்தபோதிலும்,  கடன்வலையில் சிக்கிக்கொண்டு கொத்தடிமைகளாக தொடர்ந்து இருந்துவரும் இவர்களுக்கு உரிமையாளர்கள்  இத்தகு உரிமைகளை வழங்கிடாமல் தொடர்ந்து மறுத்துவருகிறார்கள்.

தொழிலாளர்கள் பெருமளவில் நிலமற்ற ஆதிவாசிப் பழங்குடியினராவார்கள். இவர்கள் செங்கற்சூளைகளில் ஆண்டில் பாதியளவிற்கு தாங்கள் வாங்கிய கடனுக்காக வேலை செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.  ஒட்டுமொத்த குடும்பத்தினரும் நாளொன்றுக்கு 14 மணி நேரத்திற்கு குறைந்த ஊதியம் அல்லது ஊதியமேயின்றி, மிக அற்ப அளவிலான வசதிகளுடன், ஓய்வுநாள் எதுவுமின்றி, உழைக்கின்றனர். மேலும் தாங்கள் இன்னமும் எவ்வளவு தொகை கடன்பட்டிருக்கிறோம் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது என்று சமூக ஆர்வலர்கள் கூறினார்கள்.

“கொத்தடிமைகள் என்றால் அவர்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பார்கள் அல்லது ஓர் அறையில் அடைத்துவைத்து பூட்டி வைக்கப்பட்டிருப்பார்கள் என்று அரசாங்கமும், காவல்துறையினரும் நினைக்கிறார்கள். இந்தத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக்கூட அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்,’’ என்று மும்பை அருகில் கர்ஜத்தில் இயங்கும் திஷா கேந்திரா சமூக அமைப்பின் இயக்குநர் அசோக் ஜாங்கலே கூறினார்.

“நாங்கள் தொழிலாளர்களிடம் நீங்கள் ஊதியம் பெறுவதற்கு உரிமை உண்டு, உங்களை எவரும் அடிக்கவோ திட்டவோ கூடாது, ஓய்வூ நேரம் உண்டு, உங்கள் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பப் பட வேண்டும் என்று கூறியிருகின்றோம்,’’ என்று ஜாங்கலே கூறினார்.

ஆஸ்திரேலியாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் வாக் ஃப்ரீ பவுண்டேசன் (Walk Free Foundation) என்னும் அமைப்பு உருவாக்கியுள்ள 2015 உலக அடிமைத்தன அட்டவணையின்படி, உலகில் உள்ள 3 கோடியே 60 லட்சம் அடிமைகளில், அநேகமாக சரிபாதிப் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள்.

இவர்களில் பலர் தாங்கள் வாங்கிய கடனுக்காக அல்லது இறந்த தங்கள் தாய் தந்தையர் அல்லது உறவினர் பட்ட கடனுக்காக பண்ணைகளில், விபச்சார விடுதிகளில், சிறிய கடைகளில் அல்லது உணவு விடுதிகளில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  கட்டுமானத்துறையிலும், குறிப்பாக இது போன்று முறைப்படுத்தப்படாத செங்கற்சூளைகள் மற்றும் கல் உடைக்கும் குவாரிகளிலும் அதிகமான அளவில்  காணப்படுகிறது.

“இந்த செங்கற்சூளைகளில் பெரும்பாலானவை சட்டவிரோதமானவைகளாகும், எனவே அவைகுறித்துக் கண்டறிவது என்பதும் கடினமாகும், அவர்கள் எவ்விதமான பதிவேடுகளையும் பராமரிப்பதில்லை,’’ என்று கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்டத்திற்கான (ActionAid's) தேசிய ஒருங்கிணைப்பாளர் சந்தன் குமார் கூறினார்.  

“இத்தொழிலில் நிறைய ஆட்கடத்தலும் கொத்தடிமைகளாக, ஈடுபடுத்தப்படுவதும் நிறையவே நடந்துகொண்டிருக்கின்றன, ஆனால் இது ஒரு லாபகரமான தொழிலாக இருப்பதாலும், உரிமையாளர்கள் வழக்கமாக அரசியல்ரீதியாக தொடர்புகளை வைத்திருப்பதாலும், அதிகாரிகள் இவற்றைக் கண்டும் காணாமலும் இருக்கின்றனர்,’’ என்று அவர் கூறினார்.

இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான செங்கற் சூளைகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவற்றில் எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்கிற அதிகாரபூர்வமான புள்ளிவிவரமில்லை. இவர்களில் பெரும்பாலோர் செங்கள்சூளைகளிலிருந்து எடுக்கப்படும்  களிமண்ணில் சுடப்பட்ட மற்றும் வெந்தும் வேகாமலும் இருக்கின்ற  செங்கற்களை கைகளாலேயே வெட்டி, உருக்கொடுத்து, தயார் செய்கிறார்கள்.

தொழிலாளர்களின் பெரும்பாலோர் படிப்பறிவு அற்றவர்கள், இவர்களிடம் எவ்விதமான பதிவேடுகளும் கிடையாது, மிக அற்பக்கூலியே இவர்களுக்கு அளிக்கப்படுகிறது, தாங்கள் வாங்கிய கடனை அடைக்க இன்னும் எத்தனை காலமாகும் என்று இவர்களுக்குத் தெரியாது. சிலர், தாங்கள் முன்பு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திக்கொண்டிருக்கும் காலத்திலேயே மீளவும் பண்டிகை மற்றும் திருமணங்களுக்காக கூடுதலாக கடன் வாங்கிவிடுகிறார்கள்.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்(சி.எஸ்.இ) தயாரித்துள்ள தரவுகளின்படி, குறைந்தபட்சம் ஒரு கோடி பேர்கள் செங்கற்சூளைகளில் பணிபுரிகிறார்கள். நகரங்கள் மற்றும் மாநகரங்களின்   எல்லைகளில் இவற்றில் பல அமைந்திருக்கின்றன. 

மும்பையிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கர்ஜத்தில் வாஞ்சர்வாடி கிராமத்தில் பிரதான சாலை அருகே உள்ள ஒரு சூளையில் பணியாற்றும் கணேஷ் முகுந்த் என்பவர், தன்னுடைய உரிமையாளரிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாகவும், இதில் இன்னும் எவ்வளவு திருப்பிக் கட்டவேண்டும் என்று தனக்குத் தெரியாது என்றும் கூறினார். இதற்கு முன் அவர் வேறொரு சூளையில்  பணியாற்றினார், அங்கே ஒரு தொழிலாளி மிக மோசமாக அடித்து நொறுக்கப்பட்டு, அவர் கைகள் உடைந்துவிட்டன என்று அவர் கூறினார்.

“இத்தகைய நிகழ்வுகள் குறித்து நாங்கள் கேள்விப்பட்டு, இவற்றை நாங்கள் விசாரணை செய்து காவல்துறையினரிடம் வழக்குப் பதிவு செய்கிறோம்,’’ என்று ஜாங்காலே கூறினார். இதுபோன்று ஆண்டிற்கு ஐந்து வழக்குகள் வரை வரலாம், தொழிலாளர்கள் கொல்லப்படும் சம்பவங்கள்கூட இருந்திருக்கின்றன என்று அவர் கூறினார்.

“காவல்துறையினர் தொழிலாளர்களிடம் கொஞ்சம் பணத்தை வாங்கிக்கொண்டு சங்கதியைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று அடிக்கடி நிர்ப்பந்தம் செய்கிறார்கள் இருந்தபோதிலும், நாங்கள் தொழிலாளர்களிடம் பிடிவாதமாய் இருங்கள் என்று கூறுகிறோம்’’ என்று அவர் கூறினார்.

இதுபோன்று தொழிலாளர்கள் பலர் இறந்ததற்குப்பின்னர் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நிலைமைகள் குறித்து ஆய்வு செய்து ஒழுங்குபடுத்திட 2012இல் ஒரு விழிப்புணர்வு குழுவை மாநில அரசு நியமித்திருக்கிறது. மாநில தொழிலாளர் நலத்துறையைச் சேர்ந்த செய்தித்தொடர்பாளர் ஒருவர் இதுபற்றிக்கூறுகையில், கொத்தடிமைத்தொழிலாளர்கள் குறித்து வரப்படும் புகார்கள் தொடர்பாக இப்போதும் கண்காணித்து வருகிறோம் என்றார்.

முன்னதாக இந்த மாதத்தில், 564 செங்கற் சூளை தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள்.  நாட்டில் இவ்வாறு பெரிய அளவில் விடுவிக்கப்பட்ட நடவடிக்கைகளில் இது ஒன்றாகும்.

கர்ஜத்தில் ஃபன்சாவாடி கிராமத்தில் ரமா பாய் என்பவர், திசா கேந்திராவிலிருந்து வந்த ஓர் அதிகாரியிடம் ஒரு சிறிய கோடுபோட்ட நோட்டுப்புத்தகத்தைக் காட்டுவதற்காக, செங்கற்களை வடிவமைப்பு பணியிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார்.  பணி செய்யும் காலம் தொடங்கிய டிசம்பரிலிருந்து அவர் நாள்தோறும் குறிப்புகளை எழுதி வந்திருக்கிறார், அதில் ஒவ்வொரு நாளும் தன்குடும்பத்தினர் செய்த செங்கற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டிருந்தார்.

ரமா பாய், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தன் மகளின் திருமணத்திற்காக 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.  பின்னர் பண்டிகைகளுக்காக மேலும்15 ஆயிரம் ரூபாய் வாங்கியிருந்தார், இவற்றைத் திருப்பிச் செலுத்தும்வரை செங்கற்சூளையில் வேலை செய்வதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அவரும், அவர் கணவரும் மற்றும் அவருடைய இரு மகன்களும் சூளையில் டிசம்பர் - மே போன்ற வறண்ட காலத்தில் மூன்று ஆண்டு காலமாக வேலை செய்து,நாளொன்றுக்கு 1,000 செங்கள்கள் தயார் செய்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை என்பது சூளையின் சொந்தக்காரரால் இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இலக்கு ஆகும். இதுபோன்று இன்னும் எவ்வளவு காலத்திற்கு இங்கே வேலை செய்ய வேண்டும் என்பதே இவர்களுக்குத் தெரியாது.

“நாங்கள், இவ்வாறு குறிப்புப் புத்தகம் பராமரித்து, உரிமையாளரின் பதிவை சரிபார்க்க படிக்கத்தெரிந்திருந்த அவர் மகனுக்கு நாங்கள் பயிற்சி அளித்திருக்கிறோம்,’’ என்று ஜாங்காலே கூறினார்.

“பண்டிகை மற்றும் திருமணங்களுக்காக அதிக அளவில் கடன் வாங்காதீர்கள் என்று நாங்கள் அவர்களுக்குக் கூறியிருக்கிறோம். தங்களை வலையில் சிக்க வைப்பது எது என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். மற்றும் தாங்கள் பெற்ற கடனை அவர்கள் திருப்பிச் செலுத்தும்போது, அங்கிருந்து வெளியேறுவதற்கான உரிமையை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்,’’

(செய்தியாளர்: ரினா சந்திரன்; எடிட்டிங்: டிம் பியர்ஸ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பாrர்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->