தமிழக உயர் காலணி தொழில் நிறுவனங்களில் பெண்தொழிலாளர்கள் மோசமாக சுரண்டப்படுகிறார்கள், தொழிலாளர் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்

Monday, 4 April 2016 16:35 GMT

In this 2013 file photo, people shop inside a shoe store on a street in Mumbai. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, ஏப்ரல் 4 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - இந்தியாவில் வளர்ந்து வரும் ஷூ போன்ற காலணி தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் அதிகமான அளவில் சார்ந்திருப்பது வீட்டிலிருந்தே வேலை செய்யும் பெண்களைத்தான். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தைவிடக் குறைவாகக் கொடுத்தும், எவ்விதச் சட்ட உரிமைகளும் அளித்திடாமலும் அவர்களை வேலைவாங்கிக் கொண்டிருக்கின்றன என்று கூறும் தொழிலாளர் நல ஆர்வலர்கள் இந்நிறுவனங்களிடமிருந்து காலணிகளை இறக்குமதி செய்திடும் நிறுவனங்களில் அவை உற்பத்தி செய்யப்படும் சங்கிலித்தொடரை ஆய்வு செய்து அங்கே  தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்களா என்பதையும் பரிசோதித்திட வேண்டும் என்றும் கூறுகிறார்கள். 

தமிழ்நாட்டில் ஆம்பூர் நகரம் இந்திய ஏற்றுமதி காலணி தொழில் மையங்களில் ஒன்று மற்றும் நாட்டிலேயே அதிகமான அளவில் வீடுகளிலிருந்தே வேலை செய்யும் தொழிலாளர்களையும்  கொண்டுள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் காலணிகளை பொருத்தும் வேலையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் அளித்துள்ள அதே சமயத்தில், இடைத்தரகர்கள் மூலமாக, வீட்டிலிருந்து கொண்டே வேலை செய்யும் பெண்களிடம் அடிப்படையான  மேல்பாக தையல் வேலைகளை அவுட்சோர்சிங் முறையில் மிகவும் மலிவான ஊதியம்கொடுத்து, இதன் உற்பத்தியாளர்கள் தயாரித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

“இவ்வாறு செய்வதன் மூலம், இவர்கள் இந்தியத் தொழிலாளர்நலச் சட்டங்களின் கீழ் வீட்டிலிருந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உத்தரவாதமான வேலை மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்கிற அனைத்து தொழிலாளர்நலச் சட்ட நெறிமுறைகளையும் மீறுகிறார்கள்,’’என்று சிவிடெப் இந்தியாவின் பொதுச் செயலாளர் கோபிநாத் பராகுனி, தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் திங்கள் அன்று கூறினார்.

“ நாளொன்றுக்குக் குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 126 என்று தமிழ்நாடு அரசாங்கத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச ஊதியத்தையும், இவர்கள் பெறுவதில்லை,’’ என்று அவர் மேலும் கூறினார்.

“இப்பெண்கள் ஏழை மற்றும் விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ... சட்டவிரோதமான இந்த மறைமுக உற்பத்தியின் ஓர் அங்கமாக இவர்கள் மிகவும் ஊறுபடத்தக்க விதத்தில் சுரண்டப்படுகிறார்கள்,’’ என்று தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், பெருநிறுவனங்களின் பொறுப்புணர்வை உணர்த்தக்கூடிய விதத்திலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் பராகுனி கூறினார்.

சிவிடெப் இந்தியா,  பிரிட்டிஷ் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் உலகம் முழுதும் வீடுகளிலிருந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான அமைப்பு சென்ற மாதம் வெளியிட்டுள்ள ஒரு கூட்டறிக்கை, உலகம் முழுதும் விநியோகிக்கப்படக்கூடிய மிக உயர்ரக காலணிகள் உற்பத்தி செய்யும் வலைப்பின்னலின் ஓர் அங்கமாக இருக்கும் இப்பெண்களுக்கு ஒரு ஜோடி ஷூக்களை தயாரிப்பதற்கு 0.14 டாலருக்கும் கீழேதான் கொடுக்கப்படுகிறது என்றும் ஆனால் இவை பிரிட்டனில் 60 டாலரிலிருந்து 140 டாலர் வரை விற்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது. 

ஷூ போன்ற காலணிகள் தயாரிக்கும் பெண்கள் தரைமீது அமர்ந்துதான் இவற்றைத் தைக்க வேண்டியிருக்கிறது, மிகவும் மணிக்கணக்காக ஷூக்களின் மீது குனிந்துகொண்டே வேலை செய்திட வேண்டும், மிகவும் கடினமான தோல்களினூடே ஊசியைத் திரும்பத்திரும்ப இழுக்க வேண்டும்.

இவற்றின் காரணமாக கழுத்துவலி, முதுகுவலி மற்றும் தோள் வலிக்கு இவர்கள் ஆளாகிறார்கள், கண்பார்வை மற்றும் நாட்பட்ட தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கும் ஆளாகிறார்கள், கைகளிலும் விரல்களிலும் காயங்களும் ஏற்படுகின்றன என்று அந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.

“சமயங்களில் நான் இரவில் நீண்டநேரம் வேலை செய்கிறேன். ஆனால் நான் அப்படிச் செய்யும்போது, மறுநாள் என்னால் வேலை செய்ய முடியாது, என் கைவிரல்கள் வீங்கி இருக்கும்,’’ என்று வீட்டிலிருந்து வேலை செய்யும் தொழிலாளியான சுமித்ரா, இதே அறிக்கையைத் தயார் செய்தவர்களிடம் கூறியுள்ளார்.

“ஒரு ஜோடி ஷூ தயார் செய்த பின்னர், என் கைகள் இயல்பு நிலைமைக்குத் திரும்ப சுமார்  ஒரு மணி நேரமாகும்,’’ என்று கூறியுள்ளார் அந்த பெண்மணி.

“இந்த மேல் தையல் வேலை நன்றதாக இல்லை ... எங்களுக்கு நெஞ்சில் வலி ஏற்படுகிறது.  தோலில் உள்ள கிருமிகளின் காரணமாக எங்கள் கைகள் தொற்றுநோய்களுக்கு ஆளாகின்றன. இந்த வேலையின் காரணமாக நார்பெருக்கம் திசு அழற்சி (ஃபைப்ரோஸிஸ்) நோய்க்கும் ஆளாகிறோம்,’’ என்று அவர் மேலும் கூறினார்.

மிகவும் குறைந்த ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் மோசமாக இருந்தபோதிலும், தங்களுக்கு வேறு வழியில்லை, ஏனெனில் தங்கள் குடும்பக் பொறுப்புகள் தங்களை வீட்டிலிருந்து வெளியேறிச் செல்ல இயலாததாக்கியுள்ளன என்று அந்தப் பெண் அறிக்கையைத் தயாரித்தவர்களிடம் கூறினார். 

இவர்களில் விதவைகள் மற்றும் நோய் வாய்ப்பட்டுள்ள கணவரைப் பெற்றிருக்கும் பெண்களின் குடும்பத்திற்கு இவர்களின் வேலைதான் ஒரே வருமானமாகும்.

உலக அளவில் காலணிகளை ஏற்றுமதி செய்திடும் நாடுகளில் இந்தியா எட்டாவது இடத்தை வகிக்கிறது. 2012க்கும் 2014க்கும் இடையே காலணி ஏற்றுமதியில் இந்தியா 50 சதவீதம் வளர்ந்திருக்கிறது, 2014இல் உலகம் முழுதும் 200 மில்லியன் ஷூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து காலணிகளை பெறும் போது, தயாரிப்பு நிறுவனங்கள் அதற்கான தோல்கள் மற்றும் தோல் பொருட்களை பெறுவதிலிருந்து, தோல்களை பதனிடுதல், இறுதி தாயாரிப்பு வரை ஒவ்வொரு நிலையிலும் அதனுடைய சங்கிலித்தொடர்களைக் கவனமாகக் கண்டறிந்திட வேண்டும் என்று ஆர்வலர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் 14 தயாரரிப்பு நிறுவனங்களை இதுதொடர்பாக தொடர்புகொண்டுள்ளனர். இதேபோன்று தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளைக் களைந்திட என்ன செய்திருக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டுள்ளனர். சிலர் பிரச்சனைகளை அங்கீகரித்தார்கள். ஆனால் மற்றவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே விவரங்களைக் கொடுத்தார்கள்.

இந்திய காலணி தொழிலில் தனித்துவம் மிக்க ஒன்றல்ல என்றும், பல நாடுகளில் ஷூ தொழில் நிறுவனங்கள் வீடுகளிலிருந்து வேலை செய்யும் தொழிலாளர்களையே சார்ந்திருக்கின்றன என்றும் அவர்களுக்கு மிகவும் குறைந்த ஊதியத்தை அளித்தே வேலை வாங்குகின்றன என்றும் அரசு சாரா  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

“போர்ச்சுக்கலிலிருந்து பல்கேரியா வரை, கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வடக்கு ஆப்ரிக்கா, இந்தியா வரை, வீடுகளிலிருந்து வேலை செய்யும் தொழிலாளர்கள்  ஷூ விநியோக சங்கிலித் தொடரில் காணப்படுகிறார்கள்,  அவர்கள் பணிசெய்யும் இடம் வெவ்வேறாக இருந்தாலும் அவர்களின் வேலை நிலைமைகள் ஒரேமாதிரி இருப்பதைத்தான் அனுபவம் காட்டுகிறது,’’ என்று அறிக்கை கூறியிருக்கிறது.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: அலெக்ஸ் விஹிடிங்க். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பாrர்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.