×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

குடும்பத்தைக் காப்பாற்ற இளம் ராஜஸ்தான் சிறுமி பாட்டி செய்யும் வேலையை எடுத்துக்கொண்டார்

by Thomson Reuters Foundation | @rinachandran | Thomson Reuters Foundation
Thursday, 28 April 2016 00:01 GMT

-ரினா சந்திரன் 

 

துங்கார்பூர், ஏப்ரல் 28 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - ராஜஸ்தான் மாநிலத்தில், ஒரு குடும்பத்தில் மூத்த பெண் குழந்தை அனிதா. ஒரு குடும்பத் துயர் என்பதன் பொருள், இந்த சிறுமி மற்ற சககுழந்தைகளைப் போல பள்ளிக்கூடத்திற்குச் செல்லமுடியாமல், வேலைக்குப் போக வேண்டியிருப்பதாகும். அவளுக்கு வயது பதினான்கே என்ற போதிலும், வயது வந்தவர்கள் செய்ய வேண்டிய வேலையை அவரும் செய்ய வேண்டி இருப்பதாகும்.

அனிதாவின் தந்தை திடீரென இறந்தபின்பு, அவரது தாயார்  தன் மூன்று குழந்தைகளையும் பராமரிக்காது,  மாண்ட்வா கிராமத்தில் உள்ள அக்குழந்தைகளுடைய பாட்டியிடம் அனுப்பிவிட்டார். மிகவும் அற்பமாக வரும் விதவை ஓய்வூதியத்தில் அவர்களை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்ட அவர்களது பாட்டி  நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அனிதாவை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் வீட்டு வேலைகள் செய்வதற்காக நிறுத்தி விட்டார். பின்னர் ஒரு கட்டுமானப் பணியிடத்தில் அரசு வேலையை எடுத்துக் கொள்வதற்கும் அனுப்பினார்.

“நான் பள்ளிக்கூடம் போகத்தான் விரும்பினேன். என்னுடைய ஆருயிர் தோழி இப்போதும் பள்ளிக்கூடத்திற்குப் போகிறாள்.,“ என்று அனிதா கூறினார். இவர் தற்போது காலை 9மணி  முதல் மாலை  5 மணிவரை  அன்றாடம் போக வேண்டிய நாள் வேலைக்கு செல்வதற்கு முன் தண்ணீர் கொண்டுவருவது, சமைப்பது, குடும்பத்தின் ஆடுகளை வளர்ப்பது ஆகிய வீட்டு வேலைகளையும் செய்துவருகிறார்.

“என் பாட்டியால் இந்த வேலைகளைச்  செய்ய முடியாது, வேறு யாரும் கிடையாது.“

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் கூற்றின்படி, ஐந்துக்கும் பதினேழுக்கும் இடைப்பட்ட வயதில்,  உலக அளவில் உள்ள 16 கோடியே 80 லட்சம்  குழந்தைத் தொழிலாளர்களில், இந்தியாவில் 57 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயம் சார்ந்தவற்றில், பருத்தி, கரும்பு மற்றும் நெல் வயல்வெளிகளில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள், கால் பகுதிக்கும் மேலானவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களிலும், துணிமணிகளில் எம்பிராய்டரி போடும் தொழில்களிலும், கம்பளிகள் போன்ற தரைவிரிப்பான் நெசவு அல்லது தீக்குச்சிகள் செய்வதிலும் மற்றும் பீடி சிகரெட்டுகள் சுருட்டுவதிலும் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சிறார்கள், உணவுவிடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் பாத்திரங்களைக் கழுவுவது, காய்கறிகளை நறுக்குவது மற்றும் நடுத்தர வர்க்கத்தாரின் வீடுகளில் வேலை செய்வது போன்றவற்றிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

சமீப காலங்களில், அனிதாவைப் போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்குக் ஒரு விருப்பத்தேர்வு திறக்கப்பட்டுள்ளது.  அதாவது மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டம்தான் அது. 2005ஆம் ஆண்டில் சட்டமான இத்திட்டமானது, கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் வயது வந்த ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கிறது. வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கு அதிகாரமளித்தல்

இந்த வேலைத்திட்டமானது கிராமப்புற வறுமையைக் குறைப்பதிலும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பாதியிலேயே படிப்பைக் கைவிடுவதைக் கட்டுப்படுத்துவதிலும், பெண்களுக்குப் பொருளாதாரரீதியாக அதிகாரமளிப்பதிலும், கிராமப்புற மக்களையும் உள் அடக்கிய நிதி மேம்பாட்டினைக் கண்டது.

நாட்டின் பல பகுதிகளில், வறட்சி தொடர்ந்து பல ஆண்டுகளாக நீடிப்பது, கிராமத்தினரை வேலை தேடி புலம்பெயர்ந்து செல்வதற்கு நிர்ப்பந்தித்திருக்கிறது.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்ளும் அதே சமயத்தில், பெண்கள் சிலசமயங்களில் கட்டுமானத் தளங்களில் அல்லது நெடுஞ்சாலைகளில் நாளொன்றுக்கு 180 ரூபாய்கு வேலை செய்வதற்குத் தங்கி விடுகிறார்கள். அவர்களும் போய்விடுகிறபோது, பெரியவர்கள் அந்த வேலையை எடுத்துக் கொள்கிறார்கள்.

அதிகாரபூர்வ தரவுகளின்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் உத்தரவாதச் சட்ட திட்டத்தின் கீழ் 2 கோடியே 40 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். மாநிலத்தின்  செயல்படும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் உத்தரவாதச் சட்டத் திட்டத்தின் தொழிலாளர்களில்  60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாவர்.

குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து குறிப்பிடப்படவில்லை. எனினும், அவர்கள் மிகுதியாகவே இருக்கிறார்கள். எவரும் அனிதாவின் அடையாள அட்டையோ அல்லது அவரது வயதையோ ஆராய்வது இல்லை. அவளைப் போன்றே உள்ள மற்ற குழந்தைகளும் இருக்கிறார்கள் என்று அவள் கூறினாள்.

ராஜஸ்தான் மாநில மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்ட அலுவலர் ஒருவர். இந்தத் திட்டத்தின் கீழ் குழந்தைகள் எவரும் பணியில் அமர்த்தப்படவில்லை என்றார்.

 “வயதுக்கு வராதவர்கள் (மைனர்கள்) எவரும் வேலைசெய்யவில்லை என்பதில் நாங்கள் சந்தேகம் எதுவுமின்றி நிச்சயமாக இருக்கிறோம்,“ என்று சந்தீப் கத்ரா என்பவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனிடம் கூறினார்.

“தாய் அல்லது தந்தையின் இடங்களில் சிலர் வேலை செய்யலாம். ஆனால், அவர்களுடைய வேலை அட்டைகளை ஆராய்வதும், முறைகேடுகள் எதுவும் இல்லாது இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதும் கிராம அதிகாரிகளின் பொறுப்பு.“ என்று அவர் மேலும் கூறினார்.

தையல் இயந்திரம்

லாப நோக்கின்றி செயல்படும் சேவ் தி சில்ரன் அமைப்பு துங்கார்பூர் மாவட்டத்தில் பெற்றோர்களிடம், குழந்தைகளைப் படிக்கத்தான் அனுப்ப வேண்டும், வேலைக்கு அனுப்பக் கூடாது என்று இணங்கச் செய்வதில் கொஞ்சம் வெற்றி வெற்றிருக்கிறது.

இந்த அமைப்பு துங்கார்பூரில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத் திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகளில் குழந்தைகளை ஈடுபத்துவதை தடுக்க அரசு அதிகாரிகளுடன் செயல்பட்டது. 2011ஆம் ஆண்டு தரவின்படி. தேசிய சராசரி படிப்பறிவான 74 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இங்கே 58 சதவீதமாகும்.

“எங்கள் முயற்சிகளையும் மீறி மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத் திட்டத்தின்கீழ் பல குழந்தைகள் வேலை செய்வது தொடரத்தான் செய்கிறது,“ என்று திட்ட ஒருங்கிணைப்பாளர்  ஹரிஷ் சந்தேரியா, கூறினார்.

“வறுமைதான் இவர்களை இவ்வாறு வேலைசெய்யத் தள்ளி இருக்கிறது என்று கருதப்பட முடியும். ஆனாலும், துங்கார்பூரில் குழந்தைத் தொழிலாளர் நிலைமை மோசமாகி இருப்பதற்கு இங்கே மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ள  சமூகரீதியான கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.“என்று அவர் கூறினார்.

இந்த வாரம் வெளியாகியுள்ள சேவ் தி சில்ரன் அமைப்பின் ரிப்போர்ட்டின்படி, இந்தியாவில் சிறுமிகளும், பெண்களும் ஒதுக்கி வைக்கப்படுதல் என்பது சமூகத்தில் ஆழ்ந்து நிலைத்து இருப்பதும் அவர்கள் கருவில் உருவாகும்போதே தொடங்கிவிடுகிறது என்றும் அது குழந்தைத் திருமணம் வரைக்கும் நீடிக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

அனிதாவின் வழக்கைப் பொறுத்தவரை, அனிதாவின் ஊதியம் இதுவரை, தன் தம்பிகள் இருவரை அறக்கட்டளை இருப்பிடப் பள்ளி ஒன்றில் படிப்பதற்கு பணம் செலுத்திட உதவி வந்திருக்கிறது. ஆனால், அவரது பாட்டிக்குரிய மாநில அரசின் உதவிகளைப் பெற்றுத் தருவது உட்பட, பல்வேறு லாப நோக்கமற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், அவரது குடும்பம் அனிதாவின் ஊதியத்தை மட்டும் சார்ந்திருக்க வேண்டியதில்லை.

அனிதாவும் தன்னை ஒரு தொழிலாளியாகவே நீடித்திடக்கூடிய விதத்தில் திட்டமிடவில்லை.

“நான் தையல் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனவே நான் ஆடைகள் தைக்க முடியும்,அவற்றை கிராமங்களில் விற்க முடியும்.“ என்று அவர் கூறினார்.

“இப்போது நாங்கள் துணிகளை வாங்க நகரங்களுக்குப் போக வேண்டியிருக்கிறது. ஆகையால், நான் ஒரு தையல் இயந்திரத்தைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால், என்னால் நன்றாக செய்ய முடியும் என்று நினைக்கிறேன்,“ என்று அவர் கூறினார்.

(செய்தியாளர்: ரினா சந்திரன்; எடிட்டிங்: டிம் பியர்ஸ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பாrர்க்கலாம்.

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->