×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

நேபாள நாட்டுக் குடியேறிகள் ஆஃப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் பணிபுரியத் தடை

by Gopal Sharma | Thomson Reuters Foundation
Friday, 24 June 2016 14:28 GMT

A police officer carries an unconscious family member of a Nepali national, who was killed when a suicide bomber struck a minibus in Kabul, at Tribhuvan International Airport in Kathmandu, Nepal June 22, 2016. REUTERS/Navesh Chitrakar

Image Caption and Rights Information

 - கோபால் சர்மா

 காத்மண்ட், ஜூன் 24 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - இந்த வாரத் துவக்கத்தில் ஆஃப்கானிஸ்தான் தலைநகரில் நடந்த ஒரு தலிபான் தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதலில் நேபாள நாட்டைச் சேர்ந்த 13 காவலாளிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் நேபாள நாட்டவர்கள் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது என தொழிலாளர் நல அமைச்சர் தீபக் பொஹாரா வெள்ளியன்று தெரிவித்தார்.

பெரும்பாலான நேரங்களில் அபாயத்தையோ அல்லது சுரண்டலையோ எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளப்படும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குடியேறிகளை இத்தகைய மோதல்களால் அல்லல்படும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்ற ஆட்கடத்தல் கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் கே.பி. ஓலியின் அரசுக்கு நாடாளுமன்றக் குழு ஒன்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“இந்த நாடுகளில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலைகள்தான் எங்களின் இந்த முடிவுக்குத் தூண்டுதலாக இருந்தது” என பொஹாரா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார். “இந்த நாடுகளில் பணிபுரியும் எமது நாட்டவர்கள் நாட்டிற்குத் திரும்பிவர விரும்பினால், அரசு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்”.

உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் நேபாளமும் ஒன்றாகும்.

2006ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த பத்தாண்டு கால உள்நாட்டு மோதல்களால் உருவான நிலையற்ற அரசியல் சூழ்நிலையானது முதலீட்டிற்கான ஊக்கத்தை தடுத்ததோடு, வளர்ச்சிக்கும் தடைபோட்டு, வேலைவாய்ப்பு உருவாவதையும் தடுத்து நிறுத்தியது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான நேபாள நாட்டவர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்ல நிர்ப்பந்தத்திற்குள்ளானார்கள்.

இந்த நிலையை மேலும் மோசமாக்கும் வகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் –மே மாதங்களில் நிகழ்ந்த, 8,800 பேரை பலிவாங்கி, 20 லட்சம் பேரை வீடற்றவர்களாக ஆக்கிய, இரட்டை பூகம்பங்களின் தாக்கத்திலிருந்து அந்த நாடு இன்னும் மீண்டு வரவில்லை.

இவர்களில் பெரும்பாலானவர்கள் காவலாளிகள், ஓட்டுநர்கள், கட்டிட வேலை அல்லது வீட்டு வேலை போன்ற வேலைகளை செய்ய மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார்கள். இவர்கள் வீட்டுக்கு அனுப்பும் பணமானது அந்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 30 சதவீதமாக உள்ளது.

எனினும் சுதந்திரமாக நடமாடுவதற்குக் கட்டுப்பாடுகள், நீண்ட வேலைநேரம், பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள், ஊதியத்தை தராமல் இருப்பது போன்ற பல்வேறு வகையில் வேலை தொடர்பான துன்புறுத்தல்களை அவர்களில் பலரும் எதிர்நோக்கி வருகின்றனர்,

காபூல் நகரத்தில் உள்ள கனடா நாட்டு தூதரகத்தில் வேலை செய்து வந்த நேபாள நாட்டு காவலாளிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து ஒன்றின்மீது திங்கட்கிழமை நடைபெற்ற தாக்குதல்தான், தனது நாட்டவர்களின் பாதுகாப்பு நலன்களை கணக்கில் கொண்டு இந்த நான்கு நாடுகளில் பணி செய்ய, வேலைக்கான அனுமதிகளை(ஒர்க் பெர்மிட்) திரும்பப் பெறவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது என்று பொஹாரா தெரிவித்தார்.

எனினும் இத்தகைய தடையானது எவ்வகையிலும் உதவிகரமாக இருக்காது என்றும், மாறாக, அந்த நாட்டோடு திறந்த எல்லையை கொண்டுள்ள இந்தியாவிற்கு மேலும் அதிகமான எண்ணிக்கையில் நேபாள நாட்டவர்களை அழைத்துச் செல்லவும், அங்கிருந்து இந்த நாடுகளுக்குச் செல்ல ஏற்பாடு செய்யவார்கள். இவ்வாறு ஆட் கடத்தும் தொழிலில் ஈடுபடும் குழுக்களைத் தூண்டிவிடுவதாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். (செய்தியாளர்: கோபால் சர்மா, எடிட்டிங்: நிதா பல்லா; செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->