×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

ஆயத்த ஆடை தொழிலாளர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கி உயர்நீதி மன்றம் உத்தரவு

Tuesday, 19 July 2016 15:53 GMT

Employees work inside a garment factory in Mumbai, India, June 1, 2016. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, ஜூலை 19 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தமிழ்நாட்டில் ஆயத்த ஆடைத் தொழிலில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு 30 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தில் உயர்வு என்பது 12 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனங்கள் பலவற்றுக்கும் ஆயத்த ஆடைகளை சப்ளை செய்து வரும் 500 ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரின் சார்பில் இந்த வழக்கில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் சர்வதேசச் சந்தை நிலைமைகள் மிகக் கடுமையாக உள்ள நிலையில் இந்த புதிய ஊதியத்தை அமல்படுத்துவது “நடைமுறையில் சாத்தியமில்லை” எனத் தெரிவித்தனர்.

இத்தீர்ப்பின்கீழ் இத்தொழிலாளர்களின் சராசரி மாத ஊதியமானது ரூ. 4500லிருந்து ரூ. 6500ஆக உயரும். பெரும்பாலான இதர மாநிலங்களில் நூற்பாலை தொடர்பான வேலைகளில் நிலவும் ஊதியத்தோடு ஒப்பிடத்தக்கதாகவே இது இருக்கும் என பிரச்சாரகர்கள் கூறினர்.

“தொழிலாளர்கள் தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதைப் பெறுவதற்கு நடத்திய மிக நீண்ட போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி” என பெண்களுக்கான ஒரு தொழிலாளர் சங்கமான பெண் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சுஜாதா மோடி தெரிவித்தார்.

“பணவீக்கமும் விலைவாசியும் உயர்ந்து கொண்டே போவதால் தொழிலாளர்கள் மிக வறிய நிலைமைகளில் வாழ்ந்து வருகிறார்கள்.”

நீதிமன்றத்தின் தீர்ப்பை இத்தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் உடனடியாக செயல்படுத்துவதை மாநில அரசு இணக்கம் தெரிவித்து உறுதிப்படுத்த வேண்டும் என பிரச்சாரகர்கள் கோரியுள்ளனர்.

உலகத்தில் மிகப்பெருமளவில் நெசவாலை மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. ஆண்டுக்கு 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு விற்பனையாகும் இத்தொழிலில் சுமார் 4 கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

1948ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியங்கள் சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த அடிப்படையான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கு உள்ளது. எனினும் தமிழ்நாட்டில் இத்தகைய ஊதிய உயர்வு குறித்த உத்தரவுகளை நெசவுத் தொழில் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளனர்.

கடைசியாக 2004ஆம் ஆண்டில்தான் மாநில அரசு ஊதிய உயர்விற்கான உத்தரவை வெளியிட்டது. எனினும் இந்த விஷயம் உடனடியாக நீதிமன்றத்திற்குச் சென்றதோடு, இந்த ஊதிய உயர்வும் அமலாக்கப்படவில்லை.

நீடித்துக்கொண்டே போன இந்தச் சட்டப்போராட்டத்தின்போது, பின்னர் அரசு ஒரு ஊதிய உயர்வை அறிவித்து 2014இல் ஒரு உத்தரவை போட அதை எதிர்த்தும் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சார்பில் பதிவான 500க்கும் மேற்பட்ட மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

உற்பத்தியாளர்கள் இந்த திருத்தப்பட்ட ஊதியத்தையும், டிசம்பர் 2014 முதல் தொழிலாளர்கள் பெற வேண்டிய நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டுமென்று ஜூலை 13 அன்று பிறப்பித்த தனது உத்தரவில் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

துணி வெட்டுபவர்கள், தைப்பவர்கள், பொத்தான் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட இந்தத் தொழிலாளர்கள் பணவீக்கத்தோடு இணைந்த வகையில் ஒரு கூடுதல் படியையும் பெறுவார்கள்.

சென்னைக்கு அருகேயுள்ள ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வாரத்திற்கு சராசரியாக 45 மணி நேரம் சட்டை தையல் வேலையில் ஈடுபட்டு வரும் ஏ. தனலஷ்மி இந்தத் தீர்ப்பை வரவேற்றதோடு, ஒவ்வொரு மாதமும் ரூ. 6000 பெறுவதற்கே போராட வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

“எனது வேலைப்பளு அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர, ஊதியமானது மிகவும் அரிதாகவே அதிகரிக்கிறது” என அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார். “இந்த நீதிமன்றத் தீர்ப்பு எனக்கு நம்பிக்கை அளித்துள்ளது.”

இந்த வழக்கில், அரசின் சார்பில் வாதம் புரிந்த வழக்கறிஞர்கள் இந்த உற்பத்தியாளர்கள் ‘கறைபடிந்த கரங்களுடன்’ இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியதோடு, இவர்களில் பலரும் தங்கள் ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை எப்போதுமே வழங்கியதில்லை என்றும் நீதிமன்றத்தில் கூறினர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் தீர்மானித்துள்ள உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் பங்களாதேஷ், சீனா போன்ற அண்டை நாடுகளின் கடுமையான போட்டியை தாங்கள் சந்தித்து வரும் சூழ்நிலையில் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு ஒவ்வாதது  என நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

“இந்தியர்களில் பலரும் இங்கு தொழிற்சாலைகளை திறப்பதற்குப் பதிலாக, பங்களாதேஷில் தொழிற்சாலைகளை நிறுவியுள்ளனர். ஏனெனில் அங்கு அனைத்துமே மலிவாக உள்ளது” என வழக்கறிஞர் விஜய் நாராயணன் குறிப்பிட்டார். “மிகவும் போட்டி நிரம்பிய தொழிலாக இது உள்ளது என்பதே நடைமுறை உண்மையாகும்.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: எம்மா பாதா. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Employees work inside a garment factory of Orient Craft Ltd in Gurgaon on the outskirts of New Delhi, India, in this July 3, 2015 file photo. REUTERS/Anindito Mukherjee

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->