×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

புலனாய்வு – தொழிலை உயிரோட்டமாக வைத்திருக்க இந்தியாவின் ‘செயலற்ற’ மைக்கா சுரங்கங்களில் குழந்தைத் தொழிலாளர்களின் இறப்பை மூடி மறைக்கப்படுகின்றன

by நீதா பல்லா, ரினா சந்திரன் மற்றும் அனுராதா நாகராஜ் | Thomson Reuters Foundation
Wednesday, 3 August 2016 00:01 GMT

-          சட்டவிரோத மைக்கா சுரங்கங்களில் ஏற்படும் குழந்தைத் தொழிலாளர்களின் மரணங்கள் மூடி மறைக்கப்படுகின்றன என புலனாய்வு வெளிப்படுத்துகிறது.

-          கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே குறைந்தது ஏழு குழந்தைத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். எனினும் இந்த மரணங்கள் பற்றி தகவல் தெரிவிக்கப்படவில்லை.

-          இதில் தலையிடவும், இந்தச் சுரங்கங்களை சட்டபூர்வமாக்கவும் அரசுகளுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.      

Blood Mica
Deaths of child workers in India's mica "ghost" mines covered up to keep industry alive
Enter

- நீதா பல்லா, ரினா சந்திரன் மற்றும் அனுராதா நாகராஜ்

கோடெர்மா/பில்வாரா/சைதாபுரம், ஆகஸ்ட் 3 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) -பெரியவர்களோடு கூடவே, ஐந்து வயதான குழந்தைத் தொழிலாளர்களும் வேலை செய்யும் இந்தியாவின் சட்டவிரோதமான மைக்கா சுரங்கங்களின் அடி ஆழத்தின் இருளில் குழந்தைத் தொழிலாளர்களின் மரணங்களின் - ரகசியங்கள் - புதைந்து கிடக்கின்றன என்பதையும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே ஏழு குழந்தைத் தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளது மறைக்கப்பட்டுள்ளது என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனின் ஒரு புலனாய்வு தெரிவிக்கிறது.

அழகுசாதனப் பொருட்கள், கார்களுக்கான வண்ணங்கள் ஆகியவற்றை மேலும் ஒளிவிடச் செய்கின்ற, மதிப்புமிக்க இந்த கனிமத்தை தேர்வு செய்யவும், வகை பிரிக்கவும் சின்னஞ் சிறு கைகளே மிகவும் பொருத்தமாக உள்ள நிலையில் அதிகமான அளவில் மைக்காவை உற்பத்தி செய்து வரும் மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றில் குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவது மூன்று மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வில் தெரியவந்துள்ளது.

எனினும், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், உள்ளூரில் உள்ள குடும்பங்கள் ஆகிய பிரிவினரை சந்தித்துப் பேசியபோது, அதிகாரபூர்வமாக மூடப்பட்டதாக, கைவிடப்பட்டு செயலற்ற சுரங்கங்களில் வேலை செய்வதன் மூலம் குழந்தைத் தொழிலாளர்கள் தங்கள் உடல்நலத்திற்கு மட்டுமே ஊறு தேடிக் கொள்வதில்லை; ஒழுங்குபடுத்தப்படாத, எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள சுரங்கங்களில் தங்கள் உயிரையும் இழக்கிறார்கள் என்பதும், கடந்த ஜூன் மாதத்திலிருந்து இதுவரை ஏழு குழந்தைத் தொழிலாளர்கள் இவ்வாறு உயரிழந்துள்ளனர் என்றும் தெரிய வந்தது. 

பீகார் மாநிலத்தில் உள்ள சந்த்வாரா என்ற களிமண்- செங்கல் வீடுகளைக் கொண்ட கிராமத்தில் ஒரு தந்தையின் துயரம் இந்தியாவின் மைக்கா உற்பத்தியில் 70 சதவீதத்தை கையாளுவதாக மதிப்பிடப்படும் சட்டவிரோதமான சுரங்கங்களில் நிலவும் கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியது.

 

வாசுதேவ் ராய் பிரதாபின் 16வயது மகன் மதன் அண்டை மாநிலமான ஜார்க்கண்ட்டில் உள்ள ஒரு மைக்கா சுரங்கத்தில் பணியாற்றி வந்த போது, வேறு இரண்டு மூத்த தொழிலாளிகளுடன் கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று உயிரிழந்துள்ளான்.

அந்த பதின்பருவத்தினனின் மறைவுக்கு துக்கம் கொண்டாட வந்திருந்த குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் சுற்றிலுமிருக்க, வீட்டுக்கு வெளியே ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த பிரதாப், “இந்தச் சுரங்கங்களில் வேலை செய்வது இவ்வளவு அபாயமானது என்று எனக்குத் தெரியாது. எனக்கு மட்டும் தெரிந்திருந்தால், நான் அவனை போக விட்டிருக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டார்.

“அந்தச் சுரங்கம் சரிந்து விழுந்த பிறகு அவனது உடலை வெளியே எடுப்பதற்கே ஒரு நாள் ஆனது என்று அவர்கள் சொன்னார்கள். என்னிடம் சொல்லாமலேயே அவர்கள் அவனது உடலை எரித்து விட்டார்கள். அவனை எரிப்பதற்கு முன்னால் என் பையனை நான் பார்க்கக் கூட இயலவில்லை”

இத்தகைய சுரங்கங்களை நடத்துபவர்கள், இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைப் போலவே, பிரதாப்பும் இந்த மரணம் பற்றி புகார் தெரிவிக்கவில்லை. இந்தியாவின் மிகவும் ஏழ்மையான பகுதியினருக்கு வருமானம் அளித்து வரும் இத்தகைய பாதுகாக்கப்பட்ட வன நிலங்களில் செயல்பட்டு வரும் சட்டவிரோதமான சுரங்கங்களுக்கு முடிவு கட்டுவதை விட தனது இழப்பிற்காக ஒரு தொகையை பெற்றுக் கொள்வதையே அவர் தேர்வு செய்திருந்தார். 

இந்தச் சுரங்கத்தை நடத்துபவரிடமிருந்து ரூ. 1, 00,000/- (1,500 அமெரிக்க டாலர்கள்) பெற்றுத் தருவதாக தனக்கு உறுதி அளிக்கப்பட்டது என்றும், எனினும் இன்னமும் அந்தத் தொகையை தான் பெறவில்லை என்றும் அந்த விவசாயி கூறினார்.

மதன் வேலை செய்து வந்த சுரங்கமானது சட்டவிரோதமானதாகும். இந்த பதின்பருவச் சிறுவனின் மரணம் குறித்துக் கருத்து தெரிவிக்க யாரும் அங்கு கிடைக்கவில்லை.

18 வயதிற்குக் கீழுள்ள சிறுவர்களை சுரங்கங்களிலும், இதர அபாயகரமான தொழில்களிலும் வேலைக்காக ஈடுபடுத்துவதை இந்திய சட்டங்கள் தடை செய்கின்றன. என்றாலும் மிகவும் கடுமையான வறுமையில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் வருமானத்தை பெருக்குவதற்காக தங்கள் குழந்தைகளையே நம்பியுள்ளன.

 தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனின் இந்த கண்டுபிடிப்புகளை நோபல் பரிசு பெற்ற செயல்பாட்டாளரான கைலாஷ் சத்யார்த்தியின் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவான பச்பன் பச்சாவ் ஆந்தோலன் (பிபிஏ) அல்லது சேவ் த சைல்ட் இயக்கம் - இது ஆவணப்படுத்தியதில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டுமே மைக்கா தொடர்பான மதன் மற்றும் வேறு இரண்டு சிறுவர்களின் மரணம் உள்ளிட்டு 20 உயிரிழப்புகள்– இது மாத சராசரியை விட இரண்டு மடங்காகும்.

ஜூலை மாதத்தில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதை பிபிஏ கண்டறிந்தது.

கார் உற்பத்தி, கட்டுமானத் துறை, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் உலகத்தின் மிகப்பெரும் புகழ் பெற்ற நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தக் கனிமமானது சுற்றுச் சூழலுக்கு உகந்த ஒன்றாகவும் திகழ்கிறது. வெள்ளி நிறத்தில், கண்ணைப் பறிக்கும்படியான இந்தக் கனிமத்தை உலகத்தில் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.

 

“ரத்தத்தில் தோய்ந்த பணம்”

இந்தியாவின் சுரங்கங்களுக்கான அமைச்சகத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் மைக்கா சுரங்கங்களில் பாதுகாப்பு என்ற விஷயமானது மாநில அரசுகளைச் சார்ந்தது எனவும், சட்டவிரோதமான சுரங்கங்களுக்கு அனுமதி வழங்குமாறு சுரங்கத் தொழிலிலிருந்து கடுமையான நிர்ப்பந்தம் மாநில அரசுகளின் மீது இருந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

ஏனெனில், மைக்கா தொழிலில் கொடிகட்டிப் பறந்து வரும் கறுப்புச் சந்தை, தொழிலாளர்களின் மீதான கடுமையான சுரண்டல், அவர்களை மோசமாக நடத்துவது, குழந்தைத் தொழிலாளர்களின் மரணங்கள் ஆகியவற்றைக் கட்டுப் படுத்த இது உதவும் என சமூக செயல்பாட்டாளர்களும் இந்தக் கோரிக்கையை ஆதரிக்கின்றனர்.

“இத்தகைய சுரங்கங்களில் சோதனை மேற்கொள்ளவோ அல்லது அவற்றைக் கட்டுப்படுத்தவோ மத்திய அரசிடம் எவ்வித வசதியும் இல்லை” என அந்த அதிகாரபூர்வ பேச்சாளர் ஒய்.எஸ். கட்டாரியா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதங்களில் வெளிவந்துள்ள மதன் மற்றும் ஆறு சிறுவர்களின் மரணம் என்பது பனிப்பாறையில் வெளியே தெரியும் ஒரு சிறு புள்ளியே என்றும், மைக்கா சுரங்கங்களில் நிகழும் உயிரிழப்புகளில் 10 சதவீதத்தை விடக் குறைவாகவே காவல் துறைக்குத் தெரிவிக்கப்படுகின்றன என்று கடந்த பத்தாண்டுகளாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் குழந்தைத் தொழிலாளர் முறையை நிறுத்த முயற்சி செய்து வரும் பிபிஏ செயல்பட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 “இந்தச் சுரங்கங்கள் அனைத்துமே சட்டவிரோதமானவை என்ற வகையில், இவற்றில் நிகழும் குழந்தைத் தொழிலாளர் மரணங்கள் குறித்து அதிகாரபூர்வமான புள்ளி விவரங்கள் எதுவும் இருப்பதில்லை. நாங்கள் செயல்பட்டு வரும் கிராமங்களில் உள்ள ஒருங்கிணைப்புகளின் மூலமாகவே இந்தச் சம்பவங்களைப் பற்றி நாங்கள் தெரிந்து கொள்கிறோம்”என பிபிஏயின் ஜார்க்கண்ட் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ் பூஷண் தெரிவித்தார்.

“சாதாரணமாக மாதத்தில் சராசரியாக 10 மரணங்கள் பற்றி நாங்கள் கேள்விப் படுவதுண்டு. ஆனால் ஜூன் மாதத்தில் 20க்கும் மேற்பட்ட மரணங்களைப் பற்றி நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம். இதில் சுமார் 15வயதே ஆன இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.”

இவ்வாறான சிறுவர்கள் மரணங்களின் எண்ணிக்கை பற்றி கருத்து தெரிவிக்க இந்தியாவின் சுரங்கப் பாதுகாப்புக்கான இயக்குநரகத்திலிருந்து எந்தவொரு அலுவலரும் கிடைக்கவில்லை.

கடந்த ஜூன் மாதத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோடர்மா, கிரித் ஆகிய மாவட்டங்களில் அரசு அமைப்பான குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய கமிஷன் உண்மை அறியும் குழுவின் மூலம் ஆய்வை மேற்கொண்டதில் எட்டு வயதான குழந்தைகளும் கூட மைக்காவை தோண்டி எடுக்கும் வேலைகளில் ஈடுபடுவதைக் கண்டறிந்தது.

“சுரங்கங்களில் ஏற்படும் விபத்துகளால் குழந்தைகள் காயமுறுவது அல்லது உயிரிழப்பது ஆகியவை பற்றி எங்களுக்கு எவ்வித அறிக்கையும் கிடைப்பதில்லை. ஏனெனில் இவை அனைத்துமே சட்டவிரோதமானவை; எனவே வெளிப்படையாக எதையும் தெரிவிப்பதில்லை. என்றாலும் இத்தகைய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கக் கூடும்” என குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய கமிஷன் உண்மை அறியும் குழுவின் தலைவரான ப்ரியங்க் கானுங்கோ கூறினார்.

குழந்தைத் தொழிலாளர் தொடர்பான சட்டங்களை உறுதிப்படுத்தும் பொறுப்பு வகிக்கும் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர் நலத்துறையின் மூத்த அதிகாரி ஒருவரும் மைக்கா சுரங்கங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் இறப்பது பற்றி எவ்வித அறிக்கையும் இல்லை என்று குறிப்பிட்டார்.

“முதலில் ஒப்புதல் இல்லாமல் யாராவது சுரங்கப் பணிகளில் ஈடுபட்டால் அது சட்டவிரோதமாகும். அதில் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்துகிறார்கள் எனில் அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு குற்றங்களைச் செய்கிறார்கள் என்றுதான் இதற்குப் பொருள்” என்று ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர் நலத் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கே. ஜி. ரஹாத்தே தெரிவித்தார்.

குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி அதிகாரிகளுக்குத் தெரியும்

ஒரு சில சுரங்கங்களில் குழந்தைத் தொழிலாளர் என்பது ஒரு பிரச்சனையாக உள்ளது என மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஒப்புக் கொள்கின்றனர். எனினும், புதிய தொழில்களுக்கான பயிற்சிகளை வழங்குவது, பள்ளிக் கல்வி ஆகிய அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் ஏழைகளைச் சென்றடையாத தொலைதூரப் பகுதிகளில் மட்டுமே இது நிலவுகிறது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

“குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்தி வரும் மைக்கா சுரங்கங்கள் செயல்பட்டு வரும் ஒரு சில பகுதிகள் உள்ளன. எனினும் ஆடு வளர்ப்பு, கட்டுமான வேலை, ஊறுகாய் தயாரிப்பு போன்றவற்றில் பயிற்சி அளித்து வேறு வகையில் வருமானம் பெறும் வகையில் குடும்பங்களுக்கும் உதவ ஒரு சில திட்டங்களை செயல்படுத்த நாங்கள் முயன்று வருகிறோம்” என கிரிடி மாவட்ட ஆட்சியர் உமா சங்கர் சிங் குறிப்பிட்டார்.

ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் மைக்கா சுரங்கங்களில் 20,000 சிறுவர்கள் வரை ஈடுபடுத்தப்படுகிறார்கள் என டச்சு நாட்டு இயக்கமான சோமோ மதிப்பிட்டுள்ளது.

தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலான புலனாய்வு ஜார்க்கண்ட் மாநிலத்தின் வடக்குப் பகுதி, பீகார் மாநிலத்தின் தெற்குப் பகுதி மற்றும் இந்தியாவின் தென்மேற்கில் உள்ள ராஜஸ்தான் ஆகியவற்றில் மைக்கா சுரங்கங்களைச் சுற்றி சிறுவர்கள் வேலை செய்து வருவதை கண்டறிந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திறந்த பள்ளங்களில் ஆறு வயதே ஆன சிறுவர்கள் பளிச்சிடும் பாறைகளுக்கு நடுவே வெறும் கைகளால் உடைந்து நொறுங்கி விழும் மைக்கா துகள்களை பொறுக்கி எடுத்துக் கொண்டிருக்க, அவர்களை விட சற்றே அதிக வயதான சிறுவர்கள் பிய்ந்து தொங்கும் கயிறுகளைப் பிடித்து குழிகளில் இறங்கி அதை விட சிறந்த தரமுள்ள சிலிக்கா பாறைகளை பெயர்த்தெடுக்கச் செல்கின்றனர்.

 

கிரிடி மாவட்டத்தின் திஸ்ரி பகுதியில், பசந்தி மைக்கா துண்டுகளைத் தேடி சிவந்த மண் தரையில் அங்குமிங்குமாக நகர்ந்து கொண்டிருக்க, அவரின் பத்து வயது மகன் அந்த மலையின் ஓரத்தில் தோண்டப்பட்டுள்ள எலிக் குகை போன்ற குழிக்குள் பத்தடி தூரம் கீழே இறங்கி கோடாரியால் சுவற்றைப் பிளக்கச் செல்கிறான்.

கட்டம் போட்ட கால் சட்டையும் வெள்ளை டி-சர்ட் டும் அணிந்த மெலிந்த உடலைக் கொண்ட அந்தச் சிறுவன் ஏழுவயதிலிருந்து மைக்கா சுரங்கங்களில் வேலை செய்து வருகிறான் என்றும், அவனது உதவியுடன் தினமும் தாங்கள் ரூ. 300 (4 அமெரிக்க டாலர்) சம்பாதித்து வருவதாகவும் அவனது தாய் கூறினார்.

“இந்த வேலை அபாயகரமானது என்று எனக்குத் தெரியும். ஆனால் இங்கே இந்த ஒரு வேலை மட்டும்தான் இருக்கிறது” என பாதி நிரம்பிய இரும்புச் சட்டியை பக்கத்தில் வைத்து விட்டு குத்துக் காலிட்டு அமர்ந்தபடியே சொன்னார் அவர்.

“சந்தீப்புக்கு இதைச் செய்ய விருப்பமில்லைதான். அது எனக்கும் தெரியும். ஆனால் இதுதான் நடக்கிறது. அவன் மட்டும் பள்ளிக்குப் போக முடிந்தால், கல்வி கற்று, வேறு ஏதாவது செய்ய முடிந்தால், நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கு முன்பாக நாங்கள் சாப்பிட வேண்டுமே!”  

“வயது வந்த சுரங்கத் தொழிலாளர்களுக்கும் கூடப் பாதுகாப்பில்லை”

ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா மாவட்டத்தில், வெறும் ஐந்து வயதே ஆன சிறுவர்கள் கையில் ஒரு சுத்தியலையும், உளியையும் வைத்துக் கொண்டு நொறுங்கிக் கொண்டிருக்கும் குறுகலான குழிகளில் இறங்கி, நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் வரை வேலை செய்வதைப் பார்க்கலாம்.

மேற்புரத்தில் அவர்களின் சகோதரிகள் குத்துக் காலிட்டு அமர்ந்தபடி வெறும் கைகளால் வெளியே கண்ணுக்குத் தென்படும் மைக்கா செதிள்களை பெயர்த்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வயதில் சற்று மூத்த பெண் குழந்தைகளும் கூட மைக்காவை தனியாகப் பிரித்தெடுத்து அதை வாங்கும் இடத்திற்கு எடுத்துச் செல்கின்றனர்.

“சுரங்கங்களுக்குள் குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்வதில்லை என்றும் அவர்கள் வெளியேதான் வேலை செய்கின்றனர் என்றும்  தங்கள் குடும்பத்திற்காக கொஞ்சம் கூடுதலாக அவர்கள் சம்பாதிக்கிறார்கள் என்றும் சுரங்க முதலாளிகள்  கூறுகின்றனர்” என ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் லாப நோக்கற்ற சுரங்கத் தொழிலாளர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை செயல் அலுவலரான ராணா சென்குப்தா தெரிவிக்கிறார்.

“ஆனால் சுரங்கத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ அதற்கு அருகாமையில் கூடப் போவதற்கு குழந்தைகளுக்கு எவ்வித வேலையும் இல்லை. வயது வந்த தொழிலாளர்களும் கூட பாதுகாப்பாக இல்லை.”

பில்வாரா மாவட்டத்தின் டிலோலி கிராமத்தில் உள்ள ஒரு மழை நீரால் நிரம்பியுள்ள சுரங்கத்தின் ஓரத்தில் குப்பை மேட்டில் அமர்ந்தபடி இரு இளம் சிறுமிகள் மைக்கா துண்டுகளை வகை பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

சுமார் ஏழு வயதென தோற்றமளிக்கும் பூஜா சொல்கிறாள். “நான் சுரங்கத்திற்குள் எல்லாம் போவதில்லை. அது ரொம்ப ஆழம். பயமாகவும் இருக்கும். சின்னச் சின்ன துண்டுகளில் இருந்து பெரிய துண்டுகளை மட்டும் வகை பிரிக்கிறேன். இது ஒன்றும் ரொம்பவும் கடினமானதல்ல.”

அவளிடமிருந்து ஒரு சில அடிகளுக்கு அப்பால் ஒன்பது வயதான பாயல் தன் பங்கிற்கு வெறும் கைகளால் மைக்கா துண்டுகளை வகை பிரித்துக் கொண்டிருக்கிறாள்.

  பில்வாரா மாவட்டத்தில் மட்டுமல்ல; “மாநிலத்தின் வேறெந்த இடத்திலும்கூட” சுரங்கங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்வதாகத் தனக்குத் தெரியாது என்று ராஜஸ்தான் மாநில தொழிலாளர் நல அமைச்சகத்தில் ஓர் ஆணையரான தன்ராஜ் ஷர்மா கூறினார்.

“அவர்களின் பெற்றோர் சுரங்கங்களில் வேலை செய்கிறார்கள். குழந்தைகள் அவர்களோடு இருக்கிறார்கள். அவர்கள் அங்கே விளையாடிக் கொண்டிருக்கக் கூடும். பெற்றோர்களுக்கு உதவியாக ஏதாவது சின்னச் சின்ன வேலைகளை செய்யக் கூடும். எனவே அவர்களும் அங்கே வேலை செய்கிறார்கள் என்று அதற்குப் பொருளல்ல” என்று தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் கூறினார்.

மைக்காவிற்கான தேவை சமீபத்தில் அதிகமாகியுள்ளதானது இந்தியாவில் நசிந்து வந்த இந்தத் தொழிலுக்கு புத்துயிர் அளித்துள்ளது. 19ஆம் நூற்றாண்டில் ஜார்க்கண்ட் டின் கேடெர்மா, கிரிடி, ஹஸாரிபாக், பீகாரின் நவடா, ஜாமுயி, கயா மற்றும் பகல்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் பிரிட்டிஷார் மைக்காவை கண்டுபிடித்ததில் இருந்து இந்தத் தொழில் இந்தியாவில் துவங்கியது.

ஒரு காலத்தில் 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்த 700 சுரங்கங்கள் செயல்பட்டு வந்த இந்தத் தொழிலானது, காடுகளை அழிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டம் ஒன்று 1980இல் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்தும், இயற்கையான மைக்காவிற்கு மாற்றுப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாயிற்று. அதிகமான செலவு மற்றும் கடுமையான சுற்றுச் சூழல் குறித்த விதிகள் ஆகியவற்றால் பெரும்பாலான சுரங்கங்களை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  இந்தியாவின் சுரங்கங்களுக்கான நிலையத்தின் தகவல்களின் படி, 2013-14ஆம் ஆண்டில் இந்தியாவில் 38 மைக்கா சுரங்கங்கள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபாயங்களும் அச்சுறுத்தல்களும்

எனினும் சீனாவின் பொருளாதார எழுச்சி, ‘இயற்கையான’ அழகு சாதனப் பொருட்களுக்கு உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள ஆர்வம் ஆகியவற்றின் விளைவாக மைக்காவின் மீதான ஆர்வம் மீண்டும் உருவானதைத் தொடர்ந்து இந்தியாவில் மூடப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான சுரங்கங்களைத் தேடி சட்டவிரோதமாகச் செயல்படுவோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மிக அதிகமான அளவில் பணம் ஈட்டுவதற்கான ஒரு கறுப்புச் சந்தையை இது உருவாக்கியுள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் இந்தியா 19,000 டன்கள் மைக்கா உற்பத்தி செய்துள்ளதாக இந்தியாவின் சுரங்கங்களுக்கான நிலையத்திலிருந்து வெளியாகும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் 128,000 டன் மைக்கா ஏற்றுமதியாகியுள்ளது என்றும் அதில் பாதிக்கும் மேல் அல்லது 62 சதவீதம் சீனாவிற்கும், அதைத் தொடர்ந்து ஜப்பான், அமெரிக்கா, நெதர்லாந்த் மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அதே புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்த எண்ணிக்கையில் உள்ள வேறுபாடு குறித்து கருத்து தெரிவிக்க, எண்ணற்ற மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் சுரங்கங்கள் துறையில் நிலையத்தில் எவருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்தியாவின் மைக்கா உற்பத்தியில் 70 சதவீதமானது  காடுகளிலும் கைவிடப்பட்ட சுரங்கங்களிலும் சட்டவிரோதமாக எடுக்கப்படும் மைக்காவிலிருந்தே கிடைக்கிறது என  இந்தியாவின் முன்னணி வர்ண, சாய தயாரிப்பாளரான சுதர்ஷன் தெரிவித்தார்.

இந்த மைக்காவானது பல்வேறு வியாபாரிகளுக்கும், பதப்படுத்துவோருக்கும், ஏற்றுமதியாளர்களுக்கு விற்கப்படுகின்றன. இதற்கான பேரங்கள் அனைத்துமே கைபேசியின் மூலமாக நடத்தப்படுகின்றன. எனவே இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் உள்ள உற்பத்தியாளர்களை நோக்கி இது சென்று விடுவதால், எந்தவித எழுத்து பூர்வமான ஆதாரமும் இருப்பதில்லை.

“நாங்கள் நகரத்தில் உள்ள ஒரு வியாபாரிக்கும் மைக்காவை விற்கிறோம். அவர் கொல்கத்தாவிலிருந்து வரும் ஒரு பெரும் கொள்முதலாளருக்கு விற்கிறார். அவர் அதை சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, ப்ரேசில் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்.” என்று தனது சகோதரருடன் சேர்ந்து பில்வாராவில் ஆறு சுரங்கங்களை சொந்தமாக வைத்துள்ள தாரா சிங் குறிப்பிட்டார்.

பில்வாராவில் டிலொலி கிராமத்தில் மைக்கா சுரங்கத்திற்கு அருகே மைக்காவை வகைப்படுத்திக் கொண்டிருந்து இரண்டு சிறுமிகளைப் பற்றிக் கேட்டபோது, அவர்கள் எல்லாம் தானாகவே வந்து விடுகிறார்கள் என்று அவர் கூறினார்.

ஆனால் ஒரு சில நிமிடங்களுக்குள் இரண்டு மோட்டர் பைக்குகளில் நான்கு பேர் வந்திறங்கி அந்த இடத்திற்கு வருகை தந்திருந்த அனைவரையும் கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர்.

தொழிலாளர்களை மோசமாக நடத்துவது, வன்முறைக்காக அபாயங்கள், அச்சுறுத்தல்கள் ஆகிய அனைத்துமே இத்தொழிலின் மீது மோசமான ஒரு சித்திரத்தை எழுப்பியுள்ள நிலையில், வறுமையில் வாடிவரும் மக்கள் வருமானத்திற்கான புதிய வழிகளை காண உதவுவதோடு, அனைத்து சுரங்கங்களும் சட்டபூர்வமாக இயங்குவதை உறுதிப்படுத்த அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும் இத்தொழிலுக்கு உள்ளேயே அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

“இருப்பும் இருக்கிறது; தேவையும் இருக்கிறது. ஆனால் அரசுதான் அனுமதிகளை வழங்குவதில்லை” என சீனா, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு கிரிடியிலிருந்து ஏற்றுமதி செய்து வரும் ஒரு வியாபாரி கருத்து தெரிவித்தார்.

“அங்கிருந்தும் இங்கிருந்தும் மைக்காவை வாங்கி ஏற்றுமதியாளர்கள் வேலை செய்துதான் வருகின்றனர்.  ஆனால் எந்த நேரத்தில் அரசு நசுக்கி விடுமோ என்ற பாதுகாப்பற்ற உணர்வுதான் நீடிக்கிறது. அனுமதிகளை வழங்கி, அதற்குரிய காப்புரிமைத் தொகையை எடுத்துக் கொள்வதுதான் நல்லது.”

சுரங்கங்களுக்குப் பதிலாக பள்ளிகள்

உடலுழைப்புத் தொழிலாளர்கள் அதிகமாகத் தேவைப்படுவதால் ஒரு சில நாடுகளுக்கு இந்தத் தொழிலானது பொருளாதார ரீதியாக கட்டுப்படியாகாத ஒரு தொழிலாக இருந்த போதிலும், தொழிலாளர்களுக்கான செலவு குறைவாக இருக்கின்ற, அதிலும் குறிப்பாக குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தும்போது மேலும் செலவு குறைகின்ற இந்தியாவில் நல்ல வருமானம் உள்ள தொழிலாகவே இது இந்தியாவில் இருந்து வருகிறது.

பல ஆண்டுகளாகவே இந்தக் குழந்தைத் தொழிலாளர்களை அதிகாரிகள் கவனிக்கத் தவறிவிட்டனர் என்று கருத்து தெரிவிக்கும் குழந்தைகளின் உரிமைகளுக்கான இயக்கத்தை நடத்தி வரும் செயல்பாட்டாளர்கள், மைக்கா சுரங்கங்களில் குழந்தைகளின் இத்தகைய மரணங்கள் இதன் அபாயங்களை வெளிப்படுத்தி, அரசை செயல்பட வைக்க நிர்ப்பந்திக்கக் கூடும் என்று நம்புகிறார்கள்.

தலையில் அடிபடுவது, வெட்டுகள், சிராய்ப்புகள் ஆகியவற்றோடு கூடவே, சிலிகோசிஸ், காசநோய், ஆஸ்த்மா போன்ற தோல் மற்றும் மூச்சு தொடர்பான தொற்று நோய்களும் தொழில் ரீதியான அபாயங்களும் கொண்டதாக இத்தொழில் விளங்கி வரும் அதே நேரத்தில் மோசமாகப் பராமரிக்கப்படுகின்ற, ஒழுங்குபடுத்தப்படாத சுரங்கங்களில் சுரங்க வேலைகளை மேற்கொள்வதானது உயிரையும் பறிக்கக் கூடிய அபாயமானது என்பதையும் இது நிரூபிக்கிறது.

தானும் தன்னோடு பணிபுரிந்தவர்களும் ஜூன் மாதத்தில் நடந்த சுரங்க விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் பெரும்பாலானவற்றை நேரடியாகச் சென்று சந்தித்தபோது, இத்தகைய அனுமதி பெறாத சுரங்கங்களே அவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான ஒரே வழியாக இருப்பதைக் கண்டறிந்ததாக பிபிஏவின் பூஷண் குறிப்பிட்டார்.

“இவர்கள் அனைவருமே மிகவும் ஏழ்மையான குடும்பத்தினர் என்பதோடு, தங்கள் வருமானத்திற்கு மைக்கா சுரங்கத்தை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் பூஷண் தெரிவித்தார்.

“இந்த இடங்கள் தங்கள் உயிரையும் பறிக்கக் கூடிய பொறிகள் என்று அவர்கள் மிக நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர். எனினும் வேறு வழியில்லை. அடுத்த நாளே அவர்கள் அங்கே போக வேண்டியிருக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். மேலும் அதிக அளவில் குழந்தைகள் இறப்பதற்கு முன்பு, அதிகாரிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்துவது மிக மிக அவசியம்.”

ஜார்க்கண்ட் மாநிலம் கோடெர்மா மாவட்டத்தில் உள்ள டோம்சாஞ்ச் –இன் அடர்த்தியான காடுகளுக்குள்ளே இருக்கும் திறந்தவெளி சுரங்கம் ஒன்றில், சுசீலா தேவி பளபளக்கும் பாறைகளை சுத்தியலைக் கொண்டு பொறுமையாகப் பிளந்து மைக்கா துண்டுகளை மட்டும் எடுத்து அருகிலிருந்து பெரிய ப்ளாஸ்டிக் கூடையில் போட்டுக் கொண்டிருந்தார்.

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இதைச் செய்து வரும் 40 வயதான, ஆறு குழந்தைகளுக்குத் தாயான அவர், மற்ற தொழிலாளர்களைப் போலவே, அந்தப் பொருள் என்னவென்றோ உலகச் சந்தையில் அதன் விலை என்ன என்றோ தெரியாதவராகவே இருந்தார்.

“மைக்கா என்றால் என்னவென்றோ, அது எங்கே போகிறது என்றோ, அதை எதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்றோ எங்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்து, அதை சேகரித்தால், கொஞ்சம் பணம் கிடைக்கும் என்று மட்டுமே எனக்குத் தெரியும்” என்று சொன்ன அவர், தினமும் சுமார் 10 கிலோ அளவிற்கு மைக்காவை சேகரிப்பதாகவும் அதன் மூலம் தினமும் ரூ. 80 (ஒரு அமெரிக்க டாலர்) சம்பாதிப்பதாகவும் தெரிவித்தார்.

“இவற்றை அருகிலுள்ள மைக்கா மைதானத்திற்கு எடுத்து செல்வேன். அங்கிருக்கும் வியாபாரி அதை ஒரு கிலோ ரூ. 8 க்கு வாங்கிக் கொள்வார். அதை அவர் எவ்வளவிற்கு விற்கிறார் என்று கூட எனக்குத் தெரியாது. கேட்டாலும் அவர் சொல்லப் போவதில்லை. மேலும் அதிகமாக லாபம் சம்பாதிப்பதை அவர் ஏன் கெடுத்துக் கொள்ளப் போகிறார்?”

இதில் அதிகமாக லாபம் இருக்கிறது என செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். மைக்காவை சேகரிப்பவர்களிடமிருந்து அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 25 ( சுமார் 40 சென்ட்ஸ்) என்ற அளவிற்கு மைக்கா வாங்கப்படுகிறது. எனினும், உயர் ரக மைக்கா தகடு அல்லது ‘ரூபி’ மைக்கா என்ற அமைக்கப்படும் மைக்காவானது ஒரு கிலோ 2000 அமெரிக்க டாலர்கள் வரை விலை போகிறது எனவும், இது செயற்கையான மைக்காவிற்கான தேவையை அதிகரிக்க உதவுகிறது என்றும் அமெரிக்க நிலவியல் கழகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மிக அபூர்வமான கனிமம்

தங்கள் கைகளால் உருவாக்கப்பட்ட பொருட்கள்,  நியாயமான வர்த்தகம் ஆகியவை குறித்து பெருமை கொள்ளும்  பிரிட்டிஷ் அழகுசாதன நிறுவனமான லுஷ், 2014ஆம் ஆண்டில் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த கவலையினால் இயற்கையான மைக்காவிலிருந்து செயற்கை மைக்காவிற்கு மாறிவிட்டது.

தங்களுக்கு மைக்கா சப்ளை செய்து வந்த ஒரு இந்திய சுரங்கத்திற்கு தணிக்கையாளர்களோடு சென்றபோது ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் தான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டபோதுதான் எங்கே தவறு நடக்கிறது என்று தாம் உணர்ந்ததாக லுஷ் நிறுவனத்தின் நியாயமான வர்த்தகப் பிரிவின் தலைவரான சிமோன் கான்ஸ்டாண்டின் தெரிவித்தார்.

எனினும், உலகத்தில் கிட்டத்தட்ட 50 நாடுகளில் விற்பனை நிலையங்களை வைத்து நடத்தி வரும் இந்த நிறுவனம் தாங்கள் பயன்படுத்தி வரும் செயற்கை மைக்காவிலும் கூட இயற்கை மைக்காவின் படிவுகள் இருப்பதை இந்த ஆண்டு கண்டுபிடித்துள்ளது. இந்தப் பிரச்சனையை சமாளித்து வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

“மைக்கா ஒரு புதிய பொருள் என்பதால் எங்களை கொஞ்சம் பயப்பட வைத்து விட்டது. இதற்கு முன் நாங்கள் அதைப் பயன்படுத்தியதே கிடையாது” என்று இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையோர நகரமான பூலே யில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷுக்கு அளித்த ஒரு பேட்டியில் கான்ஸ்டண்டைன் குறிப்பிட்டார்.

“எனினும் வாங்குவது என்பது ஒழுங்கில்லாத ஒரு முறையாகும். அது முடிவுக்கு வருவதில்லை. முழுமை பெற்ற ஒரு பொருளை விட அதில் எப்போதுமே மேம்பாடு இருக்கும்.”

உலக அளவில் மைக்காவில் 10 சதவீதம் வரை அழகு சாதன பொருட்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

<எல்.என்> என்ற பெயரில் விற்பனை செய்யும் எஸ்டீ லாடர் காஸ் இன்க் தனத் பொருட்களில் மைக்காவை பயன்படுத்தி வரும் மற்றொரு அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாகும். எனினும் தனது மைக்கா தேவையில் பத்து சதவீதத்தை மட்டுமே இந்தியாவிலிருந்து கொள்முதல் செய்வதாகவும், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை சமாளிக்க பிபிஏ வுடன் இணைந்து தாங்கள் செயல்படுவதாகவும், மைக்கா உற்பத்தி பகுதி கிராமங்களில் பள்ளிகளை உருவாக்குவதற்கான நிதியுதவியை செய்து வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

“இந்த முயற்சியில் இளம் குழந்தைகளை பள்ளியில் நீடித்திருக்கச் செய்வது, மைக்கா தொழிலுக்கு வெளியே வேலை செய்ய அவர்களை அனுமதிக்கக் கூடிய திறமைகளை வழங்குவதற்கு உதவுவது ஆகியவற்றுக்கான கல்வி மிகவும் முக்கியமான அம்சம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என்று எஸ்டீ லாடர் ஒரு மின்னஞ்சல் மூலமான அறிவிப்பில் தெரிவித்தது.

“இந்தத் திட்டங்கள் மைக்கா சுரங்கங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையை இன்னமும் முடிவுக்குக் கொண்டுவரவில்லை என்ற போதிலும் பொறுப்பான வர்த்தக செயல்பாடுகள், நீடித்த ஒத்துழைப்பு ஆகியவை மைக்கா சுரங்கப் பகுதியில் வாழும் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றன.”

மற்றொரு அழகு சாதன நிறுவனமான லா’ஓரியல் தங்களது இயற்கை மைக்காவிற்கான தேவையில் 60 சதவீதத்திற்கும் மேல் அமெரிக்காவிலிருந்து பெறப்படுவதாகவும் மீதமுள்ளவை இந்தியா உள்பட மற்ற நாடுகளிலிருந்து வருகிறது எனவும் தெரிவித்தது.

“இந்தியாவில், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சவாலான பகுதிகளில் இருந்தே மைக்கா உருவாகிறது. இங்கே குழந்தைத் தொழிலாளர்கள், பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள் ஆகியவற்றின் அபாயமும் அடங்கியுள்ளது. மேலும் இதற்கான சப்ளை தொடரிலும் பல வகையான நபர்கள் அடங்கியிருக்கின்றனர்” என அந்த நிறுவனம் தனது இணைய தளத்தில் தெரிவித்திருந்தது.

இதில் தொடர்புடைய அனைவரும் கூட்டாக செயல்படுவது மிகவும் அவசியம் என்று தெரிவித்த லா’ஓரியல் பொறுப்பான வகையில் மைக்காவை கொள்முதல் செய்வது பற்றி ப்ரெஞ்சு லாப நோக்கற்ற அமைப்பான இயற்கை வள ஆதாரங்களை ஒழுங்கமைப்பதற்கான வட்டம் (நேச்சுரல் ரிசோர்சஸ் ஸ்டீவர்ட்ஷிப் சர்க்கிள்) கடந்த பிப்ரவரி மாதம் தில்லியில் நடத்திய உச்சிமாநாடு இந்த விஷயத்தில் நல்லதொரு முதல் நடவடிக்கையாக அமைந்தது.

மைக்கா தொழிலில் கடந்த பல ஆண்டுகளாகவே இவ்வாறு குழந்தைகளை தவறான வகையில் நடத்துவது இருந்து வருகிறது என்றும், அழகு சாதனப் பொருட்கள் துறையில் மைக்கா பயன்படுத்தப் படுகிறது என உலகம் தழுவிய அளவில் செய்தி வெளிவந்த பிறகே  இந்தப் பிரச்சனையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கின என்று இந்த என் ஆர் எஸ் சியில் செயல் இயக்குநர் கேத்தரின் பீரூட் குறிப்பிட்டார்.

குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை சமாளிக்கவும், மைக்கா உற்பத்தி பகுதிகளில் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும், அதன் மூலம் குழந்தைகள் சுரங்கத் தொழிலுக்குத் திரும்பி வராமலிருக்கவும் உறுதியான நடவடிக்கைகளுக்கான தனது ஐந்தாண்டு திட்டத்தை என் ஆர் எஸ் சி இப்போது முடிக்கவிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோடெர்மாவில் உள்ள தாப் கிராமம் அங்குள்ள சுமார் 45 கிராமங்களில் ஒன்றாகும். பிபிஏ அங்கு செயல்பட்டு வருகிறது. மைக்கா சுரங்கத்திலிருந்து விடுபட்ட பிறகு இரண்டு ஆண்டுகள் தான் பயின்ற பள்ளியை பெருமையுடன் சுட்டிக் காட்டுகிறார் 13 வயதான பூஜா.

தும்பைப்பூ வெண்ணிற அரைக்கை சட்டை, நீல நிற ஸ்கர்ட் என பள்ளிச் சீருடை அணிந்து வெறுங்காலுடன் இருந்த இந்தப் பெண் வண்ணமடிக்கப்பட்ட பள்ளியின் நீல நிறக் கதவுகளில் ஒன்றைச் சுட்டிக் காட்டி, அதுதான் தன் வகுப்பறை என்கிறாள்.    

“பள்ளிக்குச் செல்வதில் எனக்கு மிகுந்த விருப்பம். இங்கே எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். நான் விளையாடலாம். படிக்கலாம். புதிதாக விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். பிபிஏ இங்கு வந்து குழந்தைகளை வேலை செய்ய வைப்பது நல்லதல்ல என எங்கள் பெற்றோருக்குப் புரிய வைத்தது” என்று கூறும் பூஜா, ஆசிரியராக வரவேண்டும் என கனவு காண்கிறாள்.

“சுரங்க வேலை மிகவும் அபாயகரமானது. நாங்கள் அங்கே சுரங்கத்தில் கீழே இருக்கும்போது, எப்போதுமே மேலே பார்த்துக் கொண்டே இருப்போம். மண்ணும் பாறையும் எங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்றே நினைத்துக் கொண்டிருப்போம். ஒரு முறை அப்படி நடக்கவும் செய்தது. என் நண்பி முன்னி எனக்கு உதவி செய்ய நான் எப்படியோ தப்பித்து வெளியே வந்தேன். அந்த சமயத்தில் எனக்கு நன்றாகவே காயம்பட்டது.”

நிறுவனத்தின் நடவடிக்கை

அதிர்ஷ்டமான குழந்தைகளில் பூஜாவும் ஒருத்தி. இந்தியாவிலிருந்து மைக்காவை கொள்முதல் செய்யும் நிறுவனங்களில் பலவும் குழந்தைகள் சுரங்கங்களில் வேலை செய்வதிலிருந்து தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு, மாற்று வழிகளையும் வழங்குகின்றன.

ஜெர்மனி நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனமான மெர்க் கேஜி ஏ தங்களுக்கு மைக்கா சப்ளை செய்து வந்த சுரங்கங்களில் குழந்தைகள் மைக்காவை சேகரித்து வருவதை 2008 ஆம் ஆண்டில் கண்டறிந்து, அவற்றுடனான தொடர்புகளை நிறுத்தியதோடு, இப்போது தனக்குத் தேவையான மைக்காவை ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்தே, அதுவும் குழந்தைத் தொழிலாளிகள் இல்லாத சுரங்கங்களில் இருந்தே பெற்று வருகிறது.

அமெரிக்காவிலும் ப்ரேசிலிலும் தனக்கான மைக்கா வள ஆதாரங்களை நிறுவியுள்ளதாகவும் செயற்கை மைக்காவை அடிப்படையாகக் கொண்டு ஒரு சில விளைவுகளை ஏற்படுத்தும் நிறங்களையும் தயாரித்து வருவதாகவும் அந்த நிறுவனம் தனது இணைய தளத்தில் அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து மைக்காவை கொள்முதல் செய்யும் மற்றொரு மிகப்பெரிய நிறுவனமும் சீனாவின் சாய உற்பத்தியாளருமான ஃபூஜியான் குன்சாய் மெட்டீரியல் டெக்னாலஜி கம்பெனி லிமிடெட் தாங்கள் வாங்கி வரும் மைக்கா குறித்த தணிக்கையில் குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்துவதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று கூறியபோதிலும், இது மிகவும் சிக்கலானதொரு சவால் என்று ஒப்புக்கொண்டது.

சுரங்கங்களிலிருந்து நேரடியாக வாங்கவும், அதற்கான தணிக்கையை மேற்கொள்ளவும், தங்கள் நிறுவனம் இந்தியாவில் தனக்கேயுரிய ஒரு நிறுவனத்தை உருவாக்கி வருவதாகவும் ஃபூஜியான் குன்சாய் நிறுவனத்தின் அதிகாரபூர்வமான பேச்சாளர் தெரிவித்தார்.

அதைப் போன்றே சிறுவர்களின் உரிமைகளுக்கான குழுவான டெரே டெஸ் ஹோம்ஸ் உடன் இணைந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடெர்மா, கிரீடி மாவட்டங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையிலிருந்து 10,000 சிறுவர்களை பாதுகாப்பதற்கான ஒரு திட்டத்திற்கும் அது நிதியுதவி செய்து வருகிறது.

“தனியாக எவராலும் மாற்றங்களை ஏற்படுத்தி விட முடியாது. மைக்கா சப்ளை தொடர்ச்சியில் எவ்வகையில் குழந்தைத் தொழிலாளர் இல்லை என்ற நாங்கள் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தை அடைய சேர்ந்து பாடுபட நாங்கள் ஆவலோடு உள்ளோம்.” என அந்த அதிகாரபூர்வ பேச்சாளர் தெரிவித்தார்.

மைக்கா தேவைப்படும் நிறுவனங்கள் சமூக ரீதியான முன்முயற்சிகளுக்கு நிதியுதவி செய்ய தயாராக உள்ள நிலையில், இத்தொழிலை சட்டபூர்வமாக மாற்றுவது மைக்கா தொழிலில் நிலவி வரும் கறுப்புச் சந்தையை பலவீனப்படுத்துவதோடு, அதிலுள்ள தொழிலாளர்களுக்கான உடல்நலம், பாதுகாப்பு தரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தி, குழந்தைத் தொழிலாளர் முறையையும் எதிர்த்துப் போராட முடியும் என இதற்கான இயக்கம் நடத்தி வருபவர்கள் கருதுகின்றனர்.

எனினும் சுற்றுச்சூழலுக்கான ஆர்வலர்கள் இந்தச் சுரங்கங்களை மீண்டும் திறப்பதை வரவேற்க மாட்டார்கள். ஏனெனில், இந்தச் சுரங்கங்களில் பலவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலங்களில் உள்ளன. இவை சட்டபூர்வமாகச் செயல்பட அனுமதி கிடைக்காது.

ராஜஸ்தானில் சுரங்கத் தொழிலாளர் பாதுகாப்பு இயக்கத்திலிருந்து சென்குப்தா கூறுகையில், குழந்தைத் தொழிலாளர் முறையை எதிர்ப்பதற்கான முதல் நடவடிக்கை என்பது தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் வருமானம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் இல்லை என்பதை உறுதிப்படுத்த மாநிலத்தில் உள்ள அனைத்து சுரங்கங்களும் ஒரு குறிப்பிட்ட அமைப்பிடம் தங்கள் செயல் குறித்த அறிக்கைகளை தரவேண்டும் என்பதை கட்டாயமாக்குவதாகும் என்றார்.

”பல நேரங்களில் வேலை செய்வதற்கு குழந்தைகள் கட்டாயப்படுத்தப் படுவதற்கு காரணம் அவர்களது பெற்றோருக்கு முறையான சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. அல்லது தந்தை நோய்வாய்ப்பட்டு படுத்துவிட்ட நிலையில், எவ்வித மருத்துவ பாதுகாப்பும் அவருக்கு இல்லாமலிருப்பது ஆகியவையே ஆகும்” என்று அவர் குறிப்பிட்டார்.

“ஒவ்வொரு சுரங்கத்திலும் வழிகாட்டுவதற்கான அமைப்பு இருக்குமாயின், குழந்தைத் தொழிலாளர் முறையைக் கட்டுப்படுத்துவதில் நாம் பெருமளவு முன்னேறுவோம்.”

சட்டபூர்வமாக இயங்கும் ஒரு சில சுரங்கங்களால் இந்த குழந்தைத் தொழிலாளர் முறையை சமாளிக்க முடிந்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் தாலுப்பூரில் உள்ள ஸ்ரீ வேங்கட கனகதுர்கா மற்றும் உமா மகேஸ்வரி மைக்கா சுரங்கங்கள் இப்பகுதியில் உள்ள மிகப் பழைய, அனுமதிபெற்ற சுரங்கங்கள் ஆகும். எனினும் இந்த சுரங்கங்களின் மேற்பார்வையாளர் சையத் இஸ்மாயில் இப்போதெல்லாம் சுரங்கங்களில் குழந்தைகள் வேலை செய்வதில்லை என்று குறிப்பிட்டார்.

“இந்தப் பகுதிகளில் மைக்கா தொழில் என்பது பாரம்பரியமான ஒரு வேலையாகும். இதில் குடும்பம் முழுவதுமே பங்கேற்கிறது. எனது தந்தை ஒரு சுரங்கத்தில் பணி புரிந்து வந்தார். நாங்கள் அங்கு வந்து போவது வழக்கம்” என்ற இஸ்மாயில் தனது ஐந்து வயதிலிருந்தே சுரங்கத்தின் உள்ளே, வெளியே வந்து போனவர் ஆகும்.

“காலப்போக்கில் பள்ளிகளில் சேர்வதற்கான வாய்ப்பு என்பது குழந்தைகள் இனிமேலும் சுரங்கங்களில் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இப்போது இந்தப் பகுதிகளில் உள்ள குழந்தைகள் எம் என்றால் மைக்கா என்று சொல்கின்றன”

மைக்கா தொழிலை தூய்மைப்படுத்துவதற்கு மேலும் அழுத்தம் தருவதென்பது சிறுவர்களுக்கு பல தலைமுறைகளுக்கு உதவி செய்யுமென்றே இதற்கான இயக்கம் நடத்துவோர் நம்புகின்றனர். எனினும் தனது மகன் மதனை இழந்து நிற்கும் பிரதாப்-ஐப் பொறுத்தவரையில் இது காலம் கடந்த ஒன்றானது.

அவர் மதனை கடைசியாகப் பார்த்தது ஏப்ரல் மாதத்தில்தான். விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் தாண்டிய ஒரு வாழ்க்கையைத் தேடி, ஒரு வியாபாரியாக வீட்டுக்குத் திரும்புவோம் என்ற கனவுகளுடன் அந்த பதின்பருவச் சிறுவன் தன் கிராமத்தை விட்டு வெளியே போனான்.

“தன் வாழ்க்கையைக் கொண்டு ஏதாவது செய்யப் போகிறேன் என்றுதான் அவன் என்னிடம் கூறினான். அதைக் கண்டு மகிழ்ந்துதான் நான் அவனை இங்கிருந்து போகவிட்டேன். அவன் செய்து வந்த வேலையே அவனுக்கு எமனாக முடியும் என்று எனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார் பிரதாப்.

(கூடுதல் செய்தியாளர்: ஜடேந்தர் டாஷ்; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith; செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->