×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

‘விட்டுச் செல்லப்பட்ட’ தமிழ்ப் பெண்களின் தனிமை இரவுகள், வளைகுடா நாடுகளில் வேலைக்காகக் குடியேறியோர் சந்தித்து வரும் நெருக்கடி பற்றிக் கூட அறியாதவர்கள்

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Saturday, 6 August 2016 16:15 GMT

Labourers looks over a railing at a construction site in Dubai, in this May 31, 2011 file photo. REUTERS/Jumana El Heloueh

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

கல்பாக்கம் (சென்னை), ஆகஸ்ட் 8  (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – நீல வண்ணமடித்த சுவர்களுக்கு உள்ளேயிருந்த அந்த  வீட்டில் தன் திருமண ஆல்பத்தைக் கையில் வைத்தபடி அமர்ந்திருக்கும் ஈ. பாக்கியம், வளைகுடா நாட்டில் ஒரு வெல்டராக பணியாற்றும் தன் கணவரைப் பிரிந்து இருப்பது எவ்வளவு துயரமான ஒன்று  என்பதைப் பற்றி பேசுகிறார்.

சௌதி அரேபியாவில் இந்தியாவிலிருந்து சென்ற தொழிலாளர்கள்  ஊதியமோ, உணவோ இல்லாமல் தவித்து நின்று கொண்டிருக்கும் சமீபத்திய பிரச்சனை பற்றி எதுவும் அறியாத அவர், வீட்டுக்காகக் கட்டவேண்டிய கடன் தொகையைப் பற்றிக் கூறியதோடு, தனது கணவர் நலமாக இருப்பதாகவே தான் கருத வேண்டியிருக்கிறது என்றும் கூறினார்.

இரண்டு குழந்தைகளுக்குத் தாய் ஆன , 36 வயது நிரம்பிய அவர் மெதுவாகச் சொன்னார்: “அவர்கள் எல்லாம் ஒரு குழுவாகத்தான் போனார்கள். எனவே, அவர்கள் நலமாகத் தான் இருக்க வேண்டும். அப்படியே ஒருவேளை நிலைமை மோசமாக இருந்தாலும் கூட, அவர் என்னிடம் அதைப் பற்றியெல்லாம் சொல்ல மாட்டார்.  எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்று சொல்லி விட்டு, ஒவ்வொரு மாதமும் அனுப்பி வைக்கும் பணம் குறித்த விவரங்களைச் சொல்லத் துவங்கி விடுவார்.”

தமிழ்நாட்டின் கல்பாக்கம் நகரத்திற்கு அருகேயுள்ள சத்ராஸ்குப்பம் என்ற மீனவர் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், பாக்கியத்தைப் போன்று, வளைகுடா நாட்டிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பிற்காக ஒரு மனைவி எதிர்ப்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறார். 

இந்தச் சிறிய குடியிருப்புப் பகுதியில், ‘விட்டு விட்டுப் போன’ ( அனாதையாக விட்டுச் செல்லப்பட்ட) பெண்கள் என இப்பகுதியில் பொதுவாக அறியப்படுகின்ற 100க்கும் மேற்பட்ட பெண்கள் தனிமையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் இத்தகைய மனைவிகளின் எண்ணிக்கை 10 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் பெரும்பாலான நேரங்களில் மன அழுத்தத்துடன், எப்போதுமே கவலை நிரம்பியவர்களாக இருக்கின்றனர் என மாநில அரசு 2016 பிப்ரவரியில் மேற்கொண்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தப் பெண்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் கவலை, அச்சம், தனிமை ஆகிய உணர்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு வெளிநாடுகளுக்கு வேலைக்காகக் குடிபெயர்ந்து செல்வதில் உள்ள மிகப்பெரிய தொந்திரவு என்பது தங்கள் கணவர்கள் இல்லாத சூழ்நிலையில் அவர்களது வயதான பெற்றோர்களை கவனித்துக் கொள்வது; நிதித் தொடர்பான விஷயங்களை தன்னந் தனியாகவே சமாளிப்பது ஆகிய கூடுதல் பொறுப்புகளை தாங்கள் சுமக்க வேண்டியுள்ளது என இந்த ஆய்வில் பங்கெடுத்த 60 சதவீதம் பேர் கருதினர்.

மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களில் சுமார் 20,000 குடும்பங்களிடையே நடைபெற்ற  இந்த ஆய்வு,  உடல் நல நலிவு, குழந்தைகளின் கல்வி ஆகியவை கவலைக்குரிய  இதர முக்கிய விஷயங்களாகக் குறிப்பிட்டது.  

இந்த ஆய்வில் ஈடுபட்ட குழுக்களில் ஒன்றான சென்னையைச் சேர்ந்த லயோலா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் ட்ரெய்னிங் அண்ட் ரிசர்ச் அமைப்பைச் சேர்ந்த பெர்னார்ட் டி’ சாமி குறிப்பிடுகையில், “ இதில் விசித்திரம் என்னவென்றால், இவ்வாறு ’விட்டுச் செல்லப்பட்ட’ பெண்கள் தங்கள் கணவர்களை விட அதிகத் தகுதி வாய்ந்தவர்களாக, அதிக தரம் வாய்ந்த கல்வி பெற்றவர்களாக இருக்கின்றனர் என்பதுதான்” என்றார்.

இவர்களில் பெரும்பாலானோரின் திருமணம் வெளிநாடுகளில் வேலைசெய்து வரும் அவர்களின் கணவர்கள் இங்கு வருகின்ற ஒரு சிறு இடைவெளியில் நடந்ததாக இருந்ததோடு, இவர்களில் 90 சதவீதம் பேர் தங்கள் கணவர் வேலை செய்து வரும் நாடுகளுக்கு இதுவரை பயணம் செய்ததே இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவசர அழைப்பு

வளைகுடாப் பகுதியில் உள்ள பஹ்ரைன், குவெய்த், கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுக் குடியரசுகள், ஓமான் ஆகிய ஆறு நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த 60 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர் என மதிப்பிட்டுள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசு மற்றும் அரசு முறை சாரா குழுக்களிடம் இவ்வாறு வேலைக்குச் சென்ற தொழிலாளர்களிடமிருந்து, ஊதியம் வழங்கப்படாதது, சித்திரவதை, மோசமாக நடத்துவது போன்று பலவகைகளில் புகார்கள் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

இதில் அதிக கவனம் பெற்ற விஷயமாக, கடந்த மாதத்தில் தாங்கள் வேலை செய்து வந்த நிறுவனங்கள் மூடப்பட்டு, கடந்த பல மாதங்களாகவே தங்களுக்கு  ஊதியம் வழங்கப் படவில்லை  என்று அங்கிருந்த தொழிலாளர்கள் இந்திய அரசின் வெளியுறவுத் துறைக்கு அவசரச் செய்தியை அனுப்பியிருந்தனர்.

ஜூலை 30ஆம் தேதியன்று இதுபற்றி ட்விட்டரில் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சௌதி அரேபியாவிலும் குவைத்திலும் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் பொருளாதாரச் சிக்கலின் விளைவாக ஓர் ‘உணவு நெருக்கடி’யை சந்தித்து வருகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார். இவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுமாறு, அரேபியாவில் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ள 30 லட்சம் இந்தியர்களை அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள இரண்டு இணை அமைச்சர்களில் ஒருவரான   வி.கே. சிங், சௌதி அரேபியாவிற்குச் சென்று, அங்குள்ள நிலைமையை மதிப்பீடு செய்து, அங்கு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த 20 முகாம்களில் வாழ்ந்து வந்தவர்களில் 7,700 பேர் தாய்நாட்டிற்குத் திரும்புவதற்கான ஏற்பாட்டைச் செய்தார்.

ஆன்மா சகோதரிகள் 

கடந்த பல ஆண்டுகளாகவே கல்பாக்கத்திலிருந்து வேலைக்காக ஆண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது என்பது வழக்கமாகவே இருந்து வருகிறது. இந்தக் கடற்கரையோர நகரத்தில் செயல்பட்டு வரும் அணுசக்தி உற்பத்தித் தொழில் அவர்களுக்கு வேலை அளிப்பதில்லை. அதைப்போலவே, உள்ளூர் கட்டிடத் தொழில் நடத்துவோரும் கூட அவர்களுக்கு வேலை அளிப்பதில்லை. வட இந்திய மாநிலங்களில் இருந்து வரும், குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யத் தயாராக உள்ள தொழிலாளர்களையே கட்டிடத் தொழிலில் ஈடுபடுவோர் விரும்புகின்றனர்.

“வளைகுடா நாடுகளில் வாழ்க்கை எப்போதுமே வசதியாக இருப்பதில்லை என்று எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் நாங்கள் மீண்டும் மீண்டும் அங்கேதான் போகிறோம். ஏனென்றால், எங்களுக்கு வேறு வழி ஏதும் இல்லை” என்று ஏற்கனவே அங்கு வேலை செய்து விட்டு புலம்திரும்பியுள்ள எஸ்.பிரபு, இப்போது மீண்டும் வெளிநாட்டில் மற்றொரு வேலை தேடுவதாகக் குறிப்பிட்டார்.

32 வயதான வி. கலைவாணியோ இந்தச் செய்திகளை எல்லாம் கவனிப்பதில்லை என்பதோடு, வளைகுடா நாட்டில் இந்தியத் தொழிலாளர்களை பாதித்துள்ள இந்த நெருக்கடி பற்றியெல்லாம் அவருக்கு எதுவுமே தெரியாது.

“கடந்த பல ஆண்டுகளாகவே என் கணவர் கட்டார், சௌதிக்கு வேலை செய்யச் சென்றிருக்கிறார். எனவே அது எனக்குப் பழக்கமாகி விட்டது. இதுவரையிலும் எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்து வந்திருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன்” என இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான அவர் குறிப்பிட்டார்.

பாக்கியம், கலைவாணி ஆகிய இருவராலுமே தங்கள் கணவர் வேலை செய்து வரும் நிறுவனத்தின் பெயரைக் கூட நினைவு கூர முடியவில்லை. அவர்களை தேர்வு செய்தவர்களைப் பற்றியோ, அவர்கள் அந்த வேலைக்கு எப்படி சென்று சேர்ந்தார்கள் என்றோ அவர்களுக்குத் தெரியாது. தங்கள் கணவர்களின் பாஸ்போர்ட் நகல் ஒன்று வீட்டு அலமாரியில் எங்கோ இருப்பதாகவே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுதான் மிகப்பெரிய சவால் என்று அருணோதயா மைக்ரண்ட் ரிசோர்ஸ் சென்டர் என்ற லாப நோக்கற்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஜே. ஜெயந்தி குறிப்பிட்டார்.

“இந்தப் பெண்கள் வழிதெரியாதவர்களாகவே இருக்கின்றனர். அதுவே பெரும்பாலான நேரங்களில் அவர்களின் கவலைக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. இந்தக் குடும்பங்களுக்குப் பணம் தேவையாக இருக்கிறது. அதேநேரத்தில் இந்தப் பெண்கள் அதற்குப் பெரும் விலையை தர வேண்டியதாகிறது. ஏனென்றால் இவர்கள் தனியாக இருக்கிறார்கள் என்பதோடு, எழுதப்படாத சமூக விதிகளால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், திருமணம் போன்ற பொதுச் சமூக நிகழ்வுகளையும் கூட  தவிர்க்க வேண்டியதாகிறது.

கணவர்கள் இங்கில்லாத நிலையில், பேருந்தைத் தவறவிட்ட குழந்தைகளை யார் பள்ளிக்குக் கொண்டு விடுவார்கள் என்பது போன்ற சின்னஞ்சிறு விஷயங்கள் கூட தங்களுக்குப் பெரும் பிரச்சனையாக மாறிவிடுகிறது என கலைவாணி தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“எங்களில் பெரும்பாலோரின் பெற்றோர்களும், மாமனார்-மாமியார் ஆகியோரும் எங்களிடமிருந்து ஒரு சில வீடுகள் தள்ளியே வசிக்கின்றனர். என்றாலும் அது ஒரே மாதிரியான விஷயமல்ல” என்றார் அவர்.

அவர்களில் பலரும் இரவு நேரங்களில் சரியாகத் தூங்குவதில்லை என்று குறிப்பிட்டனர்.

 “கணவரின் தொலைபேசி அழைப்புக்காக நாங்கள் காத்துக் கொண்டிருப்போம்” என்றார் பாக்கியம். வழக்கமாக நடுநிசிக்குப் பிறகே தொலைபேசி மணியடிக்கும். அப்போதுதான் அவர்களின் கணவர்கள் கூடுதல் வேலையை எல்லாம் முடித்துவிட்டுத் திரும்பியிருப்பார்கள். “காலை நேரத்தில் வீட்டுவேலையில் நாங்கள் மூழ்கியிருப்போம்.  ஆனால், இரவு நேரத்தில் இந்தத் தனிமையான நிலையானது தாங்கமுடியாத ஒன்றாகவே இருக்கிறது” என்றார் அவர்.

இப்போது இந்தப் பெண்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளத் துவங்கியுள்ளனர். அருணோதயா மைக்ரண்ட் ரிசோர்ஸ் செண்டரின் முன்முயற்சியின் கீழ், அவர்கள் தங்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கியிருக்கின்றனர்.

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதில் உள்ள அபாயங்கள் குறித்து தாங்களாகவே பயில்வதிலிருந்து துவங்கி, உடல் நலக் குறைவு குறித்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது வரை, தங்கள் கணவர்கள் வெகுதொலைவில் இருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்துக் கொள்கின்றனர்.

“அவர்களுக்கு ஒருவருக்கொருவரின் உதவி தேவை. ஏனெனில், அவர்கள் எல்லோருமே ஒரே விதமான சூழ்நிலையில்தான் இருக்கின்றனர். அவர்கள் உடனடியாக தங்கள் எண்ணங்களை தெரிவிக்க முன்வருவதில்லை என்பது உண்மைதான். என்றாலும், மெதுவாக அவர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளனர். அதுவே ஒரு துவக்கம்தான்.” என ஜெயந்தி குறிப்பிட்டார்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: மேகன் ரவ்லிங். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->