×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

ஆட்கடத்தலை எதிர்த்து இமாலயப் பகுதியில் சைக்கிள் பயணம் செய்யும் குங் ஃபூ கற்ற புத்த பிட்சுணிகள்

by நீதா பல்லா | @nitabhalla | Thomson Reuters Foundation
Friday, 16 September 2016 02:48 GMT

Buddhist nuns from the Drukpa lineage pictured in Ladakh during their cycle across the Himalayas to raise awareness about human trafficking of girls and women in the impoverished villages in Nepal and India August 30, 2016. REUTERS/Live To Love International/Handout via REUTERS

Image Caption and Rights Information

புது டெல்லி, செப். 16 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) -  உடற்பயிற்சிக்காக அணியும் கறுப்பு நிற கால்சராய், சிவப்புநிற மேலங்கி, வெள்ளைநிற தலைக்கவசம் ஆகியவற்றை அணிந்தபடி நூற்றுக்கணக்கான சைக்கிள் ஓட்டிகள் அபாயகரமான செங்குத்தான, குறுகிய மலைச்சாலைகளில் சைக்கிளை மிதித்துக் கொண்டு நேபாளத்திலிருந்து இந்தியாவை நோக்கிச் செல்வதைப் பார்க்கும்போது ஃப்ரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற சைக்கிள் போட்டிதான் இமாலயப் பகுதியில் அறிமுகமாகி விட்டதோ என்று எவரொருவரும் தவறாக நினைத்து கொள்ளக் கூடும்.

இந்த இரண்டிற்குமான ஒற்றுமை அத்தோடு முடிந்து விடுகிறது. இந்தப் பயணம் மிக நீண்டதும், கடுமையானதும் கூட. இதற்கான பரிசும்கூட எவ்விதமான பண மதிப்பு உடையதல்ல. அல்லது உலகளாவிய அங்கீகாரத்தையும் அது பெற்றுத் தராது. இதில் பங்குபெறுவோரும் கூட தொழில்முறையிலான சைக்கிள் ஓட்டுபவர்கள் அல்ல. மாறாக அவர்கள் இந்தியா, நேபாளம், பூட்டான் மற்றும் திபெத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த புத்த பிட்சுணிகள்.

த்ருக்பா வழிமுறை என்று அறியப்படும் புத்தமதப் பிரிவைச் சேர்ந்த ஐநூறு புத்த பிட்சுணிகள் நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவிலிருந்து இந்தியாவில் உள்ள வடபகுதி நகரமான லேவிற்கு சைக்கிளில் பயணம் செய்து சனிக்கிழமையன்று தங்கள் 4,000 கிலோ மீட்டர் ( 2,485 மைல்கள்) தூரப் பயணத்தை நிறைவு செய்கின்றனர். அவர்கள் இந்தத் தொலைதூரப்பகுதியில் ஆட்கடத்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

 “கடந்த ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கங்களுக்குப் பிறகு நேபாளத்தில் நாங்கள் நிவாரணப் பணிகளை செய்து வந்தபோது, இனிமேலும் அவர்களை பராமரிக்க முடியாத காரணத்தால், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் விற்கப் பட்டனர் என்ற தகவலை நாங்கள் கேள்விப்பட்டோம்.” என 22 வயதுடைய பிட்சுணியான ஜிங்மே கோன்சொக் லாமோ தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“ஆண்களைப் போலவே பெண்களுக்கும் திறமையும் வலிமையும் இருக்கிறது. சிறுவர்களை விட சிறுமிகள் மதிப்புக் குறைந்தவர்கள்; எனவே அவர்களை விற்பதில் எவ்வித தவறும் இல்லை என்ற மனப்போக்கை மாற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்று  நாங்கள் விரும்பினோம்.” என அவர் கூறினார்.

பெண் தலைவர்களை கொண்டதாக, தாய்மையைப் போற்றுகின்ற கலாச்சாரங்களை பாரம்பரியமாகக் கொண்டதாக, பெண் தெய்வங்களை வணங்குவதாக தெற்காசியா பகுதி இருக்கிறது என பெருமை பேசிக் கொண்டாலும், எவ்வித அடிப்படை உரிமைகளும் இன்றி, வன்முறை குறித்த அச்சத்துடனேயேதான்  பல சிறுமிகளும் பெண்களும் இங்கு வாழ வேண்டியிருக்கிறது.

அதிகரித்து வரும் விழிப்புணர்வு, சிறப்பான சட்டங்கள், பொருளாதார தனித்திறன் ஆகியவை இத்தகைய மனப்போக்குகளில் மெதுவாக மாற்றங்களை கொண்டுவந்த போதிலும், பாகிஸ்தானில் குடும்பப் பெருமையை காப்பாற்றுவது என்ற பெயரிலும், இந்தியாவில் பெண்குழந்தைகளை கருவிலேயே அழிப்பது என்ற பெயரிலும், நேபாளத்தில் குழந்தைத் திருமணங்களின் மூலமும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை பெண்கள் சந்திக்க நேர்கிறது.

Buddhist nuns from the Drukpa lineage pose for a picture in Himachal Pradesh during their cycle across the Himalayas to raise awareness about human trafficking of girls and women in the impoverished villages in Nepal and India, August 30, 2016. REUTERS/Live To Love International/Handout via REUTERS

“குங் ஃபூ” பிட்சுணிகள்

த்ருக்பா பிட்சுணிகளைப் பொறுத்தவரையில் நேபாளத்திலிருந்து இந்தியாவிற்கு சைக்கிளில் பயணம் செல்வதென்பதொன்றும் புதிய விஷயமல்ல.

பாலின சமத்துவம், அமைதியான சகவாழ்வு, சுற்றுச்சூழலுக்கு மதிப்பளிப்பது ஆகியவை பற்றிய செய்திகளைப் பரப்புவதற்காக உள்ளூர் மக்கள், அரசு அதிகாரிகள், மதத் தலைவர்கள் ஆகியவர்களை சந்தித்தபடி அவர்கள் மேற்கொண்ட நான்காவது பயணம் இது.

இந்தப் பயணத்தின்போது ஏழைகளுக்கு உணவு வழங்குவது; கிராமத்து மக்களுக்கு மருத்துவ உதவி அளிப்பது ஆகியவற்றையும் மேற்கொள்ளும் இவர்கள் தற்காப்புக் கலைகளில் பெற்றிருக்கும் பயிற்சியின் காரணமாக “குங் ஃபூ பிட்சுணிகள்’ எனவும் அழைக்கப்படுகின்றனர்.

த்ருக்பா வழிமுறையின் தலைவரான க்யால்வாங் த்ருக்பா அவர்களின் தலைமையில் பயணத்தை மேற்கொண்ட இந்த பிட்சுணிகளைக் கண்டு பொதுவாகவே புருவங்கள் உயர்கின்றன. குறிப்பாக புத்த மதத்தினரிடையே அவர்களது இந்த வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள் வியப்பை ஏற்படுத்துகின்றன.

“பாரம்பரிய முறைப்படி புத்தமத பிட்சுணிகள் ஆண் துறவிகளிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையிலேயே நடத்தப்படுகின்றனர்.  சமைக்கவும், துப்புரவு பணிகளை மேற்கொள்ளவும் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்ற போதிலும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.  எனினும் வணக்கத்திற்குரிய எமது தலைவர் இவை அர்த்தமற்றவை என்று கருதி, இந்தப் போக்கை மாற்ற முடிவு செய்தார்.” என இமாலயப் பகுதிகளில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு உதவ த்ருக்பா பிட்சுணிகளுடன் இணைந்து செயல்படும் ஓர் அறக்கட்டளையான  லிவ் டு லவ் இண்டர்நேஷனல் அமைப்பின் தலைவரான கேரீ லீ தெரிவித்தார். http://www.livetolove.org/

“ இத்தகைய அதிகார மாற்றத்தால் கலவரப்படத் துவங்கிய துறவிகளிடமிருந்து இந்த பிட்சுணிகள் துன்புறுத்தல்களையும் வன்முறையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்த நிலையில் மற்ற விஷயங்களோடு கூடவே  இவர்களுக்கு குங் ஃபூ தற்காப்புக் கலைக்கான வகுப்புகளை அவர் அறிமுகப்படுத்தியதோடு, தலைமைப் பொறுப்புகளையும் வழங்கினார்.” என அவர் குறிப்பிட்டார்.

கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக, த்ருக்பா பிட்சுணிகளின் எண்ணிக்கை 30 லிருந்து 500 ஆக வளர்ந்துள்ளது என்று குறிப்பிட்ட லீ, தன் தாயினால் உத்வேகம் பெற்று பாலின சமத்துவத்திற்காகக் குரல் எழுப்புவராக மாறிய 53 வயதான க்யால்வாங் த்ருக்பாவின் முற்போக்கான மனப்போக்கே இதற்குப் பெரும்பாலும் காரணம் என்றும் தெரிவித்தார்.

இத்தகைய  சைக்கிள் பயணங்களில்   க்யால்வாங் த்ருக்பாவும் பங்கேற்பதுண்டு. அபாயகரமான பகுதிகளின் வழியாகவும், மோசமான தட்பவெப்ப நிலையிலும் சைக்கிளை மிதித்தபடி பயணம் மேற்கொண்டு, வெட்டவெளிகளில் தங்கிச் செல்லும் பிட்சுணிகளுடன் அவரும் பயணம் செல்வதுண்டு.

‘தொழுவது மட்டுமே போதுமானதல்ல’

மனப்போக்குகளை மாற்ற தாங்கள் உதவுவதாக நம்புகிறோம் என த்ருக்பா பிட்சுணிகள் குறிப்பிட்டனர்.

“பெரும்பாலான மக்கள், எங்களை சைக்கிளில் பார்க்கும்போது நாங்கள் பையன்கள் என்றே கருதுகின்றனர்” என 18 வயது பிட்சுணியான ஜிங்மே வாங்சுக் லாமோ தெரிவித்தார்.

“நாங்கள் அங்கே நின்று நாங்கள் பெண்கள் மட்டுமல்ல; புத்த பிட்சுணிகளும் கூட என்று சொல்லும்போது அவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். அவர்கள் பெண்களைப் பற்றிய தங்களது மனப்போக்குகளை மாற்றிக் கொள்ளவும் அவர்களை தங்களுக்குச் சமமானவர்களாக மதிக்கவும் இது உதவும் என்றே நான் கருதுகிறேன்.” என்றார் அவர்.

உலகத்திலேயே மிக வேகமாக அதிகரித்து வரும் ஆட்கடத்தல் நடைபெறும் பகுதிகளில் ஒன்றாக இந்தியாவை மையமாகக் கொண்ட தெற்காசிய பகுதி விளங்குகிறது.

கொத்தடிமைகளாகவும் அல்லது நகரத்தில் உள்ள வீடுகளில், உணவுக் கூடங்களில், கடைகளில், தங்கும் விடுதிகளில் அடிமைகளைப் போல் வேலை செய்யவும் வாடகைக்கு எடுக்க இந்தக் கும்பல்கள் வறுமையில் வாடிவரும் கிராம மக்களை ஏமாற்றுகின்றன. பல சிறுமிகளும் பெண்களும் விபச்சார விடுதிகளுக்கு விற்கப்படுகின்றனர்.

இந்தப் பேரழிவிற்குப் பிறகு தெற்காசியாவில் ஆட்கடத்தல்  என்பது மிகச் சாதாரணமாகி விட்டது என்றும், உலகளாவிய வெப்பமடைதல், நிலநடுக்கங்கள் போன்ற மோசமான நிகழ்வுகள் ஏழைகளை மேலும் நலிவடையச் செய்கின்றன என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூக அமைப்புகள் சீர்குலைந்து போனதன் விளைவாக உணவு மற்றும் இதர சப்ளை பொருட்களைப் பெறுவதில் இடையூறுகள் ஏற்படுவதோடு, கடத்திச் செல்லப்படுவது, பாலியல் ரீதியாக சுரண்டப்படுவது, ஆட்கடத்தலுக்கு ஆளாவது போன்ற அபாயங்களில் பெண்கள், குழந்தைகளை ஆழ்த்தி விடுகிறது.

2015ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நேபாளத்தைத் தாக்கிய இரட்டை நிலநடுக்கங்கள் கிட்டத்தட்ட 9,000 பேரின் உயிரைப் பறித்ததோடு, லட்சக்கணக்கான குடும்பங்களை வீடற்றவர்களாக ஆக்கி, பலரையும் வருமானத்திற்கு வழியில்லாதவர்களாக மாற்றியது. இத்தகைய சூழ்நிலையானது சிறுவர்களும் பெண்களும் ஆட்கடத்தலுக்கு ஆளாகும் சூழ்நிலை அதிகரிக்க வழிவகுத்தது.

நேபாள அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தப் பேரழிவைத் தொடர்ந்து  40,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்தனர்; அல்லது காயமுற்றனர்; அல்லது மிக மோசமான நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கங்கள் ஆட்கடத்தல் பற்றிய தங்கள் புரிதலை மாற்றுவதில் ஒரு திருப்புமுனையாக இருந்தன என்றும், முதுகுகளில் அரிசி மூட்டைகளை வைத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட மலைப்பகுதி கிராமங்களுக்குப் பயணம் செய்வதற்கு மேலும் அதிகமாகச் செய்ய வேண்டியதன் அவசியத்தை தாங்கள் உணர்ந்ததாகவும் த்ருக்பா பிட்சுணிகள் தெரிவித்தனர்.

“நாங்கள் பிட்சுணிகள் என்பதால் கோயில்களில் தங்கி எல்லா நேரத்திலும் தொழுது கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் தொழுவது மட்டுமே போதுமானதல்ல.” என ஜிங்மே கோன்சொக் லாமோ கூறினார்.

“எமது  மதிப்பிற்குரிய தலைவர் வெளியே சென்று, எங்கள் பிரார்த்தனைகளை செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்றே எங்களுக்கு கற்பித்திருக்கிறார். எப்படி இருந்தாலும் வார்த்தைகளை விட செயல்களே உரக்க ஒலிப்பவை.” என்றார் அவர்.

(செய்தியாளர்: நிதா பல்லா; எடிட்டிங்: எலன் உல்ஃப்ஹோர்சட். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.) 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->