டச்சு நாட்டு நிறுவனங்களுக்கு ஆயத்த ஆடைகளை சப்ளை செய்யும் தொழில் நிறுவனங்கள் இந்தியத் தொழிலாளர்களுக்கு ‘பட்டினியால் வாடும் ஊதியத்தையே’ வழங்குகின்றன என்கிறது ஓர் அறிக்கை

Tuesday, 27 September 2016 15:35 GMT

A woman dries paper cones, that are used by the textile industries to wrap cotton and silk fibres, at a factory on the outskirts of Jammu February 9, 2011. REUTERS/Mukesh Gupta

Image Caption and Rights Information

சென்னை, செப். 27 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தென் இந்தியாவில் உலகளாவிய ஆயத்த ஆடைத் தொழிலுக்கான மிகப்பெரும் மையத்தில் செயல்பட்டு வரும் டச்சு நாட்டு நிறுவனங்களுக்கு ஆயத்த ஆடைகளை சப்ளை செய்யும் தொழிற்சாலைகள் தங்கள் தொழிலாளர்கள் எலும்பை முறிக்கும் கடன்சுமையில் சிக்கித் தவிக்கும்படிச் செய்யும் வகையில்  ‘பட்டினியால் வாடும் ஊதியத்தையே’ வழங்கி வருகின்றன என செவ்வாயன்று வெளியான ஓர் அறிக்கை கூறுகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு நகரைச் சுற்றியுள்ள 10 ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் ஆய்வு செய்தபோது, அவர்கள் சராசரியாக மாதத்திற்கு 90 யூரோக்களை (100 அமெரிக்க டாலர்கள்) மட்டுமே ஊதியமாகப் பெறுகின்றனர் எனவும், அவர்களில் 70 சதவீதம் பேர் கடனில் மூழ்கியவர்களாக இருக்கின்றனர் எனவும் லாபநோக்கற்ற நான்கு அமைப்புகள் அளித்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தத் தொழிற்சாலைகள் “வாழ்வதற்கு அவசியமான ஊதியத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ள” டச்சு நாட்டு நிறுவனங்களுக்குத்தான் ஆயத்த ஆடைகளை சப்ளை செய்து வருகின்றன.

கூல்கேட், ஜி-ஸ்டார், த ஸ்டிங், எம் இ எக்ஸ் எக்ஸ் யூரோப், மேக் க்ரகார் ஃபேஷன்ஸ், ஸ்காட்ச் அண்ட் சோடா, சூட் சப்ளை, வி ஃபேஷன் மற்றும் சி அண்ட் ஏ ஆகியவை இதில் அடங்கும் நிறுவனங்கள் ஆகும். இதில் சி அண்ட் ஏ ஃபவுண்டேஷன் ஆட்கடத்தல், அடிமைத்தனம் ஆகியவை குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதில் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகும்.

“இந்த ஊதியத்தை வைத்துக் கொண்டு தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தை முறையாக ஆதரிக்க முடியாது” என க்ளீன் க்ளாத் கேம்பெய்ன், த இந்தியா கமிட்டி ஆஃப் நெதர்லாந்து, ஆசியா ஃப்ளோர் வேஜ் அலையன்ஸ் மற்றும் சிவிடெப் இந்தியா ஆகியவை இணைந்து உருவாக்கிய ‘டூயிங் டச்’ என்ற அந்த அறிக்கை கூறுகிறது.

“உணவு, பெரும்பாலும் ஒரேயொரு அறையை மட்டுமே கொண்ட, குடிநீர் குழாய் எதுவுமில்லாத, வெளியேயுள்ள கழிப்பறையினை மற்றவர்களுடன் இணைந்து பயன்படுத்திக் கொள்ளும்படியான வீட்டு வசதி ஆகியவையே அவர்களின் மிகப்பெரும் செலவாக உள்ளது. கிட்டத்தட்ட இவர்கள் எல்லோருமே சத்தான, வித்தியாசமான உணவை வாங்க வேண்டுமென்றே விரும்புகிறார்கள். எனினும் மிகக் குறைவான ஊதியத்தின் விளைவாக அவர்களால் அவ்வாறு செய்ய முடிவதில்லை.”

இந்த அறிக்கைக்கு பிரதிபலிப்பாக, ஊதியம், கூடுதல் வேலை நேரத்திற்கான ஊதியம், வேலை நேரம், குழந்தைப் பாதுகாப்பு, தொழிலாளர்களுக்கான விடுதி வசதிகள் போன்றவை தொடர்பான சவாலை வென்றெடுக்க ஒரு சில நடைமுறைகளை அமல்படுத்த இருப்பதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் நெசவு மற்றும் ஆயத்த ஆடைத் தொழிலானது 40 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வணிகத்தில் ஈடுபட்டு வருவதாகும். இவற்றில் பெரும்பாலானவை முறைசாராத் துறையிலேயே செயல்பட்டு வருகின்றன என்பதோடு, சுமார் 4 கோடியே 50 லட்சம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள இத்துறையானது மிக மோசமான வகையிலேயே ஒழுங்குபடுத்தப்படுகிறது.

பெங்களூரு நகரைச் சுற்றிலும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் இத்துறையில் வேலை செய்து வருவதாகவும், இந்த நகரத்தில் இத்துறையில் உள்ள தொழிலாளர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் எனவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

2015ஆம் ஆண்டில் பேட்டியளித்த ஒரு பெண் தொழிலாளி கூறுகையில், பேருந்துக் கட்டணத்தை மிச்சம் பிடிப்பதற்காக வேலைக்கு வரும்போது ஒரு மணி நேரமும், வீட்டிற்குத் திரும்பும்போது ஒரு மணி நேரமும் தான் நடந்தே வருவதாகத் தெரிவித்திருந்தார்.

“மிக மிகச் சாதாரண ஊதியத்திற்காக இந்தப் பெண்கள் மிகவும் கடுமையாக உழைக்கின்றனர்” என க்ளீன் க்ளாத்ஸ் கேம்பெய்ன் அமைப்பின் அதிகாரபூர்வ பேச்சாளரான தாரா ஸ்கேலி தெரிவித்தார்.

வாழ்வதற்கு அவசியமான ஊதியம் என்பது “அடிப்படையான மனித உரிமை” என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வரையறை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஆசியாவிற்கான அடிப்படையளவிலான ஊதியத்திற்கான பிரச்சார இயக்கம் இந்தியாவில் வாழ்வதற்கு அவசியமான ஊதியம் என்பது மாதம் ஒன்றுக்கு ரூ. 18, 727/- (282 அமெரிக்க டாலர்கள்) என்பதாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.

“அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வாழ்வதற்கு அவசியமான ஊதியத்தை வழங்குவதற்கு உறுதியானதொரு திட்டத்தை ஆயத்த ஆடை நிறுவனங்கள் உருவாக்கும் என்றும், இவ்வாறு சப்ளை செய்பவர்கள் வாழ்வதற்கு அவசியமான ஊதியத்தை வழங்க முடிவதை அவை உறுதிப்படுத்த வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என நெதர்லாந்து இந்தியாவிற்கான குழுவின் இயக்குநரான கெரார்ட் ஊங்க் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: டிம் பியர்ஸ் மற்றும் கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.