எங்களுக்கு உதவுங்கள்! வேலையிடத்தில் நிகழும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை விவரித்து தமிழக நெசவாலை பெண்களின் கடிதம்

Monday, 31 October 2016 12:36 GMT

An employee works inside a cotton factory at Mauayama town in the northern Indian state of Uttar Pradesh April 13, 2010. REUTERS/Jitendra Prakash

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

திண்டுக்கல் , அக். 31 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - வேலையிடத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை விவரித்து, உதவி கோரி தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஒரு நூற்பாலையில் பணிபுரியும் ஆறு பெண்களிடமிருந்து வந்துள்ள கடிதம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் புரளும் நெசவாலைத் தொழிலில் பணிபுரிந்து வரும் பெண்கள் விரிவான அளவில் சுரண்டப்படுவதை அம்பலப்படுத்தியுள்ளது என பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

“அந்த நபர் வேண்டுமென்றே எங்கள் மீது விழுவதோடு, தொடர்ந்து எங்களை கட்டிப்பிடிப்பது, எங்களின் மார்பகங்களை பிசைவது போன்றவற்றை தொடர்ந்து செய்து வருகிறான்” என தங்கள் ஆண் மேற்பார்வையாளரின் நடத்தை குறித்து  அந்தப் பெண்கள் அக்கடிதத்தில்  விவரித்துள்ளனர்.

“அவனது இத்தகைய செயலையை எதிர்க்கும் எந்தவொரு பெண்தொழிலாளியும் தன் ஊதியத்தில் ஒரு பகுதியை இழக்க நேரிடுகிறது. எங்களுக்கு இந்த வேலை அவசியம் தேவைப்படுகிறது. அன்றாடம் நாங்கள் சந்தித்து வரும் இந்தக் கொடுமையைப் பற்றி யாரிடம் பேசுவது என்றே எங்களுக்குத் தெரியவில்லை. தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்.”

தமிழ்நாட்டின் ஒரு மாவட்டமான திண்டுக்கல்லில் உள்ள சமூக நல அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ள ஆகஸ்ட் 29 தேதியிட்ட இந்த எட்டு பக்க கடிதம் இவ்வாறு துன்புறுத்தலுக்கும் சுரண்டலுக்கும் ஆளாகும் பெண்களிடமிருந்து உதவி கோரி வந்துள்ளது என உரிமைகளுக்கான பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

“பொதுவாக பெண்கள் இத்தகைய அனுபவங்கள் குறித்து அந்த வேலையை விட்ட பிறகே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம்” என அனைத்து பெண்களுக்கான தமிழ்நாடு நெசவு, பொதுத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த எஸ். திவ்யாராகினி கூறினார்.

“தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய சுரண்டல் பற்றிய அப்பட்டமான விவரங்களை இப்போதுதான் நாங்கள் முதல் முறையாக கைவரப் பெற்றிருக்கிறோம். இந்தப் பகுதியில் உள்ள நெசவுத் தொழிலின் அடிமட்டத்தில் நிலவி வரும் அநீதிகளை இந்தக் கடிதம் அம்பலப்படுத்தியுள்ளது.”

இந்தக் கடிதம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், அதிகாரபூர்வமாக எவ்வித புகாரும் தங்களுக்கு வரவில்லை என்றும் நெசவாலை நிர்வாகம் தெரிவித்தது.

“ஒரு பெண் தொழிலாளியிடமிருந்து இதே நபருக்கு எதிராக சுமார் ஓராண்டுக்கு முன்பு நிரூபிக்கப்படாத புகார்கள் வந்தன” என்று ரமா ஸ்பின்னிங் மில்ஸ் மூத்த மேலாளர் கே.ஆர். சண்முகவேல் கூறினார்.

“நாங்கள் அந்த நபரை எச்சரித்து விட்டதோடு, மேலும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக அந்தப் பெண் தொழிலாளியையும் வேலையிலிருந்து நீக்கினோம்.”

உலகத்தின் மிகப்பெரும் துணி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. ஆண்டொன்றுக்கு 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ( சுமார் 2,40,000 கோடி ரூபாய்) புரளுவதாக இந்த வர்த்தகம் உள்ளது. இத்தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களில் பலரும் கடன்மூலமான அடிமைத்தனத்தில் சிக்கித் தவிப்பதோடு, மோசமான அவமானங்களையும் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

மேற்கத்திய நாடுகளின் புகழ்பெற்ற வணிக நிறுவனங்களுக்குத்  தேவையான பெரும்பாலான நூலிழை, துணி, ஆடைகள் ஆகியவற்றை பருத்தியிலிருந்து உருவாக்க, சாயத்தொழிற்சாலைகள், நெசவாலைகள், ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் போன்ற பாரம்பரியமான தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள்  தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களிலிருந்து அழைத்துவரப்படும் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்துகின்றன.

2,000க்கும் மேற்பட்ட இத்தகைய நிறுவனங்கள் சுமார் 3,00,000 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோர் ஏழ்மை நிரம்பிய, கல்வியறிவில்லாத, தாழ்ந்த சாதிப்பிரிவுகளை அல்லது ‘தலித்’ பிரிவுகளைச் சேர்ந்த இளம்பெண்கள் ஆவர்.

திண்டுக்கல் மாவட்டத்தின் நல்லமனார்கோட்டைக்கு அருகே செயல்பட்டு வரும் ரமா ஸ்பின்னிங் மில்ஸ்-இல் சுமார் 100 பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.

“தொடர்ந்து மிகவும் அசிங்கமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு வருவதோடு, பாலியல் ரீதியான செய்கைகளை எங்களிடமிருந்து பெறவும் இதர ஆண் தொழிலாளர்களுக்கு ஊக்கம் தரப்படுகிறது.” என்றும் இந்தக் கடிதம் குறிப்பிடுகிறது.

“மிகவும் நிராதரவான ஒரு சில பெண்கள் இத்தகைய சுரண்டலுக்கு ஒத்துப் போகின்றனர். அவர்களுக்கு கூடுதல் வேலைநேரத்திலிருந்து விதிவிலக்கு தரப்படுகிறது. ஆனால் அதை எதிர்க்கும் நாங்கள் வந்த ஆர்டர்களை முடித்து விட்டே செல்ல வேண்டும் என நிர்ப்பந்தம் தரப்படுகிறது. எந்தவிதமாக எதிர்ப்பு தெரிவித்தாலும் சரி, அது ஊதிய வெட்டில்தான் முடிவடைகிறது.”

வேறு ஒரு நகரத்தில் வாழ்ந்து கொண்டு, இந்த மில்லின் மேலாளரிடமிருந்து வரும் தகவலை மட்டுமே நம்பியிருக்கும் இந்த மில்லின் உரிமையாளரிடம் தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்க முடியாத நிலையில் தாங்கள் இருப்பதாகவும் அந்தப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

“இந்த ஊதிய வெட்டு, கூடுதல் வேலைநேரம் ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இந்த பாலியல் ரீதியான துன்புறுத்தலைத்தான் எங்களால் தாங்க முடியவில்லை” என அந்தப் பெண்கள் கடிதத்தில் கூறியுள்ளனர். “எங்கள் குடும்பத்தினரிடம் பேச முடியாத ஒரு விஷயமாக இது இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போகவே நாங்கள் அஞ்சி நடுங்கிக் கொண்டுதான் இருக்கிறோம்.”

இந்த மில் வளாகத்தைச் சோதனையிட்டு, இந்தப் புகார்கள் பற்றி விசாரிப்பதற்கென விசாரணை குழு ஒன்றை அமைக்கும் வேலை நடைபெற்று வருகிறது என திண்டுக்கல் சமூக நல அலுவலர்  ஜி. சாந்தி தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.