×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்தியாவில் ஆட்கடத்தல் குறித்த விசாரணை விரிவடையும் தருணத்தில் பச்சிளம் குழந்தைகள், சடலங்கள், வெளிநாட்டுப் பணம் கண்டுபிடிப்பு

by சுப்ரதா நாக்சௌத்ரி | Thomson Reuters Foundation
Monday, 28 November 2016 17:05 GMT

A medical worker administers polio drops to an infant at a hospital during the pulse polio immunization programme in Agartala, capital city of India's northeastern state of Tripura, in this January 18, 2015 archive photo. REUTERS/Jayanta Dey

Image Caption and Rights Information

கொல்கத்தா, நவ 28 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - சர்வதேச அளவிலான ஆட்கடத்தல் குழுவின் நடவடிக்கைகள் என சந்தேகிக்கப்படும் விஷயத்தில் விசாரணை விரிவடையும் தருணத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் முதியவர்களுக்கும் மனநிலை பிறழ்ந்தவர்களுக்கும் என நடத்திவரப்படும் இல்லங்களில் திங்கட்கிழமையன்று மேற்கொண்ட சோதனைகளில் 13 பச்சிளம் குழந்தைகளை காவல்துறை மீட்டதோடு, இரண்டு பச்சிளம் குழந்தைகளின் சடலங்களையும் கைப்பற்றியுள்ளது.

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்காணாக்கள் எனும் வறுமைநிறைந்த மாவட்டத்தில் முதியவர்களுக்கும் மனநிலை பிறழ்ந்தவர்களுக்கும் என அறக்கட்டளை ஒன்றால் நடத்தப்பட்டு வந்த ஓர் இல்லத்தில் ஒரு வயதிற்கும் குறைவான 10 குழந்தைகளை அவர்கள் கண்டுபிடித்தனர்.

இதன் அண்டை மாவட்டமான வடக்கு 24 பர்காணாக்கள் மாவட்டத்தில் தத்தெடுப்பு மையம் ஒன்றை நடத்தி வரும் அறக்கட்டளையின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில் இரண்டு பச்சிளம் குழந்தைகளின் சடலங்களையும்  காவல்துறை கைப்பற்றியது.

கடந்த நவம்பர் 21ஆம் தேதியன்று குழந்தைபெறவோ அல்லது கருக்கலைப்பு செய்து கொள்ளவோ பெண்கள் வருகின்ற தனியார் மருத்துவ மனை ஒன்றை காவல்துறையினர் சோதனையிட்டபோது அங்கு பூட்டப்பட்ட மருந்துக் கிடங்கு ஒன்றில் இருந்த வழக்கமாக பிஸ்கெட் அடுக்கி வைக்கப்படும் அட்டைப் பெட்டிகளில் மூன்று பச்சிளம் குழந்தைகள் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்தே இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தத்தெடுப்பதற்காக பிறந்த குழந்தைகளை கடத்திச் சென்று வந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மேற்கு வங்க குற்றப் புலன் விசாரணை துறையைச் சேர்ந்த ராஜேஷ் குமார் தெரிவித்தார்.

“சட்டவிரோதமான தத்தெடுப்பு, குழந்தைக் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்த அரசுமுறை சாரா அமைப்புகள், மருத்துவமனைகள், மருத்துவர்கள், இடைத்தரகர்கள்   ஆகியவர்களைக் கொண்ட மாபெரும் வலைப்பின்னலையே காவல் துறை இப்போது கண்டுபிடித்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே அவர்களுக்கு கிடைத்துள்ள ஏராளமான தகவல்களைக் கொண்டு எங்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்” என குற்றப்புலன் விசாரணைத் துறையின் கூடுதல் தலைமை இயக்குநரான குமார் திங்கட்கிழமையன்று தெரிவித்தார்.

திருமணமாகாத  இளம்பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதற்காக இந்த மருத்துவ மனைக்கு வரும்போது, அதற்குப் பதிலாக குழந்தையைப் பெற்றுவிட்டு அதன் பின் தங்கள் குழந்தைகளை விற்று விடலாம் என அதன் ஊழியர்கள் ஊக்கம் கொடுத்து வந்தனர் என்பதை துவக்கநிலையிலான விசாரணைகள் தெரிவிக்கின்றன.

காவல் துறையினர் இதற்கான விலையைக் குறிப்பிடவில்லை எனினும், ஆண் குழந்தைக்கு ரூ. 3,00,000/- (4,380 அமெரிக்க டாலர்கள்) பெண் குழந்தைக்கு ரூ. 1,00,000/- (1,460 அமெரிக்க டாலர்கள்) என்ற விகிதத்தில் இக்குழந்தைகளின் தாய்மார்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என உள்ளூர் பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளும் கூட திருடப்படுகின்றன. அதன் பெற்றோரிடம் குழந்தை இறந்தே பிறந்தது என்று கூறி விடுவதாகவும் தெரிகிறது. இவ்வாறு பெற்றோர்களை ஏமாற்றுவதற்காகவே வைத்திருக்கும் இறந்தே பிறந்த குழந்தைகளின் உடலை இவர்களில் ஒரு சிலரிடம் காட்டப்படுவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

பிறந்த உடனேயே கடத்தப்படும் இந்தப் பச்சிளம் குழந்தைகளை பிஸ்கெட் பாக்கெட்களை அடுக்கி வைக்கப் பயன்படுத்தும் அட்டைப் பெட்டிகளில் வைத்து தத்தெடுப்பு மையங்களுக்கும், முதியவர்களுக்கும் மனநிலை பிறழ்ந்தவர்களுக்கும் என நடத்தப்பட்டு வரும் இல்லங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, இந்தக் குழந்தைகளை தத்து  கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் வரை அங்கே வைக்கப்படுகின்றன.

மருத்துவமனைகளின் உரிமையாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், இத்தகைய அறக்கட்டளைகளின் உரிமையாளர்கள், இதற்கான போலி ஆவணங்களை தயாரித்துத் தந்ததாக சந்தேகிக்கப்படும் நீதிமன்ற எழுத்தர்கள் ஆகியோர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

குழந்தைகள், சடலங்கள், வெளிநாட்டுப் பணம் கண்டுபிடிப்பு

இந்தியாவை மையமாகக் கொண்டு செயல்படும் தெற்காசிய பகுதியானது உலகத்தில் ஆட்கடத்தல் நடவடிக்கைகள் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக உள்ளது.

இதில் ஈடுபட்டு வரும் கும்பல்கள் ஒவ்வொரு ஆண்டும் இதனால் பாதிக்கப்படும் ஆயிரக்கணக்கானவர்களை கொத்தடிமைகளாக ஆக்கி வருகின்றன; அல்லது அதிகமான உழைப்புச் சுரண்டலில் ஈடுபடும் முதலாளிகளிடம் கூலிகளாக வாடகை அடிப்படையில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். பெண்கள், சிறுமிகள் பலரும் பாலியல் தொழில் மையங்களுக்கு விற்கப்படுகின்றனர்.

கொல்கத்தாவிலிருந்து 80 கிலோமீட்டர் (50 மைல்கள்) தூரத்திலுள்ள பாதுரியா என்ற இடத்தில் உள்ள  மருத்துவமனை ஒன்றில் கடந்த திங்கட்கிழமையன்று நடந்த சோதனையைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்  மூலம் 20க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொள்ள வழியேற்பட்டுள்ளது எனவும், மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் இந்த ஆட்கடத்தல் நடவடிக்கைகள் இருப்பதாகத் தோன்றுகிறது எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சோதனைகளில் 25 கிலோமீட்டர் (15 மைல்கள்) தூரத்தில் இருக்கும் மச்லாந்தபூர் என்ற இடத்திலுள்ள ஒரு தத்தெடுப்பு மையத்தின் அலுவலகங்களில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்கொண்ட சோதனையின்போது, இரண்டு பச்சிளம் குழந்தைகளின் சடலங்களையும் காவல்துறையினர் கண்டெடுத்தனர். விற்பதற்காகக் காத்திருக்கும் நேரத்தில்  இந்தக் குழந்தைகள் இறந்திருக்கக் கூடும் என்றும் அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

அதேநாளில் பெஹாலா பகுதியில் செயல்பட்டு வரும் முதியவர்களுக்கும் மனநிலை பிறழ்ந்தவர்களுக்குமான தொண்டு நிறுவன இல்லம் ஒன்றின் இரண்டாவது தளத்தில் தரையில் ஒரு விரிப்பின் மீது கிடத்தப்பட்டிருந்த பத்து பச்சிளம் குழந்தைகளையும் அவர்கள் கண்டுபிடித்தனர். இந்தக் குழந்தைகள் போதிய ஊட்டச் சத்தின்றி இருந்ததோடு, ஒரு சில குழந்தைகள் மார்பு, தோல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அறிகுறியும் காணப்பட்டது.

இந்தக் குழந்தைக் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவதாக சந்தேகிக்கப்படும் மருத்துவர்களில் ஒருவரிடம் 3,200க்கும் மேற்பட்ட அமெரிக்க டாலர்கள், யூரோ, ஹாங்காங் டாலர்கள் இருந்ததைப் பார்க்கும்போது, இந்தக் குழந்தைகள் வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன என்பதை தெரிவிப்பதாக இருக்கக் கூடும் என்றும் குமார் கூறினார்.

“வெளிநாட்டுப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது இந்த கடத்தல்  நடவடிக்கையின் கரங்கள் வெளிநாடுகளிலும் நீண்டிருக்கிறது என்பதற்கான உறுதியான அறிகுறியாகும் என்பதோடு, இந்தக் குழந்தைகளை தத்தெடுக்க வெளிநாட்டுத் தம்பதிகள் ஆர்வமாக உள்ளனர் என்பதையும் தெரிவிக்கிறது” என அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தைகளில் ஒன்று அதன் பெற்றோருடன் மீண்டும் இணைய வழி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவர்களிடம் குழந்தை இறந்தே பிறந்ததாகக் கூறப்பட்டது  என்று குறிப்பிட்ட அவர்,  மற்ற குழந்தைகளின் பெற்றோர்களை தேடிக் கண்டுபிடிக்கவும், இவ்வாறு கடத்தப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்தவர்களை கண்டறியவும் காவல்துறை முயற்சி செய்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன எனவும் மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

“இந்த விஷயத்தில் போதிய கவனம் செலுத்துமாறும் இந்தக் குழந்தைகளின் முறையான கவனிப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும்  தெற்கு 24 பர்காணாக்கள் மாவட்டத்தின் குழந்தைகள் நல அலுவலரிடம் கூறியிருக்கிறேன்” என மேற்கு வங்க மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரான சஷி பஞ்சா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார். (செய்தியாளர்: சுப்ரதா நாக்சௌத்ரி; எழுதியவர்: நிதா பல்லா; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவுசெய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->