குழந்தைக் கடத்தல் அதிகரிப்பு முறையான தத்தெடுப்பைக் குறைத்து குழந்தைகளை விற்கும் வர்த்தகத்தை ஊக்குவிக்கிறது

by ரோலி ஸ்ரீவஸ்தவா | Thomson Reuters Foundation
Wednesday, 28 December 2016 11:16 GMT

A child sleeps in a hammock on the outskirts of Ahmedabad, India May 31, 2016. REUTERS/Amit Dave

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, டிச.  28 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - இந்தியாவில் குழந்தைகளின் கடத்தல் அதிகரிப்பதன் விளைவாக, தத்தெடுப்பதற்குத் தயாரான குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்ளக் காத்திருக்கும் தம்பதிகள் மேலும் அதிகமாகி வரும் நிலையில் அது லாபகரமானதொரு வர்த்தகமாக மாறுவதையும் ஊக்குவிக்கிறது என புதன்கிழமையன்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

125 கோடி மக்களுடன் உலகின் இரண்டாவது அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும் இந்தியாவில், 1,700 குழந்தைகள் மட்டுமே தத்தெடுப்பதற்கு உகந்தவையாக தற்போது உள்ளன என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் அதே நேரத்தில், 12,400 குடும்பங்கள் ஏதாவதொரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள விரும்புகின்றன. 2015-16 நிதியாண்டில் சுமார் 3,010 குழந்தைகள் இவ்வாறு தத்தெடுக்கப்பட்டன.

கடந்த இரண்டு மாதங்களில் இந்தியாவில் குழந்தைகளை விற்கும் இரண்டு கும்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பின்னணியில், இவ்வாறு தத்தெடுப்பதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை அதிகரித்துக் கொண்டே போவதானது நாட்டில் குழந்தைக் கடத்தல் அதிகரிப்போடு நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது என இத்தகைய தத்தெடுப்பை மேற்பார்வையிடும் அரசு அதிகாரிகள்  தெரிவித்தனர்.

 “இத்தகைய (குழந்தைக் கடத்தல்) கும்பல்கள் இதைவிட அதிகமாகவே இருக்கின்றன” என தத்தெடுப்பை கண்காணிப்பது, ஒழுங்குபடுத்துவது ஆகியவற்றுக்கான இந்தியாவின் முக்கிய அமைப்பான மத்திய தத்தெடுப்பு ஆதார ஆணையத்தின் (சி ஏ ஆர் ஏ) தலைவரான தீபக் குமார் தெரிவித்தார்.

“இந்தியாவில் தத்தெடுப்பிற்கான காத்திருப்புப் பட்டியலில் உள்ள பெற்றோர்களை விட அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்க வேண்டும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனினும் குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தைகளை விற்கும் தரகர்கள் மட்டுமின்றி, சில நேரங்களில் தனி நிறுவனங்களே  இதில் ஈடுபட்டு வருகின்றன”.

இந்திய சட்டங்களின்கீழ், குழந்தைகளின் பெற்றோரால் தாமாகவே முன்வந்து கொடுக்கப்பட்ட குழந்தைகள் அல்லது காவல் துறையால் காப்பு இல்லங்களுக்கு கொண்டுவரப்படும் குழந்தைகள் ஆகியவை, பல்வேறு சட்டபூர்வமான செயல்பாடுகளுக்குப் பிறகு, தத்தெடுப்பிற்கு சட்டரீதியாக தகுதியுள்ளவையாக  அறிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு குழந்தைகளைத் தர முன்வரும் பெற்றோர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய 60 நாட்கள் வரை கொடுக்கப்படும் கால அவகாசமும் இதில் அடங்குவதாகும்.

இதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியாவில் இத்தகைய தத்தெடுப்பு செயல்முறையானது கடந்த ஆண்டு இணைய வழிப்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது. இதன்படி தத்தெடுப்பதற்கான  காத்திருப்புப் பட்டியலில் உள்ள குடும்பங்கள், தத்தெடுக்கத் தகுதியான குழந்தைகள் ஆகிய விவரங்கள் ஓர் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

எனினும், பெற்றோர்கள் – பெரும்பாலான நேரங்களில் இவர்கள் திருமணமாகாத தாய்மார்களாகவே இருக்கின்றனர் – தங்கள் குழந்தையை வழங்க அரசுத் துறையை அணுகுவதற்கு முன்பாகவே இந்தக் குழந்தைக் கடத்தல்காரர்கள் இந்தக் குழந்தைகளை கைப்பற்றிக் கொள்கின்றனர்.

இந்தியாவில் சமூக ரீதியாக ஒதுக்கி வைக்கப்படுவது அல்லது  சமூக ரீதியான அவப்பெயருக்கு ஆளாகக் கூடிய நிலையில் உள்ள திருமணமாகாத தாய்மார்களுக்கு நம்பிக்கையூட்டி  அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை தங்களிடம் விற்குமாறு செய்து, பின்பு அவற்றை நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள குழந்தையில்லாத தம்பதிகளுக்கு விற்று வந்த ஒரு கும்பலை மும்பையிலுள்ள காவல்துறையினர் கடந்த வாரம் கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவ மனைகளில் பிறந்த குழந்தைகள், அவை இறந்தே பிறந்ததாக அவற்றின் தாய்மார்களிடம் மருத்துவ மனை ஊழியர்கள் தெரிவித்து குழந்தைகள் திருடப்பட்டதையும் காவல் துறை கண்டுபிடித்தது. இவ்வாறு தாய்மார்களை நம்பச் செய்வதற்காக அந்த மருத்துவ மனைகளில் வைக்கப்பட்டிருக்கும் இறந்தே பிறந்த குழந்தைகளின் உடல்களும் அவர்களில் ஒரு சிலரிடம் தரப்பட்டுள்ளன.

தத்தெடுப்பதற்கான காத்திருப்பு பட்டியலை கண்காணிப்பதும், இத்தகைய குழந்தைக் கடத்தல்காரர்களை கண்டறிவதற்கான ஒரு வழியாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் ‘இதையெல்லாம் மீறிய வழிமுறைகள்’ ஏற்கனவே உருவெடுத்திருப்பதை தாங்கள் உணர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

திருமணமாகாத பெண் ஒருவர் தமக்குப் பிறந்த குழந்தையை தங்களுக்கு விற்க தயாராக இருப்பதாகவும், அவ்வாறு செய்யலாமா? என்று கேட்டு இவ்வாறு காத்திருப்புப் பட்டியலில் உள்ள பெற்றோர்களிடமிருந்து அடிக்கடி தமக்கு தொலைபேசி வருவதுண்டு என தனது அடையாளத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்பாத தத்தெடுப்பு மைய  உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 6 லட்சம் வரையில் குழந்தைகளை விற்பனை செய்ததாகக் கூறி, இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில்  செயல்பட்டு வந்த இரண்டு தத்தெடுப்பு மையங்கள் சமீபத்தில் மூடப்பட்டன எனவும் குமார் தெரிவித்தார்.

நாட்டில் இத்தகைய பிரச்சனைக்குரிய இடங்களைக் கண்டறிய வேண்டும் எனவும் தத்தெடுப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

“இந்தியாவின் ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் மிகக் குறைந்த அளவிலேயே தத்தெடுப்பு நிகழ்வதை ஆய்வு செய்வது இத்தகைய கொடுமைகளை தடுத்து நிறுத்த உதவும்” என தத்தெடுப்பு முகமைகளின் கூட்டமைப்பு தலைவரான சுனில் அரோரா தெரிவித்தார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith; செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)