×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

தென் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் மீட்பு நடவடிக்கை ஒன்றில் சுமார் 200 சிறுவர்கள் செங்கற் சூளையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்

Wednesday, 4 January 2017 14:28 GMT

A teenage boy works at a brick mine in the Ratnagiri district, India. 2011 archive photo. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

சென்னை, ஜன. 04 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தெலுங்கானாவில் உள்ள செங்கற்சூளை ஒன்றில் வேலைசெய்து வந்த சுமார் 200 சிறுவர்களை, இப்பகுதியில் நடைபெற்ற மிகப்பெரும் மீட்பு நடவடிக்கைகள் ஒன்றின்போது காவல் துறை விடுவித்தது. இவர்களில் பெரும்பாலோர் 14 வயதுக்கும் குறைந்தவர்கள் என புதன்கிழமையன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் காணாமல் போன சிறுவர்கள் ஆகிய பிரச்சனைகளை சமாளிப்பதற்கான நாடு தழுவிய இயக்கமான ‘ஆப்ரேஷன் ஸ்மைல்’ –இன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது தெலுங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத் நகரிலிருந்து 40 கிலோமீட்டர் (25 மைல்) தூரத்திலிருக்கும் யாதாதிரி மாவட்டத்தில் இருந்த செங்கற்சூளை ஒன்றிலிருந்து இந்தச் சிறுவர்கள் மீட்கப்பட்டனர். 

மீட்கப்பட்ட இந்தச் சிறுவர்கள் ஒடிசா மாநிலத்திலிருந்து இங்கு வந்து அவர்களின் பெற்றோர்கள் என்று கருதப்படும் பெரியவர்களுடன் வசித்தபடி வேலை செய்து வந்தனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

 “அங்கு வேலை செய்துவரும் பெரியவர்கள் அவர்களின் உண்மையான பெற்றோர்கள்தானா என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது. இந்தச் சிறுவர்களில் ஒரு சிலர் கடத்தி வரப்பட்டிருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது” என காவல்துறையின் கமிஷனர் மகேஷ் பகவத் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

 “ஏழு-எட்டு வயதுடைய சிறுமிகள் தங்கள் தலைகளில் செங்கற்களை சுமந்துகொண்டு சென்றதையும் மீட்புப் படையினர் பார்த்திருக்கின்றனர். ஒரு சில குழந்தைகள் நான்கு வயதே இருந்தனர்”.

உலகம் முழுவதிலும் உள்ள 16 கோடியே 80 லட்சம் குழந்தைத் தொழிலாளிகளில் இந்தியாவில் 5 வயதிலிருந்து 17 வயது வரையான  57 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர் என சர்வதேச தொழிலாளர் நிறுவனம் 2015ஆம் ஆண்டில் மதிப்பிட்டிருந்தது.

இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் விவசாயத் தொழிலிலும், கால்பகுதியினர் உற்பத்தித் தொழில்களிலும் பணிபுரிந்து வருகின்றனர் என்றும் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் தெரிவித்தது.

தெலுங்கானாவும் அதன் அருகிலுள்ள ஆந்திரப்பிரதேசமும் குழந்தைக் கடத்தல், குழந்தைத் தொழிலாளர் முறை ஆகியவற்றிற்கான மையங்களாக மாறியுள்ளன என்று குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை ஏற்றிருக்கும் மாநில அளவிலான அமைப்பொன்றின் உறுப்பினரான பி. அச்சுத ராவ் தெரிவித்தார்.

“கடந்த ஆண்டில் 3,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் செங்கற்சூளைகளிலிருந்தும், மற்றவர்கள் வீடுகளில் அடிமைத்தனத்திலும் இருந்தனர். இவர்கள் அனைவரும் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள் தான்” என தெலுங்கானா மாநில கமிஷனைச் சேர்ந்த ராவ் தெரிவித்தார்.

உரிய பள்ளிக்கூட வசதிகள் இல்லாதது, அவர்களது தாய்மொழியில் கற்றுத் தருவதற்கான ஆசிரியர்கள் இல்லாத நிலை ஆகியவற்றால், தங்கள் சொந்த ஊர்களிலிருந்து வேலைக்காக இடம்பெயரும் பெற்றோர்களோடு வரும் சிறுவர்களும் அவர்களோடு கூடவே வேலை செய்பவர்களாக மாறிவிடுகின்றனர் என்று இது குறித்துப் பிரச்சாரம் செய்து வருவோர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தைகளை அருகிலுள்ள ஆரம்பப் பள்ளிகளில் ஏன் சேர்க்கப்படவில்லை என்பது குறித்து விசாரிக்கவிருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->