×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

கறுப்புச் சந்தையைக் கட்டுப்படுத்த உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் துவங்கியது இந்தியா

by ரோலி ஸ்ரீவஸ்தவா | Thomson Reuters Foundation
Tuesday, 10 January 2017 10:16 GMT

Doctors look at the ultrasound scan of a patient at a hospital in New Delhi, India, in this 2015 archive photo. REUTERS/Adnan Abidi

Image Caption and Rights Information

மும்பை, ஜன. 10  (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) -  உடல் உறுப்புகளின் தட்டுப்பாட்டின் விளைவாக கறுப்புச் சந்தை உருவாகும் பிரச்சனையை சமாளிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக உயிர் நீத்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு அவர்களது நெருங்கிய உறவினர்களை  வேண்டிக் கொள்ள மருத்துவர்களுக்கு நினைவூட்டும் வகையில் இந்தியாவில் உள்ள மருத்துவர்களுக்கு இனி நினைவூட்டல் செய்திகள் அனுப்பி வைக்கப்படும்.

“பூச்னா மத் போலோ”- அதாவது “கேட்பதற்கு மறந்து விடாதீர்கள்” என்று இந்தியில் பொருள்படும் இந்த முயற்சி 3,00,000 மருத்துவர்களை இலக்காகக் கொண்டதாகும். கடந்த ஆண்டு மும்பையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழைப் பெண் ஒருவரை தொடர்புபடுத்தி நிகழ்ந்த சிறுநீரக கடத்தல் நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு இயக்கங்களின் தொடர்ச்சியாகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அரசின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில், மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறுநீரகங்களுக்காக 2,00,000 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அதைப் போன்றே ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக தற்போது 30,000 பேர் காத்திருக்கின்றனர். சட்டபூர்வமான தானங்களின் மூலம் இதில் சுமார்  3 முதல் 5 சதவீதத் தேவையை மட்டுமே நிறைவேற்ற முடிகிறது.

“தங்கள் அன்பிற்குரியவர்கள் உயிர்நீக்கும்போது அவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வதை குடும்பத்தினர் நினைவில் வைத்துக் கொள்வதில்லை.  அல்லது அவர்கள் அதற்கு முயற்சி செய்யும்போது காலம் கடந்திருக்கும். எனவே ஒருவர் இறந்தவுடனே அவரது குடும்பத்தினரிடம் இதுபற்றிப் பேசவேண்டும் என்றே நாங்கள் மருத்துவர்களுக்கு நினைவூட்டுகிறோம்” என இந்த முயற்சியைத் துவக்கி வைத்துப் பேசுகையில் இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவரான கிரிஷன் குமார் அகர்வால் குறிப்பிட்டார்.

“இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் வழக்கம் அதிகரிக்கும்போது உறுப்புகளுக்காக ஆட்களை கடத்தும் முயற்சிகள் நின்றுவிடும்.”

பணத்திற்காக உடல் உறுப்புகளை விற்பது இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். நோயாளி ஒருவரின் உடல் உறுப்புகளை அவரது நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வது அனுமதிக்கப்படுகிறது. எனினும் இது மிகக் குறைவாகவே உள்ளது.

இத்தகைய உறுப்புகளுக்காகக்  காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் ஒரு சில நோயாளிகள், எப்படியாவது நலம்பெற வேண்டும் என்ற உந்துதலில், பணத்திற்காக இத்தகைய உடல் உறுப்புகளை ஏற்பாடு செய்து தரும் இடைத்தரகர்களின் சேவையை நாடுகின்றனர்.

இந்த இடைத்தரகர்கள் உடல் உறுப்புகளை தானம் தருவதற்கு வாய்ப்புள்ள நபர்களைத் தேடி கிராமங்களுக்குப் படையெடுக்கின்றனர்.  ஒரு சிலரை பணத்தை முன்வைத்தும், வேறு சிலரை நகரத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டியும் இந்த இடைத்தரகர்கள் அழைத்து வருகின்றனர்.

“வாழ்க்கை முறையால் உருவாகும் நோய்களாலேயே இவ்வாறு  உடல் உறுப்புகள் செயலிழக்கின்றன என்பதோடு பெரும்பாலும் பணக்காரர்களே இவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவாக ஏழைகளை சுரண்டுவதற்கான வாய்ப்பு உருவாகிறது” என இந்தியாவின் உடல் உறுப்புகள் தானத்திற்கான திட்டத்திற்குத் தலைமை தாங்கிவரும் அனில் குமார் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

உறுப்புகளை தானம் தருபவருக்கு பணம் வழங்குவதாக அறிவிக்கும் விளம்பரங்கள் இணைய தளங்களில் வெளியிடப்படுவது, உறுப்புகளை எடுக்க கடத்துவது, அதைப் போன்றே நேபாளத்தில் பூகம்பத்தில் இடிந்து விழுந்த தங்கள் வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு உதவும் வகையில் தங்கள் உடல் உறுப்புகளை இந்தியாவில் விற்பதற்கு முயற்சி செய்பவர்கள் என பல்வேறு வடிவங்களில் இத்தகைய உடல் உறுப்புகளின் வர்த்தகம் நடைபெற்று வருவது குறித்து எச்சரிக்கும் தகவல்கள் குமார் அவர்களின் துறைக்கு வந்து சேர்கின்றன. 

மருத்துவர்கள், குறிப்பாக முக்கியமான மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவர்கள், இவ்வாறு உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு குடும்பத்தினருக்கு அறிவுறுத்தும் வகையில் ஆர்வம் காட்டத் துவங்கினால் இத்தகைய உடல் உறுப்புகள் கிடைப்பதற்கும் அவற்றுக்கான தேவைக்கும் இடையில் நீடிக்கும் இடைவெளியை குறைக்க முடியும் என இதற்காக பிரச்சாரம் செய்துவருவோர் குறிப்பிட்டனர்.

இந்த “பூச்னா மத் போலோ (கேட்க மறந்து விடாதீர்கள்)” என்ற பிரச்சாரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதன்மூலம் மருத்துவர்கள் நோயாளிகளின் குடும்பத்தாரிடம் பேசுவதன் மூலம் இடைத்தரகர்களை ஒழிக்க முடியும்.

இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உடல் உறுப்பு தானம் குறித்து கேட்குமாறு மருத்துவர்களுக்கு நினைவூட்டும் விளம்பர சுவரொட்டிகள் இந்திய மருத்துவமனைகள் அனைத்திலும் ஒட்டப்படும்.

 (செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா; எடிட்டிங்: அலிசா டாங். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->