×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

நலிந்து வரும் தேயிலைத் தோட்டங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் ஆட்கடத்தல்காரர்களிடம் குழந்தைகளை பறிகொடுக்கின்றனர்

Friday, 20 January 2017 11:23 GMT

Labourers pluck tea leaves in a tea plantation at Shipaidura village, about 40 km (25 miles) north of the northeastern hill resort of Darjeeling, June 23, 2008. REUTERS/Rupak De Chowdhuri (INDIA)

Image Caption and Rights Information

   ஜல்பைகுரி, ஜன. 20 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - ஃபாகுவா ஓரோன் வேலைக்குச் செல்ல ஏற்கனவே நேரமாகி விட்டது. அப்போதுதான் ஆட்கடத்தல்காரர்கள் அவரது குடிசைக்கு வெளியே வந்து அவரது பதின்பருவ மகளை நல்ல வேலையில் சேர்த்து விட தங்களோடு அழைத்துச் செல்வதாக அவரிடம் கூறினர்.

“தேவையில்லை” என்று அவர்களிடம் கூறிவிட்டு ஓரோன் வேலைக்குச் சென்று விட்டார்.

அன்று மாலை அவர் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, அவரது மகள் அவர்களோடு போயிருந்தாள்.

“எப்படியிருந்தாலும் அவர்கள் அவளை கூட்டிக் கொண்டு சென்று விட்டார்கள்” என்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டயானா தேயிலை தோட்டத்தில்  உள்ள தன் வீட்டில் அமர்ந்தபடி அவர் கூறினார்.

“காலையில் வேலைக்குச் செல்ல எனக்குத் தாமதமாகியிருக்காவிட்டால், நான் இங்கேயே இருந்து என் மகளை இதிலிருந்து தடுத்திருப்பேன். ஆனால் தேயிலைத் தோட்டங்கள் ஒவ்வொன்றாக மூடிக் கொண்டு வருவதை அடுத்து என் குடும்பத்திற்குக் கொடுக்க நான் போராடிக் கொண்டு வரும் நல்ல துணிமணி, புத்தம் புதிய கைபேசி, நல்ல கல்வி, பணம் என்று அனைத்தையும் தருவதாக உறுதியளித்து அவளுக்கு ஆசை காட்டி அழைத்துச் சென்றுவிட்டார்கள்.”

2002ஆம் ஆண்டிலிருந்தே தேயிலைத் தோட்டங்கள் மூடத் துவங்கின. ஐந்து ஆண்டுகளுக்குள்ளேயே அவற்றில் பலவும் முழுமையாக மூடப்பட்டுவிட்டன. இவற்றைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை; அல்லது பெரும் கடன்களில் தாங்கள் திண்டாடி வருவதாக நிர்வாகங்கள் இதற்குக் காரணம் கூறி வந்தன.

மேற்கு வங்கத்தில் தேயிலைத் தோட்டங்கள் நிரம்பிய பகுதியிலிருந்து வெளியேறத் தூண்டப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் பதின்பருவப் பெண்களில் ஒருவர்தான் 16 வயதுடைய  சபீதா.  இந்தத்  தேயிலை பறிக்கும் தொழிலாளிகள் கடுமையான வறுமை, சமூகத்திலிருந்து தனிமைப்படுவது, உடல்நல பிரச்சனைகள் ஆகியவற்றால் வாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான் அவர்களின் வேலைகளும் காணாமல் போகின்றன.

2014 ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் 14, 671 குழந்தைகள் காணாமல் போன வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் இவ்வாறு காணாமல் போன குழந்தைகள் குறித்த ஐந்து பதிவுகளில் ஒன்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்ததாகும் என அரசின் புள்ளி விவரங்களை ஆய்வு செய்து வரும் சைல்ட் ரைட்ஸ் அண்ட்  யு என்ற லாப நோக்கற்ற அமைப்பு தெரிவிக்கிறது.

“திட்டமிட்டு குற்றங்களைச் செய்யும் தொழிலுக்கும் குழந்தைகள் காணாமல் போவதற்கும் இடையே நேரடியான தொடர்பு உள்ளது” என  சைல்ட் ரைட்ஸ் அண்ட்  யு-வின் அதீந்திர நாத் தாஸ் தெரிவித்தார்.

“இவ்வாறு காணாமல் போன குழந்தைகளில் பெரும்பகுதியினர் உண்மையில் ஆட்கடத்தலுக்கு ஆளானவர்களாக, கடத்தி அல்லது தூக்கிச் செல்லப்பட்டவர்களாகவே உள்ளனர்”

மேற்கு வங்கத்தில் பெரும்பாலும் மூடலுக்கு ஆளாகியுள்ள 276 தேயிலைத் தோட்டங்களில் உள்ள இளம் சிறுமிகள் அவர்கள் படித்து வரும் உயர்நிலைப் பள்ளியிலிருந்து நின்று விடுவதோடு, இத்தகைய ஆட்கடத்தல் முகவர்களோடு “காணாமல் போய்விடுகின்றனர்” என தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத சிறுவர் நல வாரிய அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

“இவர்களின் பெற்றோர்களும் திக்கற்றவர்களாகவே உள்ளனர். பல நேரங்களில் தங்கள் மகள் பாதுகாப்பாக வீட்டிற்குத் திரும்பி வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் அவர்களில் பலரும் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்வதில்லை” என இப்பகுதியில் குழந்தைகளின் உரிமைகளுக்காகப் போராடி வரும் லாபநோக்கற்ற குழுவான துவார்ஸ் ஜாக்ரன் – ஐச் சேர்ந்த விக்டர் பாசு தெரிவித்தார்.

 “ஒரு சில நேரங்களில் இந்தப் பெற்றோர்களுக்கு ஒரு சில ஆயிரங்களைத் தந்து  எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அவர்களிடம் கூறப்படுகிறது” எனவும் அவர் கூறினார். “பின்பு பணம் வருவதும் நின்று போய் விடுகிறது. அதன் பிறகு அவர்களது குழந்தையுடனான எல்லாத் தொடர்பும் நின்று போய்விடுகிறது.”

Rukmani Naik poses with a picture of her 14-year-old daughter who left their home in the Diana Tea Estate in West Bengal, India, to work in another city. January 12, 2017. Thomson Reuters Foundation/Anuradha Nagaraj

லிப்ஸ்டிக்-ஐ காட்டி கவர்ந்திழுக்கப்பட்ட சிறுமிகள்

ஓரோனின் குடிசைக்கு மிக அருகில் உள்ள ருக்மணி நாயக் தனது 14 வயது மகள் அலிசாவின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை எடுத்துக் காட்டுகிறார்.

“ஜனவரி முதல் வாரத்தில் அவள் சென்று விட்டாள்” என டயானா தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் தற்காலிக தொழிலாளியான நாயக் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“கடந்த ஆண்டும் கூட அவளைக் கூட்டிச்  சென்றார்கள். என்றாலும் எங்களால் அவளைக் கண்டுபிடித்துக் கூட்டி வர முடிந்தது. அதன் பிறகு இந்த மாதம் எங்கள் அடுத்த வீட்டிற்கு ஒரு ஆள் வந்தான். இரண்டாவது முறையாக அவளை நம்ப வைக்க அவனால் முடிந்தது. அவளும் போய்விட்டாள்.”

வெளியாள் ஒருவரும் உள்ளூர் நபர் ஒருவரும் இணைந்து செயல்படும் முகவர்கள் இந்தச் சிறுமிகள் பலரையும் நேரடியாகவே அணுகுகின்றனர் என்றும், அழகான ஆடைகள், மேக்கப் சாதனங்கள் போன்றவை அவர்களைக் கவர்ந்திழுக்கும் முக்கிய பொருட்களாக விளங்குகின்றன என்றும் பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாதத் துவக்கத்தில் பட்டப்படிப்பு படித்துவரும் மாணவியும் செயல்பாட்டாளருமான சுலோச்சனா நாயக் மாணவர் குழு ஒன்றுடன்  இணைந்து பதின்பருவப் பெண் ஒருவரை கடத்திச் செல்வதிலிருந்து தடுத்து நிறுத்தியிருக்கிறார்.

“அவருக்கு லிப்ஸ்டிக் வாங்கித் தருவதாகவும், அவளது முடியை நாகரீகமாக மாற்றுவதாகவும், புதிய உடைகளை வாங்கித் தருவதாகவும்  முகவர்கள் அவளிடம் ஆசை காட்டியிருக்கின்றனர்” என ஆட்கடத்தலுக்கு எதிரான இயக்கத்தின் 21வயது உறுப்பினர் தெரிவித்தார்.

“அவளை ஒரு பள்ளியில் சேர்த்து விடுவதாகவும், தினமும் ஒரு சில மணிநேரம் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது மட்டுமே அவளது வேலை என்றும் அவளிடம் கூறியிருக்கிறார்கள். சம்பாதித்து, பெற்றோர்களுக்கு உதவ முடியும் என்றும், மேலும் அழகாக ஆகி விடுவோம் என்றும் தான் நம்பியதாக அந்தப்  பெண் பின்பு எங்களிடம் கூறினாள்.”

அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆட்கடத்தல் பற்றிய பதிவுகள் 25 சதவீதம் அதிகரித்துள்ளன.  இதில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் குழந்தைகள் தொடர்பானவை என அரசின் குற்றங்கள் குறித்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகரித்து வரும் விரக்தி

பசியும் மரணமும் தேயிலைத் தோட்டங்களில் ஆழ ஊடுருவியுள்ளன.  இன்னமும் அங்கு வாழ்கின்ற 2,00,000 குடும்பங்களைப் பொறுத்தவரையில், விரக்தி மட்டுமே வேகமாக வளர்ந்து வருகிறது.

இவர்களில் பெரும்பாலோர் மிக மோசமான வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.  ஒரு காலத்தில் மிகச்சிறந்த தேயிலைக் கொழுந்துகளைப் பறித்து வந்த பெண்கள் இப்போது ஆற்றங்கரைகளில் பாறைகளை உடைத்து, நாளொன்றுக்கு ரூ. 150 (2 அமெரிக்க டாலர்) சம்பாதித்து வருகின்றனர்.

“சிறுமிகள் பள்ளிக்குப் போவதை நிறுத்தி விட்டனர்.  பேருந்தில் செல்வதற்கான கட்டணத்தைக் கூட அவர்களது பெற்றோர்களால்  தர முடிவதில்லை என்பதே பெரும்பாலான நேரங்களில் அதற்குக் காரணமாக உள்ளது” என பாசு குறிப்பிட்டார்.

பெண்களின் பிரச்சனைகள் குறித்து இந்திய அரசிற்கு ஆலோசனை வழங்கும் சட்டபூர்வ அமைப்பான பெண்களுக்கான தேசிய கமிஷனிலிருந்து ஒரு குழு கடந்த வாரம் இந்தத் தேயிலைத் தோட்டங்களுக்கு வருகை தந்து அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிந்தது. காணாமல் போன குழந்தைகள் பற்றிய கவலை நிரம்பிய கேள்விகளையும் இந்தக் குழு எதிர்கொள்ள நேர்ந்தது.

ரெட் பேங்க்ஸ் தேயிலைத் தோட்டத்தில் சாந்தி கேஷ் எழுந்து நின்று இந்தக் கமிஷனிடம்  சொன்னார்:  “எங்கள் குழந்தைகள் நாங்கள் படும் பாட்டைப் பார்த்து விட்டு பணம் சம்பாதிக்க வெளியே போகின்றனர்.

“ஆனால் அவர்களில் பலரும் திரும்பி வருவதில்லை. ஒரு சிலர் போன இடத்திலேயே இறந்தும் போகின்றனர். எங்களில் பலருக்கும் அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை. எங்கள் வேலை மீண்டும் வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அப்படியிருந்தால், எங்கள் குழந்தைகள் எங்களோடு பாதுகாப்பாக இருப்பார்கள்.”

அருகிலுள்ள  சிக்கிம் மாநிலத்தில்தான் தன் மகள் இருக்க வேண்டும் என ஓரோன் நம்புகிறார். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட பெண்களில் பலரும் அங்கு பெரிதாக வளர்ந்து வரும் சுற்றுலாத் தொழிலில் வேலைக்கு வைக்கப்படுகின்றனர் என ஆட்கடத்தலுக்கு எதிரான பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

“நான் அவளை அதிகமாகவே இழந்து நிற்கிறேன்.” என்று அவர் அமைதியாகச் சொன்னார். “நான் வேலைக்குப் புறப்படும்போது எனது உணவுப் பெட்டியை அவள்தான்  தயாராக வைத்திருப்பாள். கொஞ்சம் பணத்திற்காக நான் அவளை விற்று விட்டேன் என்று என் மனைவி நினைக்கிறாள். நான் அப்படி எதுவும் செய்யவில்லை. அவளை யாரோ கடத்திச் சென்று விட்டார்கள்.”

 (செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: லிண்ட்ச்ய கிரிஃபித்ஸ். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->