×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

உலகம் முழுவதிலும் பாலியல் தொழிலின் செழிப்புக்கு பூர்வகுடி, ஆதிவாசி மற்றும் கீழ்சாதிகளைச் சேர்ந்த பெண்களே அடித்தளமாக உள்ளனர்

by Nita Bhalla | @nitabhalla | Thomson Reuters Foundation
Monday, 30 January 2017 18:29 GMT

Indian sex workers cover their faces as they react to the camera while watching a rally as part of the sex workers' freedom festival at the Sonagachi red-light area in Kolkata in this archive picture from 2012. REUTERS/Rupak De Chowdhuri

Image Caption and Rights Information

- நீதா பல்லா

புது டெல்லி, ஜன. 30 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - கனடா நாட்டின் பூர்வகுடிகளிலிருந்து துவங்கி இந்தியாவின் ஆதிவாசிகள் வரை பாலியல் ரீதியான சுரண்டலுக்கு ஆட்படும் பெரும்பாலான பெண்களும் சிறுமிகளும் உலகத்தின் மிகவும் ஒதுக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர் என திங்களன்று பேசிய செயல்பாட்டாளர்கள் கூறியதோடு, விபச்சாரம், உலகளாவிய பாலியல் வர்த்தகம் ஆகியவற்றுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தனர்.

இந்த இனத்தவரிடையே பாலியல் ரீதியான அடிமைத்தனம் என்பது மிகப் பரவலாக உள்ளது. அமெரிக்காவின் ஏழ்மை நிறைந்த மாவட்டங்களாக இருந்தாலும் சரி, அல்லது தென் ஆப்ரிக்காவின் நகரங்களாயினும் சரி, இத்தகைய சமூக ரீதியான ஒதுக்குதல்கள் பெண்களையும் சிறுமிகளையும் சுரண்டலுக்கு மிக எளிதாக ஆட்படுபவர்களாக ஆக்குகின்றன.

“இந்த உலகத்தின் எல்லாப் பகுதியிலும் விபச்சாரம் இருந்து வருகிறது; ஏனெனில் ஆண்களிடையே அதற்கான தேவை இருக்கிறது. எனவே பாலியல் தொழிலில் ஒரு பெண்ணின் நிலை என்பது இத்தகைய மோசமான சூழலுக்கான பிரதிபலிப்பாக மட்டுமே உள்ளது” என பாலியல் ரீதியான அடிமைத்தனம் குறித்த மாநாட்டில் பேசிய பாலியல் தொழிலாளியாக இருந்து செயல்பாட்டாளராக மாறிய ராச்சேல் மொரான் குறிப்பிட்டார்.

“மிகுந்த வறுமையும் வாய்ப்பு-வசதியற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்களே விபச்சாரத் தொழிலுக்கு கவர்ந்திழுக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் எப்போதும் பார்க்க முடியும்” என ஸ்பேஸ் இண்டர்நேஷனல் என்ற அறக்கட்டளையைச் சேர்ந்த மொரான் குறிப்பிட்டார்.

அயர்லாந்தின் ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மொரான் 15 வயதில் விபச்சாரத் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்தப்பட்டதோடு, ஏழு ஆண்டுகளுக்கு அவர் பாலியல் ரீதியான அடிமைத்தனத்தில் ஆட்பட்டவராகவும் இருந்தார்.

உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் விபச்சாரம் சட்டவிரோதமானதாக இருந்தபோதிலும், அது எல்லா இடங்களிலும் இருந்து வருகிறது. ஃபவுண்டேஷன் ஸ்கெல்லெஸ் என்ற ஃப்ரெஞ்சு நாட்டு அறக்கட்டளையின் 2014ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றின்படி உலகம் முழுவதும் 4 கோடி  பாலியல் தொழிலாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்கடத்தலுக்கு ஆட்பட்டவர்களில் பெரும்பாலோர்  அவர்களது மோசமான சமூக- பொருளாதார நிலைமையின் காரணமாக இடைத்தரகர்களாலும், ஆட்கடத்தல்காரர்களாலும் கவர்ந்திழுக்கப்பட்டு, ஏமாற்றப்படுகிறார்கள். அல்லது பாலியல் ரீதியான அடிமைத்தனத்தில் உழலக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று கூறுகின்றனர் விபச்சார அடிமைமுறை ஒழிப்புவாதிகள்.

விபச்சார த் தொழில் மையங்கள், தெரு முனைகள், மசாஜ் பார்லர்கள், ஆடை அவிழ்ப்பு க்ளப்கள் அல்லது தனிப்பட்ட இல்லங்கள் என எத்தகைய வடிவமாக இருந்தபோதிலும் சரி, இதில் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் அடிமைத்தனத்தில் சிக்கிக் கொண்டுவிட்டார்கள் எனில் அதிலிருந்து வெளியேறுவது அவர்களுக்கு மிகவும் கடினமானதாகும் எனவும் செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இடைத்தரகர்களின் உடல் ரீதியான கொடுமைகள் குறித்த அச்சுறுத்தல் இவர்களில் பலரையும் இந்த பாலியல் தொழிலில் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வைக்கிறது என்ற போதிலும், ஒரு சிலர் அவர்களது குடும்பங்கள், நண்பர்கள் ஆகியவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டு, ஆதரவு தருவதற்கு யாருமில்லாத நிலையில் தங்கள் விருப்பத்துடனேயே இதில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.

“நாங்கள் பல்வேறு நாடுகளிலும் இதற்காகச் செயல்படும்போது மிகத் தெளிவான, பொதுவான தன்மைகள் வெளிப்படுகின்றன” என இந்தியா, ஃப்ரான்ஸ், அயர்லாந்து, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் செயல்பட்டு வரும் அறக்கட்டளைகளின் ஒரு கூட்டமைப்பான கோயலிஷன் ஃபார் த அபாலிஷன் ஆஃப் ப்ராஸ்டிட்யூஷன் (கேப்) என்ற அமைப்பின் தலைவரான சாரா பென்ஸன் குறிப்பிட்டார்.

 “பாலியல் தொழிலில் ஈடுபடுவோரின் பின்னணி, அவர்களின் தகுதி, எத்தகைய சூழ்நிலையில் அவர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டது, இடைத்தரகர்கள், ஆட்கடத்தல்காரர்கள் ஆகியோர் கையாளும் உத்திகள், ஆணாதிக்க முறை, இனவெறி, பெண் என்ற வகையில் ஓரவஞ்சனைப் போக்கு ஆகிய இவை அனைத்துமே உலகளாவிய பாலியல் தொழிலை செழிப்படையச் செய்கின்றன என்பதும் இதில் அடங்கும்”.

கேப் இண்டர்நேஷனலும் இந்தியாவின் அறக்கட்டளையான அப்னே ஆப்-உம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த இரண்டு நாள் மாநாடு உலகம் முழுவதிலும் பாலியல் தொழிலுக்கு முடிவு கட்டுவதற்கான நீண்ட கால உத்திகளை வகுக்கவும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் 30 நாடுகளிலிருந்து 250 பொதுச் சமூகக் குழுக்களை ஒன்று திரட்டியிருந்தது.

மிகவும் ஒதுக்கப்பட்ட, மறக்கப்பட்ட சிறுமிகளே  இந்தப் பாலியல் தொழிலில் பாதிக்கப்படுபவர்களாக  உள்ளனர் என்ற வகையில் “கடைசிப் பெண் முதலில்” என்று இந்த மாநாடு தலைப்பிடப்பட்டிருந்ததாக அப்னே ஆப் அறக்கட்டளையின் நிறுவனரான ருச்சிரா குப்தா தெரிவித்தார்.

“எப்போதுமே மிகவும் பலவீனமான நபரே பாதிக்கப்படுபவராக இருக்கின்றார். அவர் பெண்ணாக இருப்பதாலும், அவர் ஏழையாக இருப்பதாலும், அவர் கீழ் சாதியைச் சேர்ந்தவராக இருப்பதாலும் அல்லது பதின்பருவத்தவராக இருப்பதாலுமே இத்தகைய பாதிப்பு அவருக்கு ஏற்படுகிறது.”

“அரசாங்கங்கள் இந்த உண்மையை அங்கீகரிக்க வேண்டும் என்றும், அவர்களையும், அவர்களது உரிமைகளையும் மேம்படுத்தவும் உதவ வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்… ‘கடைசிப் பெண் முதலில்’ என்பதை நாம் மேற்கொள்ள வேண்டும். இதில் எவ்வித சமரசத்திற்கும் இடமிருக்கக் கூடாது.”

(செய்தியாளர்: நிதா பல்லா @nitabhalla ; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Soni Sori, an Indian tribal rights activist, talks about the sexual exploitation of tribal women in the central state of Chhattisgarh at the Second World Congress Against the Sexual Exploitation of Women and Girls in New Delhi on Jan. 30, 2017. Nita Bhalla/Thomson Reuters Foundation

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->