×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறப்புக் கட்டுரை – மும்பை பாலியல் மையங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தங்களைக் கடத்தி வந்த வழிகளை நினைவு கூர இந்தி மொழியை கற்று வருகின்றனர்

Tuesday, 31 January 2017 13:39 GMT

Rescued victims of sex trafficking attend a Hindi class at a shelter in a shelter in Kandivali, a northern Mumbai suburb, Jan 20 2017. THOMSON REUTERS FOUNDATION/ROLI SRIVASTAVA

Image Caption and Rights Information

மும்பை, ஜன. 31 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - பப்லியின் தலையணையின் கீழே ஒரு மாதத்திற்கும் முந்தைய பழைய இந்தி நாளிதழ் இருக்கிறது. அவர் அதை வெளியே எடுத்துப் பார்த்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவிற்கு மேற்கொள்ளவிருந்த பயணம் தள்ளிப் போடப்பட்டது என்ற செய்தியை அடிக்கடி படித்துக் கொண்டிருந்தார். தன் தாய் நாட்டோடு தொடர்பு கொள்வதைப் போல் அவரது விரல்கள் அந்த வார்த்தைகளை தடவிக் கொண்டிருந்தன.

வங்க தேசத்திலிருந்து கடத்தி வரப்பட்டு, மும்பையில் உள்ள பாலியல் மையம் ஒன்றிற்கு விற்கப்பட்ட பப்லி, அங்கிருந்து விடுவிக்கப்பட்டு தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள மும்பையின் வடபகுதியில் உள்ள புறநகர்ப் பகுதியான கந்திவ்லியில் உள்ள தங்குமிடத்தில் கடந்த ஓராண்டு காலமாக இந்தி மொழியைக் கற்று வருகிறார்.

தாங்கள் கடத்தி வரப்பட்ட வழிகளை சுட்டிக் காட்டவும், மேலும் தெளிவான வாக்குமூலங்கள் மூலம் ஆதாரங்களை பதிவு செய்ய உதவும் வகையில் நடத்தப்படுகின்ற இந்தி வகுப்புகளின் விளைவாக, இப்போது அவரால் இந்தி மொழியில் எளிதாகப் படிக்கவும், எழுதவும், பேசவும் முடியும்.

இந்த விடுவிப்பு ஃபவுண்டேஷனில் நடத்தப்படும் இந்தப் பாடங்களின் மற்றொரு விளைவு என்பது இவர்களில் ஒரு சில பெண்கள் முறையான வகுப்புகளில் சேருவதற்கான இடத்தையும் இந்த ஆண்டு பெற்றுள்ளனர் என்பதே ஆகும்.

 “வங்க தேசத்திலிருந்து என்னை கொல்கத்தாவிற்கு அழைத்து வந்தார்கள். ஆனால் அப்போது மும்பைக்கு வரும் வழியில் நான் கடந்துவந்த ரயில்வே ஸ்டேஷன்களின் பெயர்களை என்னால் படிக்க முடியாது.” என பப்லி தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

 “இந்த நகரத்திற்கு வந்து சில நாட்களுக்குப் பிறகுதான், என்னைச் சுற்றியிருந்த மக்களின் அரைகுறையான பேச்சுக்களிலிருந்தே நான் மும்பையில் இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன்.”

ஒவ்வோர் ஆண்டும், கலாச்சார ரீதியாக ஒரே மாதிரியான பகுதிகளாகவும், அதிக கெடுபிடிகள் இல்லாத எல்லைப் பகுதியை கொண்டதுமான வங்கதேசம், இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலமான மேற்கு வங்கம் ஆகியவற்றிலிருந்து மும்பைக்குக் கடத்தி வரப்படும் ஆயிரக்கணக்கான பெண்களைப் போலவே பப்லியின் தாய்மொழியும் வங்காளி தான்.

அரசின் புள்ளி விவரங்களின்படி 2014இல் இந்தியாவில் வணிகரீதியாக பாலியல் சுரண்டலுக்காக விற்பனை செய்யப்பட்ட இளம் பெண்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் மேற்கு வங்கத்திலிருந்தே வந்தவர்கள் ஆவர்.

ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எழுத்தறிவின்மை மிகப்பெரும் தடையாக அமைகிறது. ஏனெனில் இவ்வாறு கடத்தி வரப்படும் இளம் பெண்களில் பெரும்பாலோர் பள்ளிகளுக்கே போகாதவர்களாக அல்லது மிக ஆரம்பத்திலேயே பள்ளிப்படிப்பை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர் என இதற்கான பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

“இது குறித்த விசாரணையின்போது மும்பைக்கு வருவதற்கு முன்பு தாங்கள் கடந்து வந்த இடங்களைப் பற்றி அவர்களால் மீண்டும் நினைவுபடுத்திக் கூற முடிவதேயில்லை” என ரெஸ்க்யூ ஃபவுண்டேஷனைச் சேர்ந்த திரிவேணி ஆச்சார்யா தெரிவித்தார்.

“இப்போது நாங்கள் இந்தியில் உருவாக்கப்பட்ட வரைபடத்தை அவர்களிடம் காட்டி, எல்லைப் பகுதியை சுட்டிக் காட்டி, அவர்கள் கடந்து வந்த மாவட்டங்கள், மாநிலங்கள் ஆகியவற்றை அடையாளம் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.”

மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களை நோக்கிய ஆட்கடத்தலுக்கான வழியில் இந்தியாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த வாரணாசி, கோரக்பூர் ஆகிய இந்தி பேசும் சிறு நகரங்கள் மையங்களாகத் திகழ்கின்றன என்று தாஸ்ரா என்ற அரசுமுறை சாரா அமைப்பு மேற்கொண்ட ஓர் ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

இத்தகைய வழிகளை அடையாளம் காண்பதென்பது இந்தப் பகுதிகளில் காவல்துறை மேலும் விழிப்போடு இருப்பதை அதிகரிக்கும் என்பதோடு, நீதிமன்ற வழக்கிற்குப் பிறகு வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்ற, மீண்டும் இத்தகைய ஆட்கடத்தலுக்கு ஆளாகும்  இளம் பெண்களைப் பாதுகாக்கவும் உதவும் என செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இந்த விஷயம் நீதிமன்றத்தில் முடிவுக்கு வரும் வரை இந்த இளம் பெண்கள் தங்குமிடங்களில் வசிக்கின்றனர். ஒரு சிலர் 18 வயது முடிந்த பிறகு வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்றனர். மற்றவர்கள் ஏதாவதொரு வேலையில் தொடர்வதற்காக இங்கேயே தங்கிவிட முடிவு செய்கின்றனர்.

முக்கிய சாட்சிகள்

ஆண்டுதோறும் நேபாளத்திலிருந்தும், வங்கதேசத்திலிருந்தும் 500 லிருந்து 28,000 வரையிலான இளம் பெண்கள் இந்தியாவிற்குக் கடத்தி வரப்படுகின்றனர் என பல்வேறு லாபநோக்கற்ற குழுக்களின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

“மேற்கு வங்கம், வங்கதேசம் ஆகியவற்றின் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒரே விதமான கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றனர்; ஒரே விதமான திருவிழாக்களைக் கொண்டாடுகின்றனர்; ஒரே மொழியை, அதாவது வங்காளி மொழியை, பேசுகின்றனர்.” என இந்தியாவின் ஆட்கடத்தல் முறைகள் பற்றி வரையறுத்துள்ள மை சாய்சஸ் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த விவியன் ஐசாக் தெரிவித்தார்.

ரெஸ்க்யூ ஃபவுண்டேஷனைச் சேர்ந்த ஆச்சார்யா பத்து வருடங்களுக்கு முன்பாக இந்த மொழியின் அடிப்படையிலான தடையை எதிர் கொண்டார். எனவே இவ்வாறு விடுவிக்கப்பட்ட பெண்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக வங்காளி மொழிபெயர்ப்பாளர்களை அவர் அமர்த்திக் கொண்டார்.

 “2005ஆம் ஆண்டு வரை மும்பைக்குக் கடத்தி வரப்பட்ட பெரும்பாலான இளம்பெண்கள் நேபாளத்திலிருந்து வந்தவர்கள். ஆனால் அதன்பிறகு, அவர்களில் பெரும்பாலோர் வங்கதேசம், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலமான அசாம் ஆகியவற்றிலிருந்து வந்தவர்கள்.” என ஆச்சார்யா தெரிவித்தார்.

வங்காளி மொழிபெயர்ப்பாளர்களின் உதவி இதில் துணைபுரிவதாக இருந்தபோதிலும், சிறப்பான வகையில் விசாரணை நடத்துவதற்கான நுணுக்கமான விஷயங்கள் மறைந்து போயின. இந்த நிலையில்தான் இந்தத் தங்குமிடத்தில் இந்தி மொழிக்கான பாடங்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னால் துவங்கின.

“நீதிமன்றங்களில் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளை இந்தப் பெண்கள் புரிந்து கொள்ளத் துவங்கினார்கள்” என கீழ் மட்ட, மாவட்ட நீதிமன்றங்களில் ஆட்கடத்தல் வழக்குகளை நடத்தி வருகின்ற வழக்கறிஞரான ஹரீஷ் பண்டாரி தெரிவித்தார். ஆங்கிலம், மராத்தி ஆகிய மொழிகளும் நீதிமன்றத்தில் பயன்படுத்தப்பட்டாலும் கூட முறையான தகவல் தொடர்பை உருவாக்குவதற்காக நீதிபதிகள் இந்தி மொழிக்கு மாறினர்.

“ஆட்கடத்தல் வழக்குகளில் இந்தப் பெண்கள்தான் முக்கிய சாட்சிகள். எனவே நீதிமன்றத்தின் செயல்முறைகளையும், அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளின் உண்மையான நோக்கத்தை அவர்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியமாக இருந்தது.”

இரண்டு வழக்குகளில், குற்றச்சாட்டுகள் தயாரிக்கப்பட்ட பிறகு இந்தப் பெண்கள் தங்கள் வாக்குமூலத்தை மாற்றிக் கொண்டனர். மேலும் சிறப்பாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடிந்த பிறகு மேலும் அதிகமான தகவல்களை அவர்கள் அளித்தனர் என ஆச்சார்யா தெரிவித்தார்.

மீண்டும் பள்ளிக்கு

தங்குமிடத்தில் முறையற்ற வகையில் நடத்தப்பட்ட வகுப்புகள், இப்போது முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்முறையாக மாறியுள்ளன. ஒவ்வொரு நாள் காலையிலும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படும் இந்தி, ஆங்கிலம், கணக்கு ஆகிய பாடங்களைக் கற்பதற்காக இந்தப் பெண்கள் ஒன்று கூடுகின்றனர்.

இந்த ஆண்டில் ஒரு சில சிறுமிகள் முறையான பள்ளிகளுக்குச் செல்லத் துவங்கியுள்ளனர். இங்கு வசிக்கும்  கிட்டத்தட்ட  80 பேரில், 15 முதல் 17 வயது வரையான 10 சிறுமிகள்  வரும் மார்ச் மாதத்தில் உயர்நிலைப் பள்ளிக்கான தேர்வை எழுதவிருக்கின்றனர்.

மும்பையிலேயே வளர்ந்த, தற்போது இந்த தங்குமிடத்தில் வசிக்கும் இந்தி பேசும் பதின்பருவத்தவரான பாரியைப் போன்றவர்களுக்கும் கூட இத்தகைய இந்திப் பாடங்கள் பெரிதும் உதவியுள்ளன. அதிகாரபூர்வமான ஆவணங்களைத் தன்னால் படிக்க முடியாது என்றும், அவற்றில் தனது கைநாட்டை மட்டுமே பதித்து வந்ததாகவும் அவர் கூறினார்.

 “நாம் எதற்காகக் கையெழுத்திடுகிறோம் என்பதை நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.” என்றார் அவர்.

பாரி இந்த ஆண்டு பள்ளிக்குச் செல்லத் துவங்கினார். தங்குமிடத்திலும் பள்ளியிலும் கற்றுத் தரப்படும் இந்திப் பாடங்களை அவர் மிகவும் விரும்புகிறார். அவருக்குப் பிடித்த ஒரு கதையும் உண்டு. குழந்தையான தன் தம்பியின் மீது தன் தாய் அதிக கவனம் செலுத்துவதை வெறுக்கும் ஒரு சிறுமியைப் பற்றிய கதைதான் அது.

தனக்கும் ஒரு தம்பி இருந்ததாகவும் நீண்ட நாட்களாக அவனைப் பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பப்லியைப் பொறுத்தவரை, மொழியின் மீதான அவரது ஆசை என்பது தன் வீட்டோடு தொடர்பு கொள்வதற்கான பகல்கனவுகளோடு நின்று விடுகிறது. அவர் தங்குமிடத்தில் வாங்கப்படும் இந்தி நாளிதழில் வங்கதேசத்தைப் பற்றி ஏதாவது செய்தி வந்திருக்கிறதா? என்றே அவர் தேடுகிறார்.

ஹசினாவின் பயணம் தள்ளிப் போடப்பட்டது என்ற செய்தியை அவர் கவனிக்காமல் விட்டபோதிலும், அவர் தொடர்ந்து பார்த்து வரும் மற்றொரு செய்தி அவருக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. இந்தியாவிற்கும் வங்க தேசத்திற்கும் இடையே துவங்கப்பட உள்ள புதிய பயணிகள் ரயில் சேவை பற்றிய செய்திதான் அது.

இந்த ரயிலில் தன் வீட்டிற்குத் திரும்பிப் போனபிறகு தன் கிராமத்தில் உள்ள இளம் பெண்களுக்கு தான் இந்தி கற்றுத் தரவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“இந்த முறை, நான் கடந்து செல்லும் ரயில் நிலையங்களின் பெயரை படிப்பேன்.”

A rescued victim of sex trafficking attends a Hindi class in a shelter in Kandivali, a northern Mumbai suburb, Jan 20 2017. THOMSON REUTERS FOUNDATION/ROLI SRIVASTAVA

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா; எடிட்டிங்: எட் அப்ரைட். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->