×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

தொழிற்சாலைகளில் ஏற்படும் காயங்களுக்குப் பிறகு இந்திய ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் நீதிக்காகப் போராடி வருகின்றனர்

Thursday, 9 February 2017 12:20 GMT

சென்னை, பிப். 9 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தனது நான்கு கைவிரல்களை தொழிற்சாலை விபத்தொன்றில் இழந்ததற்காக ராசு மகாலட்சுமி இழப்பீட்டைப் பெற்றபோது அவர் அதற்காக மகிழ்ச்சி அடைந்துவிடவில்லை.  இந்த உதவிக்காக அவர் ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது மட்டுமின்றி, வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிய இந்த காயத்திற்காக வெறும் ரூ. 1,36,000/- மட்டுமே அவருக்குக் கிடைத்தது.

அவரது போராட்டம் இன்னும் முடிந்து விடவில்லை. நாட்டின் நெசவுத் தொழிலில் அவரது நிலையைப் போன்ற சூழ்நிலை மிகவும் சாதாரணமான ஒன்று எனவே பிரச்சாரகர்கள் கூறுகின்றனர்.

 “ எனது விரல்களை மட்டுமல்ல; எனது வாழ்க்கை, நம்பிக்கை ஆகியவற்றையும் கூட நான் இழந்து நின்றேன்” என மகாலட்சுமி  தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு தொழிற்சாலை விபத்தில் சிக்கிக் கொண்டபோது அந்த நெசவுத் தொழிலாளிக்கு வயது 19 மட்டுமே.  மகாலட்சுமிக்கு மருத்துவச் செலவுகளுக்காக கடந்த டிசம்பர் மாதத்தில் அரசாங்கத்திலிருந்து ரூ. 1,36,000/- ( 2,000 அமெரிக்க டாலர்கள்) இழப்பீடு பெற்ற போது வயது 26 ஆகியிருந்தது.

ஆலை நிர்வாகத்திடமிருந்து ரூ. 5,00,000 இழப்பீடு கோரிய அவரது போராட்டம் இன்னும் தொடர்ந்து வருகிறது.

“உடனடி அறுவை சிகிச்சைக்கும் மருத்துவ மனையில் தங்கியிருந்ததற்கும் அவர்கள் பணம் தந்தனர். அதன் பிறகு என்னை சுத்தமாக மறந்தே போய் விட்டனர்” என்கிறார் மகாலட்சுமி.

 “அதன் பிறகு பலமுறை நான் மருத்துவரை சந்திக்க வேண்டியிருந்தது. மருந்து வாங்க வேண்டியிருந்தது. காயத்தின் மீதான கட்டை அடிக்கடி மாற்ற வேண்டியிருந்தது. இவை அனைத்திற்குமே நான் தான் பணம் தர வேண்டியிருந்தது.”

சுமங்கலி திட்டத்தின் கீழ்தான் அப்போது மகாலட்சுமி வேலை செய்து வந்தார்.  இது ஒருவகையான குழந்தைத் தொழிலாளர் முறைதான். இதன்படி பதின்பருவப் பெண்கள் மூன்று முதல் ஐந்து வருடங்கள் வரையில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அப்போது ஒப்பந்தத்தின்  இறுதிக்காலத்தில் அவர்களது திருமணத்திற்கான வரதட்சிணையைக் கொடுக்க மொத்தமாக பணம் அளிக்கப்படும் என்ற உறுதிமொழியும் அளிக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு ரூ. 30,000/- கொடுக்கப்படும் என்ற உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

வெளியே அனுப்பினர்

அதன் பிறகுதான் அந்த விபத்து நிகழ்ந்தது.

“ஒரு நாள் திடீரென்று எனக்குப் பழக்கமில்லாத ஒரு இயந்திரத்தில் வேலை செய்ய நான் மாற்றப்பட்டேன்.” இவ்வாறு இயந்திரம் மாற்றப்பட்டதால் எப்படி தன் வாழ்க்கையே தலைகீழாக மாறிப் போனது என்பதை நினைவு கூர்ந்தார் அவர்.

தன் பெற்றோருடன் சேர்ந்து அவர் தொழிற்சாலை நிர்வாகத்தை இழப்பீட்டிற்காக அணுகியபோது, அவர்களை  “வெளியே பிடித்துத் தள்ளினார்கள்” என மகாலட்சுமி குறிப்பிட்டார்.

இலவச மருத்துவ சிகிச்சையை பெறுவதை தொழிலாளர்களுக்கு உறுதி செய்யும் அரசு காப்பீட்டு திட்டத்திற்கு செலுத்துவதற்கென மகாலட்சுமியின் சம்பளத்திலிருந்து பணமும் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. அது போக அவர் காயப்படுவதற்கு முன்பு இரண்டு ஆண்டுகள் செய்த வேலைக்கான ஊதியமும் அவருக்கு அளிக்கப்படவில்லை.

தொழிற்சாலைகள் இந்த காப்பீட்டு திட்ட்த்திற்குச் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தத் தவறுகின்றன; அல்லது அதில் ஒரு பகுதியை மட்டுமே செலுத்துகின்றன. அதாவது நீதிக்கான அவரது போராட்டம் என்பது 40 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இந்திய ஆயத்த ஆடை மற்றும் நெசவுத் தொழிலில் நிலவி வரும் நிலையை சுட்டிக் காட்டுகிறது.

வேலையில்லை; ஊதியமும் இல்லை

ஒருவழியாக மகாலட்சுமி தனது இழப்பீட்டை பெற்ற அதே நேரத்தில் மற்றொரு நிகழ்ச்சி துவங்கியது. ஆயத்த ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் வேன் மாநில தலைநகரான சென்னைக்கு அருகே தலைகீழாகக்  கவிழ்ந்த போது அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் எம். முனியம்மாள் மற்றும் 11 பேர் காயமுற்றனர்.

இந்த விபத்து நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு முனியம்மாள் உலகப் புகழ்பெற்ற ஆடை நிறுவனங்களுக்காக ஆயத்த ஆடைகளை தைக்கின்ற அந்தத் தொழிற்சாலையின் தையல் இயந்திரத்திற்குத் திரும்பி வந்தார்.

அவருக்கு ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை என்பதோடு இன்னமும் தாங்கமுடியாத வலியுடன்தான் அவர் இருந்தார். என்றாலும் அவரோடு வேலை செய்யும் சக தொழிலாளியான ஏ. நித்யாவின் கூற்றுப்படி அவருக்கு வேறு வழியேதும் இல்லை.

 “ அந்த விபத்தில் எங்களில் பன்னிரண்டு பேருக்கு காயமேற்பட்டது. நாங்கல் திரும்பி வேலைக்கு வந்தால்தான் மருத்துவ செலவுகள் எங்களுக்குத் திருப்பி அளிக்கப்படும்; மாத ஊதியம் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. அவருக்கும் பணம் தேவையாகத்தான் இருக்கிறது.” என நித்யா குறிப்பிட்டார்.

இந்த விபத்து நிகழ்ந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இந்தப் பெண்களும் தங்கள் செய்த செலவுகளுக்கான பணம் திரும்பி வழங்கப்பட வேண்டும் என்றும் தங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ளவும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

தனது முழுப்பெயரை தெரிவிக்க விரும்பாத பிரேமா என்பவர் தன் 6 வயது மகனோடு வேலைக்குச் சென்றபோது அதே விபத்தில் அவரது கையில் அடிபட்டது. நவம்பர் மாதம் செய்த வேலைக்கான ஊதியத்தை பெறுவதற்காக மட்டுமே தான் பத்து முறை தொழிற்சாலைக்குச் செல்ல வேண்டியிருந்தது என பிரேமா குறிப்பிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை ஆலை நிர்வாகம் மறுத்தது.

“முறையான மருத்துவ குறிப்புகளை எங்களிடம் காண்பித்தார்களெனில் அவர்களுக்கு பணம் தர நாங்கள் தயாராக இருக்கிறோம்” என தன் பெயரை தெரிவிக்க விரும்பாத தொழிற்சாலையின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

“எங்களுக்கு தணிக்கை எல்லாம் உண்டு. ஒவ்வொரு செலவுக்கும் நாங்கள் அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீண்டும் வேலைக்கு வரவில்லை என்றால் எப்படி அவர்களுக்கு எங்களால் சம்பளம் தர முடியும்?”

போராட்டத்திற்கான தயார் நிலை

இந்தியாவின் ஆயத்த ஆடை மற்றும் நெசவுத் தொழிலில் வேலை செய்து வரும் சுமார் 4 கோடியே 50 லட்சம் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் வேலை தொடர்பாக காயம் ஏற்படும் போதெல்லாம் இவ்வாறு போராட்டத்திற்கான தயாரிப்புகளைச் செய்ய வேண்டியுள்ளது என பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

“இத்தகைய விபத்துகள் குடும்பம் முழுவதற்குமே பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. ஏனென்றால் பெரும்பாலான நேரங்களில் பெண்கள் தான் அந்தக் குடும்பங்களில் சம்பாதிக்கும் ஒரே நபராக இருக்கிறார்” என கார்மெண்ட் அண்ட் ஃபேஷன் ஒர்க்கர்ஸ் யூனியனைச் சேர்ந்த சுஜாதா மோடி தெரிவித்தார்.

 “இந்த விஷயத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் அவர்களது சம்பளத்திலிருந்து மருத்துவக் காப்பீட்டிற்கான தொழிலாளர்களின் பங்கை பிடித்தம் செய்து வந்த போதிலும் அந்த தொழில் நிறுவனம் தனது பங்கை செலுத்தத் தவறியுள்ளது.”

2016ஆம் ஆண்டில் நெசவாலைகளின் சமவெளி என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் 13 விபத்துகளும் எட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக லாப நோக்கற்ற சோஷியல் அவேர்னஸ் அண்ட் வாலண்டரி எஜுகேஷன் அமைப்பினைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் ஜெயக்குமார் ஆவணப்படுத்தியிருந்தார்.

இதில் ஒவ்வொரு விஷயத்திலுமே மருத்துவச் செலவுகள், தங்கள் வேலையையோ அல்லது சம்பளப் பணத்தையோ இழக்காத வகையில் காயமுற்றவர்கள் எவ்வளவு நாட்களுக்கு வேலைக்கு வராமல் இருக்கலாம் என்பது போன்றவை குறித்து நிர்வாகத்தினருடன் மிக நீண்ட விவாதம் நடத்த   வேண்டியிருக்கிறது.

“பெரும்பாலான நேரங்களில் நிர்வாகங்கள் ஒரு சில ஆயிரம் ரூபாய்களை கொடுத்து விட்டு வழக்கை முடித்து விடவே முயற்சி செய்கின்றன” என ஜெயக்குமார் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார். “இத்தகைய விபத்துகளில் உயிரிழப்பவர்கள் விஷயத்திலும் கூட அந்தப் பெண்மணிதான் அவரது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர்  என்ற விஷயத்தைக்கூட  அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: எட் அப்ரைட் மற்றும் லிண்ட்ச்ய கிரிஃபித்ஸ். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->