×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

வெளிநாடுகளில் வீட்டு வேலைக்குச் செல்பவர்களைப் பாதுகாப்பதற்கான திட்டத்தைக் கைவிட பஹ்ரெய்ன், இந்தியா திட்டமிட்டுள்ளன

by ரெஜிமென் குட்டப்பன் | Thomson Reuters Foundation
Wednesday, 22 February 2017 12:56 GMT

In this file photo, a woman is seen passing in front of an old house in the villlage of Karanna, east of the Bahraini capital Manama, October 13, 2010. REUTERS/Hamad I Mohammed

Image Caption and Rights Information

மஸ்கட்,பிப். 22 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – வெளிநாடுகளில் வீட்டு வேலைக்காகச் செல்பவர்களைப் பாதுகாக்கும் வகையில் அவர்களை வேலைக்கு அமர்த்தியவர்கள் சம்பளப் பணத்தைத் தராதபோது அவர்களுக்கு நிதிக்கான உத்தரவாதம் வழங்கும் திட்டத்தைக் கைவிட இந்தியாவும் பஹ்ரெய்னும் திட்டமிட்டு வருகின்றன. இந்த அரபு நாட்டில் பணிபுரிந்து வரும் ஆயிரக்கணக்கான இந்தியப் பெண்கள்  இதனால் அபாயத்தில் ஆழக் கூடும் என செயல்பாட்டாளர்கள் அச்சமுறுகின்றனர்.

மனாமாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவிக்கும் விவரங்களின்படி சுமார் பத்து லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்த சின்னஞ்சிறு வளைகுடா நாட்டில் இந்தியாவிலிருந்து வேலைக்குச் சென்ற மூன்று லட்சம் தொழிலாளர்கள்  பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் ஆண்களில் பெரும்பாலோர் கட்டிடத் தொழிலாளர்களாக, தோட்டக்காரர்களாக, ஊர்தி ஓட்டுநர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் 15,000 பெண்கள் வீட்டு வேலை செய்பவர்களாக உள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்து வீட்டு வேலை செய்பவர்களுக்கு நிதியுதவியை வழங்கும் இத்திட்டத்தை ரத்து செய்யும் முன்வரைவு இப்போது இரு நாடுகளின் கவனத்தில் உள்ளது என பஹ்ரெய்ன் தொழிலாளர் சந்தை ஒழுங்கமைப்பு ஆணையம் இந்த மாதத் துவக்கத்தில் வெளியான ஒரு வலைப்பூ செய்தியில் தெரிவித்திருந்தது. எனினும் இது குறித்து வேறெந்த தகவலையும் அது தெரிவிக்கவில்லை.

“வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் நிதி குறித்த உத்தரவாதத்தை  நீக்குவது என்ற ஆய்வை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளுமானால், வீட்டு வேலை செய்யும் பணியாளர்களின் பாதுகாப்பு மேலும் குறைய வழியேற்படும்” என இந்தியாவில் வெளிநாடுகளில் வேலைக்குச் செல்பவர்கள் குறித்த ஆய்விற்கான மையத்தின் இயக்குநரான ரஃபீக் ராவுத்தர் குறிப்பிட்டார்.

இந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டை நீக்குவது குறித்து ஏன் அவர்கள் யோசித்து வருகிறார்கள் என்பது குறித்து கருத்து தெரிவிக்க பஹ்ரெயின், இந்திய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் எவரும் உடனடியாகக் கிடைக்கவில்லை.

வளைகுடா நாடுகளில் வேலை செய்து வரும் இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிராக தொடர்ந்து தொல்லைகள் இருந்து வருவது பற்றிய செய்திகள் விரிவாக எழுந்து வரும் நிலையில், வீட்டு வேலைக்காக ஆட்களை அமர்த்துபவர்கள் மனாமாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு 2,500 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வங்கி உறுதிமொழிச் சான்றிதழை வழங்க வேண்டும் என்ற ஓர் ஒப்பந்தத்தை இந்தியாவும் பஹ்ரெய்னும் ஏற்படுத்திக் கொண்டுள்ளன.

வேலைக்கு அமர்த்தியவர் ஊதியத்தைத் தரத் தவறினாலோ, அல்லது  இந்த வீட்டு வேலை செய்பவர்கள் உடல் ரீதியாகவோ அல்லது பாலியல் வன்முறை போன்றவற்றாலோ துன்புறுத்தலுக்கு ஆளானால் அவர்களுக்கு இழப்பீடு, நிதியுதவி மற்றும் வீட்டிற்குத் திரும்புவது ஆகியவற்றுக்கான பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்டதாக இந்த ஒப்பந்தம் இருந்தது.

இந்தத் திட்டத்தை மாற்றுவதற்கு முன்பாக தொழிலாளர்களின் பாதுகாப்பற்ற நிலையை மிகுந்த கவனத்துடன் இந்தியா நடந்து கொள்ள வேண்டும் என்று தேசிய வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கான இந்திய இயக்கத்தைச் சேர்ந்த ஜோசஃபைன் வளர்மதி கருத்து தெரிவித்தார்.

“இத்திட்டம் அகற்றப்படுமானால், அது தொழிலாளர்களை மேலும் சிக்கலான சூழ்நிலைக்கு ஆட்படுத்தி விடும்” என்றும் அவர் குறிப்பிட்டார். “வங்கி மூலமான உறுதிமொழி ஏற்பாட்டை அகற்றுவதன் மூலம் அரசு விதிமுறைகளைத் தளர்த்த முயல்கிறது. அதன் மூலம் போதிய நிதிசார்ந்த உறுதிமொழிகள் ஏதுமற்ற சிக்கலானதொரு நிலைக்கு தொழிலாளர்களை ஆட்படுத்துவதாகவே இது இருக்கும்.”

(செய்தியாளர்: - ரெஜிமென் குட்டப்பன். எடிட்டிங்: நிதா பல்லா மற்றும் லிண்ட்ச்ய கிரிஃபித்ஸ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவுசெய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.) 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->