×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

தொழிலாளர்களின் உரிமைகள் குறித்த கவலையினால் மிகப்பெரும் நவநாகரீக ஆடை நிறுவனங்கள் வங்கதேச ஆயத்த ஆடை உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறின

Wednesday, 22 February 2017 17:55 GMT

Relatives of victims killed in the collapse of Rana Plaza hold pictures on the first year anniversary of the accident, as they gather in Savar April 24, 2014. REUTERS/Andrew Biraj

Image Caption and Rights Information

டாக்கா / புது டெல்லி, பிப். 22 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - நெசவுத் தொழிற்சாலைகளில் நல்ல ஊதியம் கோரி வந்த தொழிற்சங்கங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த தங்கள்  கவலையை தெரிவிக்கும் வகையில் உலகின் ஐந்து மிகப்பெரும் நவநாகரீக ஆடை விற்பனை நிறுவனங்கள் வங்க தேசத்தில் நடைபெறவிருந்த மிகப்பெரும் ஆயத்த ஆடைத் தொழில் குறித்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளன என்று பிரச்சாரகர்கள் புதன்கிழமையன்று தெரிவித்தனர்.

எச் அண்ட் எம், இண்டிடெக்ஸ், சி அண்ட் ஏ, நெக்ஸ்ட் மற்றும் டிசிபோ ஆகிய இந்த நிறுவனங்கள் வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து தங்களுக்கான ஆடைகளை வாங்கி வருகின்றன. பிப்ரவரி 25 அன்று வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினா அவர்கள் பங்கேற்கவிருந்த டாக்கா ஆடை உச்சி மாநாட்டில் இந்த நிறுவனங்கள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  ‘இதுவரை கண்டிராத வகையில்’ இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவது என இந்த நிறுவனங்கள் எடுத்துள்ள இந்த முடிவு அரசுக்கும் வங்கதேச  ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள்- ஏற்றுமதியாளர்கள் சங்கத்திற்கும் மிகப்பெரும் அவமானமாக இருக்கும் என த க்ளீன் க்ளாத்ஸ் கேம்பெய்ன் அமைப்பு கருத்து தெரிவித்தது.

“வங்க தேச ஆயத்த ஆடைத் தொழிலில் தொழிலாளர் உரிமைகள் மோசமாகி வருது குறித்து சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கவலையை வலியுறுத்துவதாக இது அமைகிறது” என நெதர்லாந்திலிருந்து செயல்பட்டு வரும் அந்தக் குழு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

டிசம்பர் மாதத்தில் நல்ல ஊதியத்திற்கான கிளர்ச்சியைத் தொடர்ந்து தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்தவர்களும் தொழிற்சங்கத்தலைவர்களும் கைது செய்யப்பட்டதும் இதன் விளைவாக  நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட இது வழி வகுத்ததாக செயல்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். இவை குறித்த தங்கள்  கவலையை தெரிவிக்கும் வகையிலேயே  இந்த உச்சி மாநாட்டிலிருந்து தாங்கள் விலகிக் கொண்டதாக சி அண்ட் ஏ நிறுவனம் உறுதிப்படுத்தியது.

“தொழிலாளர்களின் எதிர்ப்புகள் தொடர்பாக எந்த வடிவத்திலும் வன்முறை, அநீதி ஆகியவற்றை சி அண்ட் ஏ வன்மையாகக் கண்டிக்கிறது” என அது ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

“தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்யவும், கைது செய்யப்பட்ட தொழிலாளர்களின் சட்டபூர்வமான பிரதிநிதிகளின் மீது சிறப்பான கவனம் செலுத்தவும் வங்க தேச அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.”

இந்த உச்சிமாநாட்டிலிருந்து தாங்களும் வெளியேறுவதாக எச் அண்ட் எம் நிறுவனமும் ஓர் அறிக்கையில் தெரிவித்தது. இந்த மாநாட்டில் பங்கெடுத்தால் “சங்கம் அமைப்பதற்கான உரிமை குறித்து எங்களுக்குள்ள நம்பிக்கை பற்றிய தவறான அறிகுறிகளை வெளிப்படுத்தும் என்பதோடு குழப்பத்தையும் ஏற்படுத்தக் கூடும்”. எனவே “வழக்கமான வர்த்தகம் மீண்டும் தொடர வேண்டுமெனில் தற்போதுள்ள நிலைமைக்கு அமைதியான வகையில் தீர்வு காணப்பட வேண்டும்” என்றும் அந்த நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

வங்க தேசத்தைப் பொறுத்தவரையில் ஆயிரக் கணக்கான கோடி டாலர்கள் மதிப்புள்ள வர்த்தகத்தை வழங்கி வருகின்ற  சி அண்ட் ஏ வுடன் கூட இதில் இணைந்துள்ள இதர நிறுவனங்கள் இது பற்றிக் கருத்து கூற உடனடியாகக் கிடைக்கவில்லை.

ஜெர்மன் நாட்டின் சில்லறை வர்த்தகச் சங்கம் மற்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆகியவை வங்க தேச அரசுக்கு கூட்டாக எழுதியிருந்த ஒரு கடிதத்தில் தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டது; தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டது ஆகியவை குறித்த தங்கள் கவலையை தெரிவித்திருந்தன.

கூடுதல் ஊதியம் கோரி டிசம்பர் மாதத்தில் டாக்கா நகரின் அஷுலியா தொழில் பகுதியில் தொழிலாளர்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் தொழிலாளர் உரிமைகள் மோசமாகியுள்ளது என்ற குற்றச்சாட்டுகளை ஆயத்த ஆடைத் தொழிலைச் சேர்ந்த அதிகாரிகளும் வங்க தேச அரசும் மறுத்தன.

இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற இந்த ஐந்து மேற்கத்திய பகுதியைச் சேர்ந்த நிறுவனங்களின் முடிவு துரதிர்ஷ்டவசமானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் வங்க தேசத்தில் ராணா ப்ளாசா ஆயத்த ஆடை தொழிற்சாலை வளாகம் இடிந்து விழுந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததிலிருந்தே தொழிற்சாலை நிலைமைகள், தொழிலாளர்களின் உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நவநாகரீக ஆடைகளைத் தயாரிக்கும் தொழிலின் மீது அதிகரித்துக் கொண்டேதான் வந்துள்ளது.

நீண்ட வேலை நேரம், குறைந்த ஊதியம், போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாத நிலை, தொழிற்சங்கங்களை அமைக்க அனுமதி மறுக்கப்படுவது போன்றவை ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் பொதுவான புகார்களாக இருந்து வரும் நிலையில் தாங்கள் ஆடைகளை வாங்கும் நிறுவனங்களில் வேலை நிலைமைகளை மேம்படுத்தத் தவறியதற்காக இந்த விற்பனை நிறுவனங்களை பிரச்சாரகர்கள் விமர்சித்து வந்தனர்.

“தொடர்ச்சியான அடக்குமுறை”

அஷுலியா கிளர்ச்சிகளுக்குப் பிறகு  “தொடர்ச்சியான அடக்குமுறைகளின் மூலம்” குறைந்தபட்சம் 1,500 தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்; தொழிற்சங்க அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன; தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என செயல்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

எனினும் அத்துமீறல்கள் பற்றிய தொழிலாளர்களின் கருத்தை மறுத்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் துணை அமைச்சரான முகம்மத் முஜிபுல் ஹேக், இந்தக் கிளர்ச்சி சட்டவிரோதமானது என்றும், சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.

“அமைதியான சூழ்நிலையை நிலைநாட்ட சட்டத்தைப் பாதுகாக்கும் அமைப்பு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனாலேயே தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்பட்ட தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் ஹேக் தெரிவித்தார்.

இந்த சச்சரவு பற்றி விவாதிப்பதற்கென அரசு, ஆயத்த ஆடைத்தொழில் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் புதன்கிழமையன்று சந்தித்துப் பேசினர் என்றும் அவர் தெரிவித்தார்.

டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற கிளர்ச்சிகள் குறித்துப் பேசுகையில் வங்க தேச ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவரான முகம்மத் சித்திக் உர் ரஹ்மான் “தொழிலாளர்களில் ஒழுங்கற்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் உருவாக்கிய குழப்பம் மற்றும் சட்டமற்ற நிலை” என்று மறுதலித்தார்.

“அவர்களின் சட்டவிரோதமான நடவடிக்கைகளின் விளைவாக நியாயமான தொழிலாளர்கள் ஒன்பது நாட்களுக்கு வேலை செய்ய முடியாமல் போனது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“இத்தகைய சூழ்நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்? அரசிடமிருந்து உதவியை எதிர்நோக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது. தொழிற்சாலைகளில் உற்பத்திக்கு இடையூறுகளை ஏற்படுத்திய ஒரு சிலரை அவர்கள் கைது செய்தனர்.”

அதிகாரிகள், ஆயத்த ஆடைத் தொழிலகங்கள் ஆகியவை “அதிகமான அளவிற்கு நிலைமையைக் கடுமையாகக் கையாளுவதன்” விளைவாக தொழிலாளர் சங்கத்திலிருந்து ஒரே ஒரு பேச்சாளர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பேசுவதாக  உள்ள நிலையில் எச் அண்ட் எம், இண்டிடெக்ஸ், சி அண்ட் ஏ, நெக்ஸ்ட் மற்றும் ட்சிபோ போன்ற நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ள எத்திகல் ட்ரேடிங் இனிஷியேட்டிவ் (இ டி ஐ ) என்ற கூட்டணியும் இந்த நிகழ்வில் பங்கேற்பதிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

“துரதிர்ஷ்டவசமாக தொழிலாளர்களையும் அவர்களது பிரதிநிதிகளையும் தற்போது மிரட்டி வருவது என்பது நீடித்த வளர்ச்சியை பாதுகாக்க முனையும் முற்போக்கான இத்தொழிலுக்கு நேர் எதிரானதாக இருக்கிறது” என இ டி ஐ யின் நிர்வாக இயக்குநர் பீட்டர் மேக் அலிஸ்டர் குறிப்பிட்டார்.

(செய்தியாளர்கள்: சேராஜுல் குட்டிர் மற்றும் நிதா பல்லா @nitabhalla; எழுதியவர்: நிதா பல்லா; எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவுசெய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.) 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->