×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறப்புச் செய்தி – பாலியல் குற்றங்களுக்குப் பலியானோர் இந்தியாவின் கடுமையான கருக்கலைப்பு சட்டத்தின் காலக்கெடுவை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது

Thursday, 23 February 2017 16:38 GMT

A rape victim participates in a sit-in protest demanding justice or a right to death and hard punishment to the rapists, according to a media release, in New Delhi, India in this 2016 archive photo. REUTERS/Anindito Mukherjee

Image Caption and Rights Information

 மும்பை, பிப். 23 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - பாலியல் தொழில் மையத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு பெண் தனது பூனே நகர பாதுகாப்பகத்திற்குக் கொண்டு வரப்பட்ட பிறகு, தன் 19 வார கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும் என்று அவர் கோரியபோது ஷைனி வர்கீஸ் படியாரா காலத்தோடு போட்டியிட வேண்டியிருந்தது.

அவர்களுக்கு இன்னும் ஒரு வாரம்தான் பாக்கியிருந்தது. அதன்பிறகு இந்தியாவில் கர்ப்பக் கலைப்பிற்குச் சாத்தியமில்லை. ஏனெனில் இந்தியாவில் மிக மிக அரிதான தருணங்களில்தான் 20 வார காலத்திற்குப் பிந்தைய கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

எனவே அந்தப் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகக் கடத்தப்பட்டது குறித்த வழக்கு நடைபெறும் நீதிமன்றத்திற்கு கர்ப்பக் கலைப்பிற்கான அனுமதியைக் கோர விரைந்தார் படியாரா.

“எனது கோரிக்கை விசாரணைக்கு வந்தபோது ஒரு வார காலம் கடந்து விட்டிருந்தது. இந்த விஷயத்தில் நீதிமன்றத்தால் எதையும் செய்ய முடியாது என்ற நிலையில் எனது கோரிக்கையை அனுமதிக்கவும் அது மறுத்துவிட்டது.” என ரெஸ்க்யூ ஃபவுண்டேஷனின் காப்பகத்தின் மேற்பார்வையாளரான படியாரா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

இந்தியாவை நீள அகலமாக பயணம் செய்து மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பூனேவிற்கு கடத்தி வரப்பட்ட  அந்தப் பெண்  தனது கருக்கலைப்பு திட்டத்தைக்   கைவிட்ட பிறகு இந்த மாதம்தான் ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்து, பின்னர் அதை தத்தெடுப்பிற்காக கொடுத்து விட்டார்.

தேவையற்ற கர்ப்பம், அதைத் தொடர்ந்து பிறந்த குழந்தையை தத்தெடுப்பிற்காகக் கொடுத்து விடுவது என்பது ஏற்கனவே பாலியல் ரீதியான குற்றங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அமைந்து விடுகிறது என ஆட்கடத்தல், பாலியல் வல்லுறவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்தனர்.

“தன் கர்ப்பத்தைக் கலைக்க விரும்பியபோது தனக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை என 16 வயதுப் பெண் ஒருவர் கூறினார். ஆனால் அவர் இப்போது தன் குழந்தையையும் தத்தெடுப்பிற்காக கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்” என இது குறித்த ஆலோசகரான லீனா ஜாதவ் குறிப்பிட்டார்.

வரிசையாக வந்த விண்ணப்பங்கள்

20 வாரங்களைக் கடந்த கருவைக் கலைப்பதற்கு அனுமதியை கோரி கடந்த சில மாதங்களில் உச்சநீதிமன்றத்திற்கு வரிசையாக மனுக்கள் வந்து சேர்ந்தன. இதில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மனுவும் அடங்கும்.

இவ்வாறு பெறப்பட்ட ஒவ்வொரு மனுவின் மீதும் கருக்கலைப்பிற்கான அனுமதியை வழங்குவதற்கு முன்பாக நீதிமன்றம் அதை மருத்துவ நிபுணர் குழுவிடம் அனுப்பிவைத்து கருத்துக்களைப் பெற்றது.

கருவுற்ற பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறினால் மட்டுமே 20 வார காலத்திற்குப் பிந்தைய கருவை கலைப்பதற்கான அனுமதியை இந்திய சட்டம் வழங்குகிறது.

பாலியல் வல்லுறவு மற்றும் கட்த்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவோர் பெரும்பாலும் தாங்கள் கர்ப்பமானது குறித்த தகவலை மிகவும் தாமதமாகவே தெரிவிக்கும் நிலையில் வழக்கமான கால அளவான 20 வார காலம் என்பது 24 வாரமாக நீட்டிக்கப்பட வேண்டும் என்று இதுகுறித்த பிரச்சாரகர்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.

மருத்துவர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டே நீதிமன்றங்கள் இதற்கான உத்தரவைப் பிறப்பிக்கும் நிலையில், அத்தகைய முடிவை எடுப்பதற்கான சட்டபூர்வமான உரிமையை மருத்துவர்களுக்கு அளிப்பது இந்தப் பெண்கள் சட்டரீதியான வழியிலேயே இப்பிரச்சனையை அணுக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்தும் என்றும் செயல்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

“பெண்கள் ஏன் தாமதமாக கர்ப்பம் குறித்த தகவலை வெளியிடுகிறார்கள் என்பதற்கு உளவியல் ரீதியான, சமூக ரீதியான காரணங்கள் உள்ளன. இது குறித்த ஒரு முடிவை எடுப்பதற்கு மருத்துவ மனைகள் நிபுணர் குழுக்களை உருவாக்க வேண்டும்” என மருத்துவ அறக்கட்டளையான செண்டர் ஃபார் என்கொயரி இண்ட்டு ஹெல்த் அண்ட் அல்லைய்ட் தீம்ஸ் ( செஹாட்) என்ற அமைப்பைச் சேர்ந்த சங்கீதா ரேகே குறிப்பிட்டார்.

தாமதமே மறுப்பாகும்

அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2015ஆம் ஆண்டில் ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களான 9,127 பேரில் 43 சதவீதம் பேர் 18 வயதிற்குக் குறைவானவர்கள் ஆவர்.

பாலியல் மையங்களில் இருக்கும் பெண்கள் தாங்கள் கர்ப்பமாக உள்ளோம் என்பதை அறிந்திருந்த போதிலும் கருக்கலைப்பு என்பது சட்டவிரோதமானது என்று கருதிக் கொள்கின்றனர். எனவே அவர்கள் இத்தகைய மையங்களிலிருந்து மீட்கப்படும் வரை அது குறித்து எதையும் செய்வதில்லை என்பது போன்ற விஷயங்களை தாம் கையாண்டு வந்துள்ளதாக தெரிவித்த ஆட்கடத்தலுக்கு எதிரான அறக்கட்டளையான ப்ரேரணாவைச் சேர்ந்த ப்ரீதி பட்கார் , இத்தகைய அணுகுமுறைகளே தாமதத்திற்கு வழிவகுக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

பாலியல் வன்கொடுமை குறித்த வழக்குகள் பற்றிய சட்டத்தில்  மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என செஹாட் பிரச்சாரம் செய்து வந்தது. இத்தகைய வன்கொடுமை சம்பவம் நடந்து 72 மணி நேரத்திற்குள் இதனால் பாதிக்கப்பட்டவர் உதவி கோரினால் இப்போது மருத்துவ மனைகள் அவசர கால கருத்தடை மருந்தைச் செலுத்த வேண்டும் என்ற ஏற்பாடு உருவாகியுள்ளது.

எனினும் இவ்வாறு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் 20 வார கால கர்ப்பத்திற்குப் பிறகு ஒரு மருத்துவமனையை அணுகி தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையால் கர்ப்பமுற்றதாகத் தெரிவித்தால், முதல் தகவல் அறிக்கை அல்லது காவல்துறையின் பதிவேட்டின் ஒரு நகலை கொடுக்கவேண்டும் என்று அவரிடம் கோரப்படுகிறது.

“இன்றுவரை கருக்கலைப்பு என்பது ஓர் உரிமையாக அங்கீகரிக்கப்படவில்லை. பாலியல் வன்கொடுமையை நிரூபிக்கும் வகையில் முதல் தகவல் அறிக்கை மருத்துவரிடம் காண்பிக்கப்பட வேண்டியுள்ளது. அத்தகையதொரு சூழலில் குழந்தையை சுமந்து கொண்டிருப்பது என்பது கடுமையான மன உளைச்சலையே ஏற்படுத்துவதாகும்” என இண்டியன் லா சொசைட்டியின் சட்டக்கல்லூரியின் உதவி முதல்வரான ஜெயா சகாடே கூறினார்.

இவ்வாறு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவோரில் பலரும், அதனால் உருவாகக் கூடும் அவப்பெயர், மேலும் துன்புறுத்தலுக்கு ஆளாவோமோ என்ற அச்சம் ஆகியவற்றின் அந்தக் குற்றம் குறித்து பதிவு செய்ய விரும்புவதில்லை. எனினும் கருக்கலைப்பு செய்ய வேண்டுமெனில் அவர்கள் இக்குற்றம் பற்றி பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.

பாலியல் வன்கொடுமையின் விளைவாக கர்ப்பம் ஏற்பட்டிருந்தால் கருக்கலைப்பு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய சட்டங்கள் தெரிவிக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் தொடர்ச்சியான மருத்துவ ரீதியான, சட்டரீதியான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளதால் இத்தகைய நடவடிக்கை மிக அரிதாகவே நடைபெறுகிறது.

“கடந்த மூன்று, நான்கு மாதங்களில் கருக்கலைப்பு செய்ய மறுக்கப்பட்ட வகையில் குறைந்தது நான்கு வழக்குகளை நாங்கள் அறிவோம். இவர்கள் நால்வருமே 20 வார கால கர்ப்பத்தைத் தரித்தவர்களாவர்” என ரேகே குறிப்பிட்டார்.

மீண்டும் பாதிப்பு

ரேகேயின் அமைப்பை அணுகியவர்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பதின்பருவப் பெண் ஒருவரும் ஆவார். இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து மாதவிடாய் தவறிய போதிலும் தான் கர்ப்பமாக இருப்போம் என்று நினைக்கவே இல்லை என அந்தப் பெண் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

தான் பாதிக்கப்பட்ட கொடுமையைப் பற்றி தன் குடும்பத்தாரிடம் தெரிவிக்கவில்லை என்றும் அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற பயமே அதற்குக் காரணம் என்றும், வயிறு பெரிதாகத் துவங்கியதும்தான் கர்ப்பமாக இருப்போம் என்பதைத் தான் உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நான் மிகவும் பயந்து போனேன். எனது அத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எனது கவலைக்கு முடிவு கட்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த வகையில் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் தான் நான் அங்கு போனேன்”என்றார் அவர்.

அவரது கர்ப்பம் 20 வார கால வரம்பை தாண்டியிருந்ததால்  கருக்கலைப்பு செய்து கொள்வது அவருக்கு மறுக்கப்பட்டது. அந்தப் பதின்பருவப் பெண் கடந்த ஜனவரி மாதம் தான் பிரசவித்தார். அவருக்குப் பிறந்த குழந்தையும் ஒரு தத்தெடுப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா; எடிட்டிங்: எட் அப்ரைட் மற்றும் லிண்ட்ச்ய கிரிஃபித்ஸ். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->