×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்தியாவின் நகரங்களில் அதிகரித்துவரும் குழந்தைத் தொழிலாளர் முறை பனிப்பாறையின் முனை மட்டுமே என்கின்றனர் செயல்பாட்டாளர்கள்

Monday, 27 February 2017 14:45 GMT

- அனுராதா நாகராஜ்

சென்னை, பிப். 27 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - நகர்ப்புற இந்தியா அதிகமான அளவில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துகின்றன. இவர்களில் பலரும் 9வயதிற்கும் குறைவானவர்கள் என்பது மட்டுமல்ல; ஊறுகாய் தயாரிப்பதிலிருந்து துவங்கி பட்டாசு தயாரிப்பு வரையிலும் அவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சுற்றுலாத் துறையிலும் புதிய கட்டிட வேலைகள் நடைபெறும் இடங்களிலும் அவர்கள் பணிபுரிகிறார்கள் என ஐ.நா. சபையின் சிறுவர்களுக்கான அமைப்பும் இதற்கான பிரச்சாரகர்களும் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் நிலை பற்றி உலக அமைப்பான யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கை 5 வயதிலிருந்து 9 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்களின் சதவீதம் 2001ஆம் ஆண்டில் 14.6 சதவீதமாக இருந்தது தற்போது 24.8 சதவீதமாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கிறது.

இதே காலக்கட்டத்தில் நகர்ப்புறக் குழந்தைகளின் எண்ணிக்கையில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை  2.1 சதவீதத்திலிருந்து 2.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதிலும் 2001-ல் 5 சதவீதமாக இருந்த குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2011-ல் 3.9 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று குறிப்பிட்ட பிரச்சாரகர்கள் வீடுகளில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் வீச்சை இந்தப் புள்ளிவிவரங்கள் முழுமையாகப் படம்பிடிக்கத் தவறியுள்ள நிலையில் இந்தப் பிரச்சனை பெரிதாகவே இருக்கும் எனவும் குறிப்பிட்டனர்.

பெரும்பாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்களில் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றிய தகவல்கள் மட்டுமே கிடைக்கின்றன என்று லாபநோக்கற்ற தமிழ்நாடு சைல்ட் ரைட்ஸ் ஆப்சர்வேடரி அமைப்பைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஜேசுராஜ் குறிப்பிட்டார்.

“வீடுகளில் வேலைசெய்யும் சிறுமிகள், விவசாயத்தில் ஈடுபடும் குழந்தைகள், தங்கள் பெற்றோருடன் வேலை செய்யும் குழந்தைகள் ஆகிய விவரங்கள் முற்றிலுமாக தள்ளிவிடப்படுகின்றன. நாம் காண்பதெல்லாம் ஆழமான பனிப்பாறையின் முனை மட்டுமே.” என ஜேசுராஜ் தெரிவித்தார்.

இந்த மாதம் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை இணைந்து எழுதியவரான ஹெலன் ஆர். சேகர் குறிப்பிடுகையில் பெரும்பாலான குழந்தைத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களாக, முறையான வீட்டு முகவரி இல்லாதவர்களாக, அரசின் எந்தவொரு பட்டியலிலும் இடம்பெறாதவர்களாகவே இருக்கின்றனர் என்றார்.

“புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்காக வீடுகளுக்குச் செல்லும்போது விவரம் சேகரிப்பவர்களுக்கு இந்தக் குழந்தைகளைப் பற்றிய விவரங்கள் கிடைப்பதில்லை” என்று சேகர் குறிப்பிட்டார்.

விவசாயத்தில் கிடைக்கும் வருவாய் குறைந்து கொண்டே போவது, நிலமில்லாத நிலைமை, வேலைக்கான மிகக் குறைவான வாய்ப்புகள் ஆகியவை கிராமத்தில் உள்ள குடும்பங்களை நகரங்களை நோக்கிப் படையெடுக்கச் செய்கின்றன. அவர்களின் குழந்தைகளையும் பெரும் அபாயத்தில் ஆழ்த்தி விடுகின்றன என பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.

கல்வி குறித்த கொள்கைகள் கல்வியறிவு பெற்ற குழந்தைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்தபோதிலும் குடும்ப வருவாய் போதுமானதாக இல்லாத நிலையில் அவர்களை வேலைக்குச் செல்லும்படியும், குடும்பத்தின் வருவாயை அதிகரிக்க வேண்டிய நிலைக்கும் தள்ளுகின்றன  என்பதையும் இந்தப் புள்ளிவிவரங்கள் பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

லாபநோக்கற்ற சைட்ல் ரைட்ஸ் அண்ட் யு அமைப்பைச் சேர்ந்த கோமள் கனோத்ரா கூறுகையில்  வீடுகளில் இருந்தே வேலை செய்யும்படி வேலைகள் அனுப்பி வைக்கப்படுவதும், உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஊதியம் தரப்படும் முறை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

“மேலும் அதிகமாக வருவாய் ஈட்டுவதற்காக தங்கள் குழந்தைகளையும் இதில் ஈடுபடுத்த இத்தகைய முறை பெற்றோர்களை ஊக்குவிக்கிறது. பள்ளிக் கல்வியிலிருந்து வெளியேறி தங்கள் குடும்பங்களுக்காக வேலை செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்றும் கனோத்ரா குறிப்பிட்டார்.

இவ்வாறு  ‘கண்ணுக்குப் புலப்படாத குழந்தை’ கள் எம்ப்ராய்டரி, காலணிகள், கார்ப்பெட், ஆடை நெசவு, தோல் மற்றும் பூட்டு தயாரிப்பு போன்ற தொழில்களில் தங்கள் பெற்றோருடன் வேலை செய்து குடும்ப வருமானத்தை அதிகரிக்க உதவுகின்றனர் என இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

வி.வி.கிரி தேசிய தொழிலாளர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை குழந்தைத் தொழிலாளர்கள் அதிக அளவில் இருக்கும் 32 இடங்களை கண்டறிந்துள்ளதோடு, ஹைதராபாத், ஜலோர் ஆகிய நகரங்கள் முறையே 67,366 மற்றும் 50,440 குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்டு மேலிடத்தில் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆண்டுதோறும் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை சுமார் 2 சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது என்று குறிப்பிடும் இந்த அறிக்கை, இத்தகைய நிலையில் இந்தியா குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க 200 ஆண்டுகள் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

குழந்தைத் தொழிலாளர்கள் முறையை குறைக்க வேண்டுமானால் சொந்த ஊரை விட்டு வேறு ஊர்களில் இருக்கும் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி வசதியை வழங்கும் வகையில் கல்விக் கொள்கைகளை முறையாகவும் சிறப்பாகவும் அமலாக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை கோரிக்கை எழுப்பியுள்ளது.

 “இந்த அறிக்கையின் மீது நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இதற்கேற்ற ஆலோசனைகளையும் விரைவில் எடுப்போம்” என குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய கமிஷனின் தலைவரான துதி காக்கர் தெரிவித்தார்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: எட் அப்ரைட். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->