×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

ஆதரவு தெரிவித்து எழுதப்படும் கடிதங்கள் இந்தியாவில் ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடையே உறவுகளை வலுப்படுத்துகின்றன

Wednesday, 1 March 2017 10:39 GMT

A labourer works inside a coal yard on the outskirts of the western Indian city of Ahmedabad in this 2010 archive photo. REUTERS/Amit Dave

Image Caption and Rights Information

சென்னை, மார்ச். 1 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - பாலியல் நோக்கத்திற்காக கடத்தி வரப்பட்டு அதிலிருந்து மீண்ட ரெஜினா காட்டூன் கொல்கத்தா நகரிலிருந்து 1000 மைல்களுக்கு அப்பாலிருக்கும் ஒரு நெசவாலையில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்ததும், மன உறுதியோடு இருக்குமாறு அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் கடிதம் எழுதுவது என்று தீர்மானித்தார்.

கடந்த ஆறுமாதங்களாகவே கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளப்பட்ட காட்டூன் மற்றும் அவரைப் போன்றவர்கள் ஒன்றிணைந்து பாலியல் ரீதியான நோக்கங்களுக்காக ஆட்கடத்தல், கட்டாய உழைப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் குறித்து பத்திரிகைகளில் செய்திகளில் வெளியாகின்றபோது இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடிதம் எழுதி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள நெசவாலை ஒன்றில் மேற்பார்வையாளர், இதர ஆண் ஊழியர்கள் ஆகியோரால் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்த ஆறு பெண்கள் பற்றிய செய்தியை தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் வெளியிட்டபோது, இதற்கும் தனது பிரதிபலிப்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற உந்துதல் காட்டூனுக்கு ஏற்பட்டது.

அவரும் அவரைப் போன்றே பாலியல் ரீதியான ஆட்கடத்தலுக்கு ஆட்பட்ட இதர 12 பேரும் மேற்கு வங்கத்திலிருந்து அந்தப் பெண்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர்களைத் துன்புறுத்தி வந்தவர்கள்  தேவையற்ற இடங்களில் தொடுவது; தடவுவது, அதை எதிர்க்கும்போது சம்பளத்தை வெட்டுவது என்பது போன்றவற்றால் துன்பப்படும் அவர்களின் வலியைத் தங்களால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும், தங்கள் வேலை அபாயத்திற்கு உள்ளான போதிலும் இந்தக் கொடுமையை எதிர்த்து நிற்க அவர்கள் முன்வந்தது குறித்து பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

“அந்த நெசவாலையின் மேற்பார்வையாளர், இதர ஆண் ஊழியர்கள் ஆகியோரின் அருவெறுக்கத்தக்க நடத்தையைப் பற்றிக் கேள்விப்பட்டபோது நாங்கள் எப்படி உணர்ந்தோம் என்பதை எங்களால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று அவர்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

“எங்கள் நம்பிக்கையும் மன உறுதியும், பொறுமையும் எப்போதும் உங்களோடே இருக்கும். தயவு செய்து உறுதியோடு இருங்கள்.”

உரிமைகளுக்கான குழுவான வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷன் சமீபத்தில் வெளியிட்டுள்ள உலக அளவிலான அடிமைத்தன அட்டவணையின் படி இந்தியாவில் ஒரு கோடியே 80 லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் அடிமைத்தனத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் பெண்களும் சிறுமிகளும் என்பதோடு இவர்கள் பாலியல் மையங்களுக்கு விற்கப்படுகின்றனர்; அல்லது செங்கற்சூளைகள், ஆயத்த ஆடைத் தொழிலகங்கள் ஆகியவற்றில் சிக்கிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களாக உள்ளனர்.

தமிழக தொழிலாளர்களுடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் தனக்கு ஏற்பட்டது என அவரது 13 வயதில் பாலியல் மையத்திற்கு விற்கப்பட்ட காட்டூன் தெரிவித்தார்.

“அவர்கள் இப்போது அனுபவித்து வரும் துயரத்தை நானும் கடந்து வந்திருக்கிறேன். எனவே இந்தப் போராட்டத்தில் அவர்கள் தனியாக இல்லை என்பதை அவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.”

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுடன் தங்கள் ஒருமைப்பாட்டு உணர்வை வெளிப்படுத்துவது ஆட்கடத்தலுக்கு ஆளானவர்கள் கடந்த காலத்தைக் கடந்து நிகழ்காலத்தை உரிய வகையில் எதிர்கொள்வதற்கு பெரிதும் உதவுவதாக இருக்கும் என உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

லாப நோக்கற்ற அமைப்பான சஞ்ஜோக் உடன் செயல்பட்டு வரும் உளவியல் நிபுணரான உமா சாட்டர்ஜி கூறுகையில் இவ்வாறு பாதிப்பிற்கு ஆளானவர்கள் இடையே பொதுவாக எழும் கேள்வியான “எனக்கு மட்டும் ஏன் இப்படி?” என்பதை சமாளிப்பதற்கு இத்தகைய கடிதங்களை எழுதுவது பெரிதும் உதவும் என்றார்.

“இத்தகைய கடிதங்கள் இதுபோன்ற சம்பவங்கள் அவர்களுக்கு மட்டுமே நிகழ்வதில்லை என்பதை அவர்கள் உணரச் செய்வதோடு ஒருவரோடு ஒருவர் இணைத்துக் கொள்ளவும், நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கான அவர்களின் கோரிக்கைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது” என்று குறிப்பிட்ட சாட்டர்ஜி இவர்களின் வங்காளி மொழி கடிதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உதவியவரும் ஆவார்.

”அந்த ஆலையில் இருந்த பெண்கள் பெருமளவிற்குத் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்தபோது நான் மிகவும் கோபமுற்றேன்.” என காட்டூன் குறிப்பிட்டார்.

 “நான்கு வருடங்கள் நான் அடைத்து வைக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்டு, அடி-உதைகளுக்கு ஆளாகி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறுதியில் அந்த நரகத்திலிருந்து விடுவிக்கப்பட்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  “ஆனால் இந்தப் பெண்கள் இன்னமும் அந்த ஆலையிலேயே சிக்கியுள்ளனர். அவர்கள் மீதான கொடுஞ்செயல்கள் இன்னமும் தொடருகின்றன.”

நெசவாலையில் துன்புறுத்தலுக்கு ஆளானதாகத் தெரிவித்த ஆறு பெண்களில் ஐந்து பேர் இன்னமும் அந்த ஆலையில்தான் வேலை செய்து வருகின்றனர். தங்களோடு முன்பு வேலை செய்து வந்தவர் மூலமாக அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதாக தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர்கள் தெரிவித்தபோதிலும் அது பற்றிய தங்கள் கருத்தை எதையும் தெரிவிக்க அவர்கள் மறுத்து விட்டனர்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: எட் அப்ரைட் மற்றும் கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->