×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

குழந்தைத் திருமணத்தை அனுமதிக்கும் வங்க தேச சட்டம் பாலியல் வன்கொடுமையை சட்டபூர்வமாக்கிவிடும் என அறக்கட்டளையினர் கருத்து

by ரூமா பால் மற்றும் நீதா பல்லா | Thomson Reuters Foundation
Wednesday, 1 March 2017 17:23 GMT

A homeless child sleeps on a footpath on a foggy winter day in Dhaka in this 2011 archive photo. REUTERS/Andrew Biraj

Image Caption and Rights Information

- ரூமா பால் மற்றும் நீதா பல்லா

டாக்கா /புது டெல்லி, மார்ச். 1 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தங்களை பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்களையே திருமணம் செய்து கொள்ள சிறுவயது பெண்களுக்கு அனுமதி அளிக்கின்ற பங்களா தேஷின் புதிய சட்டம் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு மேலும் அதிகமான சிறுமிகள் உட்படும் அபாயத்தில் தள்ளியுள்ளது என புதன்கிழமையன்று குழந்தைகளின் உரிமைகளுக்கான குழுக்கள் தெரிவித்தன.

18 வயதிற்குக் கீழுள்ள பெண்களும் 21 வயதிற்குக் கீழுள்ள ஆண்களும் திருமணம் செய்து கொள்வதைத் தடை செய்யும் சட்டங்கள் இருந்தபோதிலும் உலகத்திலேயே அதிக விகிதத்தில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் நாடாக வறுமையில் ஆழ்ந்திருக்கும் இந்தத் தெற்காசிய நாடாக இது உள்ளது.  ‘நற்பெயரை’ காப்பாற்றுவது என்ற பெயரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்கள் திருமணம் செய்து கொள்வதை சட்டபூர்வமானதாக மாற்றுவது என்பது அவர்களின் உடலையோ அல்லது உரிமைகளையோ பாதுகாப்பதாக அமையாது என்று உரிமைகளுக்காகக் குரல் எழுப்புவோர் தெரிவித்தனர்.

“இந்தப் புதிய சட்டமானது விரிவான அளவில் தவறாக நடந்து கொள்வதற்கு வழி வகுக்கும் என்பதோடு, பாலியல் வன்கொடுமைக்கு சட்டபூர்வமானதொரு அந்தஸ்தை வழங்குவதாகவும் இருக்கும். மேலும் உலகத்திலேயே அதிகமான குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்ற நாடுகளில் ஒன்றாக இருக்கும் ஒரு நாட்டில் தங்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்களையே திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கள் பெற்றோர்களாலேயே சிறுமிகள் கட்டாயப்படுத்தப்படவும் இச்சட்டம் அனுமதிக்கிறது.” என உலக அளவில் 650 க்கும் மேற்பட்ட தொண்டு அமைப்புகள் கொண்ட ஒரு கூட்டணி அமைப்பின் ஓர் அங்கமான கேர்ள்ஸ் நாட் ப்ரைட்ஸ் பங்களாதேஷ் என்ற அமைப்பு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

பெருவாரியான நன்மை

பெற்றோர் மற்றும் நீதிமன்றத்தின் அனுமதியுடன் “சிறப்பான தருணங்களில்” “பதின்பருவத்தின் பொதுவான நன்மைக்காக” 18 வயதிற்குக் கீழுள்ள பெண்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் வகையில் வங்க தேசத்தின் திருமணச் சட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருத்தம் செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகே இந்த அறிக்கையை தொண்டு அமைப்புகள் வெளியிட்டன.

இந்தச் சட்ட ஏற்பாடு “சிறப்பான தருணம்” என்பது குறித்தோ அல்லது “பொதுவான நன்மை” என்பது குறித்தோ உரிய விளக்கங்களைத் தெரிவிப்பதாக இருக்கவில்லை என்றும், பிரதிவாதங்களுக்கு வழி வகுப்பதாக அல்லது பாலியல் வன்கொடுமைக்கு சட்டபூர்வமானதொரு அந்தஸ்தை வழங்குவதாகவே உள்ளது என்று குழந்தைகளின் உரிமைகளுக்கான குழுக்கள் தெரிவித்தன.

ஒப்புதல் குறித்த நிபந்தனையும் கூட குழந்தைகள் திருமணத்திற்குக் கட்டாயப்படுத்துவதைத் தடுத்துவிடாது என்றும் இந்தக் கூட்டணியின் அறிக்கை தெரிவித்தது.

“இத்தகைய பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமாகிய பெண்களின் ‘கௌரவத்தை’ பாதுகாக்க வேண்டிய அவசியத்தையே இந்தச் சட்ட ஏற்பாட்டிற்கான காரணமாக வங்கதேச அரசு சுட்டிக் காட்டியுள்ளது. எனினும் பதின்பருவப் பெண்களைப் பாதுகாப்பதற்குத் திருமணம் மட்டுமே ஒரு சிறந்த வழியாக இருந்துவிட முடியாது என்பதோடு மேலும் அதிகமான ஊறுகளுக்கு அவர்களை ஆளாக்குவதாகவும் கூட அது மாறக்கூடும்”

இந்தச் சட்ட ஏற்பாடு மேலும் அதிகமான பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு வழிவகுக்கும் என்பதை வங்கதேச அரசின் மூத்த அதிகாரி ஒருவர் மறுத்துக் கூறுகையில், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டில் வாழ்க்கையின் சமூகப் பின்னணியை இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளனர் என்றும் அத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

 “நமது சமூகத்தின் யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டே சிறப்பு ஏற்பாடு சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது” என தன் பெயரைத் தெரிவிக்க விரும்பாத பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 “நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் யாராலும் திருமணம் செய்து கொள்ள முடியாது.”

முதல் பத்து இடங்களில்

திருமணம் குறித்த சட்டத்தை அமல்படுத்துவதை வலுப்படுத்தவும், குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை மேலும் கடுமையாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும் குழந்தைத் திருமணங்கள் அதிகமான அளவில் நடைபெறும் முதல் பத்து இடங்களில் நைஜர், கினியா, தெற்கு சூடான், சாட், பர்கினா ஃபாஸோ ஆகிய நாடுகளுடன் வங்க தேசமும் இடம் பெற்றுள்ளது.

கேர்ள்ஸ் நாட் ப்ரைட்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி வங்க தேசத்தில் 52 சதவீத சிறுமிகள் 18 வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர். இது தெற்காசியாவிலேயே அதிகமானதாகும். இது இந்தியாவில் 47 சதவீதமாகவும், நேபாளத்தில் 37 சதவீதமாகவும், ஆஃப்கானிஸ்தானில் 33 சதவீதமாகவும் உள்ளது.

குழந்தைப் பருவ மணப்பெண்களாக இருப்பதன் விளைவாக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை, கட்டாய கர்ப்பம் போன்ற அபாயங்களை மேலும் அதிக அளவில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான நேரங்களில் இந்தச் சிறுமிகளுக்கு பள்ளிக்குச் செல்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவதோடு, சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, ஒரு மனைவியாக, தாயாக வாழ்நாள் முழுவதும் பொருளாதார ரீதியாக மற்றவர்களைச் சார்ந்தே இருக்குமாறும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

பெரும்பாலும் சமூக ரீதியான ஒப்புதல், அரசின் செயலற்ற தன்மை ஆகியவற்றின் விளைவாகவே இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது என செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

 இவ்வாறு வங்க தேசத்தின் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின் ஒட்டுமொத்த விளைவு என்பது “திருமணம் செய்து கொள்ள வயது வரம்பு ஏதுமில்லை” என்பதாகவே இருக்கும் என கேர்ள்ஸ் நாட் ப்ரைட்ஸ் அமைப்பு குறிப்பிட்டது.

(செய்தியாளர்கள்: ரூமா பால் (டாக்கா), நிதா பல்லா (புதுடெல்லி); எழுதியவர்: நிதா பல்லா @nitabhalla; எடிட்டிங்: லிண்ட்ச்ய கிரிஃபித்ஸ்.. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவுசெய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.) 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->