×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

தெலுங்கானாவில் நாய்கள், தரகர்களின் பாதுகாப்பு வளையத்தில் பாலியல் தொழிலுக்காகக் கடத்தி வரப்பட்ட பெண்கள் – காவல்துறை

Monday, 6 March 2017 12:26 GMT

In this 2012 archive photo a 16-year-old girl with her hand decorated with henna stands inside a protection home on the outskirts of New Delhi, India. REUTERS/Mansi Thapliyal

Image Caption and Rights Information

  சென்னை, மார்ச் 6 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தெலுங்கானாவில் நாய்கள், தரகர்களின் பாதுகாப்பு வளையத்தில் இருந்த பாலியல் மையத்தின் மீது காவல் துறை சோதனை நடத்தி  பாலியல் நோக்கத்திற்காக 13 வயதேயான சிறுமி உட்பட சிறுமிகளை கடத்தி வந்ததற்காக 35 பேரை கைது செய்துள்ளதாக திங்கட்கிழமையன்று இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருபவர்கள் தெரிவித்தனர்.

    மேடக் மாவட்டத்தில் மார்ச் 1 -2 தேதியன்று இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனைகளில் முப்பது பெண்களும் சிறுமிகளும் மீட்கப்பட்டனர். பாலியல் நோக்கங்களுக்காகக் கடத்தலில்  ஈடுபட்டு வரும் கும்பல்களை வளைத்துப் பிடிப்பதில் இந்தச் சம்பவம் மிக முக்கியமானதொரு சாதனை என காவல் துறை குறிப்பிட்டது.

“இந்தப் பாலியல் மையங்கள், க்ரேட் டேன்ஸ், டாபர் மான் போன்ற வெளிநாட்டு நாய்கள் உள்ளிட்ட பெரிய நாய்களால் காவல் காக்கப்பட்டு வந்ததால் அவற்றை அணுகுவது மிகவும் கடினமானதொரு செயலாக இருந்தது” என தெலுங்கானா மாநில குற்ற விசாரணைத் துறையைச் சேர்ந்த சவுமியா மிஷ்ரா குறிப்பிட்டார்.

 “இந்தப் பாலியல் மையங்களை நடத்தி வந்தவர்கள் காவல் துறையின் சோதனை பற்றிய தகவல்களை முன்கூட்டியே தெரிவிப்பதற்காக இந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் சுற்றிவருவதற்கு சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியிருந்த நிலையில் இந்தச் சோதனை நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கு எங்களுக்கு இரண்டு மாத காலம் பிடித்தது.”

  நாட்டில் செயல்பட்டு வரும் அரசு முறை சாரா அமைப்புகளின் கருத்துப்படி இந்தியாவில் சுமார் 2 கோடி பாலியல் தொழிலாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் 1 கோடியே 60 லட்சம் பெண்களும் சிறுமிகளும் பாலியல் தொழிலுக்காகக்   கடத்தி வரப்பட்டவர்களாகவே உள்ளனர்.

  2015- 2016 ஆண்டுகளுக்கு இடையில் தெலுங்கானாவில் பாலியல் தொழிலுக்காக ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்ததற்காக 500 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கிட்டத்தட்ட 600 ஆட்கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர் என மிஷ்ரா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

  மோசமான பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட குடும்பங்கள், பிளவுண்ட குடும்பங்கள் ஆகியவற்றிலிருந்து ஏராளமான இளம் சிறுமிகள் இத்தொழிலில் சிக்குண்டு கிடக்கின்றனர் என்ற கவலையை கடந்த வாரம் நடைபெற்ற சோதனைகள் எழுப்புவதாக பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.

  சட்டவிரோதமான இந்தப் பாலியல் தொழில் மையங்கள் ஜாப்தி ஷிவ்னூர் கிராமத்தில் இருக்கும் 35 வீடுகளில் இருந்து செயல்பட்டு வந்தன. அதன் உரிமையாளர்கள் அதே வீட்டிலேயே தங்கியிருந்தனர். இத்தொழிலுக்காகக் கடத்தப்பட்ட பெண்கள் குறுகலான   அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்ததோடு ஒரு நாளைக்கு பத்து வாடிக்கையாளர்கள் வரையில் திருப்திப்படுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டு வந்தனர்.

பத்து நிமிடங்களுக்கு ரூ. 500/- என வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்து வந்த இந்த ஆட்கடத்தல்காரர்கள், இதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பணம் எதையும் கொடுக்கவில்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

 “இந்தச் சோதனைகளின்போது அரிசி மூட்டைகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பயன்படுத்தப்படாத ஆணுறைகளை நாங்கள் கண்டுபிடித்ததோடு, ரூ. 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பணத்தையும் கைப்பற்றினோம்” என மிஷ்ரா தெரிவித்தார்.

“இந்தப் பாலியல் தொழில்மையங்களை நாங்கள் சோதனையிடாமல் இருந்திருந்தால், நாங்கள் கண்டெடுத்த பெண்களில் மிகவும் மோசமான உடல்நிலையுடன் இருந்த ஒருவர் இறந்தே போயிருப்பார்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகளின் சூத்திரதாரி என்று  கருதப்படும் ஒரு பெண் உட்பட, இதில் சந்தேகத்திற்குரிய அனைவரின் மீதும் ஆட்கடத்தலுக்கு எதிரான  சட்டங்களின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->