×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

தத்தெடுப்பதற்காகக் குழந்தைகளை விற்றதாகக் கூறி ஆறு பேர் மீது இந்திய காவல்துறை குற்றம் சுமத்தியது

Tuesday, 7 March 2017 15:22 GMT

In this 2014 archive photo a woman carries her baby as she walks through a wheat field in Amroha district in the northern Indian state of Uttar Pradesh. REUTERS/Adnan Abidi

Image Caption and Rights Information

மும்பை,மார்ச். 7 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – வணிகத் தலைநகரமான மும்பையில் ஆட்கடத்தல் மோசடி ஒன்றை உடைத்தெறிந்த பிறகு இந்திய காவல் துறை  குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தைகளை விற்றதாக ஆறு பேர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

     எனினும் கடந்த டிசம்பர் மாதத்தில் ஆட்கடத்தல் கும்பலைக் கண்டுபிடித்த பிறகு மீட்டெடுத்த ஐந்து குழந்தைகளில் மூன்று குழந்தைகளின் உண்மையான பெற்றோர்களை தாங்கள் இன்னமும் தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குழந்தையில்லாத தம்பதிகள் இந்தக் குழந்தைகளுக்காக ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 4 லட்சம் வரை தந்திருக்கின்றனர். இந்தியாவில் குழந்தைகளைத் தத்தெடுக்க நீண்ட காலம் காத்திருக்கும் நிலையையே இந்த விலை பிரதிபலிப்பதாகவும் நிபுணர்கள் கூறினர்.

“இந்தக் குழந்தைகளின் உண்மையான பெற்றோரைக் கண்டறிந்த பிறகே இவை கடத்தப்பட்டனவா அல்லது விருப்பத்துடன் கொடுக்கப்பட்டனவா என்பதை எங்களால் தெரிந்து கொள்ள முடியும்” என மும்பை நகரத்தின் துணைக் காவல் ஆணையரான ஷாஜி உமாப் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“இந்தக் குழந்தைகளின் பெற்றோரை காவல் துறையால் இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. எனவே இப்போது இந்தக் குழந்தைகளை என்ன செய்வது என்று நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.”

   ஆட்கடத்தல், குழந்தைகளை வலுக்கட்டாயமாகக் கடத்திச் செல்வது ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள இந்தக் கடத்தல் கும்பலின்  உறுப்பினர்கள் – இந்தியாவில் சமூக ரீதியான புறக்கணிப்பிற்கு ஆளாகி துன்புற்று வருகின்ற - தனியாக இருக்கும் தாய்மார்களை நம்ப வைத்து தங்களிடம் குழந்தைகளைக் கொடுத்து விடுமாறு செய்கின்றனர் என காவல் துறையினர் கூறுகின்றனர்.

இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ள 27 வயதுள்ள நபரும், 20 லிருந்து 50 வயது வரையிலான ஐந்து பெண்களும் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் மீட்கப்பட்ட ஐந்து குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தை மட்டுமே அதன் உண்மையான பெற்றோர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்றொரு குழந்தையை அதனை விலைக்கு வாங்கியதாகக்  குற்றம் சாட்டப்பட்ட  குடும்பத்திடமே மீண்டும் தந்துவிடுமாறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனுமதித்தனர்.

ஒரு வயதிற்கும் குறைவான மற்ற மூன்று குழந்தைகளுமே தத்தெடுப்பு மையம் ஒன்றில் வைத்து கவனம் செலுத்தப்படுகின்றன. என்றாலும் அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை அல்லது அவர்களை இனிமேல் கண்டுபிடிக்க முடியாது என்று நிலைவரும் வரை தத்தெடுப்பதற்காக அந்தக் குழந்தைகளைக் கொடுக்க முடியாது.

நிச்சயமற்ற இந்தச் செயல்பாடு குறித்த தங்கள் கவலையை வெளிப்படுத்திய குழந்தைகள் நல அதிகாரிகள் இந்தக் குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ள முன்வைப்பதற்காக நீதிமன்றத்தின் ஒப்புதலை தாங்கள் கோர விருப்பதாக செவ்வாய் அன்று தெரிவித்தனர்.

“இத்தகையதொரு நிலைமையை நாங்கள் இப்போதுதான் முதன்முறையாகச் சந்திக்கிறோம். இதை எப்படி எதிர்கொள்வது என்று எங்களுக்குப் புரியவில்லை” என மும்பை நகரின் குழந்தை நலக் குழுவிற்குத் தலைமை தாங்கும் சாரதா தல்ரேஜா தெரிவித்தார்.

குழந்தைகளைக் கடத்திச் செல்வது இந்தியாவில் மிகவும் பரவலாக, முறைப்படுத்தப்பட்டதொரு குற்றச்செயலாக உருமாறி வருகிறது என நிபுணர்கள் அச்சப்படுகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் சர்வதேச அளவில் செயல்பட்டு வந்த குழந்தை கடத்தல் செயல்பாடு என சந்தேகிக்கப்படும் ஒரு நடவடிக்கையை காவல்துறை கண்டுபிடித்த சில வாரங்களுக்குப் பிறகே மும்பையில் இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியாவின் கிழக்கு மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் நடந்த சோதனைகளில் 13 குழந்தைகள் மீட்கப்பட்டதோடு, புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகளின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன.

அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆட்கடத்தல்  குற்றங்கள் 25 சதவீதம் அதிகரித்து 6,877 ஆக உள்ளது. அரசின் புள்ளி விவரங்களின்படி, இவற்றில் 40 சதவீதத்திற்கும்  மேற்பட்ட வழக்குகள் குழந்தைகளை விலைக்கு வாங்குவது, விற்பனை செய்வது, கொத்தடிமைகளாகச் சுரண்டப்படுவது ஆகியவை குறித்தவை ஆகும்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா; எடிட்டிங்: எம்மா பாதா. செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->