×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

குழந்தைக் கடத்தலில் அரசியல்வாதியின் தொடர்புகள் குறித்த விசாரணையை விரிவுபடுத்துகிறது காவல்துறை

by சுப்ரதா நாக்சௌத்ரி | Thomson Reuters Foundation
Tuesday, 7 March 2017 15:44 GMT

Children play cricket at a pedestrian underpass in Mumbai, India June 2, 2016. Reuters/Shailesh Andrade

Image Caption and Rights Information

கொல்கத்தா, மார்ச் 7 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தத்தெடுப்பதற்காக குழந்தைகளைக் கடத்தி வந்து விற்பதில் அரசியல்வாதிகளின் பங்கேற்பு குறித்து விசாரிக்கும் மேற்கு வங்களா மாநில காவல்துறை பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு மூத்த உறுப்பினர்கள் பற்றியும் விசாரித்து வருவதன் மூலம் இந்த விசாரணை செவ்வாயன்று மேலும் விரிவடைந்தது.

பிப்ரவரி 28ஆம் தேதியன்று பிஜேபி கட்சி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாரதிய ஜனதாக் கட்சி(பிஜேபி)யின் இரண்டு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரிக்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக மேற்கு வங்க மாநில காவல்துறை தெரிவித்தது.

அரசின் நிதியுதவி பெற்றுச் செயல்படும் அனாதை இல்லங்கள், காப்பகங்களிலிருந்து குறைந்தது 17 குழந்தைகளைக் கடத்தி பின்னர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள தம்பதியருக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டுகளின் பேரில் பிஜேபி கட்சியின் பெண்கள் பிரிவின் ஒரு தலைவரான ஜுஹி சவுதுரி கைது செய்யப்பட்டார்.

குழந்தைகளுக்கான இல்லங்கள், காப்பகங்கள் ஆகியவற்றை நடத்துவதற்குத் தேவைப்படும் அனுமதி மற்றும் நிதியுதவி ஆகியவற்றைப் பெறுவதற்காக மூத்த அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோரை சவுதுரி சந்தித்தார் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை சவுதுரி மறுத்தார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் ஆறு பேரில் ஓர் அனாதை இல்ல உரிமையாளர், குழந்தைப் பாதுகாப்பிற்கான இரண்டு அரசு அதிகாரிகள், மாநில அரசால் குழந்தைகள் நலனுக்கான கமிட்டிக்கு நியமிக்கப்பட்ட ஓர் உறுப்பினர் மற்றும் ஒரு மருத்துவர் ஆகியோரும்அடங்குவர் என காவல் துறை தெரிவித்தது.

 “குழந்தைக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் செல்வாக்குள்ள மனிதர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். இதற்குத் தேவையான ஆதரவு ஆதாரங்களை நாங்கள் கண்டெடுத்து வருகிறோம்” என மேற்கு வங்கத்தின் குற்றப் புலன் விசாரணைத் துறையைச் சேர்ந்த கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் ராஜேஷ் குமார் கூறினார்.

இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாகத் தூண்டலின் பேரில் எடுக்கப்பட்டது என சவுதுரி குறிப்பிட்டார். பிஜேபி, சவுதுரியை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்துள்ளது.

குற்றப் புலன்விசாரணைத் துறை சுயேச்சையானதொரு அமைப்பு என்பதோடு அது ஆதாரங்களின் அடிப்படையிலேயே செயல்படுவதே தவிர அரசியலின் அடிப்படையில் அல்ல எனவும் குமார் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட குற்றங்கள் குறித்த புள்ளி விவரங்கள் 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்கடத்தல் சம்பவங்களில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் விலைக்கு வாங்கப்பட்டு, விற்கப்பட்டு, நவீன காலத்திய அடிமைகளாகச் சுரண்டப்படுகின்ற குழந்தைகள் தொடர்பானவை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

அறக்கட்டளைகளால் நடத்தப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள், தனியார் மருத்துவ மனைகள் ஆகியவற்றின் மூலம் புதிதாகப் பிறந்த குழந்தைகளும் தத்தெடுப்பிற்காகக் கடத்தப்படுவது பற்றிய தகவல்கள் சமீப காலமாக வெளியாகி வருகின்றன.

இத்தகைய ஆட்கடத்தல் மோசடியை உடைத்தெறிந்து இந்தியா முழுவதும் குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தைகளை விற்றதாக செவ்வாயன்று மும்பை காவல்துறை ஆறு பேர் மீது குற்றம் சாட்டியுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனாதை இல்லங்கள், காப்பகங்கள் ஆகியவை பற்றிய வலைப்பின்னலான தொடர்புகளை சவுதுரி வைத்திருந்ததாகவும் சட்டவிரோதமாக தத்துக் கொடுப்பதற்கு ஏற்ற  குழந்தைகளை அவர்கள் அடையாளம் செய்து வைத்திருந்தனர் என்றும் காவல்துறை குற்றம் சாட்டியது.

இந்த இல்லங்கள் குழந்தைகளை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சம் வரையில் விற்பதற்கென போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள், போலி முத்திரைகள், பிறப்புச் சான்றிதழ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வந்தன என்றும் காவல்துறை தெரிவித்தது.

கடந்த ஆறு மாத காலத்தில் ஒரு வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் தொடர்பான இவ்வாறு கடத்தப்பட்ட 17 சம்பவங்களை தாங்கள் கண்டறிந்ததாகவும் இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.

(செய்தியாளர்: சுப்ரதா நாக்சௌத்ரி; எழுதியவர்: நிதா பல்லா @nitabhalla. எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவுசெய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->