×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

பேட்டி – சிறுவயதிலிருந்தே வீட்டு வேலைக்காரியாக இருந்து தன்னைப் போன்ற நூற்றுக்கணக்கானவர்களை காப்பாற்றிய பெண்மணிக்கு பாராட்டு

by நீதா பல்லா | @nitabhalla | Thomson Reuters Foundation
Wednesday, 8 March 2017 17:55 GMT

- நீதா பல்லா

புது டெல்லி, மார்ச் 8 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – சிறுவயதிலேயே கடத்திச் செல்லப்பட்டு, வீட்டுவேலைக்காக அடிமைப்படுத்தி வீடுதிரும்பியவர் தன்னைப் போன்ற நூற்றுக்கணக்கான இதர குழந்தைகளை வேலைக்காக கட்டாயமாக அமர்த்தப்படுவதிலிருந்தும் அல்லது திருமணம் செய்து கொடுக்கப்படுவதிலிருந்தும் தடுத்து நிறுத்தியதற்காக 21 வயது மேற்கு வங்க பெண் ஒருவருக்கு புதன்கிழமையன்று குடியரசுத் தலைவரால் “மகளிர் சக்தி”க்கான விருது வழங்கப்பட்டது.

தற்போதுள்ள நிலையை எதிர்த்து நின்று சுயாதிபத்தியத்தை நோக்கிய நீண்ட காலத்திற்கு நிலைக்கத்தக்க பங்களிப்பை வழங்கிய பெண்களுக்கான இந்திய அரசின் மதிப்பிற்குரிய விருதான ‘மகளிர் சக்தி’ விருதை இந்த ஆண்டு பெற்ற 33 பெண்களில் வயதில் மிகவும் இளையவராக இருந்தவர் அனோயாரா காட்டூன் ஆவார்.

 “அரசிடமிருந்து கிடைத்துள்ள இந்த ஆதரவு  சுரண்டலுக்கு ஆட்படுவதிலிருந்து குழந்தைகளைத் தடுத்து நிறுத்துவது என்ற எனது வேலையை தொடர்ந்து மேற்கொள்வது என்ற எனது உறுதியை மேலும் வலுப்படுத்துகிறது” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் காட்டூன் தெரிவித்தார்.

மேற்கு வங்காளத்திலிருந்து 12 வயது சிறுமியாக இருந்த போது காட்டூன் புதுதில்லிக்குக் கடத்தப்பட்டு ஒரு நடுத்தரக் குடும்பத்தில் வீட்டு வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு அங்கிருந்து தப்பித்த அவர் மீண்டும் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் இருக்கும் தனது கிராமத்திற்குத் திரும்பி சேவ் த சில்ரன் என்ற குழந்தைகளின் உரிமைகளுக்கான அமைப்பின் முகவராக அங்கு செயல்பட்டு வருகிறார்.

சுற்றியுள்ள 80 கிராமங்களில் குழந்தைகளின் உரிமைகளுக்கான வலைப்பின்னலை உருவாக்கிய காட்டூன் அங்குள்ள குழந்தைகள் தங்களது உரிமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவியதோடு, ஆட்கடத்தல் சம்பவங்கள், குழந்தைத் திருமணம், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர் முறை ஆகியவற்றைத் தடுத்து நிறுத்துவதற்காகக்  கூட்டாகத் தலையிட்டு வந்துள்ளார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தச் சிறுவர்களுக்கான குழுக்கள் 50 குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்தியதோடு, 80 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்து, 200 சிறுவர்களை ஆட்கடத்தலில் இருந்து தடுத்து நிறுத்தி, சுமார் 400 சிறுவர்களை ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்கவும் ஏற்பாடு செய்தன.

“எங்களது கிராமங்களில் ஆட்கடத்தல் அல்லது குழந்தைத் திருமணங்கள் குறித்த அறிகுறிகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். தங்கள் குழந்தைகளை வேலைக்காக அனுப்புவதற்கோ அல்லது குழந்தைத் திருமணங்களுக்காக ஏற்பாடுகளை செய்வதற்காக குடும்பங்களை ஏமாற்ற முயலும் முன்பின் அறியாதவர்களையும் நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம்.” என காட்டூன் குறிப்பிட்டார்.

”இத்தகைய ஆட்கடத்தல்காரர்கள் குழந்தைகளை எங்கே கூட்டிக் கொண்டு செல்கிறார்கள் என்பது பற்றியோ, எந்த வகையிலான வேலையைச் செய்யுமாறு அவர்களை நிர்ப்பந்தப்படுகிறார்கள் என்பது பற்றியோ பெரும்பாலான பெற்றோர்கள் அறியாதவர்களாகவே இருக்கின்றனர். குழந்தைத் திருமணங்கள் நல்லதல்ல என்று ஏன் குறிப்பிடுகிறோம் என்பதையும் பலரும் அறியாதவர்களாகவே உள்ளனர்.”

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி இந்தியாவில் கிட்டத்தட்ட 60 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். எனினும் இது மிகக் குறைவான  கணிப்பு என்றே செயல்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயத்திலும், கால் பகுதிக்கும் மேற்பட்டவர்கள் துணியில் கைவேலைப்பாடுகளைச் செய்வது, தரைவிரிப்புகளை நெய்வது அல்லது தீக்குச்சிகளை செய்வது போன்ற உற்பத்தித் துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். உணவு விடுதிகள், கடைகள், தங்கும் விடுதிகள் மற்றும் வீட்டு வேலை செய்பவர்களாகவும் குழந்தைகள் வேலை செய்து வருகின்றனர்.

பெரும்பாலும் கிராமப்புற ஏழைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களான இந்தக் குழந்தைகள் கடத்தல்  கும்பல்களால்  அவர்களது குடும்பங்களிடம் நல்ல வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதம் அளித்து ஏமாற்றி விட்டு பின்னர் நகரங்களுக்கு கூட்டிச் செல்லப்பட்டு அடிமைத்தொழிலாளியாகவோ அல்லது பாலியல் தொழிலிலோ அல்லது சிறிதளவு கூட மனிதத் தன்மையில்லாத முதலாளிகளிடம் வேலை செய்வதற்காக வாடகைக்கு விடப்படவோ  ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தனது மாவட்டத்தில் நிலவும் மிக அதிகமான வறுமையின் விளைவாக குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்துவதோ அல்லது ஆட்கடத்தல்காரர்களிடம் தங்கள் குழந்தைகளை அனுப்பி வைப்பதிலிருந்து குடும்பங்களை தடுத்து நிறுத்துவதோ எப்போதுமே எளிதாக இருப்பதில்லை என்றும் காட்டூன் தெரிவித்தார்.

“வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்ட குழந்தைகள், அவர்களுக்கு என்ன நேர்ந்த்து என்பதைப் பற்றிய உண்மையான உதாரணங்களை முன்வைப்பதன் மூலம் பெற்றோர்களின் மனதை மாற்றுவதற்கு நாங்கள் முயற்சி செய்தே வருகிறோம். ‘எதைக் குறித்து நீங்கள் அதிகம் கவலைப் படுவீர்கள்?  பணமா? அல்லது உங்கள் குழந்தையா?’ என்றும் நாங்கள் அவர்களிடம் கேட்பதுண்டு.”

இந்தக் குழந்தைகளுக்கான குழுக்கள் குழந்தைகள் நலம் மற்றும் பாதுகாப்பிற்கான அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோருடன் நெருக்கமாக இருந்து செயல்பட்டு வருகின்றன.

 “பெற்றோர்களை எங்களால் வென்றெடுக்க முடியாத போது உள்ளூர் அதிகாரிகளை நாங்கள் அணிதிரட்டுவோம். அவர்கள் வந்து விஷயங்களைப் பற்றி விசாரித்து அறிந்து பின்பு நடவடிக்கை எடுப்பார்கள்” என காட்டூன் குறிப்பிட்டார்.

இந்த மகளிர் சக்திக்கான விருது இந்தியக் குடியரசுத் தலைவரால் சர்வதேச மகளிர் தினத்தின்போது வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் பண முடிப்பும் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு விருது பெற்ற மற்ற பெண்களில் வழக்கமான செயல்பாடுகளுக்குச் சவால் விட்டு விண்வெளி ஆராய்ச்சி, மோட்டார் சைக்கிள் ஓட்டுதல், மலையேறுதல் போன்ற துறைகளில் முன்னோடிகளாக விளங்குகின்றவர்களும், கலைஞர்கள், ஓவியர்கள், மனித உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்கள் ஆகியோரும் அடங்குவர்.

(செய்தியாளர்: நிதா பல்லா @nitabhalla; எடிட்டிங்: எலன் உல்ஃப்ஹோர்ஸ்ட். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->