×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

ஆண்குறியை பெரிதாக்க பெண்கள் தங்கள் தோல்களை விற்பது குறித்து நேபாளம் விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது

by கோபால் சர்மா | Thomson Reuters Foundation
Friday, 10 March 2017 15:14 GMT

காத்மாண்டு, மார்ச் 10 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – ஆண்குறியைப் பெரிதாக்குவது, பெண்களின் மார்பகங்களைப் பெரிதாக்குவது ஆகியவற்றுக்கான சர்வ தேச அளவிலான ஒப்பனை அறுவை சிகிச்சை சந்தையில் பயன்படுத்துவதற்கென நேபாளத்தின் ஏழைப் பெண்கள் கடத்தப்பட்டு தங்கள் தோலை விற்பனை செய்யும் வகையில் ஏமாற்றப்படுவதாகத் தெரிவிக்கும் ஓர் அறிக்கை குறித்து தாங்கள் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக நேபாள அரசு தெரிவித்தது.

தோற்றத்தை மாற்றுவதற்கான அறுவை சிகிச்சையில் ( ப்ளாஸ்டிக் சர்ஜரி) பயன்படுத்துவதற்கென தங்கள் பின்புறப் பகுதியிலிருந்து 20 சதுர அங்குலம் (130 சதுர செண்டிமீட்டர்) அளவிற்கான தோலை 150 டாலருக்கு நேபாள பெண்கள் விற்பனை செய்வதாக யூத் கி ஆவாஸ் ( இளைஞர்களின் குரல்) என்ற இந்திய இணைய செய்தித் தளம் மேற்கொண்ட புலன்விசாரணை தெரிவித்திருந்தது.

மார்ச் 6 ஆம் தேதியன்று வெளியான இந்த அறிக்கையைப் படித்தபிறகு  அரசு மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாக பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூக நலம் அகியவற்றுக்கான அமைச்சர் குமார் கட்கா  தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“இந்த அறிக்கை குறித்து நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம்.” என்று வியாழக்கிழமையன்று பின்னிரவில் கட்கா தெரிவித்தார். “இது குறித்து நாங்கள் விசாரணை நடத்துவோம். அது சரியானதென கண்டறிந்தால், இந்த படுமோசமான குற்றத்தைத் தடுத்து நிறுத்தி, இதற்குக் காரணமானவர்களை தண்டிக்க  அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.”

வறுமை தாண்டவமாடும் இந்த இமாலயப் பகுதி நாட்டிலிருந்து நேபாளிகள் வேலைக்காகவும், பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதற்கும் – ஏன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகவும் கூட – அருகிலுள்ள இந்தியாவிற்கு கடத்தப்படுவது குறித்து மிக விரிவாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் மனிதத் தோலுக்காக கடத்தப்படுவது குறித்த சம்பவங்கள் இதுவரை கேள்விப்படாத ஒன்றாகவே இருந்து வந்தது.

இந்தியப் பத்திரிக்கையாளரான சோமா பாசு என்பவர் எழுதிய இந்த அறிக்கை மும்பை போன்ற இந்திய நகரங்களில் உள்ள பாலியல் தொழில் மையங்களுக்கு நேபாளப் பெண்கள் கடத்திச் செல்லப்படுகின்றனர் என்றும், பின்னர் அவர்கள் தங்கள் தோலை விற்பதற்காக ஏமாற்றப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தது.  இதில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தாங்கள் மயக்க நிலைக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் தங்கள் தோல் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு அகற்றப்பட்ட தோல் இந்தியாவில் உள்ள நோயியல் ஆய்வுக்கான மருத்துவக் கூடங்களுக்கு விற்கப்படுகின்றன என்றும், அங்கு அவை பதப்படுத்தப்பட்டு, உலகளாவிய அளவில் செயல்படும் ப்ளாஸ்டிக் சர்ஜரி சந்தைக்கான தோல் மற்றும் திசு போன்ற அடிப்படைப் பொருட்களைத் தயாரிக்கும் அமெரிக்காவிலுள்ள நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

இந்த அறிக்கை மீது உடனடியாக விசாரணையை மேற்கொள்ளுமாறும், ஆட்கடத்தலுக்கு ஆளாகும் நிலையிலுள்ள இந்த நாட்டின் மிகவும் ஏழ்மையான மாவட்டங்கள், அதிக அபாயத்திலுள்ள பகுதிகள் ஆகியவற்றில் வசிக்கும் பொதுமக்களிடையே பிரச்சாரத்தை நடத்துமாறும் பெண்களின் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்கள் அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 “இந்த விஷயம் குறித்து அரசு மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு, நமது பெண்களைக் காப்பாற்ற வேண்டும்” என ஆட்கடத்தலுக்கு ஆளானவர்களுக்கான  மறுவாழ்விற்கு உதவும் ஓர் அறக்கட்டளையான சக்தி சமூஹாவைச் சேர்ந்த சுனிதா தனுவார் கூறினார்.

“வெற்றுவார்த்தைகள் இதில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது. தோல், சிறுநீரகம் போன்ற அவயவங்களுக்காக அப்பாவி கிராம வாசிகள் கடத்திச் செல்லப்படுவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.”

(செய்தியாளர்: கோபால் சர்மா. எழுதியவர்: நிதா பல்லா @nitabhalla, எடிட்டிங்:ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவுசெய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->