×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்தியாவின் மறுவாழ்வுக்கான புதிய விதிமுறைகள் மீட்கப்பட்ட கொத்தடிமைகளை அபாயத்தில் ஆழ்த்தியுள்ளது - சமூக ஆர்வலர்கள்

Tuesday, 14 March 2017 15:33 GMT

மும்பை, மார்ச் 14 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - அனைத்து வகையான நலத்திட்ட உதவிகளையும் உடல்ரீதியான அடையாளங்களைக் கொண்ட அடையாள அட்டையுடன் அரசு இணைத்துள்ள நிலையில் இந்தியாவில் கொத்தடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கான இழப்பீட்டுத் தொகைகளைப் பெற முடியாமல் போய்விடும்; ஏனெனில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் இத்தகைய அடையாள அட்டைகள் எதுவும் இல்லை என செவ்வாயன்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட தொழிலாளர்கள் உடனடியாகத் தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு உதவும் வகையில் மறுவாழ்விற்கான அரசின் உதவித்தொகைகளைப் பெற முடியாமல் போகுமானால் அவர்கள் மீண்டும் கொத்தடிமையாக மாற வேண்டிய நெருக்கடி உருவாகக் கூடும் என அவர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருவோர் எச்சரித்தனர்.

2030ஆம் ஆண்டிற்குள் 1 கோடியே 80 லட்சம் கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பதற்கான திட்டங்களை இந்தியா அறிவித்துள்ளதோடு, நவீன கால அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான விரிவான முயற்சிகளின் ஒரு பகுதியாக இவ்வாறு மீட்கப்படும் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையையும் கடந்தாண்டு அரசு ஐந்து மடங்கு அதிகரித்திருந்தது.

எனினும் மற்ற மக்கள் நலத் திட்டங்களைப் போலவே இத்தகைய இழப்பீட்டுத்தொகைகளும் நாட்டின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும் என கடந்த வாரம் அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

ஆதார் அட்டை என்பது இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் 12 இலக்க அடையாள எண் ஆகும். இதைப் பெறுவதற்கென தனிநபர்கள் தங்கள் கைரேகைகளையும், கண்ணின் கருவிழியையும் தங்கள் கையெழுத்தாகப் பதிவு செய்யவேண்டும்.

இந்தியாவில் குடியிருப்பவர்களில் 90 சதவீதம் பேருக்கும் மேற்பட்டோருக்கு இப்போது ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது என அரசு தெரிவிக்கிறது. எனினும் கொத்தடிமைத் தொழிலாளர்களில் சுமார் ஒரே ஒரு சதவீதத்தினரிடம் மட்டுமே இந்த ஆதார் எண் இருக்கக் கூடும் என இத்தொழிலாளர்களின் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

 “செங்கற் சூளைகளில் கொத்தடிமைகளாக வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆதார் அட்டைக்காக விண்ணப்பிப்பது என்பது இயலாத ஒன்று. எந்த முதலாளியாவது இவர்கள் தங்கள் விவரங்களை அரசிடம் பதிவு செய்வதற்கு அனுமதிப்பாரா?” என கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றுவதற்கான தேசிய பிரச்சாரக் குழுவின் தலைவரான நிர்மல் கொரானா கேள்வி எழுப்பினார்.

 இவ்வாறு விடுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் இழப்பீட்டை பெறுவதற்கு முன்பாக ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்க வேண்டும் என்பது, ஏற்கனவே மிக நீண்டதாக இருக்கும் இந்த இழப்பீடு கோரும் செயல்முறையை மேலும் சிக்கலாக மாற்றி விடுவதோடு, அவர்கள் மேலும்  சுரண்டலுக்கு ஆட்படுகின்ற அபாயத்திற்கு ஆளாக்குவதாகவும் அமையும் என அவர் குறிப்பிட்டார்.

சமூக நலத்திட்டங்களுக்கான உதவிகளை ஆதார் அட்டையுடன் இணைப்பது என்பது இத்தகைய உதவிகளை  போலியான வகையில் கோருபவர்களைக் களைவதற்கும், இந்த உதவிகளை வெளிப்படையான வகையிலும், திறமையாகவும் வழங்குவதை உறுதிப்படுத்தும் என அரசு கூறுகிறது. தொழிலாளர்கள் இந்த ஆதார் அட்டைகளுக்காக பதிவு செய்யவோ, ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதற்கான ஆதாரத்தைக் காட்டவோ ஜூன் 30ஆம் தேதி கடைசி நாள் என அரசு நிர்ணயித்துள்ளது.

இந்தியா 1976ஆம் ஆண்டில் கொத்தடிமைத் தொழிலாளர் முறைக்கு தடை விதித்தது. எனினும் வயல்களிலும், செங்கற்சூளைகளிலும், பாலியல் தொழில் மையங்களிலும் அல்லது வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் வீடுகளிலும் பல லட்சக்கணக்கானோர் தொடர்ந்து பரவலாக வேலை செய்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு அவர்களின் மறுவாழ்விற்கான உதவித் தொகையாக ரூ. 1 லட்சம் (1,519 அமெரிக்க டாலர்) வழங்கப்படுகிறது. மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு ரூ. 2 லட்சமும், ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 3 லட்சமும் உதவித் தொகையாக அரசால் வழங்கப்படுகிறது.

இத்தகைய உதவிகளை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கு முன்னதாக மக்கள் அதற்காகப் பதிவு செய்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என எய்ட் அட் ஆக்‌ஷன் இண்டர்நேஷனல் என்ற லாப நோக்கற்ற அமைப்பின் பிராந்திய தலைவரான உமி டேனியல் கருத்து தெரிவித்தார்.

“இது தேவையற்றதொரு நிபந்தனையை விதிப்பதே ஆகும்” என கொத்தடிமைத் தொழிலாளர்கள் குறித்த முன்னணி சமூக ஆர்வலர் டேனியல் தெரிவித்தார்.

“இந்த மறுவாழ்வு ஏற்பாடானது நீடித்த வகையில் செய்யப்படாவிட்டால் ஏதோ ஒரு வகையிலான அடிமைத்தனத்தில் இந்த மக்கள் ஆழ்ந்து விடும் அபாயம் பெருமளவில் உள்ளது”.

ஆஸ்திரேலியாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷன் வெளியிட்ட 2016ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அடிமைத்தனம் குறித்த அட்டவணையின்படி, உலக அளவில் அடிமைகளாக இருந்து வருவதாக  மதிப்பிடப்பட்டுள்ள மொத்தம் 4 கோடியே 58 லட்சம் பேரில் 40 சதவீதம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா. எடிட்டிங்: எம்மா பாதா. செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->