×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்திய இனிப்பகங்களின் கசப்பான உண்மைகள்; சூடு வைக்கப்படும், அடித்து உதைக்கப்படும் கொத்தடிமைச் சிறுவர்கள்

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Wednesday, 15 March 2017 12:45 GMT

A worker carries sweets inside a sweets-making factory in Agartala, capital of India's northeastern state of Tripura, September 9, 2010. REUTERS/Jayanta Dey

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

திண்டுக்கல், மார்ச் 15  (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) -விஜயகுமாரின் தொடையில் இருக்கும் புரையோடிப் போன புண் இனிப்பு, காரம் போன்றவற்றைப் பொரித்தெடுக்கும் கடுமையான நான்காண்டு கால வேலையை அந்தப் பதின்பருவச் சிறுவனுக்குத் தொடர்ந்து நினைவூட்டுவதாக இருக்கிறது.

தான் தயாரித்துக் கொண்டிருந்த சமோசாவிற்கு தவறுதலாக கூடுதலான நிறத்தைச் சேர்த்ததற்குத் தண்டனையாக உணவக உரிமையாளர் அச்சிறுவனை இரும்புக் குழாயினாலேயே அடித்து கொதிக்கும் எண்ணெயை கால்களில் ஊற்றியதை அவனுக்கு எப்போதும் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.

“நான்கு ஆண்டுகள் நான் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருந்தேன்.” என காலை வெட்டி எடுப்பதைத் தவிர்ப்பதற்கான ஓர் அறுவை சிகிச்சையை இன்னும் ஒரு சில வாரங்களில் மேற்கொள்ளவிருக்கும் குமார் தெரிவித்தான்.

2012ஆம் ஆண்டில் அவனது சொந்த ஊரான திண்டுக்கல்லிலிருந்து மேற்கு இந்தியாவில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்திற்கு குமார் அனுப்பி வைக்கப்பட்டபோது அவனுக்கு வயது 15. அதற்காக அவனது தாய்க்கு ரூ. 15,000/- கொடுக்கப்பட்டது.

தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த சிறுவர்கள் திட்டமிட்டு குறிவைக்கப்பட்டு மேற்கு மற்றும் வடக்கு இந்திய மாநிலங்களுக்குக் கடத்திச் செல்லப்படுகின்றனர். மோசமான நிலைமைகளில் சிக்க வைக்கப்படும் அவர்கள் மிகக் குறைவான  ஊதியத்திற்கும் பல நேரங்களில் வேலை செய்யும் இடங்களில் மோசமாக நடத்தப்படுவதற்கும் ஆளாகின்றனர் என பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

“எனது இரண்டு சகோதரிகளின் திருமணத்திற்கோ அல்லது  எனது தாத்தா இறந்தபோதோ என்னால் வீட்டிற்குச் செல்ல முடியவில்லை” என குமார் தெரிவித்தான். “அன்றாடம் எனக்கு நிகழ்ந்து வந்த கொடுமைகளை, சூடான எண்ணெயிலிருந்து அடிக்கடி ஏற்படும் தீப்புண்கள் ஆகியவற்றை எல்லாம் நான் புறக்கணித்தே வந்தேன். ஆனால் அன்றைய தினம் தாங்கவொண்ணாத ஒன்றாக அந்தத் தண்டனை இருந்தது.”

எனவே 2016 செப்டம்பரில் ஒரு அதிகாலை நேரத்தில் குமார் அந்தக் கடையிலிருந்து தப்பிச் சென்றான். பயணச் சீட்டு எதுவுமில்லாமல் பயணம் செய்து திண்டுக்கல்லில் இருக்கும் கிராமத்தில் உள்ள அவனது வீட்டிற்கு வந்து சேர அவனுக்கு மூன்று நாட்கள் ஆனது.

“படுமோசமான வாழ்க்கை நிலைமைகள்”

இத்தகைய தொழிலாளர்களுக்கான முகவர்கள் மிகக் குறைந்த ஊதியத்திற்குத் தொழிலாளர்களைக் கவர்ந்திழுக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் அவர்களின் குடும்பத்திற்கு மொத்தமாக பணம் தருவதாகக் கூறி பெரும்பாலும் ஏழ்மை நிறைந்த, படிப்பறிவற்ற, கீழ்ச்சாதி அல்லது தலித் பிரிவுகளைச் சேர்ந்த பதின்பருவச் சிறுவர்களைத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்குச் செல்வதை நிறுத்தி விட்ட சிறுவர்கள் உணவகங்களில் வேலை செய்வதற்காக வடக்கு, மேற்கு இந்தியப் பகுதிகளுக்கு வழக்கமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர் என பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

திண்டுக்கல் பகுதியில் உள்ள வெறும் 30 கிராமங்களில் நாங்கள் மேற்கொண்ட மேலோட்டமான ஆய்விலேயே இத்தகைய உணவகங்களில் வேலை செய்வதற்காக 122 சிறுவர்கள் சென்றுள்ளதை நாங்கள் கண்டறிந்தோம்.” என சைல்ட் வாய்ஸ் என்ற லாப நோக்கற்ற அமைப்பைச் சேர்ந்த எஸ். அண்ணாதுரை தெரிவித்தார்.

“இதில் 20 சதவீத சிறுவர்களைப் பொறுத்தவரையில், தங்கள் குழந்தைகள் எங்கே அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் என்று அந்தக் குடும்பங்களுக்குத் தெரியாது. அவர்கள் காணாமலேயே போயிருக்கிறார்கள் என்றே கூறி விடலாம்.”

இத்தகைய இனிப்பு- கார வகைகளை தயாரிக்கும் தொழிலகங்களில் கொத்தடிமைகளாக இருந்து வரும் மூன்று குழந்தைகளை விடுவிக்க உதவுமாறு கோரி திங்கட்கிழமையன்று இரண்டு மனுக்கள் தமிழ்நாடு அரசிற்கு வந்து சேர்ந்தது.

“இது குறித்து கவனம் செலுத்த இரண்டு குழுக்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்” என மதுரை மாவட்டத்தின் நிர்வாகத் தலைவரான கே. வீரராகவா ராவ் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டில் இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

இதன் மூலமே இத்தகைய கொடுமைகள், கொத்தடிமைத்தனம் ஆகியவற்றின் வீச்சை முதல்முறையாகத் தெரிந்து கொள்ள முடிந்தது என இந்த வழக்கும் இன்னமும் நீதிமன்றத்தில் உள்ளதால் பெயரைத் தெரிவிக்க விரும்பாத ஓர் அதிகாரி  குறிப்பிட்டார்.

“ஒரேஒரு அறையை மட்டுமே கொண்ட தொழிலகங்களிலிருந்து இந்தச் சிறுவர்கள் மீட்டெடுக்கப்பட்டபோது அவர்களின் விரல்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாக தீயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மிகக் குறைந்தபட்ச உணவே வழங்கப்பட்டு வந்ததோடு, அவர்களின் குடும்பத்தோடு எவ்விதத் தொடர்பும் கொள்ள முடியாத நிலையில் இருந்தார்கள். மிக அரிதாகவே அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்பட்டது. படுமோசமானதொரு வாழ்க்கையாகவே அது இருந்தது” என அவர் குறிப்பிட்டார்.

“வீட்டு நினைவாகவே”

சூர்ய ப்ரகாஷ் குமாருடன் வேலை செய்தவன். அவர்கள் இருவருமே ஒரு முகவரால் மகாராஷ்டிராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  வேறு பலர், அவர்களில் சிலர் பத்து வயதே ஆனவர்கள், குஜராத், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தச் சிறுவர்கள் அதிகாலை 5 மணிக்கு எழுந்து இரவு வெகுநேரம் வரை தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். அவற்றை விற்பனைக்கு ஏற்ற வகையில் கட்டுவதற்கு முன்பாக சிற்றுண்டிகளை பொறித்து எடுப்பது, இனிப்புகளைத் தயார் செய்வது ஆகிய வேலைகளை அவர்கள் செய்ய வேண்டியிருந்தது.

 “ ஒரு நாளைக்கு சாதாரணமாக நாங்கள் 75 கிலோ அளவிற்கு குலாப் ஜாமூன், பாதுஷா போன்ற பாரம்பரிய இந்திய இனிப்புகளையும் அப்பளம், சிப்ஸ் போன்ற தின்பண்டங்களையும் பொறித்து எடுக்கவும் வேண்டியிருந்தது” என  திண்டுக்கல் பகுதியில் உள்ள சவுந்தரபுரம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே அமர்ந்தபடி  தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் குமார் கூறினார்.

“எங்களுக்கு எப்போதும் வீட்டு நினைவாகவே இருக்கும். திரும்பி வரவேண்டும் என்றே விரும்பினோம். ஆனால் அவர்கள் எங்களை விடவேயில்லை.”

நான்கு ஆண்டுகளுக்கு அந்தச் சிறுவர்கள் அங்கே இப்படித்தான் இருந்து வந்தனர். அவர்களுக்கு பணம் எதுவும் தரப்படவில்லை என்பதோடு, ஆள் துணையின்றி வெளியே போய் வருவதற்கும் அனுமதிக்கப்படவில்லை. வீட்டிற்கு செய்யப்படும் தொலைபேசி அழைப்புகளும் கூட முதலாளியின் தொலைபேசியின் மூலமாகத்தான்.  இந்தக் கடை முதலாளியின் உறவினர் ஒருவர் இந்தச் சிறுவர்களின் குடும்பங்களுக்கு சிறு தொகையை அவ்வப்போது கொடுத்து வந்தார்.

உணவுப் பண்டங்களைத் தயாரிப்பதற்கான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அதே அறையில்தான் இந்தச் சிறுவர்களும் உறங்க வேண்டியிருந்தது. அவர்கள் விழித்துக் கொண்டிருந்த நேரம் முழுவதும் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரை முன்பாகவோ அல்லது இனிப்புகள் அடுக்கப்பட்டிருக்கும் ட்ரேக்களின் முன்னால் குனிந்தபடி அவற்றை வெட்டுவது, பொட்டலம் கட்டுவது ஆகிய வேலைகளில் ஈடுபட வேண்டியிருந்தது.

தற்போது பிரகாஷின் இருப்பிடம் தெரியவில்லை. குமார் பதிவு செய்த புகாரின் அடிப்படையில் இந்தக் கடை உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் இரண்டு பேர் இன்னமும் பிடிபடவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அமுதா பழனிசாமி தனது 15 வயது மகனை 2014ஆம் ஆண்டில் இத்தகைய சிற்றுண்டித் தொழிலகத்தில் வேலை செய்ய அனுப்பி வைத்தார். அதிலிருந்து இன்று வரை தனது மகனை அவர் பார்க்கவே இல்லை என்பதோடு, அவனை எங்கே அழைத்துக் கொண்டு சென்றார்கள் என்பதை அறியாதவராகவும் அவர் இருக்கிறார்.

தன் மகனை அனுப்புவதற்கான முன்பணமாக அவர் ரூ. 10,000 பெற்றுக் கொண்டிருந்தார். அது போக இந்த மூன்றாண்டுகளில் அவருக்கு ரூ. 70,000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. “அவனை நான் பார்க்கலாம்; அல்லது பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இதில் ஏதாவது ஒன்றைத்தான் நான்  தேர்ந்தெடுக்க முடியும் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள்” என பழனிசாமி தெரிவித்தார்.

அப்படியெனில் அந்தச் சிறுவனின் மாதாந்திர ஊதியம் என்பது வெறும் ரூ. 2,000 ஆகத் தான் உள்ளது என சைல்ட் வாய்ஸ் அமைப்பைச் சேர்ந்த அண்ணாதுரை கூறினார்.

“அவ்வளவு குறைந்த ஊதியத்திற்கு இந்தச் சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டு ஆண்டுக் கணக்கில் அடிமைத்தனத்தில் ஆழ்த்தி வைக்கப்படுகின்றனர்” என அவர் குறிப்பிட்டார்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: எட் அப்ரைட் மற்றும் ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

 

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->