×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்திய தோல் தொழிலைச் சேர்ந்த தொழிலாளர்கள் உடல்நலத்தை, உயிரைப் பணயம் வைத்து உலகளாவிய சந்தைக்கான காலணிகளைத் தயாரிக்கின்றனர்:ஆய்வறிக்கை

Wednesday, 15 March 2017 18:18 GMT

A cobbler makes leather shoes inside his workshop in Jammu November 14, 2008. REUTERS/Amit Gupta

Image Caption and Rights Information

மும்பை, மார்ச். 16 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – மேற்கத்திய நவநாகரீக நிறுவனங்கuளுக்கான காலணிகள், ஆடைகள் ஆகியவற்றைத் தயாரிப்பதற்காக, நாட்டின் தோல் தொழிலில் மிகக் குறைவான ஊதியத்திற்கு சுமார் 25 லட்சம் இந்தியத் தொழிலாளிகள் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் வேதியியல் பொருட்களுடன் தினமும் நீண்ட நேரம் வேலை செய்து வருகின்றனர் என ஓர் ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.

மனித உரிமைகளுக்கான ஓர் அமைப்பான இந்தியா கமிட்டி ஆஃப் த நெதர்லாந்த்ஸ் (ஐசிஎன்) புதன் கிழமையன்று வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கை இந்த நிறுவனங்களுக்கான  பொருட்களை சப்ளை செய்துவரும் வழிமுறையில் மேலும் அதிகமான அளவில் வெளிப்படைத்தன்மை தேவை எனக் கோரியுள்ளது.

இந்த ஆய்வானது ஏற்றுமதிக்கான பதப்படுத்தப்பட்ட தோல்கள், தோல், ஆயத்த ஆடைகள், அதன் துணைப்பொருட்கள், காலணிகள் ஆகியவற்றை வழங்கி வரும் ஆக்ரா,கொல்கத்தா மற்றும் தமிழ்நாடில் வாணியம்பாடி  ஆம்பூர் சுற்றுப்பகுதிகள் ஆகிய தோல் தொழிலுக்கான மையங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.

“பெருமளவிலான ஏற்றுமதி மையங்களின் வளர்ச்சியின் மூலமாக தோல் தொழிலில் மேலும் அதிகமான வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ள போதிலும் , இவ்வாறு உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பின் தன்மை, தரம் ஆகியவை குறித்து கவனம் எதுவும் செலுத்தப்படுவதில்லை” என அந்த ஆய்வறிக்கையில் ஐசிஎன் தெரிவித்துள்ளது.

 “இந்த இயந்திரங்களை இயக்குபவர்கள் அவற்றுக்குள் சிக்கிக் கொள்வது; நிலத்தடியில் சென்று சேரும் கழிவுக் கூடங்களை சுத்தம் செய்வதற்காகச் சென்று விஷவாயுக்களால் தொழிலாளர்கள் மூச்சுத் திணறலுக்கு ஆளாவது; அல்லது தோல் பதனிடும் தொழிற்சாலை வளாகத்தில் இருக்கும் விஷ வாயு நிரம்பிய கழிவுகளில் தொழிலாளர்கள் மூழ்கிவிடுவது என்ற வகையில் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

காலணிகள் மற்றும் தோலினால் ஆன ஆடைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் உலகத்திலேயே இரண்டாவது மிகப்பெரும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் காலணிகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கே செல்கிறது எனவும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

முறைப்படுத்தப்படாத, சிறிய தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு அல்லது  ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இருப்பதில்லை. மேலும் இந்தப் பொருட்களுக்கு  உலக அளவில் இருக்கும் விலையில் மிகச் சிறிய அளவு பணத்தையே அவர்கள் ஊதியமாகப் பெறுகின்றனர்.

ஒரு தோல்பதனிடும் தொழிற்சாலையில் தோலை கையாளும் வேலையில்  ஈடுபட்டு வந்து, அதைப் பதப்படுத்தப் பயன்படும் அமிலம் முகத்தில் வீசியடித்ததால் இரண்டு கண்களையும் இழந்து நிற்கும் ராமு என்னும் தலித் பிரிவைச் சேர்ந்த தொழிலாளியிடம் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் உரையாடினர். தனது 13 வயதுப் பெண் இப்போது காலணி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் இப்போது வேலைசெய்து வருவதாக அவர் ஆய்வாளர்களிடம் தெரிவித்தார்.

இத்தகைய தோல் பதனிடும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் விஷத்தன்மை கொண்ட வேதியல் பொருட்களை கையாள்வதால் காய்ச்சல், கண் எரிச்சல், கண் வீக்கம், தோல் நோய்கள், புற்று நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். மிக மிக அரிதாகவே அவர்களுக்கு பாதுகாப்பிற்கான பயிற்சியோ அல்லது பாதுகாப்பு உபகரணங்களோ கிடைக்கின்றன என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

டிசம்பர் 2015-இல் கொல்கத்தாவில் உள்ள ஓர் தோல் கழிவுநீர் தொட்டியிலிருந்து வெளியேறிய விஷ வாயுவை சுவாசித்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் எனவும் உள்ளூர் செய்தி ஊடகங்களை மேற்கோள்காட்டி இந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டிருந்தது.

 “மிக அசுத்தமான, மாசுநிரம்பிய’ ஒரு தொழிலாகக் கருதப்படும் இத்தொழிலின் பெரும்பான்மையான தொழிலாளர்கள் கீழ்ச்சாதிகளான தலித்கள், சிறுபான்மையினரான முஸ்லீம்கள் ஆகியோராகவே உள்ளனர்.

பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டு இந்தியாவின் தோல் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுவதை சுட்டிக் காட்டும் இந்த ஆய்வறிக்கை, இந்தப் பிரச்சனையை உடனடியாக கவனிக்க வேண்டியதன் அவசியத்தை சில முக்கிய வர்த்தக நிறுவனங்கள் உணர்ந்துள்ளன என்றும் குறிப்பிட்டது.

 “தோல் பதனிடும் தொழிற்சாலைகள், துணை ஒப்பந்தக்காரர்கள் ஆகிய பிரிவினர் வரை தங்களுக்கு சப்ளை செய்யும் வழியில் உள்ள அனைத்து மட்டத்தையும் எளிதாக அடையாளம் காண்பது; வெளிப்படைத்தன்மை கொண்ட செயல்பாடு ஆகியவற்றை நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும்” என்றும் அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா; எடிட்டிங்:ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->