×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

ஆட்கடத்தலுக்கு ஆளானவர்களுக்கு அரிதானதொரு வெற்றியாக கர்நாடக செங்கற்சூளை அதிபருக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை

Thursday, 16 March 2017 14:36 GMT

Labourers shape mud bricks as they work at a kiln in Karjat, India, March 10, 2016. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, மார்ச் 16 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - ஆட்கடத்தலுக்கு ஆளானவர்கள் நீதிக்காகப் போராடி வரும் வழக்குகள் மிக மெதுவாகவும்,நீண்ட காலத்திற்கும் நடைபெற்று வரும் சூழலில் மிக அரிதானதொரு வெற்றியாக தொழிலாளர்களை கடத்திச் சென்று அவர்களை அடிமைத்தனமான சூழலில் வைத்திருந்த குற்றத்திற்காக கர்நாடக மாநிலத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று செங்கற்சூளை அதிபர் ஒருவருக்கு பத்தாண்டு கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கடந்த வாரம் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு  புதன்கிழமையன்று பொதுமக்களின் கவனத்திற்கு வந்தது.  கர்நாடகா மாநிலத்தில் ராமநகராவில் உள்ள ஒரு நீதிமன்றம் அந்த செங்கற்சூளை அதிபருக்கு  சிறைத்தண்டனையோடு கூடவே ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 12 கொத்தடிமைத் தொழிலாளர்களை கடத்தி வந்ததற்காகவும், அவர்களை அடைத்து வைத்து சுரண்டலுக்கு ஆட்படுத்தியதற்காகவும் ரூ. 16,000 அபராதமும் விதித்தது.

இத்தகைய தண்டனை வழங்குமளவிற்கு வழக்குகள் வெற்றி பெறுவது அடிக்கடி நடப்பதில்லை என அரசு வழக்கறிஞரான எம்.டி. ரகு தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“இதில் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் வலுவான வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் வழங்கியதோடு, தாங்கள் அனுபவித்த துன்பங்களை மிக விரிவாக விவரித்ததோடு, வழக்கு விசாரணையில் இருந்த காலம் முழுவதும் தங்கள் நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாகவும் இருந்தனர்” என்றும் ரகு மேலும் குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் “உற்சாகமூட்டுவதாக” உள்ளது என்று குறிப்பிட்ட பிரச்சாரகர்கள், இதில் வழங்கப்பட்டுள்ள  தண்டனை மிகவும் குறிப்பிடத்தக்கது; ஏனெனில் ஒவ்வொரு கொத்தடிமைத் தொழிலாளர் குறித்த வழக்கிலும் ஆட்கடத்தலுக்கான குற்றச்சாட்டையும் இணைக்க இந்திய சட்டத்தில் 2013ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தம் வகை செய்திருந்தது.

கொத்தடிமைத் தொழிலாளர் முறைக்கு இந்தியா 1976ஆம் ஆண்டிலேயே தடை விதித்து விட்டது. எனினும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கருத்துப்படி நாட்டில் இன்னமும் 1 கோடியே 17 லட்சம் பேர் கொத்தடிமைகளாக இருந்து வருகின்றனர்.

இத்தகைய சம்பவங்கள் அதிகமான அளவில் நடைபெற்று வந்த போதிலும் 2015ஆம் ஆண்டில் கொத்தடிமைத் தொழிலாளர் தொடர்பாக 92 வழக்குகளே பதிவாகியிருந்தன. அவற்றில் ஒரே ஒரு வழக்கில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்கு பேருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது என அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2015ஆம் ஆண்டில் இவற்றில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் இந்தியாவின் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் பதிவு செய்யப்பட்ட  வழக்குகளில் 80 சதவீத வழக்குகள் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளன.

 “இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியமான ஒன்றேயாகும். ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவருக்கான தண்டனையை அதிகரிக்க திருத்தம் செய்யப்பட்ட சட்டத்தை அது பயன்படுத்தியுள்ளது” என மனித உரிமைகளுக்கான வழக்குரைஞர் டேவிட் சுந்தர் சிங் கூறினார்.

 “இதற்கு முன்பெல்லாம் இந்தப் பகுதியில் ஏழுவருடங்கள் வரையிலுமே தண்டனை வழங்கப்பட்டு வந்தன.”

2010லிருந்து 2014வரை சுமார் 4 வருட காலம் இந்தச் செங்கற்சூளை அதிபர் தனது தொழிலை நடத்தி வந்திருக்கிறார் என அரசுத் தரப்பில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை தெரிவித்தது.

அவர் நான்கு குடும்பங்களுக்கு ரூ. 50,000 வரையில் முன்பணம் கொடுத்து, அவர்களது கிராமத்திலிருந்து கடத்தி வந்திருக்கிறார் எனவும் அரசுத் தரப்புக் குற்றச்சாட்டு தெரிவித்தது.

அவர்கள் உருவாக்கும் ஒவ்வொரு 1,000 செங்கற்களுக்கும் ரூ. 350/- கூலியாக வழங்கப்படும் என பொய்யாக வாக்குறுதி அளித்தபோதிலும் செங்கற்சூளை அதிபர் சட்டபூர்வமான குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட அவர்களுக்கு வழங்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்தத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு13 மணிநேரமும், வாரத்திற்கு ஆறு நாட்களும் வேலை செய்ய வேண்டியிருந்தது என்றும் அரசுத் தரப்புக் குற்றச்சாட்டு தெரிவித்தது. வாரத்திற்கு ஒரு நாள் மதியம் மட்டுமே ஒரு சில மணி நேரங்களுக்கு அவர்களுக்குத் தேவையான மளிகைச் சாமான்களை வாங்குவதற்காக செங்கற்சூளைக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்றும் கூறப்பட்டது.

1978ஆம் ஆண்டிலிருந்து அரசு அதிகாரிகள் இந்தியாவின் 18 மாநிலங்களில் இதுவரை கொத்தடிமைத் தொழிலாளர் முறையில் சிக்கியிருந்த சுமார் 2,82,000  தொழிலாளர்களை விடுவித்துள்ளனர் என 2016ஆம் ஆண்டின் அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் அரசு முறை சாரா அமைப்புகள் இந்தப் புள்ளிவிவரங்கள்  குறித்து கேள்வி எழுப்புவதோடு, நாடு முழுவதும் நிலவி வரும் கொத்தடிமை முறையின் வீச்சை அவை உண்மையாகப் பிரதிபலிக்கவில்லை என்றும் அவை குறிப்பிடுகின்றன.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: எட் அப்ரைட். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->