×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

குறைந்தபட்ச ஊதியத்தை தில்லி உயர்த்திய நிலையில், இதர மாநிலங்களும் அதைப் பின்பற்ற வேண்டுமென தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

by நீதா பல்லா | @nitabhalla | Thomson Reuters Foundation
Tuesday, 4 April 2017 15:09 GMT

A migrant worker brushes his teeth before taking a bath in the old quarters of Delhi, India, in this March 30, 2016 archive photo. REUTERS/Anindito Mukherjee

Image Caption and Rights Information

- நீதா பல்லா

புது டெல்லி, ஏப். 4 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தில்லியின் மிகவும் ஏழ்மையான லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ வகையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் உயர்த்துவது என்ற முடிவை சுரண்டலை எதிர்த்துப் போராடும் வகையில் நாட்டின் இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களின் உரிமைகளுக்கான குழுக்களும் செவ்வாயன்று கோரிக்கை விடுத்தன.

தனித்திறன் அற்ற, ஓரளவிற்குத் திறன் பெற்ற, தனித்திறன் பெற்ற தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை தில்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி கடந்த மாதம் 37 சதவீதம் அதிகரித்தது. இதன் மூலம் இந்தியாவின் உழைக்கும் வர்க்க மக்களின் மிக அதிகமான குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் பகுதியாக இந்தியாவின் தலைநகரம்  உருமாறியது.

குறைந்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநிலங்கள் தங்கள் குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை பரிசீலனை செய்ய வேண்டும் என்று 1957ஆம் ஆண்டில் தொழிலாளர் நல அமைச்சகமும், 1991ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றமும் பரிந்துரை செய்திருந்ததை இந்தியாவின் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தொடர்ந்து பின்பற்றி வரும் ஒரே மாநிலமாக தில்லி இருந்து வருகிறது.

“நமது தொழிலாளர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தைக் கொண்டு வருவது என்ற மன உறுதியை தில்லி அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது” என 30 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தேசிய இயக்கமான சென்டர் ஆஃப் இந்தியன் ட்ரேட் யூனியன்ஸ் அமைப்பைச் சேர்ந்த அனுராக் சக்சேனா குறிப்பிட்டார்.

 “மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்றும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைவாக ஊதியம் தரும் முதலாளிகளைக் கண்டறிந்து தண்டிக்கும் வகையிலான சட்டத்தை அறிமுகப்படுத்துவதில் தில்லி அரசு இப்போது கவனம் செலுத்த வேண்டும் எனவும், இது கட்டாயமாக வேலை வாங்குவதற்கு இணையானதாகும் என்றும் கடுமையான தண்டனை தர வேண்டிய ஒன்றும் ஆகும் என செயல்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் மத்திய- மாநில அதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. இது விவசாயத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், அரசு துப்புரவுத் தொழிலாளர்கள், பாதுகாப்பு காவலர்கள் உள்ளிட்டு 45 வகையான தொழில்களுக்கு பொருந்துவதாகும்.

வீட்டு வாடகை, துணி, உணவு, கல்வி, மின்சாரம் போன்றவற்றின் விலைகளின் அடிப்படையில் அமைந்த இந்த ஊதியவிகிதம்  பல்வேறு மாநிலங்களிலும் வேறுபட்டதாக  உள்ளன. எனினும் அவை பல பத்தாண்டுகளாகவே போதுமானவையாக இருக்கவில்லை என்று தொழிற்சங்க ஊழியர்கள் தெரிவித்தனர்.

தில்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஊதிய விகித உயர்வு நாட்டின் தலைநகரப் பகுதிக்குப் பொருந்துவதாகும். இதில் தலைநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள 1 கோடியே 60 லட்சம் மக்கள் தொகையை உள்ளடக்கியதாக அமைகிறது. இவர்களில் பலரும் மிகக் குறைவான ஊதியத்திற்கே பணி புரிந்து வருகின்றனர்.

மார்ச் 3 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளின்கீழ் தனித்திறமை பெற்றிராத ஒரு தொழிலாளி மாத ஊதியமாக ரூ. 13,350 பெறத் தகுதியுள்ளவராவார். ஓரளவு தனித்திறன் பெற்றவர் மாதத்திற்கு ரூ. 14,698-உம் , தனித்திறன் பெற்றவர் மாதத்திற்கு ரூ. 16,183-உம் பெறத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.

“இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு நமக்கு 60 வருடங்கள் ஆனது என்பதே நமது நாட்டின் உழைக்கும் பிரிவினரை இதுவரை நாம் எவ்வாறு நடத்தி வந்திருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதாக அமைகிறது” என ட்ரேட் யூனியன் கோ ஆர்டினேஷன் செண்டர் அமைப்பைச் சேர்ந்த ராமேந்திர குமார் கூறினார்.

(செய்தியாளர்: நிதா பல்லா; எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->