×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

காவல்துறை 12 வயது பணிப்பெண்ணின் மரணத்திற்குப் பிறகு ஆட்கடத்தல் குறித்த விசாரணையை விரிவுபடுத்தியது

Tuesday, 11 April 2017 14:53 GMT

A 16-year-old girl with her hand decorated with henna stands inside a protection home on the outskirts of New Delhi November 9, 2012. REUTERS/Mansi Thapliyal

Image Caption and Rights Information

சென்னை, ஏப். 12 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்ய கடத்தப்பட்ட 12 வயதுப் பெண்ணின் உடல் பெங்களூரு நகரத்தில் கண்டறியப்பட்டதானது வீட்டு வேலைக்கான அடிமைகளாகச் சிக்கியுள்ள இதர சிறுவர்/சிறுமிகளைப் பற்றிய கவலையை இப்போது புதிதாக எழுப்பியுள்ளது என காவல்துறையினர் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தனர்.

புதுடெல்லியைத் தலைமையகமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றால் பெங்களூரு நகரில் வசிக்கும் ஒரு தம்பதிகளிடம் வேலை செய்ய அனுப்பி வைக்கப்பட்ட பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு  அங்கு வேலை செய்து வந்த இந்தப் பெண் அடுக்குமாடிக் குடியிருப்பின் 9வது மாடியிலிருந்து விழுந்து இறந்து போயிருக்கலாம் என முதல்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன என காவல்துறை தெரிவித்தது.

இந்தச் சிறுமியின் மரணமானது இதே நிறுவனத்தால் வேறு பல பெண்களும் இவ்வாறு வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்ய அனுப்பப்பட்டிருக்கக் கூடும் என்பதைக் கண்டறிவதற்காக கர்நாடக மாநிலம் முழுவதிலும் விசாரணையை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்வேகமூட்டியுள்ளது என மூத்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் நிம்பல்கர் தெரிவித்தார்.

“அந்தப் பெண் கடத்தப்பட்டிருக்கிறார். அவளை பெங்களூருக்கு அனுப்பி வைத்த அந்த வேலைவாய்ப்பு நிறுவனம் வேறு பல இளம் பெண்களையும் அனுப்பி வைத்திருக்கிறது என்றே எங்களது விசாரணை தெரிவிக்கிறது” என நிம்பல்கர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“இதன் பின்னால் பெரியதொரு வலைப்பின்னல் செயல்பட்டு வருகிறது என்றே தெரிகிறது.”

இந்தியா முழுவதிலும் கிட்டத்தட்ட  5 கோடி வீட்டுப் பணியாட்கள் இருக்கின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பலரும் பெண்களும், இளம் பெண்களும் ஆவர். எந்தவித சட்டரீதியான பாதுகாப்பும் அற்ற நிலையில் இவர்கள் பெரும்பாலான நேரங்களில் சுரண்டப்படுகின்றனர் என பெண்களின் உரிமைகளுக்கான பிரச்சாரகர்கள் கூறுகின்றனர்.

வீட்டுப் பணியாட்களின் நிலைமையை மேம்படுத்துவதற்கென குறைந்தபட்ச ஊதியம், சமூகப்பாதுகாப்பு ஏற்பாடு, கட்டாய விடுப்பு ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் சட்டமசோதா ஒன்று மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இப்போதும் காத்திருக்கிறது.

இறந்து போன பெண் அசாமிலிருந்து கடத்தி வரப்பட்டுள்ளார் என்றும் அவரது ஊதியம் அவரை வேலைக்கு வைத்திருந்த முறையே சார்ட்டட் அக்கவுண்டண்ட், பல் மருத்துவர் ஆன அந்தத் தம்பதியினரால் நேரடியாக அந்த நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் நிம்பல்கர் தெரிவித்தார்.

அந்தப் பெண்ணுக்கு 18 வயதிருக்கலாம் என்றும், அவள் அனாதை என்றும் தாங்கள் கருதி வந்ததாக அந்தத் தம்பதியினர்  தெரிவித்தனர். அந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்கள் எதையும் தாங்கள் முன்கூட்டி விசாரிக்கவில்லை என்றும் அந்த வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மீது தாங்கள் நம்பிக்கை வைத்திருந்ததாகவும் தெரிவித்ததாக காவல்துறை கூறியது.

“உண்மை என்னவெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பெண்ணின் தந்தை அவளைத் தேடிக் கொண்டிருக்கிறார்” என வீட்டுப் பணிப்பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காகப் பாடுபட்டு வரும் பெங்களூரு நகரத்தைச் சேர்ந்த அறக்கட்டளையான ஸ்த்ரீ ஜாக்ருதி சமிதியைச் சேர்ந்த கீதா மேனன்  கூறினார்.

“அவரைக் கண்டுபிடிப்பதற்குப் பல நாட்கள் ஆனது. அவர்  தன் மகளின் உடலை எடுத்துக் கொண்டு செல்வதற்காக இங்கு வந்தபோது முற்றிலும் மனம் உடைந்தவராக இருந்தார்.”

இத்தகைய ஆட்கடத்தல்காரர்கள் மேற்கு வங்கம், பீகார், அசாம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் ஏழ்மை நிரம்பிய கிராமங்களையே குறிவைத்து செயல்படுவதோடு, தங்கள் பெண்களை வேலைக்காக அனுப்பிவைக்கும் வகையில் பலவீனமான இந்தக் குடும்பங்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்றனர் எனவும் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

எனினும் இந்தச் சிறுமிகளும் இளம் பெண்களும் ஒழுங்குமுறை ஏதுமற்ற வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு, மிகக் குறைந்த செலவில் வீட்டில் தங்கி வேலை செய்பவர்களை எதிர்நோக்கும் மத்தியதர வர்க்கத்தினர் அதிகரித்துக் கொண்டே போகும் நகரங்களுக்கு குழுக்களாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

“வட மாநிலங்கள் பலவும் வீட்டுப் பணிப்பெண்களாக வேலைக்கு அமர்த்துவதை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை வடிவமைத்து வரும் நிலையில் இத்தகைய முகவர்களுக்கு தென் இந்தியா பாதுகாப்பான பகுதியாக மாறியுள்ளதாகத் தோன்றுகிறது” என மேனன் குறிப்பிட்டார்.

 “இந்த வழக்கு நம்மை உறக்கத்திலிருந்து எழுப்புவதாக அமைந்து விட்டது. மற்ற பெண்களும் அவர்கள் இறப்பதற்கு முன்பாக மீட்கப்பட்டு விடுவார்கள் என்றே நாங்கள் நம்புகிறோம்.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->