×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

பேட்டி – இந்தியாவின் திட்டமிடப்பட்டுள்ள வாடகைத் தாய்மார்கள் குறித்த சட்டம் வெளிநாட்டுப் பெண்களை கடத்தும் அபாயத்தை அதிகரித்துள்ளது – நிபுணர் கருத்து

by நீதா பல்லா | @nitabhalla | Thomson Reuters Foundation
Tuesday, 18 April 2017 16:38 GMT

- நீதா பல்லா

புது டெல்லி, ஏப். 18 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - வறுமையில் ஆழ்ந்திருக்கும் இந்தியப் பெண்களை சுரண்டுவதைத் தடுக்கவும், வளர்ந்து வரும் வாடகைத் தாய்களுக்கான தொழிலை ஒழுங்குபடுத்தவும் இந்தியா திட்டமிட்டுள்ள சட்டம் மேலும் அதிகமான வெளிநாட்டுப் பெண்கள் தங்கள் கருப்பைகளை வாடகைக்கு விடுவதற்காக நாட்டிற்குள் கடத்தி வருவதற்கு வழிவகுக்கும் என இத்துறை குறித்த முன்னோடி நிபுணர் ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று எச்சரிக்கை விடுத்தார்.

கருத்தரிக்க இயலாத, திருமணமான இந்திய தம்பதிகளுக்கு ‘மனிதாபிமான அடிப்படையில்’ வழங்க முன்வரும் வாடகைத் தாய்மார்களை அனுமதிக்கும் அதே நேரத்தில் வணிகரீதியான வாடகைத்தாய் முறைக்குத் தடைவிதிக்கும் வகையில் மசோதா ஒன்றை கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடியின் அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி அந்த வாடகைத் தாய் தம்பதிகளுக்கு உறவினராக இருக்க வேண்டும் என்பதோடு, இதற்கென அவர் பணம் எதையும் பெறவும் இயலாது.

இந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தச் சட்ட முன்வரைவு போதுமான அளவிற்குப் பயனுள்ளதாக இல்லை என “ பாலிடிக்ஸ் ஆஃப் த வாம்ப் – த பெரில்ஸ் ஆஃப் ஐவிஎஃப், சர்ரகஸி அண்ட் மாடிஃபைட் பேபீஸ்” என்ற நூலின் ஆசிரியரான பிங்க்கி விரானி தெரிவித்தார்.

 “தற்போதைய வடிவிலேயே இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்படுமானால், இந்தியாவின் வாடகைத்தாய் முறைக்கான மசோதா ஆட்கடத்தலை மேலும் தீவிரப்படுத்துவதாகவே இருக்கும்” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் விரானி குறிப்பிட்டார்.

 “இந்த வாடகைத் தாய் முறைக்கான சட்டம் மனிதாபிமானம் மிக்க அந்த வாடகைத்தாய் கட்டாயம் இந்தியக் குடிமகளாக இருக்க வேண்டும்; இந்தியாவிலேயே வசிப்பவராக இருக்க வேண்டும் என்று குறிப்பாக சொல்லவில்லையெனில், மனித உரிமைகள் மோசமான முறையில் தொடர்ந்து மீறப்பட்டு அது பயங்கரமாகவே நீடிக்கும்.”

குழந்தையில்லாத தம்பதிகள் இத்தகைய வாடகைத் தாய்களுக்கு பணம் தரவும், சட்டத்தை மீறவும் தயாராக உள்ள நிலையில், குற்றங்களில் ஈடுபட்டுவரும் குழுக்கள் மிக எளிதாக இவ்வாறு கடத்தி வரப்பட்ட பெண்களுக்கு வாடகைத்தாயாக இருப்பதற்குப் பொருத்தமானவர்கள் என்பதை நிரூபிக்க போலியான அடையாள ஆவணங்களை வழங்க முடியும்.

நேபாளம் போன்ற அண்டை நாடுகளிலிருந்து இத்தகைய வாடகைத்தாய் முறைக்காக இந்தியாவின் கருத்தரிப்பு மருத்துவமனைகளுக்கு பெண்கள் கடத்தி வரப்படுவது பற்றிய தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன என இத்தொழிலை கிட்டத்தட்ட பத்து வருடங்களாக ஆய்வு செய்து வரும் விரானி குறிப்பிட்டார்.

வணிகரீதியான வாடகைத்தாய் முறையில் 2002-ம் ஆண்டில்தான் இந்தியா நுழைந்தது. கருப்பைக்குள் விந்தைச் செலுத்துவது, கருவை கருப்பைக்குள் வைப்பது போன்ற செயல்முறைகளின் மூலம் மற்றொருவரின் மரபணு ரீதியான குழந்தையை சுமப்பதற்குப் பெண்களுக்கு பணம் அளிக்கும் முறையை செயல்படுத்தி வரும் ஒரு சில அமெரிக்க மாநிலங்கள், ஜார்ஜியா, ருஷ்யா, உக்ரெய்ன் போன்ற ஒரு சில நாடுகளோடு இந்தியாவும் இணைந்து கொண்டது.

மிகக் குறைந்த செலவிலான தொழில்நுட்பம், திறமையான மருத்துவர்கள், எதைப் பற்றியும் கவலைப்படாத அதிகார வர்க்கம், தொடர்ந்து தடையின்றிக் கிடைக்கும் வாடகைத்தாய்மார்கள் ஆகிய நிலைமைகள் இத்தகைய ‘கருவுறுவதற்கான சுற்றுலா’விற்கான விருப்பமான மையமாக இந்தியாவை மாற்றியது. இது மற்ற நாடுகளோடு பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாட்டவர்களையும் கவர்ந்திழுப்பதாக அமைந்தது என கருவுறுதல் தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் கருவுறுதல் தொழிலின் அளவு பற்றி சரியான புள்ளிவிவரங்கள் இல்லையெனினும், இந்தியாவின் வாடகைத் தாய்மார்கள் மூலம் ஆண்டுதோறும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கென 2,000 குழந்தைகளை உருவாக்கும் 3,000 கருவுறுதலுக்கான சிகிச்சை மருத்துவமனைகள் சேர்ந்து குறைந்தது 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையது என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த வாடகைத்தாய் தொழிலை பெண்களின் உரிமைகளுக்கான குழுக்கள் குறை கூறி வருகின்றன. இந்த மருத்துவமனைகள், ஏழ்மைநிறைந்த, படிப்பறிவில்லாத பெண்களை அவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளாத ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைத்து ஏமாற்றுகின்ற, பணம் படைத்தவர்களுக்காகக்  ‘குழந்தைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்’ தான் என்று அவை கூறுகின்றன.

வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு வந்து இத்தகைய வாடகைத்தாய்களை ஏற்பாடு செய்வதற்கு 2015 நவம்பரில் இந்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. எனினும் இந்திய தம்பதிகளுக்கு வணிக ரீதியான வாடகைத்தாய் முறை இப்போதும் அனுமதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் அரசு இதற்கு மேலும் ஒரு படி மேலே சென்று நாடாளுமன்றத்தின் மக்கள் அவையில் வாடகைத்தாய் முறை (ஒழுங்குபடுத்தும்) மசோதாவை அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா வணிகரீதியான வாடகைத்தாய் முறைக்கு தடை விதித்த போதிலும் மனிதாபிமான அடிப்படையில் குழந்தைபெற இயலாத, திருமணமான இந்தியத் தம்பதிகள் இந்த முறையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தது.

இவ்வாறு ஏற்பாடு செய்யப்படும் வாடகைத்தாய் முறை குறிப்பிட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் வாடகைத்தாய் முறைக்கான கழகங்களை நிறுவவும் இந்த மசோதா வழிவகை செய்திருந்தது.

எனினும் இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக இதிலுள்ள ஓட்டைகளை – குறிப்பாக ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் – அடைக்க அரசு முன்வர வேண்டும் என்று விரானி குறிப்பிட்டார்.

 “கருவுறச் செய்யும் அதிசய முறை என்பதாக ஏமாளிகள் நம்ப வேண்டும் என்று கருவுறுதல் செயல்முறைக்கான நிபுணர்கள் நினைப்பது போல வாடகைத்தாய் முறை ஒன்றும் அன்பு நிறைந்த ஒரு கருத்தல்ல. அது மரபணு குறித்த பேராசையை நிறைவேற்றுவதே ஆகும். இனப்பெருக்கத்தொழிலின் பணம் பெருக்கும் பேராசையால் அது ஊட்டி வளர்க்கப்படுகிறது.” என விரானி குறிப்பிட்டார்.

 “இவை அனைத்துமே இந்திய –நேபாள எல்லைப்பகுதி வழியாக திகைப்பில் ஆழ்ந்த பெண்கள் பேருந்துகளில் ஏற்றி வரப்பட்டு, இங்கு அவர்களின் வயிறுகள் வீங்கும் அதே நேரத்தில், அவர்கள் உடல் நலம் மோசமாவது குறித்ததாகும்.”

(செய்தியாளர்: நிதா பல்லா @nitabhalla; எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->