×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறப்புக் கட்டுரை – இந்தியாவின் நெசவு மையத்தில் செவிப்பறையைக் கிழிக்கும் விசைத்தறிகள் விரக்தியை மூடி மறைக்கின்றன

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Wednesday, 19 April 2017 15:23 GMT

Vijay Pradhan, 45, attends to the 12 power looms that he operates at a synthetic textile unit in Surat, India’s largest manufacturer of manmade fabric. THOMSON REUTERS FOUNDATION/Roli Srivastava

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

சூரத், ஏப்.19 - (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - இந்தியாவின் நெசவு மையமான சூரத் நகரில் ஜன்னல்களே இல்லாத ஓர் அறையில் அமர்ந்தபடி கீழ்த்தளத்தில் விசைத்தறிகள் எழுப்பும் ஒலியால் தரை நடுங்கிக் கொண்டிருக்க சிறியதொரு தொலைக்காட்சிப் பெட்டியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் உதயா பெஹரா.

இது வேகமாக ஓடிக் கொண்டிருக்கும், ஓய்வேயில்லாத விசைத்தறிகள் நிரம்பிய ஒரு சின்னஞ்சிறிய சந்திற்கு அப்பால் மற்ற 35 பேருடன் பகிர்ந்து கொண்டு வசிக்கும் அறையின் அந்திநேர அமைதிதான் பெஹராவிற்கு.

“நாள் முழுவதும் நான் 12 விசைத்தறிகளை இயக்கிக் கொண்டிருக்கிறேன். இந்த சத்தம் என்னைப் பெரிதும் பாதிக்கிறது. எனது தலை வலிக்கிறது” என 45 வயதான பெஹரா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அறையைச் சூழ்ந்திருந்த பலத்த சத்தத்திற்கு இடையே  உரக்கச் சொன்னார். “இப்போது இந்த இடம் அமைதியாகவே இருக்கிறது.”

கிட்டத்தட்ட 80 லட்சம் மக்கள், பெரும்பாலும் பெஹராவைப் போல் பெஹராவைப் போல் ஒடிசா மாநிலத்திலிருந்து வந்தவர்கள் இந்தியாவின் மேற்குப் பகுதி நகரமான சூரத் நகரில் உள்ள 6,00,000 விசைத்தறிகளை இயக்கிக் கொண்டிருக்கின்றனர். அங்குள்ள நிலைமைகள் அவர்களது கேட்கும் திறமையை மட்டுமின்றி, அவர்களின் உடல்நலத்தையும் மோசமாக்குவதாகவே உள்ளன.

தங்கள் வீடு இருக்கும் பகுதியில் வேலை கிடைக்கும் வாய்ப்பு இல்லாததாலேயே தாங்கள் இங்கே வேலை செய்வதைத் தேர்ந்தெடுத்திருப்பதாக தொழிலாளர்கள் கூறினாலும் கூட, அவர்களில் சிலர் இந்தியா முழுவதிலுமிருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என இது குறித்து பிரச்சாரம் செய்பவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

 “இதில் நீண்ட நாட்களாக வேலை செய்பவர்கள் இவ்வாறு ஆட்களைக் கொண்டு வருபவர்களாக மாறுகின்றனர். பயிர் வாடிப் போனது, சூறாவளிகளால் ஏற்பட்ட இழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட, வேலை தேவைப்படுகின்ற ஏழை மக்கள்  இவர்கள்” என குடியேறுபவர்களின் உரிமைகளுக்கான செயல்பாட்டாளரும் ஒடிசாவில் செயல்பட்டு வரும் எய்ட் எட் ஆக்‌ஷன் அமைப்பைச் சேர்ந்தவருமான உமி டேனியல் குறிப்பிட்டார்.

A shop stacked with saris in the textile market in the port city of Surat, which produces the highest volume of synthetic fabric in India. THOMSON REUTERS FOUNDATION/Roli Srivastava

இவர்கள் நெய்கின்ற துணி நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியது; எளிதாக கையாளப்படக் கூடியது; குறைந்த செலவிலானது. எனவே இந்தியா, வெளிநாட்டுச் சந்தைகளில் மிகவும் பிரபலமானவையாக மாறியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள செயற்கைத் துணியை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. ‘சுருக்கமில்லாத’ பள்ளி, ஓட்டல் சீருடைகளுக்கு மிகவும் பொருத்தமானது என ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகளில் உயர் நாகரீக வடிவமைப்பு ஆடைகளுக்கான மையங்களாலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

கேட்கும் சக்தி இழப்பு

தொழில் முறை சார்ந்த உடல்நலத்திற்கான தேசிய நிறுவனத்தின் ஆய்வு ஒன்றின்படி நெசவு நெய்பவர்கள் சுமார் 102 முதல் 104 டெசிபல்கள் வரையான ஒலியை எதிர்கொள்ள நேர்கிறது. இது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட 90 டெசிபல்களை விட அதிகமாகும் என்பதோடு கேட்கும் சக்தியை இழக்கும் அபாயத்தையும் ஏற்படுத்துவதாகும்.

ஆஜீவிகா ப்யூரோ என்ற இடம்பெயர் தொழிலாளிகளின் உரிமைகளுக்காகப் போராடும் குழுவைச் சேர்ந்த சஞ்சய் பட்டேல் கூறுகிறார்: “இங்கே 10-12 ஆண்டுகளாக வேலை செய்பவர்களுக்கு சரியான கேட்கும் சக்தி இருக்காது.  இவர்களில் பலராலும் 45 வயதிற்கு மேல் வேலை செய்ய முடியாது. எனவே அவர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பிச் சென்று விடுகிறார்கள்.”

இந்த நெசவாலைகள் பலவும் கேட்கும் சக்தியைப் பாதுகாப்பதற்கு காதில் செருகிக் கொள்ளும் ப்ளக்குகளை வழங்குவது என்ற அடிப்படையான பாதுகாப்பு வழிமுறைகளைக் கூட நிறைவேற்றுவதில்லை என்று பட்டேல் குறிப்பிட்டார்.

இந்த தொழிலகங்கள் பலவும் தொழிற்சாலைகள் என்பதற்குப் பதிலாக கடைகள் என்றோ அல்லது இதர வகைப்பட்ட நிறுவனங்கள் என்றோ பதிவு செய்து கொள்கின்றன. தொழிற்சாலைகள் என்று பதிவு செய்யப்பட்டால் அதிக ஒலி எழுப்பும் தொழில்களில் எட்டு மணி நேரம் மட்டுமே அதிகபட்சமாக வேலை செய்யலாம் என்பதோடு கூடுதல் வேலைநேரத்திற்கு கூடுதல் ஊதியம் தர வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு ஏற்படும்.

என்றாலும் தொழிலாளர்களிடமிருந்து சத்தம் தொடர்பான புகார்கள் எதையும் தாங்கள் பெறவில்லை என தொழிலாளர் நலத்துறையும் உள்ளூர் அரசு அதிகாரிகளும் கூறுகின்றனர்.

 “சம்பளம் கிடைக்கவில்லை என்ற புகார் மட்டுமே எங்களுக்கு வருகிறது. அதை நாங்கள் தீர்த்தும் வைக்கிறோம்.” என இந்தத் தொழிலகங்களை ஆய்வு செய்யும் பொறுப்புள்ள சூரத் நகராட்சியில் பணிபுரியும் ஓர் ஆய்வாளரான ப்பி. டி. பட்டேல் கூறினார்.

எனினும் இத்தகைய சுரண்டலுக்கான அபராதமும் கூட இதைத் தடுப்பதற்கான வகை செய்வதாக இல்லை. 2016ஆம் ஆண்டில் வேலை நேரங்கள் குறித்த விதிமுறைகளை மீறியதாகவோ அல்லது மதிய உணவிற்கான இடைவேளை விடவில்லை என்றோ ரூ. 25 லிருந்து ரூ. 750 வரையிலான அபராதம் கிட்டத்தட்ட 200 உரிமையாளர்களின் மீது விதிக்கப்பட்டது என பட்டேல் கூறினார்.

நோயும் மரணமும்

சூரத் நகர வீதிகளில் வண்ணமயமான துணிகளை எடுத்துக் கொண்டு பைக்குகளும், ட்ரக்குகளும், வேன்களும், கார்களும் பறந்து செல்வதை சர்வசாதாரணமாகக் காணலாம்.

வெளிச்சமிக்க, சந்தடிமிக்க இந்தச் சந்தைகள் இருக்கும் பகுதிக்கு ஒரு சில மைல்களுக்கு அப்பால் துணிக்கழிவுகளின் குவியல்கள் அழுகிக் கொண்டிருக்கும் இடங்களைச் சுற்றி இருக்கும் தூசி படிந்த கட்டிடங்களில்தான் இந்தத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

மோசமான ஊட்டச்சத்து, அடிப்படையான சுகாதார வசதிகள் இல்லாத நிலை, நீண்ட வேலை நேரங்கள், பாதுகாப்பற்ற பாலியல் பழக்க வழக்கங்கள் ஆகியவை ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை எச் ஐ வி/ எய்ட்ஸ் நோயிலிருந்து காச நோய் வரையில் பலவகையான நோய்களுக்கு ஆட்படுபவர்களாக ஆக்கியுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த விசைத்தறி தொழிலாளர்களின் குடும்பங்களிலிருந்து இறப்பிற்கான இழப்பீடு கோரி 40க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுள்ளதாக சூரத் நகரில் உள்ள உள்ளூர் அரசு அலுவலகம் தெரிவிக்கிறது.

 “இந்த மரணங்கள் அனைத்தும் இயற்கையானவை என்றே பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவர்கள் பெரும்பாலும் 40 முதல் 59 வயது வரையிலானவர்கள்” என ஓர் அதிகாரி குறிப்பிட்டார்.

பெரும்பாலன காச நோய் குறித்த விவரங்கள் இடம்பெயர்ந்து வந்த, நோயினால் பாதிக்கப்படும் வரை விசைத்தறிகளிலேயே வேலை செய்து வரும் தொழிலாளிகளைப் பற்றியதே ஆகும் என சூரத் நகரில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

”விசைத்தறி நிலையங்களில் மரணம் எதுவும் நிகழ்வதில்லை. அவர்கள் வீட்டுக்குத் திரும்பிச் சென்ற பிறகே இத்தகைய மரணம் நிகழ்கிறது” என தெற்கு குஜராத் பல்கலைக்கழக பேராசிரியரும் நெசவுத்தொழில் நிபுணருமான காகன் சாஹு கூறினார்.

நகர்ந்து செல்லும் இலக்குகள்

இப்போது 40 வயதான விப்ரா பத்யாலி 25 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு வேலை செய்யத் துவங்கியபோது நான்கு இயந்திரங்களில் அவர் வேலை செய்து வந்தார். அது சமாளிக்கக் கூடிய ஒன்றாகவே அவருக்குத் தோன்றியது.

“ஆனால் பத்தாண்டுகளுக்கு முன், நான் மேலும் அதிக இயந்திரங்களை இயக்கினால், மேலும் அதிக அளவில் துணியை உற்பத்தி செய்யலாம்; மேலும் அதிகமாகவும் சம்பாதிக்கலாம் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன்.” என இப்போது 12 இயந்திரங்களுக்கு இடையே நடந்தபடி வேலை செய்து வரும் பத்யாலி கூறினார்.

இங்குள்ள விசைத்தறித் தொழிலாளர்கள் அவர்கள் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு மீட்டர் துணிக்கும் இரண்டு ரூபாய்க்கும் குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக ரூ. 500 முதல் ரூ. 600 வரை அவர்கள் ஊதியம் ஈட்டுகின்றனர்.

 “மூன்று இயந்திரங்களை நான் இயக்கிக் கொண்டிருந்தபோது எனக்கு ஒரு மீட்டருக்கு 80 பைசா கொடுக்கப்பட்டது. நான் இயக்கும் இயந்திரங்களை ஆறாக அவர்கள் அதிகரித்தபோது, எனது ஊதியம் மீட்டருக்கு 70 பைசாவாக குறைத்து விட்டார்கள்.” என ஒடிசாவிலிருந்து புலம்பெயர்ந்தவரான தேவகர் பெஹரா கூறினார்.

தேவகர் அந்த வேலையிலிருந்து வெளியேறி இப்போது ஆட்டோ ரிக்‌ஷா ஒன்றை ஓட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் பெரும்பாலானவர்கள் வேறு வழியின்றி தங்கள் வேலையிலேயே ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 “தொடர்ந்து 72 மணி நேரம் வேலை செய்த தொழிலாளர்களையும் நாங்கள் பார்த்தோம். உடல்நலம் சரியில்லாத நண்பருக்காகவோ அல்லது தனது அறை நண்பருக்காகவோ இவ்வாறு கூடுதலாக அவர்கள் வேலை செய்கிறார்கள்” என சாஹு குறிப்பிட்டார்.“ தொழிலாளர்களுக்கு பேரம் பேசுவதற்கான அதிகாரம் மிக அரிதாகவே உள்ளது. அவர்கள் பெற வேண்டிய ஊதியம், வேலை நேரங்கள், இருப்பிட வசதிகள் ஆகிய அனைத்துமே கைவிடப்பட்டுள்ளன. மிக மோசமான வாழ்க்கையையே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.”

தறியின் குறுக்கே இழைகளை எடுத்துச் செல்லும் கருவி இல்லாமலும் விசைத்தறிகள் உள்ளன; அவை மிகக் குறைவான ஒலியையே வெளியிடுவதோடு, மிகச் சிறந்த தரத்திலும் துணிகளை உற்பத்தி செய்கின்றன. எனினும் பெரும்பாலான விசைத்தறி உரிமையாளர்கள் அவற்றை வாங்குவதற்கு இயலாதவர்களாக உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

A man rests on a pile of fabric in the textile market of Surat, a key textile hub of India and the largest manufacturer of synthetic fabric in the country. India exports $6 billion worth of synthetic fabric annually. THOMSON REUTERS FOUNDATION/Roli Srivastava

தனது கேட்புத் திறனை இழந்ததற்கும் தொடர்ந்து ஏற்படும் அயற்சிக்கும் தனது வேலையையே குற்றம் சாட்டுகிறார் பத்யாலி. “நான் உட்காரவே முடியாது. இயந்திரங்களில் உள்ள இழைகள் எல்லாம் நேராக இருக்கின்றனவா என்பதை, துணியில் எந்தவித மடிப்பும் இல்லை என்பதை நான் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.” என்று அவர் குறிப்பிட்டார்.

தான் தினமும் வணங்கும் இந்தியக் கடவுளர்களின் படங்களுக்கு நடுவே தனது மங்கிய வெளிச்சமுள்ள அறையில் அமர்ந்திருக்கும் பெஹரா உடல்நலத்துடன் தனது கிராமத்து வீட்டிற்குத் திரும்பவே ஆசைப்படுவதாகவும், நீடித்த இரைச்சல் நிரம்பிய இந்த வாழ்க்கையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா; எடிட்டிங்: எட் அப்ரைட். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->