×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

பாலியல் தொழிலுக்கான கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கு வங்க காவல்துறை உதவிக்கரம் நீட்டுகிறத

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Thursday, 20 April 2017 12:56 GMT

A rehabilitated sex worker counts the multiplication table with her fingers during an education programme in the red light district of Kalighat in Kolkata January 4, 2008. REUTERS/Parth Sanyal

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, ஏப். 20 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - பாலியல் தொழிலுக்காக கடத்தியவர்களிடமிருந்து மீட்கப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்ப உதவும் வகையில் தங்கள் வழக்கமான கடமையையும் மீறிய வகையில் மேற்கு வங்க காவல்துறையினர் நிதி திரட்டி வருகின்றனர்.

“இந்தப் பெண்கள் மிகவும் அரிதாகவே எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக உள்ளதோடு, தங்கள் வாழ்க்கையை நீண்ட நாட்களுக்கு நடத்திச் செல்லும் வகையில் வங்கிக் கடன்களை, அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான வழிவகைகள் இல்லாதவர்களாகவும் உள்ளனர்” என கிழக்கிந்தியாவில் இந்த நிதியுதவித் திட்டத்தை பரவலாக்கி வரும் காவல்துறை அதிகாரி சந்திரசேகர் பர்தன் குறிப்பிட்டார்.

“இது எங்கள் கடமை என்ற வரம்பிற்கு வரவில்லை என்றபோதிலும் நாங்கள் ஏதாவது செய்துதான் ஆக வேண்டும்.”

நாட்டிலேயே முதல்முறையாக துவங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் கடந்த மாதம் துவங்கியது. இதன்படி மறுவாழ்விற்கான தகுதி பெற்றவர்களாக மீட்கப்பட்ட  பெண்களில் 22 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதன்பிறகு இதே போன்ற நிலையில் உள்ள மேலும் 100 பெண்களை அணுகி இந்தப் பகுதி முழுவதிலும் இதே போன்ற முன்மாதிரியை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கை காவல்துறையிடம் எழுந்தது.

தனிப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யும் வகையில்தான் இந்த திட்டத்தை காவல்துறை வடிவமைத்துள்ளது. பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக அவர்களின் தேவைகளுக்கு நிதியுதவி செய்யுமாறு நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. இதில் ஒரு குழு தையல் தொழிலில் ஈடுபட விரும்பியது. மற்றொரு குழு சொந்த டாக்ஸி  சேவையைத் துவக்க விருப்பம் தெரிவித்தது. வறுமை, வேலையின்மை என்ற வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பாமல் வேறெந்த வழியையும் மேற்கொள்ளவே அவர்கள் விரும்பினர்.

மேய்ச்சல் நிலம்

இந்தியாவில் மதிப்பிடப்பட்டுள்ள வணிகரீதியான 2 கோடி பாலியல் தொழிலாளிகளில் ஒரு கோடியே 60 லட்சம் பெண்களும் சிறுமிகளும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக  நடைபெற்ற கடத்தலில் சிக்கியவர்களாவர். அவர்கள் பெரும்பாலும் பாலியல் ரீதியான சுரண்டல், கட்டாய உழைப்பு, குழந்தைத் திருமணம் ஆகியவற்றுக்காகவே கடத்தப்பட்டவர்களாவர்.

இந்தத் திட்டம் துவங்கப்பட்டுள்ள  தெற்கு 24 பர்காணா மாவட்டத்தில்  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன.  2010க்கும் 2013க்கும் இடைப்பட்ட காலத்தில் இத்தகைய கடத்தல்  குற்றங்கள் 80 சதவீத்த்திற்கும் மேலாக அதிகரித்ததை காவல்துறையின் பதிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

“வறுமையின் காரணமாகவும் , பிற்பட்ட நிலைமையின் காரணமாகவும் இந்தப் பகுதியானது ஆட்கடத்தலில் ஈடுபடுவோரின் மேய்ச்சல் நிலமாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது” என இவ்வாறு கடத்தலில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிலும், இந்த முன்னோடி திட்டத்தை ஆதரிப்பதிலும் ஈடுபட்டு வரும் கொரப்போஸ் க்ராம் பிகாஸ் கேந்த்ரா என்ற லாபநோக்கற்ற அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான சுபஸ்ரீ ரப்தான் கூறினார்.

2009-ல் நிகழ்ந்த அய்லா சூறாவளித் தாக்குதலுக்குப் பிறகு இந்தப் பிரச்சினை மேலும் மோசமானது; இப்பகுதியில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற நேரிட்டது எனவும் ரப்தான் குறிப்பிட்டார்.

வேலை இல்லை; வாய்ப்பும் இல்லை

இத்தகைய ஆட்கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட பிறகு இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் வறுமையும், ஒழுங்கமைவு இல்லாத குடும்ப வாழ்க்கை, வேலையற்ற நிலை ஆகிய நிலைக்கே திரும்பிச் செல்கின்றனர்.

வேலைதான் புதிய வாழ்விற்கான திறவுகோலாக அமைகிறது. இந்தப் பெண்களில் முதல் குழுவில் தையல் வேலையில் ஆர்வம் கொண்டவர்களும் அடங்கியுள்ளனர். இரண்டு பெண்கள் எழுதுபொருட்களுக்கான கடையை நடத்த  முன்வந்துள்ளனர். மற்றொருவர் தனக்கே சொந்தமான டாக்ஸியை ஓட்ட விரும்புகிறார்.

 “இந்தப் பகுதிக்கு மாற்றலாகி வந்த பிறகு,  இவ்வாறு கடத்தப்பட்டு, மோசமாக சீர்குலைக்கப்பட்டு, மருத்துவமனையில் வீசி எறியப்பட்ட  14 வயது சிறுமியின் வழக்கை நான் காணும் வரை  ஆட்கடத்தலின் வீச்சு எந்த அளவிற்கு உள்ளது என்பதைப் பற்றி அறியாதவனாகவே நான் இருந்தேன்.” என இந்தத் திட்டத்தை முன்னின்று நடத்தும் காவல்துறை அதிகாரியான பர்தான் குறிப்பிட்டார்.

“இனி இந்தப் பிரச்சனை நீடிக்கும் வரையில் இந்தத் திட்டமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: லிண்ட்ச்ய கிரிஃபித்ஸ். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->