×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

பேட்டி – சிரியாவின் மீதான தாக்குதல் நோபல் பரிசுபெற்றவரை யுத்தம் நடக்கும் பகுதிகளில் உள்ள குழந்தைகளைப் பற்றி பேச வைத்துள்ளது

by நீதா பல்லா | @nitabhalla | Thomson Reuters Foundation
Friday, 21 April 2017 13:00 GMT

Kailash Satyarthi, 2014 Nobel Peace Prize Laureate, takes part in a panel during the Clinton Global Initiative's annual meeting in New York, September 27, 2015. REUTERS/Lucas Jackson

Image Caption and Rights Information

- நீதா பல்லா

புது டெல்லி, ஏப். 21 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - மோதல்கள் நடக்கும் பகுதிகளில் சிக்கியிருக்கும் பல லட்சக்கணக்கான குழந்தைகள் குறித்து ஐ.நா. சபை முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், அகதிகளான இந்தக் குழந்தைகள் அடிமைத்தனத்திற்குக் கொண்டு தள்ளப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நோபல் பரிசு பெற்றவரும் குழந்தைகளின் உரிமைகளுக்கான செயல்பாட்டாளருமான கைலாஷ் சத்யார்த்தி வெள்ளியன்று தெரிவித்தார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவியான மலாலா யூசஃப்சாய் உடன் கூட்டாக 2014-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட சத்யார்த்தி ஏப்ரல் 4-ம் தேதியன்று நிகழ்ந்த வேதியியல் சார்ந்த குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்த சிரியா குழந்தைகள் குறித்த தொலைக்காட்சிப் படங்களைப் பார்த்ததே இதுபற்றி வெளிப்படையாகப் பேச தன்னைத் தூண்டியது என்று குறிப்பிட்டார்.

 “எப்போதுமே நான் இது பற்றிக் கவலையுடன்தான்  இருந்தேன். அகதிகள் நெருக்கடி பற்றியும் நான் பேசியிருக்கிறேன். குறிப்பாக சிரியாவைப் போன்ற மோதல்கள் நிரம்பிய பகுதிகளில் வாழும் குழந்தைகள் பற்றி” என சத்யார்த்தி தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

 “எனினும் சமீபத்தில் நிகழ்ந்த வேதியியல் சார்ந்த குண்டுகளின் தாக்குதல் என் மனசாட்சியை உலுக்கிப் போட்டது. இதை விட மோசமானது எதுதான் இருக்க முடியும்? இது குறித்து குரல்  எழுப்புவது மிகவும் முக்கியம் என்றும் ஆயுத ரீதியான மோதல்களில் இருந்து குழந்தைகளையும், குழந்தைகளான அகதிகளையும் காப்பாற்றுவதற்கு ஏதாவது ஒரு வகையில் செயலில் இறங்குவது நல்லது என்றும் நான் நினைத்தேன்.”

ஐ.நா. சபையின் குழந்தைகளுக்கான அமைப்பான யூனிசெஃப்-இன் கருத்துப்படி கிட்டத்தட்ட 25 கோடி குழந்தைகள் – அதாவது உலகத்தில் உள்ள குழந்தைகளில் ஒன்பதில் ஒருவர் – சிரியா, ஆப்கானிஸ்தான், ஏமன், நைஜீரியா உள்ளிட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வசித்து வருகின்றனர்.

இவர்களில் பலரும் மருத்துவ வசதி, பள்ளிப்படிப்பு, ஊட்டச்சத்து ஆகியவை கிட்டாதவர்களாகவே உள்ளனர். இத்தகைய பகுதிகளிலிருந்து தப்பித்துச் செல்பவர்கள் ஆட்கடத்தலுக்கும், வயல்கள், வீடுகள், ஓட்டல்கள், பாலியல் தொழில் மையங்கள் உள்ளிட்ட இடங்களில் கட்டாய வேலை செய்வதற்கென விற்கப்படுவதற்குமான அபாயத்திற்கு ஆளாகும் நிலையில் உள்ளனர். அகதிகளான ஒரு சில சிறுமிகள் தங்கள் பெண்ணைக் காப்பாற்ற கணவனால் முடியும் என்று நினைக்கும்  பெற்றோர்களால் திருமணம் செய்து கொடுக்கப்படுகின்றனர்.

ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் மோதல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என யுனிசெஃப் கூறுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 புதிய மோதல்கள் வெடித்தெழுந்துள்ளன அல்லது திரும்பவும் துவக்கப்பட்டுள்ளது. இவை குழந்தைகளின் மீது பேரழிவை உண்டாக்கக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

யூனிசெஃப்-இன் கருத்துப்படி, சிரியாவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்நாட்டிலேயே தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 20 லட்சம் சிரியா குழந்தைகள் லெபனான், துருக்கி, ஜோர்டான், எகிப்து, ஈராக் மற்றும் அதைத்தாண்டிய நாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர்.

இந்தியாவிலுள்ள செங்கற்சூளைகள், கற்சுரங்கங்கள், தரைவிரிப்பு தொழிற்சாலைகள், சர்க்கஸ்கள், வயல்கள் போன்ற இடங்களில் கொத்தடிமைகளாக இருந்த 80,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்ட பெருமை பெற்றவரான சத்யார்த்தி, துருக்கி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டபிறகு தாம் பெரிதும் மனம் குலைந்து போனதாகத் தெரிவித்தார்.

 “அவர்களது பாதுகாப்பை கருதும்போது வயது குறைந்த தங்கள் இளம் பெண்களை அதிக வயதுடைய ஆண்களுக்கு திருமணம் செய்து கொடுப்பதே நல்லது என்று நினைக்கும் பெற்றோர்களை நான் இந்த முகாம்களில் சந்தித்தேன்.” என்று அவர் கூறினார். “விபச்சாரிகளாக வாழ்க்கை நடத்துவதற்கோ அல்லது தங்கள் உடல் உறுப்புகளை விற்பதற்காகவோ குழந்தைகள் கடத்திச் செல்லப்படுகிறார்கள் என்றும் நான் கேள்விப்பட்டேன்.  இவர்களில் ஒரு சிலர் தீவிரவாத செயல்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, மனித வெடிகுண்டுகளாக செயல்படவும் தயார்ப்படுத்தப் படுகிறார்கள்.”

இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என 63 வயதான இந்த செயல்பாட்டாளர் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலை கேட்டுக் கொண்டார்.

 “மோதல்கள் நிகழ்ந்து வரும் பகுதிகளில் குழந்தைகள் குறித்த சிறப்புப் பதிவாளர் ஒருவரை வைத்திருப்பது போன்ற வழக்கமான அணுகுமுறை செயல்படக் கூடியதாக இல்லை. நாம் மேலும் துணிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்புக் கவுன்சிலின் நேரடித் தலையீட்டின் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும்” என சத்யார்த்தி தெரிவித்தார்.

மோதல்கள் நிகழ்ந்து வரும் பகுதிகளில் உள்ள அகதிகளான குழந்தைகள் உள்ளிட்ட குழந்தைகள் குறித்து தொடர்ந்து முறையாக அறிக்கை அளிக்கும் வகையில் உயர்மட்ட குழு ஒன்றை பாதுகாப்பு கவுன்சில் நியமிக்க வேண்டும்.  இந்தக் குழுவின் முடிவுகளின் அடிப்படையில் உறுப்பு நாடுகளால் இது குறித்த தீர்மானங்கள் உருவாக்கப்பட்டு, பாதுகாப்பு கவுன்சிலின் முன்பு வைக்கப்பட வேண்டும்.”

முன்னாள் அதிபர்கள், முன்னாள் பிரதமர்கள், தன்னைப் போன்று நோபல் பரிசு பெற்றவர்கள்  போன்ற இதர உலகத் தலைவர்களிடமும் இதுபற்றி தாம் பேசி வருவதாகவும், தமது கோரிக்கையை ஆதரிக்குமாறு கேட்டு வருவதாகவும் தெரிவித்த சத்யார்த்தி வரும் செப்டெம்பரில் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தின்போது ஐ.நா.வின் தலைவர் அண்டோனியோ குட்ரெஸ்-ஐ சந்திக்க முடியும் என்று நம்புவதாகவும் கூறினார்.

மோதல் பகுதிகளில் வாழும் குழந்தைகள் குறித்த ஐ.நா. சபையின் தீர்மானங்கள்  மேலும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் இந்த  அகதிக் குழந்தைகளை வரவேற்கும் வகையில் தங்கள் எல்லைகளை திறந்து வைத்திருக்க அமெரிக்காவைப் போன்ற பலம்பொருந்திய நாடுகளுக்கு ஊக்கமளிக்கும் என்றும் அவர் கூறினார்.

 “அவர்கள் செய்யாத குற்றங்களுக்கான தண்டனை அனுபவிப்பவர்களாக இந்தக் குழந்தைகள் உள்ளனர். எனவே ஒவ்வொரு இதயமும், ஒவ்வொரு வீட்டுக் கதவும், ஒவ்வொரு நாட்டின் எல்லையும் அவர்களுக்காக திறந்திருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார். “வலிமை என்பது ஏவுகணைகளை வீசுவதிலோ , குண்டுகளைப் போடுவதிலோ இல்லை; வலிமை என்பது கருணையில் அடங்கியுள்ளது.”

(செய்தியாளர்: நிதா பல்லா @nitabhalla; எடிட்டிங்: எம்மா பாதா. செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->