இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முடிவு கட்ட பள்ளியில் ‘வேலை செய்ய’ குழந்தைகளை அனுப்புங்கள் என்கின்றனர் செயல்பாட்டாளர்கள்

Tuesday, 2 May 2017 09:53 GMT

A boy wearing a plastic sack plays in an alley in a slum in Mumbai, India, April 20, 2016. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

சென்னை, மே. 2 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - இந்தியாவிலிருந்து ஆயத்த ஆடைகள், காலணிகள், தோல், இயற்கை கற்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்யும் பிரபல நிறுவனங்கள் தங்களுக்குப் பொருட்களை வழங்குபவர்களை வரையறுப்பதன் மூலமும், பள்ளியில் சேருவதை ஊக்கப்படுத்தும் வகையில் குழுக்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலமும் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத பகுதிகளை உருவாக்கவும் அவை நீடித்து நிற்கவும் உதவி செய்யவேண்டும் என செயல்பாட்டாளர்கள் செவ்வாயன்று கோரிக்கை விடுத்தனர்.

‘குழந்தைத்தொழிலாளர்களுக்கான முக்கிய பகுதிகளில்’ வசிக்கும் குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடிப்பதை உறுதி செய்யும் வகையில் நிறுவனங்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகளுடன் குழந்தைத் தொழிலாளர் முறையை நிறுத்துவதற்கான அறக்கட்டளைகளின் கூட்டணி சமீபத்தில் ஒரு பிரச்சாரத்தை துவக்கியது.

 “பிரபல வணிக நிறுவனங்கள் பொறுப்பேற்றுக் கொண்டு குழந்தைகளை பள்ளியிலேயே இருக்க வைக்க உதவும் வகையில் தங்கள் லாபத்தை பங்கிட்டுக் கொள்ள வேண்டும்” என இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தென்னிந்திய ஆயத்த ஆடைகளுக்கான மையமான திருப்பூரில் செயல்பட்டு வரும் ஓர் அறக்கட்டளையான சோஷியல் அவேர்னஸ் அண்ட் வாலன்டரி எடுகேஷன்  அமைப்பின் நிறுவனரான ஏ. அலோய்சியஸ் கூறினார்.

வயது வந்த தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைப்பதை உறுதி செய்வதிலிருந்து துவங்கி சேர்ப்புக்கான இயக்கத்திலும் கல்வி பெறுவதற்கான வசதியை மேம்படுத்தவும் கிராம சபைகளுடன் இணைந்து செயல்படுவது வரை இந்த இயக்கமானது “குழந்தைத் தொழிலாளிகளாக மாறுவதற்கான வாய்ப்புள்ள குழந்தைகள் பள்ளியில் மட்டுமே வேலை செய்ய” வைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கருத்துப்படி இந்தியாவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள 5 முதல் 17 வயது வரையுள்ள 57 லட்சம் குழந்தைத் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நிலங்களில் வேலை செய்கின்றனர். அதில் கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் துணிகளில் எம்ப்ராய்டரி செய்வது, தரை விரிப்புகளை நெய்வது, தீக்குச்சி செய்வது போன்ற உற்பத்தித் தொழில்களில் பணிபுரிகின்றனர்.

உணவகங்கள், ஓட்டல்களில் குழந்தைகள் வேலை செய்வதோடு, வீட்டு வேலை செய்பவர்களாகவும் அவர்கள் உள்ளனர்.

5 முதல் 9 வயது வரையிலான பிரிவில் உள்ள குழந்தைத்தொழிலாளர்களின் எண்ணிக்கை 2001-ஆம் ஆண்டில் இருந்ததை விட  2011ஆம் ஆண்டில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 2017ஆம் ஆண்டிற்கான யுனிசெஃப் அறிக்கை தெரிவிக்கிறது.

பல நிறுவனங்களும் தங்கள் சொந்த இடங்களில் குழந்தைகளை பணியில் அமர்த்துவதில்லை. எனினும் தங்கள் உற்பத்திச் செயல்முறையை குழந்தைத் தொழிலாளர் முறை பெருமளவு நிலவி வரும் சிறிய தொழிற்சாலைகளுக்கோ அல்லது வீடுகளில் இருந்து உற்பத்தி செய்பவர்களிடமோ துணை ஒப்பந்த முறையில் அளிக்கும்போது அதை சோதிப்பதற்கான ஏற்பாடு ஏதும் அவர்களிடம் இல்லை என இதற்கான இயக்கத்தை முன்னின்று நடத்துவோர் தெரிவிக்கின்றனர்.

 “குழந்தைத் தொழிலாளர் முறை பெரும்பாலும் பொருட்களை வழங்கும் வரிசையில் இதற்கும் கீழே நகர்ந்துள்ள நிலையில் இதை கண்காணிப்பதென்பது மிகவும் கடினமானதாக அதை மாற்றியுள்ளது” என இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஓர் அறக்கட்டளையான எம் வி ஃபவுண்டேஷனைச் சேர்ந்த வெங்கட் ரெட்டி கூறினார்.

தனியார் துறை, மக்கள் சமூகம், அரசாங்கம் ஆகியவை குழந்தைத் தொழிலாளர் இல்லாத பகுதிகளை உருவாக்குவதற்கான தலையீடுகளில் இணைந்து செயல்பட வேண்டுமென இந்தக் கூட்டணியின் வழிகாட்டி விதிமுறைகள் வலியுறுத்துகின்றன.

இந்த வழிகாட்டி விதிமுறைகளை அமல்படுத்திய பிறகு திருப்பூர் நகரில் சுமார் 20,000 குடும்பங்கள் வசித்து வரும் இரண்டு குடியிருப்புகளில் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என டிசம்பர் மாதத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது.

“இப்பகுதியைச் சேர்ந்த ஆயத்த ஆடை சிறு உற்பத்தியாளர்கள் இந்த விஷயத்தில் எங்களோடு இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டது இதுவே முதல்முறையாகும்” என அலோய்சியஸ் கூறினார்.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பருத்தி வயல்கள், ராஜஸ்தானில் உள்ள பளிங்குச் சுரங்கங்கள், ஆக்ராவில் உள்ள காலணி தயாரிப்பு தொழிலகங்கள் ஆகியவற்றில் வெற்றிகரமாகத் தலையிட்டதில் பெற்ற அனுபவங்களிலிருந்தே இந்த வழிகாட்டி விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.

 “பொருட்களின் தரத்தை சோதிப்பதற்கென ஒரு பிரிவு இருப்பதைப் போலவே, பிரபல நிறுவனங்களும் தங்கள் தொழிற்சாலைகளில் சமூகப் பொறுப்பிற்கான ஒரு பிரிவை இணைத்துக் கொள்ள வேண்டும்” என ரெட்டி குறிப்பிட்டார்.

 “இத்தகைய நிறுவனங்களுக்கு பொருட்களை சப்ளை செய்வோர் மிகவும் ஆழமாக ஊடுருவியுள்ளனர். இதை அந்த நிறுவனங்களும் அறிந்தே உள்ளன. பள்ளிகள் எதையும் அவர்கள் கட்டித் தர வேண்டியதில்லை. குழந்தைகளை பள்ளியிலேயே இருக்க வைப்பதற்கான திட்டங்களில் அவை பங்கேற்றாலே போதுமானது.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: அலிசா டாங். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.