×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

ஆட்கடத்தல்காரர்கள் என ‘சந்தேகத்திற்கு’ ஆளானவர்களை பொதுமக்கள் அடித்துக் கொன்றதை இந்தியாவில் ஆட்கடத்தலுக்கு எதிராக செயல்படுவோர் கண்டித்துள்ளனர்

by நீதா பல்லா | @nitabhalla | Thomson Reuters Foundation
Monday, 22 May 2017 14:56 GMT

A local woman prepares to carry coal at an open coal field at Dhanbad district in the eastern Indian state of Jharkhand in this 2012 archive photo. REUTERS/Ahmad Masood

Image Caption and Rights Information

- நீதா பல்லா

புதுதில்லி, மே 22 –ஜார்க்கண்ட் மாநிலத்தில் குழந்தைகளைக் கடத்திச் செல்வதற்காக ஆட்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று பரவிவரும் வதந்திகளை அடுத்து பொதுமக்கள் தொடர்ந்து பலரை அடித்துக் கொல்வதை  எதிர்த்து, பெண்களையும் குழந்தைகளையும் கடத்திச் செல்வதை  எதிர்த்துப் போராடிவரும் இந்திய செயல்பாட்டாளர்கள் கடந்த திங்கட்கிழமையன்று கண்டனம் தெரிவித்தனர்.

குழந்தைகளை அவர்களது உடல் உறுப்புகளுக்காகக் கடத்திச் சென்று பல்வேறு குழுக்களும் கொல்கின்றன என்று வாட்ஸப் செய்திச் சேவையில் பரவிய வதந்திகளை அடுத்து கடந்த வாரத்தில் தெற்கு ஜார்க்கண்ட் பகுதியில் நிகழ்ந்த இருவேறு சம்பவங்களில் ஏழு பேர் கும்பல்களால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

இந்தப் படுகொலைச் சம்பவங்கள் இந்தியாவின் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்திகளாக வெளியாயின. இத்தகைய சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, அடிக்கப்பட்டு, ரத்த காயங்களுடன் இருக்கும் ஒருவர் தான் நிராபராதி என்று கூறி தன் உயிருக்காக வேண்டிக் கொண்டிருக்கும்  காட்சி சமூக ஊடகத்தின் மூலமாக வீடியோவாக, புகைப்படமாக தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் வெளியாகியிருந்தன.

இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் இத்தகைய சம்பவங்களில் பங்கேற்றதாக சந்தேகப்படும் கும்பல்களைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மேலும் ஏழு பேர் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை தெரிவித்தது.

 “இதுவரை கண்டிராத வகையில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது மிகவும் துயரத்திற்குரியது” என என் டி டிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்  ஜார்க்கண்ட் மாநிலத்தின் செயல்பாடுகளுக்கான காவல்துறை தலைவர் அசீஷ் பத்ரா குறிப்பிட்டார்.

“இத்தகைய செய்திகள் மக்களின் மனதில் ஒருவிதமான பய உணர்வை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக அவர்கள் உணரத் துவங்குகின்றனர்.”

இந்த வழக்குகள் குறித்து விசாரித்து வரும்போதிலும், இத்தகைய சம்பவங்களில் (அடித்துக்) கொல்லப்பட்டவர்கள் குழந்தைகளைக் கடத்தும்  ஈடுபட்டவர்கள் என்பதற்கான சான்று எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சமீப ஆண்டுகளில் ஆட்கடத்தல் குறித்த தகவல்கள் இந்தியாவில் அதிகமாக வெளியாகத் துவங்கியுள்ளன. 2016ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 20,000 பெண்களும் குழந்தைகளும் ஆட்கடத்தலுக்கு  ஆளாகியுள்ளனர். அரசின் புள்ளிவிவரங்களின்படி இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 25 சதவீதம் அதிகமாகும்.

இவ்வாறு ஆட்கடத்தலுக்கு ஆளாகுவோரில் சுமார் பாதிப்பேர் குழந்தைகள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, அசாம், பீகார், ஜார்க்கண்ட், புதுதில்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

குறிப்பாக கிராமப்புறங்களில் இதுபற்றிய விழிப்புணர்ச்சி அதிகமில்லாத நிலையில், தங்கள் குழந்தைகளை வேலைக்காக தங்களுடன் அனுப்புமாறு கூறி அங்குள்ள ஏழைக் குடும்பங்களை கடத்தல்காரர்கள் ஏமாற்றி வரும் நிலையில் இந்தப் புள்ளிவிவரங்கள் முழுமையான விவரங்களை தருவதல்ல என்று செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களில் பலரும் பணக்கார்ர்களின் வீடுகளிலும், ஓட்டல்களிலும், உணவகங்களிலும், பாலியல் விடுதிகளிலும்கூட விற்கப்பட்டு அடிமைகளைப் போன்ற நிலைமைகளில் வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஆட்கடத்தலுக்கு எதிரான அறக்கட்டளையான சக்தி வாஹினி அமைப்பைச் சேர்ந்த ரிஷிகாந்த் இவ்வாறு ஆட்களை அடித்துக் கொள்வதை கண்டனம் செய்தார். இத்தகைய சம்பவங்கள் மோசமான சட்டம்-ஒழுங்கு நிலைமை என்ற பிரச்சனையை எடுத்துக் காட்டுவதோடு, புதிய தொழில்நுட்பங்களின் மூலம் பரவும் வதந்திகளைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சவால்களையும் நமக்குத் தெரிவிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து குழந்தைகளும் பெண்களும் கட்த்தப்படுகிறார்கள் என்ற பிரச்சனை நிலவுவது நமக்குத் தெரியும். தங்களின் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கல் என்பதும் உண்மைதான். என்றாலும் இத்தகைய சம்பவங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை” என காந்த் தெரிவித்தார்.

“ காவல் துறையை வலுப்படுத்த வேண்டும்; மேலும் சிறப்பான வகையில் சட்டத்தை  அமல்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே இது தெரிவிக்கவில்லை.  சமூக ஊடக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதற்கான வாய்ப்புள்ளது என்பதையும், சட்டத்தை அவர்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதையும் மக்கள் புரிந்து கொள்வதை செயல்பாட்டாளர்களாகிய நாம் உறுதிப்படுத்த வேண்டும்.”

(செய்தியாளர்: நிதா பல்லா @nitabhalla; எடிட்டிங்: எம்மா பாதா. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->