×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்தவர், அடிமைத்தனம் குறித்து மற்றவர்களுக்கு எச்சரிக்கை அளிப்பதற்காக எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடித்தார்

by நீதா பல்லா | @nitabhalla | Thomson Reuters Foundation
Monday, 22 May 2017 17:22 GMT

Kanchii Maya Tamang, a Nepali survivor of human trafficking, poses for a photo after climbing Mount Everest in Nepal to highlight the dangers of trafficking and modern day slavery. Photo taken on May 20, 2017. Handout via TRF/Pemba Dorje Sherpa/UN Women Nepal

Image Caption and Rights Information

புதுதில்லி, மே 22 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – கடத்தப்பட்டு, சுரண்டப்பட்டு, எகிப்தில் வீட்டுவேலைக்காரியாக இருந்தபோது மோசமாக நடத்தப்பட்ட நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் இமாலய மலைச்சரிவில் உள்ள தனது வறுமைநிரம்பிய நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் கட்த்தலுக்கு ஆளாகி அடிமைத்தனத்தில் உழல அவர்கள் விற்கப்படும் நிலையில் உள்ள அபாயங்களை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாக உலகத்தின் மிக உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடித்துள்ளார்.

28 வயதே ஆன காஞ்சி மாயா தமாங் என்ற அந்தப் பெண் தான் மனித ஆட்கடத்தலுக்கு ஆளாகி உலகத்தின் உயர்ந்த மலைச்சிகரத்தை எட்டிப்பிடித்த  முதல் நபர் என்று கருதப்படுகிறது.

தமாங்-கின் இந்த மலையேறும் முயற்சிக்கு உதவி செய்த யு. என். வுமன் இன் நேபாள் என்ற அமைப்பு எவரெஸ்டின் சிகரத்தை கடந்த சனிக்கிழமையன்று அவர் தொட்டார் என்ற செய்தியை ஓர் அறிக்கையின் மூலம் திங்களன்று வெளியிட்டது.

எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமிலிருந்து தமாங் தெரிவித்த ரேடியோ அறிவிப்பில் “ நேபாளத்தில் பெண்கள், சிறுமிகள் அதிகமான ஆட்கடத்தலுக்கு ஆளாகும் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள எனது மாவட்டத்திலிருந்து பெண்களும், சிறுமிகளும் கட்டாயமாக வெளியே அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான் எனது இந்த முயற்சியின் முதலும் முடிவுமான நோக்கமாகும்.” என்று தெரிவித்தார் என இந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

“கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பப்பட்ட பெண்களுக்கும் என்னைப்போன்று நாட்டுக்குத் திரும்பிய பெண்களுக்கும் உள்ளூர் அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான முன்முயற்சிகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். நாம் பெண்களுக்கு உரிய அதிகாரம் அளிக்க வேண்டும். அவர்களிடம் கயிறைத் தர வேண்டும்; ஏற வேண்டிய மலையைச் சுட்டிக் காட்ட வேண்டும்; பின்பு அவர்கள் அதில் ஏறச் சொல்ல வேண்டும்.”

2014-15ஆம் ஆண்டுப்பகுதியில் 9,500 வரையிலான மக்கள் ஆட்கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டனர் என நேபாளத்தின் தேசிய மனித உரிமைகள் கமிஷன் தெரிவிக்கிறது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 12 சதவீதம் அதிகமாகும்.

குறிப்பாக 2015-ல் இரண்டு மிகப்பெரும் பூகம்பங்கள் நேபாளத்தை தாக்கியபிறகு, வெளிநாடுகளில் வசதியானதொரு வாழ்க்கையை அளிப்பதாக உறுதி கூறும் ஆட்கடத்தல்காரர்களிடம் மக்கள் பலரும் இரையாகும் நிலைக்கு ஆளான நிலையில் இந்தப் புள்ளிவிவரங்கள் பிரச்சனையின் தீவிரத்தை மிகவும் குறைவாகப் புரிந்து கொள்வதாகவே உள்ளது என இதுகுறித்த இயக்கங்களில் ஈடுபடுவோர் தெரிவித்தனர்.

நேபாளத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் குழுக்கள் வறுமையில் வாடும் பெண்களையும் சிறுமிகளையும் ஏமாற்றி அண்டைநாடான இந்தியாவிலும், மத்தியக் கிழக்கு நாடுகள் போன்றவற்றிலும் உள்ள நகரங்களில் உள்ள வீடுகளில் அடிமைகளாக வேலை செய்வதற்கும் அனுப்பி வைக்கின்றனர். வேறு பலரும் பாலியல் விடுதிகளுக்கு விற்கப்படுகின்றனர். ஆண்கள் உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளிகளாக வேலை செய்ய கடத்தப்படுகின்றனர்.

நேபாளத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மாவட்டமான சிந்துபால் சவுக் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தமாங் இந்தியாவிற்குக் கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் எகிப்து நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் வீட்டு உதவியாளராக ஆறு ஆண்டுகளுக்கு வேலை செய்தார்.

அவருக்குத் தரவேண்டிய மாதச் சம்பளம் மறுக்கப்பட்டதோடு, அங்கிருந்து தப்பித்து, மீண்டும் நேபாளத்திற்குத் திரும்புவதற்கு முன்பாக அவரை வேலைக்கு வைத்திருந்த முதலாளியின் வசவுகளையும், மனோரீதியான துன்புறுத்தல்களையும் அவர் சந்திக்க வேண்டியிருந்தது.

அப்போதிலிருந்தே தனது மாவட்டத்திலிருந்து இவ்வாறு பெண்களும், சிறுமிகளும் வெளியே அனுப்பி வைக்கப்படுவதையும், தன்னைப் போன்றே துயரத்திற்கு ஆட்படுவதையும் தடுக்க அவர் வேலை செய்து வந்தார். அவரது இனத்தவரிடையே சிறுமிகளின் கல்வி, மேலும் அதிகமான வாய்ப்புகளுக்கான கோரிக்கை எழுப்புவது ஆகியவற்றில் முக்கியமானதொரு குரலாகவும் அவர் உருவெடுத்தார்.

வாய்ப்பு மட்டும் கிடைக்குமானால் எதையும் அவர்களால் அடைய முடியும் என்பதை நேபாளத்திலுள்ள பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எடுத்துக்காட்டுவதற்காகவே 8,848 மீட்டர் (29,029 அடி) உயரமுள்ள மலைஉச்சியை எட்டிப் பிடிக்கத் தாம் விரும்பியதாக தமாங் குறிப்பிட்டார்.

மிகவேகமாக மலை மேல் ஏறுவதற்கான சாதனையைப் படைத்துள்ள பெம்பா டோர்ஜே ஷெர்ப்பா வின் தலைமையில் 20 பேரைக் கொண்ட குழுவோடு இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்ட தமாங் மே 20 அன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 6 மணிக்கு எவரெஸ்ட் மலைச்சிகரத்தை எட்டிப் பிடித்தார். அந்த சிகரத்தில் ஏறிய பிறகு, “நாங்கள் மனிதர்கள், சொத்துக்கள் அல்ல; ஆட்கடத்தலை  தடுத்து நிறுத்துவோம்!” என்று எழுதப்பட்ட போஸ்டரையும் அவர் உயர்த்திப் பிடித்தார்.

“எனது வெற்றி பெண்கள், சிறுமிகள் அனைவரின் வெற்றியும் ஆகும்” என்றார் தமாங்.        “தங்களின் மனிதத் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்கி, அனைத்து பெண்களும் சிறுமிகளும் சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கும் பாரபட்சமற்றதொரு நேபாளத்திற்காக எனது பங்களிப்பை செலுத்துவது என்பதே எனது நோக்கமாகும்.”

(செய்தியாளர்: நிதா பல்லா @nitabhalla ; எடிட்டிங்: எம்மா பாதா. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->