×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்தியாவின் சிறு, பெரு நகரங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன

by நீதா பல்லா | @nitabhalla | Thomson Reuters Foundation
Friday, 2 June 2017 09:39 GMT

புதுதில்லி, ஜூன் 2 – (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) இந்தியாவின் சிறு, பெரு நகரங்களில் அதிகாரபூர்வமான திருமண வயதிற்குக் கீழே உள்ள சிறுமிகளை திருமணம் செய்து கொடுத்துவிடும் வழக்கம் அதிகமாகியுள்ளது என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. குழந்தைத் திருமணம் என்பது பெரும்பாலும் கிராமப்புறங்களில் மட்டுமே நடக்கும் ஒரு விஷயம் என்ற நீண்ட நாட்களாகவே நிலவி வரும் கருத்துக்கு சவால் விடுவதாக இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது.

குழந்தைத் திருமணம் என்பது இந்தியாவில் சட்டத்திற்குப் புறம்பானதாகும் என்ற போதிலும் இப்பழக்கம் சமூகத்தில் ஆழமாகப் பதிந்து, பொதுவாக ஏற்கப்பட்ட ஒன்றாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விரிவாக நடைபெறும் நிகழ்வாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது. 2011ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களிலிருந்து 50 லட்சத்திற்கும் மேலான சிறுமிகள் சட்டபூர்வமான திருமணம் செய்யும் வயதான 18 வயதை எட்டுவதற்கு முன்பாகவே திருமணம் செய்து கொடுக்கப்படுகின்றனர் என்பதைத் தெரிவிக்கிறது – 2001 முதல் ஓரளவிற்கு குறைந்துள்ளது.

2001ஆம் ஆண்டிற்குப் பிறகு கிராமப் புறங்களில் சிறுவயது சிறுமிகள் மணப்பெண்களாக ஆக்கப்படுவது 0.3 சதவீதம் குறைந்துள்ள அதே நேரத்தில் நகரப் பகுதிகளில் இது 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது  என குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய கமிஷன் மற்றும் யங் லைவ்ஸ் என்ற அறக்கட்டளை ஆகியவற்றின் ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த சதவீதம் மிகக் குறைவானதாகத் தோன்றிய போதிலும், இந்தியாவின் மக்கள்தொகை 130 கோடி என்பதை கணக்கில் எடுக்கையில் , 2001க்குப் பிந்தைய பத்தாண்டுகளில் இந்தியாவின் சிறு, பெரு நகரங்களில் திருமண வயதை எட்டாத பத்தாயிரக்கணக்கிலான சிறுமிகள் திருமணம் செய்து கொடுக்கப்படுகின்றனர் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.

“இதில் மிகவும் வியப்பூட்டும் விஷயம் என்னவெனில், இவ்வாறு குழந்தைத் திருமணங்கள் அதிகம் நிகழ்கின்ற பகுதிகளில் எண்ணற்ற நகர்ப்புறங்களும், குறிப்பாக பெருநகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகள்  இதில் இடம்பெறும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது என்பதே ஆகும்” என யங் லைவ்ஸ் அறக்கட்டளையின் நாடுதழுவிய இயக்குநரான ரேணு சிங் கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்ற ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

“இதில் மேலும் வியப்பூட்டுவது என்னவெனில், நகர்ப்புறங்களில் 10 வயதிலிருந்து 14 வயது வரையான சிறுமிகள் பிரிவில் பெரும் எண்ணிக்கையிலான சிறுமிகள் திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள் என்பதே ஆகும். இப்படியொரு நிலை இருக்காது என்பதே பலரின் நம்பிக்கையும் எண்ணமும் ஆக இருந்து வந்துள்ளது.”

முதல் முறையாக இந்தியாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களை குழந்தைத் திருமணம் குறித்த தனது ஆய்விற்கு எடுத்துக் கொண்ட்தில் இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் நான்கில் ஒரு சிறுமியும்  நகர்ப்புறப் பகுதிகளில்  ஐந்தில் ஒரு  சிறுமியும் என 18 வயதிற்குக் கீழான சிறுமிகள் திருமணம் செய்து கொடுக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

2001க்கும் 2011க்கும் இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் இந்தியாவின் வடக்கில் உத்திரப் பிரதேசம், தெற்கில் தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில்  ஒரு சில நகர்ப்புற மாவட்டங்களில் திருமண வயதை எட்டாத சிறுமிகள் திருமணம் செய்து கொடுக்கப்படுவது அதிகமாகியுள்ளது என இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இத்தகைய சம்பவங்கள் ஏன் ஒரு சில குறிப்பிட்ட சிறு நகரங்களிலும், பெரு நகரங்களிலும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள நேரமாகலாம் என்று கூறிய ரேணு சிங்,  இதற்கான காரணங்களை அறிந்து கொள்ள மேலும் அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

சிறுமிகள், பெண்கள் ஆகியோருக்கு அதிகாரமளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும், இந்தக் குற்றத்திற்கான தண்டனைகள் மேலும் கடுமையானதாக ஆக்கப்பட்ட போதிலும், நைஜர், கினியா, தெற்கு சூடான், சாட், புர்கினா ஃபாஸோ ஆகிய நாடுகளோடு குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறும் முதல் பத்து இடங்களில் உள்ள  நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

வறுமை, சட்டங்களை அமல்படுத்துவதில் நிலவும் தொய்வு, ஆணாதிக்கம் கொண்ட சமூக நியதிகள், குடும்பத்தின் நற்பெயர் குறித்த கவலைகள் ஆகியவை இவ்வாறு சட்டபூர்வமான வயதுக்கு முன்பாகவே பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்படுவதற்கான அம்சங்களாக விளங்குகின்றன.

எனினும் இத்தகைய நடைமுறையானது பெண்களின் மேம்பாட்டிற்கான அனைத்துப் பிரிவுகளையும் தாண்டிய வகையில் குழந்தைகளின் உரிமைகளை மீறுவதாக, ஊட்டச்சத்துக் குறைவு, உடல்நலக் குறைவு, அறியாமை போன்றதொரு விஷச் சக்கரத்தை உருவாக்குவதாக உள்ளது இத்துறை குறித்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்படும் சிறுமிகள் பெரும்பாலும் தங்கள் பள்ளிப்படிப்பை நிறுத்த நேரிடுவதோடு, கர்ப்ப காலத்திலும், குழந்தைப்பேறு காலத்திலும் மிக மோசமான சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிடும். இதன் மற்றொரு பக்கமாக, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், பெரும்பாலும் எடை குறைந்தவர்களாக, ஐந்தாண்டுகளுக்கு மேல் உயிர்பிழைத்திருப்பதே மிகவும் அதிர்ஷ்டம் என்ற நிலை கொண்டவர்களாக இருப்பார்கள்.

(செய்தியாளர்: நிதா பல்லா @nitabhalla; எடிட்டிங்: அலிசா டாங். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->