×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறப்புக் கட்டுரை – இந்தியாவின் நெசவுத் தொழில் மையத்தில் வெறும் வயிற்றில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள்

Wednesday, 7 June 2017 13:24 GMT

- அனுராதா நாகராஜ்

திண்டுக்கல், ஜூன் 07 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - ஆனந்தி முருகேசனின் வீட்டில் இருக்கும் பானைகளும் சமையல் பாத்திரங்களும் காலியாகவே இருக்கின்றன. கீழே தரையில் கையளவு காய்கறிகள் கிடக்கின்றன. இரவு உணவு இன்னும் தயாராகவில்லை.

15 வயதான ஆனந்தி கடைசியாகச் சாப்பிட்டது கொஞ்சம் சாதமும் மீந்துபோன பருப்பும்தான். எட்டு மணி நேரத்திற்குப் பிறகு புதிதாக சமைத்த உணவு இன்னமும் அவர் கண்ணில் தென்படவில்லை.

“சாதம் கொஞ்சம் இருக்கிறது. என் தங்கை கொஞ்சம் ரசம் வைத்து விடுவாள்” என்று தமிழ்நாட்டின் மஞ்சநாய்க்கன்பட்டி கிராமத்தில் இருக்கும் தன் இரண்டு அறைகளை மட்டுமே கொண்ட வீட்டில் இருக்கும் இடுக்கமான சமையல் அறையில் அமர்ந்தபடி சொன்னார் அவர்.

தான் வேலை செய்யும் ஒரு நெசவாலையில் பத்து மணி நேர வேலையை முடித்துக் கொண்டு திரும்பியிருந்த அவர் “ எப்படியிருந்தாலும் எனக்கு பசி எடுக்கவில்லை. சோர்வாகத்தான் இருக்கிறேன்.” என்று கூறினார்.

ஆண்டுக்கு சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு விற்பனை செய்யும் இந்தியாவின்  ஆயத்த ஆடை மற்றும் நெசவாலைத் தொழிலில் முக்கிய மையமாக விளங்கும் தென்னக மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1,600 நெசவாலைகளில் வேலை செய்யும் 4,00,000 தொழிலாளர்களில் ஆனந்தியும் ஒருவர்.

இந்தப் பகுதியில் நல்வாழ்வு முகாம்களை நடத்தி வரும் மருத்துவர்களின் கருத்துப்படி இந்தத் தொழிலில் வேலை செய்யும் பெரும்பாலான பதின்பருவ சிறுமிகளைப் போலவே அவரும் அதிக அளவு வேலை செய்பவராக, குறைந்த எடையுள்ளவராக, சோகைநோய் உள்ளவராக, வேலை நேரத்தில் பசியோடு இருப்பவராகவே இருக்கிறார்.

 “இந்தப் பெண்களில் 50 சதவீதத்திற்கும்  மேற்பட்டவர்கள் நாள் முழுவதும் பட்டினியாகவே இருக்கின்றனர். வேலைக்குப் போகவேண்டும் என்ற அவசரத்தில் இவர்கள் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுகின்றனர்; அல்லது பெயரளவிற்கே சாப்பிடுகின்றனர்.” என பெங்களூரு நகரில் செயல்பட்டு வரும் செயிண்ட் ஜான் மெடிக்கல் காலேஜின் மக்கள் சுகாதாரத் துறையின் தலைவரான டாக்டர் பாபி ஜோசஃப் கூறினார்.

ஆயத்த ஆடைத் துறையில் நிலவிவரும் சுகாதாரம் குறித்து ஆய்வை மேற்கொண்ட ஜோசஃப் கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள் குறித்த விவரங்களை சேகரித்துள்ளார்.

இவர்களில் கிட்டத்தட்ட 45 சதவீதம் பேர் இருக்க வேண்டிய எடையை விடக் குறைவானவர்களாக உள்ளனர் என்பதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இவர்களில் பெரும்பாலான இளம்பெண்கள் மிகவும் அரிதாகவே பழங்கள் அல்லது காய்கறிகளை உண்கின்றனர்.

மாதத்திற்கு ஒரு முட்டை

திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவ முகாம் ஒன்றை நடத்தியபோது பெரும்பாலான இளம் தொழிலாளர்கள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என  லாப நோக்கற்ற அறக்கட்டளையான செரீன் செக்யூலர் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி கண்டறிந்த விவரங்களை அப்படியே எதிரொலிப்பதாகவே இந்த ஆய்வு முடிவுகள் உள்ளன.

 “அவர்கள் உண்ணும் உணவில் போதுமான கலோரிகள் இருப்பதில்லை” என தொழிலாளர்களின் உரிமைகளுக்காகச் செயல்படும் இந்த சொசைட்டியைச் சேர்ந்த எஸ். ஜேம்ஸ் விக்டர் குறிப்பிட்டார்.

“இவர்களில் 65 சதவீதம் பேர் மாதத்திற்கு ஒரு முறை பிராய்லர் சிக்கன் அல்லது ஒரு முட்டையை மட்டுமே உண்கிறார்கள் என்பதையும் 11. 2 சதவீதம் பேர் மட்டுமே மாதத்திற்கு ஒரு முறை கீரை உண்கிறார்கள் என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். அவர்கள் செய்யும் வேலைக்கு இந்த உணவு போதுமானதல்ல.”

ஆனந்தியின் விருப்பமான பொறியல் என்பது தேங்காயைத் துருவிப் போட்ட ஒரு வகையான அகலமான பீன்ஸ்-ஐக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும்.

ஆனால் கடைசியாக அந்தப் பொறியலை எப்போது சாப்பிட்டோம் என்பதை அவரால் நினைவு கூரமுடியவில்லை.

“அப்படியெல்லாம் நாங்கள் காய்கறிகளைச் சாப்பிடுவதில்லை.  ஒன்றிரண்டு காய்களை பருப்போடு சேர்த்து விடுவோம். பின்பு அதை ஊறுகாயைத் தொட்டுக் கொண்டபடி சாதத்துடன்  பிசைந்து சாப்பிட்டு விடுவோம்.” என அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

தான் வாங்கும் மாத சம்பளமான சுமார் ரூ. 5,500-ல் பெரும்பகுதி வலியைப் போக்கும் தைலங்கள், மருந்துகள் ஆகியவற்றுக்கே செலவாகி விடுகின்றதே தவிர, உணவுக்கு அல்ல என்றும் அவர் கூறினார்.

ஆனந்தி சூரியன் உதிக்கும் நேரத்தில் விழித்தெழுந்து, ஒரு கப் டீயைக் குடித்துவிட்டு, காலை 6 மணிக்கு வரும் தொழிற்சாலைக்கான பேருந்தில் ஏறுகிறார். அவரது வேலைநேரம் காலை 8 மணிக்குத் துவங்குகிறது. அன்றைய பொழுதின் முதல் உணவு காலை 10 மணிக்கு நெசவாலையில் உள்ள உணவு விடுதியில் அவருக்குக் கிடைக்கிறது.

சாப்பிடவே முடியாத உணவாக இருந்தபோதிலும், ஒரு சில கவளங்களை வாய்க்குள் திணித்துக் கொண்டு நாளை ஓட்டி விடுவதாகவும் அவர் கூறினார்.

“பெரும்பாலான நேரங்களில் சாதம் சரியாகவே வேகவைக்கப்பட்டிருக்காது. சில நேரங்களில் மிகக் குறைவான உப்பே இருக்கும்; வேறு சில சமயங்களில் உப்பு அதிகமாக இருக்கும்.” என்றும் அவர் கூறினார்.

இந்த கேண்டீன் சேவைக்காக நிர்வாகம் மாதம் தோறும் ரூ. 750 வரையில் சம்பளத்தில் பிடித்துக் கொள்வதால் தான் வீட்டிலிருந்து உணவு எடுத்து வருவதில்லை என்றும் அவர் சொன்னார்.

அவரது ஒரு சில தோழிகள் சிறிய எவர்சில்வர் டிஃபன் பாக்ஸில் வீட்டில் மீந்துபோன காய்கறிகள், சாதம் ஆகியவற்றை அடைத்து எடுத்துக் கொண்டு வருகிறார்கள் . இருந்தபோதிலும் அவர்களும் கூட கேண்டீனுக்கான தொகையை செலுத்தித்தான் ஆக வேண்டும்.

“உணவு நன்றாக இருந்தாலும் கூட , சாப்பிடுவதற்கு எங்களுக்கு வெறும் 30 நிமிடங்கள் தான் தரப்படுகிறது. அதற்குள் நாங்கள் ஓய்வறையைப் பயன்படுத்துவதற்கான கியூவில் நிற்பது முதல் எங்கள் உணவை முடித்துக் கொள்வது வரை செய்ய வேண்டும். நாங்கள் தாமதமாக திரும்பும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் எங்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது.”

லாபநோக்கற்ற கம்யூனிட்டி அவேர்னஸ் ரிசர்ச் எஜுகேஷன் ட்ரஸ்ட் மேற்கொண்ட ஓர் ஆய்வு இந்தத் தொழிலாளர்களுக்கு உணவு உண்ணக் கிடைக்கும் நேரம் வெறும் பத்து நிமிடங்கள்தான் என்று தெரிவிக்கிறது.

“பெரும்பாலான பெண்கள் இந்த இடைவேளையின்போது கழிப்பறையைப் பயன்படுத்துகின்றனர். அதற்கே அவர்களுக்கு 10 நிமிடத்திற்கு மேல் ஆகிவிடுகிறது” என அந்த அறக்கட்டளையைச் சேர்ந்த எஸ். எம். ப்ரிதிவிராஜ் தெரிவித்தார்.

“இன்னொரு பத்து நிமிடம் தட்டுகளுக்காகவும், உணவுக்காகவும், ஒரு தம்ளர் தண்ணீருக்காகவும் க்யூவில் நின்று,  பின்பு அமர்ந்து சாப்பிடுவதற்கான இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு ஆகிவிடுகிறது. எனவே ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் உணவை சாப்பிட்டு முடித்து, தட்டைக் கழுவி வைத்துவிட்டு, மீண்டும் வேலைக்குச் செல்ல பத்து நிமிடம் மட்டுமே கிடைக்கிறது.”

எனவே பெரும்பாலானவர்கள் மிகக் குறைவாகவே  சாப்பிட்டுவிட்டு, தண்ணீரைக் குடித்து விட்டு வேலைக்குத் திரும்புகிறார்கள்.

மாலை 7 மணியளவில் ஆனந்தி வீட்டிற்குத் திரும்புகிறார்.

அதன்பிறகு அவர் தன் துணிகளை துவைத்து உலர்த்தி விட்டு, குளித்து விட்டு படுக்கப் போவதற்கு முன்பாக பேரளவிற்கு இரவு உணவை சாப்பிடுகிறார்.

“எனக்கு எப்போதும் மிக மிக அசதியாகவே இருக்கிறது.  எனது உடல் ஏதோ ஒரு இயந்திரத்தைப் போல் இயங்கி வருவதை நான் அடிக்கடி உணர்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டார். “ நாள் முடியும்போது  உறங்குவதைப் பற்றி மட்டுமே என்னால் சிந்திக்க முடிகிறது. என் அம்மாவில் தொந்திரவால்தான் இரவில் ஏதோ கொஞ்சம் சாப்பிடுகிறேன்.”

அடிப்படையான உடல்நலம்

உலகப் புகழ்பெற்ற ஆடைநிறுவனங்களுக்கான  நூலிழை, துணி மற்றும் ஆயத்த ஆடை ஆகியவற்றைத் தயாரிக்கும் இத்தொழிலில் ஏழ்மை நிறைந்த, கல்வியறிவில்லாத, கீழ் சாதிகளைச் சேர்ந்த இளம் கிராமத்துப் பெண்களே பெரும்பாலும் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

அவர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். மிரட்டல்கள், பாலியல் ரீதியான கேலிப்பேச்சுகள், துன்புறுத்தல்கள் ஆகியவற்றையும் அவர்கள் தொடர்ந்து சந்தித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

நிர்வாகத் தரப்பில்  இது குறித்து ‘கவலையில்லாத’ போக்கே இருக்கிறது என்றும் ஜோசஃப்பின் ஆய்வு கண்டறிந்துள்ளது.

“இவர்களின் உழைப்பு மிகவும் மலிவாகவே கிடைப்பதால், அவர்களின் உடல் நலத் தேவைகளுக்கு அடிப்படையான விஷயங்களுக்கு மேலாக முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றே அவர்கள் கருதுகின்றனர்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தங்களுக்கு வழங்கப்படும் உணவைப் பற்றி தொழிலாளர்களால் எதுவும் சொல்ல முடியாது என்று குறிப்பிடும் விக்டர், பாரம்பரிய ஊட்டச் சத்துப் பொருட்களான பனைவெல்லம், வாழைப்பழம் போன்றவையும் செலவைக் குறைக்கும் நோக்கில் பெரும்பாலான நெசவாலைகளில் இப்போது வழங்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

இத்தொழிலில் உள்ள எல்லோரையும் ஒரே மாதிரியாக சித்தரிப்பது சரியல்ல என்றும், பல முன்முயற்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தமிழ்நாடு நெசவாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பி.வி. சந்திரன் கூறினார்.

“எங்கள் நெசவாலைகளில் இந்தப் பெண்கள் எட்டு மணி நேரம் மட்டும் வேலை செய்கிறார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு நல்ல உணவைத் தருவதற்கு நாங்கள் முயற்சிக்கிறோம். அதற்கு மேலான பொறுப்பும் கடமையும் அவர்களின் குடும்பங்களுக்குத்தான் உண்டு” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் தெரிவித்தார்.

 “நெசவாலையின் விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்களைப் பொறுத்தவரையில், வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன. எனினும் சில நேரங்களில் அந்தப் பெண்கள் உணவுப் பட்டியலில் காய்கறி எதுவும் வேண்டாம் என்றும் அதற்குப் பதிலாக காரமான குழம்பு போன்றவற்றையே விரும்புகின்றனர்.”

18 வயதான வேளாங்கண்ணி முத்தையா இது பற்றிக் கூறும்போது, புளிப்பு நிறைந்த குழம்பை தான் விரும்புவதை ஒப்புக் கொண்ட போதிலும் “எல்லா நாட்களுக்கும் அதுவே அல்ல” என்றும் குறிப்பிட்டார்.

இரவு உணவுக்கான சாதம் வடிப்பதற்காக அடுப்பை ஊதிக் கொண்டிருந்த தன் தாயைப் பார்த்தபடியே, தன்னோடு பணிபுரியும் எல்லாப் பெண்களுமே உடல்நலக் குறைவு பற்றியே சொல்லி வருகின்றனர் என்றும் அவர் சொன்னார்.

 “ ஏதோ ஒருவித மயக்கத்திலேயேதான் நாங்கள் வேலை செய்கிறோம்.” என்று குறிப்பிட்டார் அவர்.  “ நாங்கள் பெரும்பாலும் செலவு செய்வதெல்லாம் மருத்துவர்களைப் பார்க்கவும், மருந்துகளை வாங்கவும்தான். பழங்களும் காய்கறிகளும் எங்கள் உடல்நலத்திற்கு நல்லது என்று எங்களுக்கும் தெரியும். ஆனால் அதை வாங்குவதற்கான சக்திதான் எங்களுக்கு இல்லை.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: லிண்ட்சே க்ரிஃபித்ஸ். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->