பேட்டி – மீட்கப்பட்ட பாலியல் அடிமை மற்றவர்களை விடுவிக்கக் கோரி இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதம்

Thursday, 10 August 2017 15:43 GMT

India’s Prime Minister Narendra Modi arrives to cast his vote for the country's next President, at the Parliament House in New Delhi, India, July 17, 2017. REUTERS/Adnan Abidi

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, ஆக. 10(தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - பாலியல் தொழில் மையங்களில் சிக்கித் தவிக்கின்ற, அனுதினமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் லட்சக் கணக்கான இதர பெண்களை விடுவிக்க வேண்டுமென்று பதின்பருவத்திலேயே பாலியல் அடிமையாக விற்கப்பட்ட 29 வயதான இந்தியப் பெண் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தவி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ள அந்தப் பெண் இந்தியில் எழுதியிருந்த இரண்டு பக்க கடிதத்தில் தனது 17 வயதில் எவ்வாறு தான் ஏமாற்றப்பட்டு, மும்பையில் உள்ள ஒரு பாலியல் தொழில் மையத்திற்குக் கடத்தப்பட்டு,  காவல் துறை தன்னை மீட்பதற்கு முன்பாக ஆறு ஆண்டுகளுக்கு பாலியல் தொழில் புரிய விற்கப்பட்டதை விவரித்து இருந்தார்.

நவீன அடிமைத்தனத்தை சமாளிப்பதற்கான முயற்சிகளை தற்போதுதான் எடுத்து வருகின்ற, உலகத்திலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் அடிமைத்தனத்திற்கு ஆட்பட்டுள்ள மக்களைக் கொண்ட நாடான இந்தியாவில் இந்தக் கடிதம் தலைப்புச் செய்தியாக கவனத்தைப் பெற்றுள்ளது.

“எனக்கு உதவி கிடைத்தது. நான் அதிலிருந்து விடுவிக்கப்பட்டேன். என்னைப் போன்று மேலும் பல பெண்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்களில் எவரும் அதிலிருந்து தப்பித்ததையோ அல்லது வெளியேறியதையோ நான் பார்க்கவேயில்லை. அத்தகைய பெண்களுக்காகவே நான் அந்தக் கடிதத்தை எழுதினேன்” என வியாழனன்று தாம்ஸன் ராய்ட்டர்ஸ்  ஃபவுண்டேஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் தவி கூறினார்.

“இந்தப் பெண்கள் வேலை ஏதும் இல்லாதவர்கள்.  அவர்களிடம் வேலையும் இல்லை, பணமும் இல்லை. வேலை கொடுப்பதாக உறுதி கூறி ஒரு சிலர் அவர்களை மும்பைக்கு கவர்ந்திழுத்துச் செல்கின்றனர். இத்தகைய இளம் பெண்களுக்கு வேலைக்கான வாய்ப்புகள் இருப்பதையும் பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் அவர்கள் இத்தகைய பொறியில் சிக்காமல் இருக்க முடியும்.”

பாலியல் தொழில் மையங்களுக்குக் கடத்தப்படுபவர்களாக, கட்டாய உடலுழைப்பு செய்பவர்களாக, கடனுக்கான அடிமைத்தனத்தில் ஆழ்ந்தவர்களாக அல்லது அடிமைத்தனத்திலேயே பிறந்தவர்களாக என்ற நிலையில் கிட்டத்தட்ட 4 கோடியே 60 லட்சம் பேர் அடிமைத்தனத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளனர் என   2016ஆம் ஆண்டின் அடிமைத்தனம் குறித்த உலகளாவிய அட்டவணை குறிப்பிடுகிறது.

இவர்களில் 40 சதவீதம் பேர், அல்லது 1 கோடியே 80 லட்சம் பேருக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் உள்ளனர்.

இவர்களில் பலரும் மிகவும் ஏழ்மையான கிராமப்புற பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்பதோடு நல்ல வேலை அல்லது திருமணம் என்ற உறுதிமொழியின் மூலம் கவர்ந்திழுக்கப்பட்டு, இறுதியில் வீட்டுப் பணியாளர்களாக விற்கப்படுகின்றனர் அல்லது  செங்கற்சூளைகள், நெசவலைகள் அல்லது  விபச்சாரம் ஆகியவற்றில் கடுமையாக உழைக்கும் வகையில் விடப்படுகின்றனர். பாலியல் அடிமைத்தனத்திற்கு விற்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை தெளிவாக இல்லை. எனினும் அது 2 கோடி இந்தியர்கள் வரை  பாலியல் தொழிலில் மட்டுமே இருக்கலாம் என ஆய்வுகள் மதிப்பிடுகின்றன. இவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் 18 வயதிற்குக் குறைவானவர்களாகும்.

இந்தியாவின் கிழக்குப் பகுதி நகரமான கல்கத்தாவில் இருந்து 2005-ல் மும்பைக்கு ஓடிச் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவரது அன்றைய ஆண் நண்பன் அளித்த உறுதியை நம்பி வீட்டிலிருந்து வெளியே வந்ததையும், அங்கு அந்த நபர் அவரை ஒரு பாலியல் தொழில் மையத்திற்கு ரூ. 60,000க்கு விற்றுவிட்டுச் சென்றதையும் தவி மோடிக்கு எழுதிய கடிதத்தில் விவரித்திருந்தார்.

அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவர் அந்தப் பகுதியில் உள்ல பல்வேறு பாலியல் தொழில் மையங்களுக்கு மாறி மாறிச் சென்றுள்ளார். இறுதியில் 2011ஆம் ஆண்டில் காவல் துறை மேற்கொண்ட ஒரு அதிரடி சோதனை நடவடிக்கையின்போது அவர் இத்தொழிலில் இருந்து மீட்கப்பட்டார்.

சகோதர-சகோதரிக்கு இடையேயான உறவைக் கொண்டாடும் இந்துப் பண்டிகையான ரக்‌ஷா பந்தன் கடந்த திங்கள் அன்று கொண்டாடப்பட்டபோது  இந்தக் கடிதம் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது.

பாலியல் தொழிலில் சிக்கித் தவிக்கும் தன்னையும் தன்னைப் போன்ற மற்ற பெண்கள், இளம் பெண்களுக்கு மோடி ஒரு சகோதரனைப் போன்றவர் என்றும் தங்களை பாதுகாக்க வேண்டியது அவரது கடமை என்றும் தற்போது மும்பையில் ஆயத்த ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வரும் தவி குறிப்பிட்டார்.

 “ஆட்கடத்தல்  நடவடிக்கைகளால் நான் பாதிக்கப்பட்டதோடு, எனது வாழ்க்கையும் நரகமாகிப் போனது. நான் அடிக்கப்பட்டதோடு, மிக மோசமாக, ஒரு மிருகத்தை விட மோசமாக நடத்தப்பட்டேன். பாலியல் தொழில் மையத்திலேயே என் வாழ்க்கை முடிந்து விடும் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்” என்று அவர் எழுதியிருந்தார்.

“இப்போதும் கூட பல பெண்கள் பாலியல் தொழில் மையங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெண்கள் அனைவருக்குமே நீங்கள் சகோதரர்தான். அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.”

தாம் இதற்குப் பதில் அளிப்பதாக மோடி உறுதியளித்தார் என்று இந்தக் கடிதத்தை மோடியிடம் வழங்கிய அரசு அதிகாரி தெரிவித்தார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: நிதா பல்லா மற்றும் லிண்ட்ச்ய கிரிஃபித்ஸ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

Themes