×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சுரண்டல் அச்சம் இருப்பினும் இந்திய தேயிலை பறிப்பவர்களை நடத்தும் விதத்தை உலக வங்கி நியாயப்படுத்துகிறது

by நீதா பல்லா | @nitabhalla | Thomson Reuters Foundation
Friday, 1 September 2017 13:22 GMT

Freshly plucked tea leaves are seen in the hand of a tea garden worker in Assam, India, April 21, 2015. REUTERS/Ahmad Masood

Image Caption and Rights Information

- நீதா பல்லா

புது டெல்லி, செப். 1 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - பன்னாட்டு நிறுவனமான டாடா க்ளோபல் பிவெரேஜஸ் நிறுவனத்தின் இந்திய திட்டம் ஒன்றில் தனது நிதியை முதலீடு செய்துள்ள உலக வங்கிக் குழுமம் தேயிலை பறிப்பவர்களை அது நடத்தும் விதத்தை  நியாயப்படுத்தியதோடு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மிக மோசமான நிலைமைகளில் வசித்து வருகிறார்கள் என்பதையும் மறுதலித்தது.

மிகக் குறைந்த ஊதியம், மோசமான வீட்டு வசதி ஆகியவை குறித்த தனது கவலையை உலக வங்கிக்குச் சொந்தமான  காவற்குழுவே எழுப்பியிருந்த போதிலும், வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் உள்ள இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய  தேயிலை உற்பத்தி நிறுவனத்தில்  பணிபுரியும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் மிகக் குறைவான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது என நான்கு அறக்கட்டளைகள் இந்த வாரம் தெரிவித்தன.

உலக வங்கிக் குழுமத்தின் ஒரு பகுதியான இண்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐஎஃப்சி) 87 மில்லியன்  அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ள இத்திட்டத்தில்  வேலைகளைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் என 7.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருந்த போதிலும் இதனைச் செய்யத் தவறியுள்ளது என குறைகூறப்படுகிறது.

எனினும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்தவும், நிறுவனத்தின் முடிவுகளில் தொழிலாளர்களின் கருத்தை வலுப்படுத்தவும், அவர்களின் புகார்களை கவனிக்கவும், ஊழியர் கவுன்சில்கள் உருவாக்கப்பட்டுள்ளன என ஐஎஃப்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர் தெரிவித்தார்.

 “இந்தியாவில் தேயிலைத் தொழிலுக்குள் நீடித்து வரும் சவால்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. அஸ்ஸாம் மற்றும் இதர தேயிலைத் தோட்டங்களில் வறுமை மிக ஆழமாக வேர்விட்டுள்ளது” என ஃப்ரெடரிக் ஜோன்ஸ் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

 “பல சவால்கள் இருந்தபோதிலும் இத்துறையில் நல்லதை செய்வதற்கான சக்திகளாக டாடாவும் ஐஎஃப்சியும் தொடர்ந்து நீடித்து வருகின்றன” என இமெயில் மூலமான ஓர் அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உலகத்தின் மிகப்பெரும் தேயிலை வளர்ப்புப் பகுதியான அஸ்ஸாமில் உள்ள தேயிலைத் தொழில் கடந்த பல ஆண்டுகளாகவே நெருக்கடியில் உள்ளது. தொழிலாளர்கள் அடிமைத்தனமாக வைக்கப்பட்டது பற்றிய புகார்களுக்கு மத்தியில், தொழிற்சங்கங்கள் நல்ல ஊதியத்தைக் கோரும்போது தேயிலைத் தோட்ட முதலாளிகள் இந்தக் கோரிக்கைகளை ஏற்க மறுத்தனர்.  தொழிலாளர்கள் குறித்த சச்சரவுகள் உள்ளிட்டு பல்வேறு காரணங்களால் தேயிலைத் தோட்டங்கள் மூடும் நிலையைச் சந்தித்து வருகின்றன.

ஐஎஃப்சி-டாடா க்ளோபல் பிவெரேஜஸ்(டிஜிபி) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான அமால்கமேட்டட் ப்ளாண்டேஷன்ஸ் ப்ரைவேட் லிமிடெட்  (ஏபிபிஎல்) சுமார் 30,000 தேயிலைத் தோட்டத்  தொழிலாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது.

உலகத்தின் இரண்டாவது மிகப்பெரிய தேயிலை ப்ராண்ட் ஆன டெட்லியை சொந்தமாக வைத்திருக்கும் டிஜிபி முன்னர் தன்னிடம் வைத்திருந்த தேயிலைத் தோட்டங்களை கையகப்படுத்தவும், நிர்வகிக்கவும் என 2009ஆம் ஆண்டில் ஏபிபிஎல் உருவாக்கப்பட்டது.

நிலைமைகள் குறித்த ஆய்வு

ஏபிபிஎல் நிறுவனத்தில் பாதிக்கும் சற்று குறைவான பங்குகளை டிஜிபி வைத்துள்ளது. ஐஎஃப்சி 20 சதவீத பங்குகளை தன் வசம் வைத்திருக்கிறது. மீதமுள்ள பங்கு தொழிலாளர்கள் மற்றும் சிறிய நிறுவனங்களிடம்  உள்ளன.

தேயிலை பறிப்பவர்கள் சுரண்டப்படுவது குறித்த புகார்களை அறக்கட்டளைகளும் தொழிற்சங்கங்களும் எழுப்பியதன் விளைவாக 2014ஆம் ஆண்டில் ஐஎஃப்சி யின் கண்காணிப்பு அமைப்பு விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது.

ஏபிபிஎல் குறைந்த ஊதியம், மோசமான வீட்டுவசதி, சுகாதார வசதி, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி ஊறு விளைவிக்கக் கூடிய பூச்சிக் கொல்லிகளின் வீச்சுக்கு ஆளாவது  ஆகியவை மீதான புகார்களை கண்டறியத் தவறியதை கடந்த ஆண்டு நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட இந்த கண்காணிப்பு அமைப்பின் முடிவுகள் கண்டறிந்தன.

ஐஎஃப்சியின் முதலீட்டு ஆதரவுடன் துவக்கப்பட்ட ஊழியர்கள் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் திட்டத்தில் இவ்வாறு பங்குகளை வாங்குவதில் உள்ள அபாயங்கள் குறித்து ஏபிபிஎல் தவறான தகவல்களை தெரிவித்ததன்  விளைவாக தொழிலாளர்கள் கடன்களை சுமக்க நேரிட்டது  என்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்தது.

இத்தகைய நிலைமைகளை மேம்படுத்துவது குறித்த உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும் மிகக் குறைவான அளவிற்கே மாற்றம் ஏற்பட்டுள்ளது என பஜ்ரா, பாட், நஸ்டீக், அக்கவுண்டபிலிடி கவுன்சல் ஆகிய நான்கு மக்கள் சமூகக் குழுக்கள் இந்த வாரம் வெளியிட்ட ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

 “உடைந்து போகும் நிலையில் உள்ள வீட்டு வசதி, படுமோசமான சுகாதார வசதிகள், கழிப்பறைகள் இல்லாத நிலை, சுத்தமற்ற குடிநீர் என வாழ்க்கை நிலைமைகள் தொடர்ந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பெருஞ்சுமையாகவும், பாதுகாப்பற்றதாகவுமே இருந்து வருகிறது என அஸ்ஸாமில் இருந்து செயல்பட்டு வரும் அறக்கட்டளையான பஜ்ராவின் இயக்குநர் ஸ்டீஃபன் எக்கா தெரிவித்தார்.

பூச்சிக் கொல்லிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான அடிப்படை கவசங்களை உறுதிப்படுத்துவது, பாதுகாப்புக்கான பயிற்சி அளிப்பது ஆகியவற்றை வழங்குவதிலும் ஐஎஃப்சியும் ஏபிபிஎல் லும் தவறியுள்ளன.

இந்த அறிக்கையின் முடிவுகள் மிகச் சரியான ஒன்றல்ல என்று ஏபிபிஎல் அதை மறுதலித்தது.

இத்துறைக்கான ஊதியம் குறித்த சட்டங்களுக்கு இணங்கிய வகையில்தான் ஊதியங்கள் வழங்கப்படுகின்றன என்றும் பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிக்கான ஏற்பாடுகளும் உள்ளன என்றும் அந்த நிறுவனம் ஓர் அறிவிப்பின் மூலம் தெரிவித்தது.

இந்தியாவின் தேயிலைத் தொழில் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு இடையிலும் தனது தொழிலாளர்களின் வாழ்க்கையை மேலும் சிறப்பானதாக்க ஏபிபிஎல் உறுதி பூண்டுள்ளது என்று டிஜிபி குறிப்பிட்டது.

“இந்தியாவில் உள்ள இதர தேயிலைத் தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் அதே நிதிரீதியான சவால்களைத்தான் ஏபிபிஎல் நிறுவனமும் சந்தித்து வருகிறது” என டிஜிபி ஈமெயில் மூலமாக விடுத்த ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

 “மூலதன முதலீடு, மற்றும் செயல்முறைச் செலவுகளில் ஏபிபிஎல் கனிசமான முதலீடு செய்திருந்ததால் அது தேயிலை தோட்ட சுற்றுச்சூழலின் நல்ல மாற்றம் கொண்டு வரும் எந்த முயற்சிக்கு இடையூறும் இழைக்கவில்லை.”

(செய்தியாளர்: நிதா பல்லா @nitabhalla; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->