×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

தமிழக மருத்துவமனைகளில் லேசர்கள், பெயர் அட்டைகள், கேமராக்கள் குழந்தைத் திருடர்களை இலக்கு வைக்கின்றன

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Thursday, 7 September 2017 17:03 GMT

In this file photo women look into the intensive care unit in a hospital in Gorakhpur district, India August 14, 2017. REUTERS/Cathal McNaughton

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, செப். 7 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - பச்சிளம் குழந்தைகளைக் கடத்திச் செல்வதென்பது நாடு முழுவதும் திட்டமிட்டதொரு குற்றமாக மாறியுள்ள சூழ்நிலையில் இந்தியாவிலுள்ள மருத்துவமனைகள் புதிதாகப் பிறந்த குழந்தைகள், தாய்மார்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு அடையாள அட்டைகளை வழங்குவது, கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, குழந்தைத் திருடர்களை அடையாளம் கண்டறிவதற்கான முறைகள் குறித்து மருத்துவ ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பது போன்றவற்றை செயல்படுத்தத் துவங்கியுள்ளன.

பிரசவ வார்டுகளில் இருந்து குழந்தைகள் திருடப்படுவது, அவை சட்டவிரோதமான வகையில் தத்தெடுப்பிற்கு விற்பனை செய்வது ஆகியவை குறித்த அபாயத்தை மருத்துவ மனைகளில் உள்ள செவிலியர்கள், மருத்துவர்கள், பார்வையாளர்கள் ஆகியோர் தெரிந்து கொள்வதை உறுதிப்படுத்த தென் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் துவங்கியுள்ள முயற்சியின் ஒரு பகுதியாக இவை விளங்குகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தியுள்ள  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அடையாள அட்டை இல்லாதவர்கள் குழந்தையை வெளியே எடுத்துச் செல்லப்படும்போது வெளியேறும் வாயிலில் பொருத்தப்பட்டுள்ள லேசர் கதிர்கள் அதைக் கண்டறிந்து உடனடியாக எச்சரிக்கை ஒலிகளை எழுப்பத் துவங்கும்.

“குழந்தைகளைத் திருடிச் செல்வதை தடுக்க வேண்டும் என்று மட்டுமே நாங்கள் விரும்புகிறோம்” என இந்த மருத்துவமனையில் லேசர் கதிர்கள் மூலமாக பின்தொடரும் இந்த ஏற்பாட்டிற்குப் பொறுப்பு வகிக்கும் மருத்துவரான என்.கே. மகாலஷ்மி தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“இந்த ஏற்பாடு முழுமையாக தவறுகளை தடுத்துவிடாது என்ற போதிலும் இத்தகைய குற்றங்கள் நிகழாதவாறு தடுக்கும் ஒரு முயற்சியே ஆகும்…. எங்கள் மருத்துவமனை ஊழியர்களிடமும் கூடுதலான கவனத்துடன் இருக்கும்படி கூறப்பட்டுள்ளது.”

இவ்வாறு குழந்தைகளை பிரசவ வார்டுகளிலிருந்து கடத்திச் சென்று அவற்றை சட்டவிரோதமான வகையில் தத்தெடுப்பதற்கு  விற்பனை செய்யும் ஆட்கடத்தல்காரர்கள்  பெரும்பாலான நேரங்களில் மருத்துவமனை ஊழியர்களின் ஒத்துழைப்போடுதான் இதைச் செய்கின்றனர் என இது குறித்த பிரச்சாரகர்கள்  கவலை தெரிவித்து வந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளை விற்குமாறு (கணவனின்றி) தனியாக இருக்கும் பெண்களை நம்ப வைத்து குழந்தைகளைக் கடத்தி விற்று வந்த ஒரு கும்பலை மும்பை காவல்துறை கைது செய்தது. இதே மாதிரி பிரசவித்த தாய்மார்களிடம் அவர்களுக்குப் பிறந்த குழந்தை இறந்தே பிறந்தது  என்று பொய் சொல்லிவிட்டு பச்சிளம் குழந்தைகள் மருத்துவமனைகளில் இருந்து திருடப்பட்டு வந்ததை மேற்கு வங்க போலீஸ் கண்டுபிடித்தது.

வெறும் ரூ. 10,000க்கு தங்கள் குழந்தைகளை விற்பதற்கு மருத்துவமனை ஊழியர்கள் தாய்மார்களை நம்பச் செய்த பல சம்பவங்களையும் மாநில அரசு தற்போது விசாரித்து வருகிறது என திருநெல்வேலி மாவட்டத்தில்  குழந்தைப் பாதுகாப்பு அலுவலராக இருக்கும் தேவ் ஆனந்த் குறிப்பிட்டார்.

மிகுந்த ஜனசந்தடி மிக்க நடமாடும் பகுதிகளில் இவ்வாறு குழந்தைகளை கடத்திச் சென்றுவிடும் அபாயம் குறித்து கர்ப்பிணிப் பெண்கள், குடும்பங்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரை எச்சரிக்கும் வகையிலான சுவரொட்டிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒட்டப்பட இருக்கின்றனர்.

“இதை ஒரு கடத்தல் பிரச்சனையாக பலரும் பார்ப்பதில்லை” என அவர் கூறினார்.

“பிறந்தவுடன் ஒரு குழந்தை கைவிடப்பட்டால் என்ன செய்வது என்பது உள்ளிட்டு இதுபோன்ற சம்பவங்களை அடையாளம் காண்பதற்கு மருத்துவமனை ஊழியர்களுக்கு நாங்கள் பயிற்சி அளிக்கவிருக்கிறோம். தற்போது இது குறித்து செய்யவேண்டியவை; செய்யக் கூடாதவை பற்றிய அறிவுரைகள் தெளிவற்றவதாக இல்லை.”

தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் இருந்து திருடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. எனினும் 2016ஆம் ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 1, 80, 000 குழந்தைகள்  பிறந்துள்ளன என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களின்படி 2015ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஆட்கடத்தல் வழக்குகளில் பத்தில் நாலு வழக்குகள் குழந்தைகள் விலைக்கு வாங்கப்படுவது, விலைக்கு விற்பது, நவீன கால கொத்தடிமைகளாக சுரண்டப்படுவது ஆகியவை தொடர்பானதாக இருந்தன.

“புதிதாகப் பிறந்த குழந்தைகளை அணுகுவதை கண்காணிக்க சிறப்பான வழிகள் இல்லாதவையாக பொது மருத்துவமனைகள் பாதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்புள்ள பகுதிகளாக நீடிக்கின்றன” என குழந்தைகளுக்கான அறக்கட்டளையான கருணாலயாவைச் சேர்ந்த பால் சுந்தர் சிங் குறிப்பிட்டார்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: கேட்டி மிகிரோ. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->