×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

கூர்நோக்கு – பாகிஸ்தானின் சிட்ரஸ் தோட்டங்களில் கடன்பட்டு சிறுநீரக அறுவடைக்குத் தூண்டுகிறது

by Zeeshan Haider | Thomson Reuters Foundation
Monday, 11 September 2017 10:45 GMT

- ஜீஷான் ஹைதர்   

கோட் மோமின், பாகிஸ்தான், செப். 11 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள குடும்பப் பெண்ணான இஸ்மத் பீபிக்கு தனது சிறுநீரகத்தை விற்கவேண்டும் என்ற முடிவை எடுப்பது எளிதாகத்தான் இருந்தது.

உணவு தரவேண்டிய நான்கு குழந்தைகள், பார்த்துக் கொள்ள வேண்டியிருந்த காச நோய் பீடித்த கணவன், திருப்பித் தர வேண்டியிருந்த ரூ. 1 லட்சம் கடன் ஆகியவற்றுடன் இருந்த அவர் உடனடியாக அதற்கு முன்வந்தார்.

இந்தப் பேரம் மிகவும் எளிதாகத்தான் இருந்தது. அருகிலுள்ள நகரத்தில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு அவர் சென்றால், அவரது சிறுநீரகம் அகற்றப்படும். அவருக்கும் ரூ. 1,10,000 கிடைக்கும். கோட் மோமின் என்ற சிறு நகரத்தில் அவரது அண்டைவீட்டில் வசிக்கும் இடைத்தரகர் யாருக்குமே இரண்டு சிறுநீரகம் தேவைப்படாது என்று பீபியிடம் சொல்லியிருந்தார்.

இந்தப் பன்னிரண்டு வருடங்களில் அவரது கடன் மட்டும் அதிகரிக்கவில்லை. மோசமாகிக் கொண்டிருக்கும் கணவரின் உடல்நிலையோடும், மனநிலை பிறழ்ந்த இளைய மகளோடும்,  அவரது வலது புற சிறுநீரகத்தை அகற்றியதைத் தொடர்ந்து அடிக்கடி வந்து கொண்டிருந்த தாங்கமுடியாத வயிற்று வலி ஆகியவற்றோடும் அவர் போராடிக் கொண்டிருந்தார்.

இதில் மோசமானது என்னவெனில், 15 வயதே ஆன அவரது மகனும் தனது சிறுநீரகத்தை விற்பதற்குத் திட்டமிட்டு வருகிறான் என்பதுதான்.

“இதைச் செய்யக் கூடாது என்று என் மகனை நான் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன். என்றாலும் அவன் பிடிவாதமாகத்தான் இருக்கிறான்” என வடக்குப் பாகிஸ்தானில் பஞ்சாப் பகுதியில் இருக்கும் கோட் மோமினுக்கு வெளியே ஒரு குடிசைப் பகுதியில் இருக்கும் தனது ஒரே அறையைக் கொண்ட மண்ணால் ஆன வீட்டில் அமர்ந்தபடி 40 வயதான பீபி கூறினார்.

“எனது சிறுநீரகத்தை விற்றதன் மூலம் நான் ஒரு தவறைச் செய்து விட்டேன். என்றாலும் எனது குடும்பத்திற்குச் சோறு போடுவதற்கு எனக்கு வேறு வழியேதும் தெரியவில்லை.”

பாகிஸ்தானின் மிகவும் வளமான பகுதியான பஞ்சாபில் விவசாயத்திலிருந்து நெசவு வரை நன்றாக வளர்ந்து வரும் துறைகளோடு கூடவே மற்றொரு வியாபாரமும் செழித்து வளர்ந்து வருகிறது. அதுதான் சட்டவிரோதமாக மனித உடல் பாகங்களை விற்பதுதான் அந்த வியாபாரம் என காவல்துறையும், இது குறித்த செயல்பாட்டாளர்களும், இந்த வியாபாரத்தில் பாதிக்கப்பட்டவர்களும் தெரிவிக்கின்றனர்.

வறுமை, கடன் ஆகியவற்றின் சுழற்சியால் தூண்டப்படும் இந்த கருப்புச் சந்தை பரம ஏழைகளை ஆட்கடத்தல்காரர்கள் குறிவைத்துச் செயல்படுவதன் விளைவாகக் கடந்த பல ஆண்டுகளாக செழித்து வளர்ந்து வருகிறது. இந்தப் பகுதி வளங்கொழிக்கும் பகுதியாக மாறுவதற்கு உதவிய இந்த ஏழைகளில் பலரும் அதற்குப் பதிலாக பெயரளவிற்கே ஊதியம் பெற்று வந்துள்ளனர்.

உலக அளவில் உடலுறுப்புகளை தானம் செய்பவர்கள் மிகக் குறைவாகவே உள்ள நிலையில், குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கும்பல்களின் உதவியுடன்  ‘மாற்று அறுவை சிகிச்சைக்கான சுற்றுலா’ என்பது இப்பகுதியில் செயல்படத்துவங்கியது. பெரும்பாலான நேரங்களில் மாற்று அறுவை சிகிச்சைக்காக இத்தகைய உடலுறுப்புகள் தேவைப்படும் நிலையில் உள்ள வெளிநாட்டவர்களை விமானப் பயணத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து இங்கு கொண்டு வருவதற்கு மருத்துவர்கள், வியாபாரிகள் ஆகிய செல்வாக்கு மிக்கவர்கள் தங்களது ஏஜெண்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.

பாகிஸ்தானில் தங்களின் சிறுநீரங்களை விற்றவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரபூர்வமான புள்ளிவிவரம் எதுவும் இல்லை என்றாலும், ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் 1,000 பேர் இதனால் பாதிப்பிற்கு ஆளாகியிருப்பார்கள் என ஒரு சில அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.

தேசிய அசெம்பிளியின் மனித உரிமைகளுக்கான நிலைக்குழுத் தலைவர்  பாபர் நவாஸ் கான் இத்தகைய உடலுறுப்புகளை கடத்துவதில் பரபரப்பாகச் செயல்படும் பகுதியாக பாகிஸ்தான் இருக்கிறது என்று கூறிய போதிலும் தற்போது அதிகாரிகள் இதன் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும் கூறினார்.

“கடந்த ஆண்டு வரை இந்த வர்த்தகத்தில் பாகிஸ்தான் முக்கிய மையமாகத் திகழ்ந்தது” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கான் தெரிவித்தார்.

“ஒரு சில மதிப்பீடுகளின்படி, ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் இத்தகைய உடலுறுப்பு கடத்தல் வழக்குகள் அனைத்திலும் 85 சதவீதம் பாகிஸ்தானில் இருந்தே வெளிப்பட்டன என்ற நிலை மாறி இப்போது கடவுள் கிருபையால் முதல் பத்து இடங்களில் கூட நாங்கள் இல்லை.”

ஆரஞ்சுகளும், எலுமிச்சைகளும் சிறுநீரங்களும்

பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் வசிப்பவர்கள் மொத்தம் 11 கோடி ஆகும். இது பாகிஸ்தானின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதியாகும். நாட்டின் மொத்த விவசாய உற்பத்திப் பொருட்களில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தை உற்பத்தி செய்யும் இந்தப் பகுதி நாட்டின் உணவுக்கான களஞ்சியம் மட்டுமல்ல; அதிகமான தொழில்களும் இங்கே குவிந்துள்ளன.

ஆடைகள், சிமெண்டில் இருந்து துவங்கி, கிரிக்கெட் மட்டை, அறுவை சிகிச்சைக்கான கருவிகள் வரையில் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளோடு கூடவே பச்சைப்பசேலென்ற நெல்வயல்கள், தங்க நிற கோதுமை, வெள்ளை நிற பருத்தி என செழிப்பான வயல்களை இந்தப் பகுதியில்  சாதாரணமாகப் பார்க்கலாம்.

2016-ல் பஞ்சாப் பகுதியின் பொருளாதாரம் என்பது பாகிஸ்தானின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டதாக உள்ள இந்தப் பகுதியின் வறுமை விகிதம் வெறும் 20 சதவீதம் மட்டுமே. இது நாட்டின் மற்ற பகுதிகளில் நிலவும் வறுமை விகிதத்தை விட மிகக் குறைவாகும்.

எனினும் இந்த வளங்களில் பெரும்பாலானவை நிலப்பிரபுக்கள், கட்டிட ஒப்பந்ததாரர்கள், செங்கற்சூலை, தொழிற்சாலை முதலாளிகள் ஆகியோரால் பல பத்தாண்டுகளாக சுரண்டப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வளைந்த முதுகுகளினால்தான் கட்டப்பட்டவை. இந்தத் தொழிலாளர்களுக்கு இந்த முதலாளிகள் தினசரி 5 அமெரிக்க டாலர்கள் என்ற அளவிற்கே ஊதியம் தருகின்றனர் என இதற்காகப் பிரச்சாரம் செய்து வருவோர் தெரிவிக்கின்றனர்.

இவர்களில் பலரும் தங்கள் முதலாளிகளிடமிருந்து கடன் வாங்குகின்றனர். இதற்கான வட்டி அதிகபட்சமாக 60 சதவீதம் வரை இருக்கிறது. வெகு விரைவிலேயே இவர்கள் கடன் சுழலில் சிக்கிக் கொள்கின்றனர்.

அங்கிருக்கும் பசுமையான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி தோட்டங்களின் காரணமாக பாகிஸ்தானின் “சிட்ரஸ் பகுதி” என்று அறியப்படும் சர்கோதா மாவட்டத்தில் உள்ள கோட் மொமினில் மட்டுமே நூற்றுக்கணக்கானோர் தங்களது கிட்னியை விற்பனை செய்துள்ளனர்.

“தங்கள் சிறுநீரகங்களை விற்றுவிட்டு, இப்போது அரசாங்கத்தின் உதவியைக் கோரும் சுமார் 250 பேரின் மனுக்கள் என்னிடம் உள்ளன” என சமூகச் செயல்பாட்டாளரும், இத்தகைய உடலுறுப்பு கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருமான ஜஃபர் இக்பால் கூறினார்.

“கட்டிட வேலை போன்ற வேலைகளை இனியும் தங்களால் செய்ய முடியாத நிலையில் தங்களுக்கோ அல்லது தங்கள் குழந்தைகளுக்கோ அதிகாரிகள் வேலை அளிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.”

45 வயதான இக்பால் தனது சிறுநீரகத்தை 2003 ஆம் ஆண்டில் விற்றார். அப்போது அவரது சகோதரர் இறந்து போக, சகோதரரின் மனைவி, குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும், தனது இரண்டு இளைய சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைக்கவும் அவருக்குப் பணம் தேவைப்பட்டது.

“நாங்கள் எல்லாம் வெறும் விட்டில் பூச்சிகள்தான். வலிமைவாய்ந்த இவர்களை எங்களால் எதிர்த்து நிற்க முடியாது” என கோட் மோமினின் முக்கிய கடைவீதியில் இருக்கும் தனது பழைய கடையில் வாடிக்கையாளர்களுக்கு தேநீரை வழங்கிக் கொண்டே சொன்னர் அவர்.

தூசு நிரம்பி வழியும் இந்தச் சிறுநகரத்தைச் சுற்றி வரிசையாக எலுமிச்சை(நாரத்தங்காய்), ஆரஞ்சு மரங்கள் இருக்க அவற்றின் நடுநடுவே கின்னோ என்று அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற ஆரஞ்சுப் பழங்களை ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஏற்றமதி செய்யும் மிக நவீனமான உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இருக்கின்றன.

கோட் மோமினுக்கு வெளியே பரந்து விரிந்த பழத்தோட்டத்தில் வேலைசெய்யும் ஒரு தொழிலாளியான முகமத் ஜஹீர் தான் தினமும் ரூ. 500 (5 அமெரிக்க டாலர்கள்) ஊதியம் பெறுவதாகத் தெரிவித்தார். எனினும் தன் முதலாளியிடமிருந்து வாங்கியிருந்த  950 அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடனுக்கான பிடிப்பு போக அவர் பாதியை விடக் குறைவாகவே ஊதியம் பெற்று வருகிறார்.

“ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் எனது இளைய சகோதரியின் திருமணத்திற்கான செலவுக்காக எனது சிறுநீரகத்தை விற்றேன்.” என 43 வயதான ஜாஹீர் கூறினார்.  “அவளுக்குத் திருமணமானது என்றாலும் எனது துயரம் அத்தோடு முடியவில்லை. எனது ஆறு குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக முதலாளியிடமிருந்து நான் கடன் வாங்க வேண்டியதாயிற்று.”

“மாற்று அறுவைசிகிச்சைக்கான சுற்றுலா”

மனித உடலுறுப்புகளை வணிகரீதியாக வர்த்தகம் செய்வதை பாகிஸ்தான் 2010ஆம் ஆண்டில் தடை செய்து விட்டது. இதில் ஈடுபடும் மருத்துவர்கள், இடைத்தரகர்கள், இந்த உறுப்புகளை சிகிச்சைக்காகப் பெறுவோர், அவற்றை தானம் செய்வோர் ஆகியோருக்கு ரூ. 10 லட்சம் (9,500 அமெரிக்க டாலர்கள்) வரையில் அதிகபட்ச அபராதமும் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையையும் இந்தச் சட்டம் விதிக்கிறது.

உறவினர்களுக்கும், மனித நேய நோக்கத்துடனும் தங்கள் உடலுறுப்புகளை தானமாக வழங்கலாம் என்று இந்தச் சட்டம் அனுமதி அளித்த போதிலும், வெளிநாட்டவர்களுக்கு மனித உடலுறுப்புகளை விற்பதை தடை செய்திருந்தது.

எனினும் மிகக் குறைந்த ஊதியம், இந்தச் சட்டத்தை சரியாக அமல்படுத்தாமல் இருப்பது ஆகியவற்றின் விளைவாக இத்தகைய உடலுறுப்புகளை கடத்தும் வழக்குகள் அதிகரிப்பதை தடுக்கும் முயற்சிகளை பாதித்தன.

பிரிட்டன், சவூதி அரேபியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்த உடலுறுப்புகளை பெற்றுக் கொள்வோர் லாகூர் அல்லது கராச்சி போன்ற பாகிஸ்தானிய நகரங்களுக்கு பயணம் செய்கின்றனர். அங்கேயுள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் அல்லது வீடுகளில் பூமிக்குக் கீழே இருக்கும் தளங்களில் செயல்பட்டு வரும் தற்காலிக அறுவை சிகிச்சை மையங்களில் அவர்களுக்கு இந்த மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வெளிநாட்டவர்களுக்கு ஒரு சிறுநீரகத்தை ரூ. 40 லட்சத்தில் இருந்து ரூ. 1கோடி வரை  (38,000 முதல் 95,000 வரையிலான அமெரிக்க டாலர்கள்)  விற்கப்படுகிறது. எனினும் இந்த உறுப்புகளை தானமாக அளிப்பவர்கள் இந்தத் தொகையில் பத்து சதவீதத்தை விடக் குறைவாகவே பெறுகின்றனர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜூலை மாதத்தில், லாகூர் நகரில் வசதியானவர்கள் வசிக்கும் ஒரு குடியிருப்புப் பகுதியில்  இருந்த தனியார் மருத்துவமனையில் பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி திடீர் சோதனையை மேற்கொண்டபோது, உடலுறுப்புகளை பெறவிருந்த இரண்டு ஓமான் நாட்டவர்கள் உள்ளிட்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கடத்தலில் ஈடுபட்டு வரும் கும்பல்களை உடைத்து நொறுக்குவது மிகவும் கடினமான காரியம் என்பதை காவல்துறையினர் ஒப்புக் கொள்கின்றனர். இந்தக் கும்பல்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் ஆகியோரிலிருந்து துவங்கி மருத்துவமனை உரிமையாளர்கள், வியாபாரிகள் வரை பல்வேறு வகையான பிரிவினரை இதில் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்களில் பலரும் செல்வாக்கு மிக்கவர்களாகவும், அரசியல் தொடர்புகளைக் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

எனினும்  மாற்று அறுவை சிகிச்சைகளுக்குப் பொறுப்பான  ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மேலும் அதிகமான அதிகாரத்தை வழங்குவதன் மூலமும் மருத்துவமனைகளில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலமும், கடுமையான தண்டனைகளை விதிப்பதன் மூலமும் இந்தச் சட்டத்தை மேலும் வலுப்படுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“சட்டவிரோதமன இந்த வர்த்தகத்தின் மீது தாக்குதல் தொடுப்பதில் நாங்கள் உறுதியோடு இருக்கிறோம்” என பாகிஸ்தானின் சுகாதார அமைச்சர் சாயிரா அப்சல் தரார், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார். “மனிதத் தன்மையற்ற இந்த வர்த்தகத்தைத் தடை செய்ய சட்டத்தை மேலும் இறுக்க இது தொடர்பான அனைவருடனும் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம்.”

எனினும் இதனால் பாதிப்பிற்கு ஆளானவர்கள் தங்கள் உடலுறுப்புகள் அகற்றப்பட்ட பிறகு போதிய மருத்துவ கவனிப்பு இல்லாத நிலையில் சுகாதார பிரச்சனைகளை எதிர் நோக்கவும் இன்னமும் கடனில் தவிக்கும்படியும் விட்டுவிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த வார்த்தைகளால் எவ்வித பயனுமில்லை.

“எனது குழந்தைகளுக்கு உணவளிப்பது அல்லது எனக்கான மருந்தை வாங்கிக் கொள்வது என்பதைத்தான் நான் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.” என்று கூறிய செங்கற்சூளையில் வேலை செய்யும் 30 வயதான சர்ஃப்ராஸ் அகமது தன் சட்டையை சற்றே தூக்கி வயிற்றின் இடது பக்கத்தில் இருக்கும் மெல்லிய தழும்பை சுட்டிக் காட்டுகிறார். “எனது குழந்தைகளுக்கு உணவளிப்பது என்பதையே நான் தேர்ந்தெடுத்தேன்.”

(செய்தியாளர்: ஜீஷான் ஹைதர்; எழுதியவர்: நிதா பல்லா; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவுசெய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.) 

"TRANSPLANT TOURISM"

Pakistan outlawed the commercial trade in human organs in 2010, imposing a jail term of up to 10 years and a maximum fine of one million rupees ($9,500) for doctors, middlemen, recipients and donors.

The law permits donors to give their organs to recipients who are relatives and for altruistic purposes, but bans the sale of human organs to foreigners.

But low wages and poor implementation of the law has hampered efforts to curb rising cases of organ trafficking.

Recipients from countries such as Britain, Saudi Arabia and South Africa travel to the Pakistani cities of Lahore or Karachi where they are operated on in private clinics in residential areas or houses with makeshift operating theatres in basements.

A kidney is sold to foreigners for between four to 10 million rupees ($38,000 to $95,000), but the donor gets less than 10 percent of that, say police officials.

In July, the Federal Investigation Agency raided a private clinic in an upscale neighbourhood of Lahore, and arrested 14 people, including two Omani nationals suspected to be potential recipients.

Police admit the trafficking networks are difficult to break: They involve several players - from doctors, nurses and paramedics to hospital owners and businessmen - and many are influential and with political connections.

But authorities say they plan to strengthen the law by giving more power to the regulatory authority in charge of transplantations, upping surveillance at hospitals, and imposing stricter punishments.

"We are determined to clamp down this illegal trade," Pakistan's Health Minister Saira Afzal Tarar told the Thomson Reuters Foundation. "We are consulting all stakeholders to tighten laws to curb this inhumane business."

These words however mean little to the victims who are left often still in debt and with health problems due to a lack of healthcare after their organs were removed.

"I have the option of either feeding my children or buying medicine for myself," said brick kiln worker Sarfraz Ahmed, 30, pulling up his shirt to show a thin brown scar on the left side of his abdomen. "I have opted to feed my kids."

(Reporting by Zeeshan Haider, Writing by Nita Bhalla; Editing by Ros Russell. Please credit the Thomson Reuters Foundation, the charitable arm of Thomson Reuters, that covers humanitarian news, women's rights, trafficking, property rights, climate change and resilience. Visit http://news.trust.org)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->