×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்தியா சிறுநீரக வர்த்தகர்கள் தானத்திற்கான கடுமையான விதிகளை முறியடிக்க தானம் செய்பவர்களை எகிப்துக்கு கடத்தி செல்லப்படுகிறார்கள்

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Monday, 11 September 2017 12:08 GMT

- ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, செப். 11 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - மும்பை விமானநிலையத்தில் ஏழைகளின் சிறுநீரகத்தை பறிப்பதற்காக அவர்களை எகிப்துக்கு கடத்த முயன்ற, ஒரு கூட்டத்தின் தலைவன் என்று கருதப்படுகிற நபர் உள்பட, இரண்டு பேரை கைது செய்த பிறகு, உறுப்புகளை திருடுவதற்காக கடத்தலில் ஈடுபடும் ஒரு பெரிய வர்த்தக மோசடி குறித்து இந்திய காவல்துறை விசாரித்து வருவதாக அதிகாரிகள் திங்கட்கிழமையன்று தெரிவித்தனர்.

நிஜாமுதீன், சுரேஷ் பிரஜாபதி என்று அறியப்பட்டுள்ள இந்த இருவரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் மீது ஆட்கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்தது.

‘கிட்னி கடத்தல் மன்னன்’ என்று காவல்துறையினால் அறியப்பட்ட பிரஜாபதி கிட்டத்தட்ட 60 பேரை சிறுநீரகத்திற்காக ஸ்ரீலங்காவிற்கு கடத்திச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கடந்த ஆண்டு தென் இந்திய மாநிலமான தெலுங்கானாவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே விடப்பட்டிருந்தவர் ஆவார்.

“மும்பை சர்வதேச விமானநிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரி ஒருவர் எங்களுக்குத் தகவல் தெரிவித்திருந்தார். அவர்களிடம் மூன்று பாஸ்போர்ட்கள் இருந்தன. அதில் ஒரு பாஸ்போர்ட் வைத்திருந்தவரை எகிப்துக்கு அழைத்துச் செல்ல அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்” என காவல்துறையின் மூத்த ஆய்வாளர் லதா ஷிர்சாத் கூறினார்.

“கடந்த மே மாதத்திற்கும் ஜூலை மாதத்திற்கும் இடையே ஆறு பேரை அவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். நான்கு பேர் விஷயத்தில் ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துவிட்டது. கெய்ரோ நகரில் உள்ள மருத்துவமனையுடன் நாங்கள் பேசினோம். மீதமுள்ள இரண்டு பேருக்கான மாற்று அறுவை சிகிச்சை ஏற்பாடுகளை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளோம்.”

இந்த வர்த்தகத்தில் மேலும் அதிகமான ஏஜெண்டுகள் இருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது. இந்த இரண்டு பேரும் தில்லி, ஜம்மு, ஹைதராபாத், கேரளா ஆகிய பகுதிகளிலிருந்து சிறுநீரகம் தானம் செய்பவர்களை ஏற்பாடு செய்திருந்ததோடு, அவர்களை சுற்றுலா பயணிகளுக்கான விசாவில் கெய்ரோவிற்கு அனுப்பவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ்வாறு சிறுநீரத்தை தானமாகப் பெறுபவர்களும் கூட இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியாவில் வணிக ரீதியாக உறுப்புகளை விற்பனை செய்வதை இந்திய விதிகள் அனுமதிக்காத நிலையில் அதை முறியடிக்கும் வகையில் இந்த மாற்று அறுவை சிகிச்சையை கெய்ரோவில் செய்து கொள்ள அவர்கள் சென்றுள்ளனர்.

மேலும் அதிகமான தானம் செய்பவர்களை தேடிக் கண்டுபிடிக்க, ஏற்கனவே இவ்வாறு தங்கள் சிறுநீரகத்தை தானமாகக் கொடுத்துள்ளவர்களையே, பிரஜாபதி ஏஜெண்டுகளாக நியமித்துள்ளார் என  இந்த வழக்கில் மும்பை காவல்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காவல்துறையினர் கூறுகின்றனர்.

இவ்வாறு உடல் உறுப்புகளை தானம் செய்பவர்கள் இந்தியாவில் மிகவும் குறைவு என்பதால் இந்த உறுப்புகளைக் கோருபவர்களின் காத்திருப்பு பட்டியல் மிகவும் நீளமாகவே உள்ளது. இது இந்த வர்த்தகத்தில் கருப்புச் சந்தை செயல்பட வழி வகுக்கிறது.

அரசின் புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சிறுநீரகத்திற்காக 2,00,000 பேரும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக 30,000 பேரும் காத்திருக்கின்றனர். சட்டபூர்வமான உடலுறுப்பு தானம் என்பது இந்தத் தேவையில் 3 முதல் 5 சதவீதத்தையே பூர்த்தி செய்கிறது.

இவ்வாறு காத்திருப்பு பட்டியலில் உள்ள ஒரு சில நோயாளிகள், விரக்தியின் விளைவாக, பணத்திற்காக உடலுறுப்புகளை ஏற்பாடு செய்யும் இடைத்தரகர்களின் சேவையை நாடுகின்றனர். இந்த இடைத்தரகர்கள் இவ்வாறு தானம் கொடுக்கக்கூடிய நபர்களை கிராமங்களில் தேடிக் கண்டுபிடிக்கின்றனர். அவர்கள் சில நேரங்களில் பணத்தைக் காட்டியோ அல்லது பெரிய நகரத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதிமொழி அளித்தோ  தானம் செய்பவர்களை கவர்ந்திழுக்கின்றனர்.

இவ்வாறு உடலுறுப்புகளை பெறுவோர் கிட்னியை ஏற்பாடு செய்து தருவதற்காக இந்த இரண்டு ஏஜெண்டுகளுக்கும் ரூ. 30,00,000 தருகின்றனர். அதில் தானம் செய்தவர்களுக்கு ரூ. 5,00,000 தரப்படுகிறது என காவல் துறையினர் தெரிவித்தனர்.

“இந்தியாவில் இத்தகைய உடலுறுப்பு தானங்கள் மிகவும் தீவிரமான கண்காணிப்பிற்கு உள்ளாவதால், இத்தகைய தானத்தை இங்கு ஏற்பாடு செய்வது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது” என இந்தியாவின் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்திற்குத் தலைமை தாங்கும் அனில் குமார் கூறினார்.

உலக அளவில் இவ்வாறு உடலுறுப்புகளை தானம் செய்வோருக்கான பற்றாக்குறை நிலவி வரும் சூழ்நிலையில் தெற்கு ஆசியாவில், குறிப்பாக பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில், “மாற்று அறுவை சிகிச்சைக்கான சுற்றுலா” பரவலாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள கிரிமனல் கும்பல்கள் இவ்வாறு உடலுறுப்புகள் தேவைப்படுவோரை வெளிநாட்டில் உள்ள ஏஜெண்டுகளைப் பயன்படுத்தி விமானத்தில் அழைத்து வருகின்றனர்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->